> குருத்து: கருடன்

August 9, 2024

கருடன்


சென்னையில் 300 கோடி ரூபாய் சொத்து தேனியில் உள்ள ஒரு கோயிலுக்கு சொந்தமானது. அந்த சொத்தை ஆட்டையைப் போட மந்திரி முயல்கிறார். அதற்கான வேலைகளை செய்ய தன் ஆட்களை ஏவுகிறார்.


தேனியில் அந்த கோவிலுக்கு பொறுப்பாக மூவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் அவர்களுடைய பலவீனங்களை பயன்படுத்தி, பத்திரத்தை அடைய முயல்கிறார்கள்.

இதன் விளைவாய், நிறைய முரண்பாடுகள் எழுந்து, மோதிக்கொண்டு ரத்தம் சிந்துகிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

தர்மன், துரியோதனன், கர்ணன் என மகாபாரதத்தில் இருந்து ஒன் லைனை எடுத்துக்கொண்டு, கதை செய்திருக்கிறார்கள். மனிதனிடம் நிறைய உணர்வுகள் இருக்கின்றன. ஒவ்வொரு உணர்விற்கும், காலமும் தொடர்பு கொண்டதாக இருக்கிறது.

பண்ணையார் - கூலி விவசாயி என நிலத்தின் அடிப்படையில் உள்ள உறவுகள் நிலவிய சமூகத்தில், விசுவாசம் என்பதும் அந்த காலத்திற்கான ஒன்றாக இருந்தது. அதற்கு உரிய கூலி கிடையாது. இலவசம் எனலாம்.

அந்த காலக்கட்டத்தை கடந்து, முதலாளித்துவ சமூகத்தைப் பற்றி
மார்க்ஸ் சொல்லும் பொழுது புனிதமாக பார்க்கப்பட்டவை கூட காசு பண உறவாக மாறிவிட்டது என்கிறார். அவர் சொல்லியே 200 ஆண்டுகளாகிவிட்டது.

ஒரு அலுவலகத்தில் வேலை செய்த பொழுது, நிர்வாகத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என ஒருவர் அவ்வப்பொழுது சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு வேலையை பொறுப்பாக செய்யவேண்டும். அதற்காக தான் சம்பளம். நீங்கள் சொல்லும் விசுவாசத்துக்கு ஏதாவது கூடுதலாக சம்பளம் தருகிறீர்களா என்ன? என விளையாட்டாக கேட்பேன்.

விசுவாசம் என்பது சமூக வரலாறு அடிப்படையில், மியூசியத்தில் இருக்கிற விசயம் தான். படத்தில் விசுவசமா? நியாய உணர்வா? என விவாதித்து... நியாய உணர்வு தான் ஜெயிக்கவேண்டும் என முடித்தது பரவாயில்லை.

படத்தில் கர்ணனாக விசுவாசத்தின் பிரதிநிதியாய் சூரி வருகிறார். தர்மனின் பாத்திரத்தில் சசிக்குமார் வருகிறார். இப்படிப்பட்ட பொருத்தமான படத்தில் வருவது நல்லது. துரியோதனின் பாத்திரத்தில் மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் வருகிறார். மலையாள சந்தையை மனதில் வைத்து, இவரை
தேர்ந்தெடுத்தார்களா தெரியவில்லை. சூரியும், சசியும் அருமையாக அந்த பாத்திரத்தில் பொருந்தி போகிறார்கள். உன்னிகிருஷ்ணன் சமாளித்திருக்கிறார். மற்ற பாத்திரங்களும் பொருத்தம் தான்.

திரையரங்குகளில் நன்றாக ஓடி, இப்பொழுது பிரைம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: