> குருத்து: தீமிதிப்பது , தலையில் தேங்காய் உடைப்பது!

August 13, 2024

தீமிதிப்பது , தலையில் தேங்காய் உடைப்பது!


தமிழ்நாடு முழுவதும் அம்மன் கோயில்களும், பிற கோயில்களும் பரபரப்பாக இருக்கின்றன.   நாள் முழுவதும், தம் கட்டி, எல்.ஆர். ஈஸ்வரி எல்லா அம்மன்களையும் வளைத்து வளைத்து புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்.  


பக்த கோடிகள் கூழ் ஊற்றுவது, பால் குடங்கள் எடுப்பது, தீக்குண்டம் இறங்குவது என வேண்டுதல்களும், அதை நிறைவேற்றுவதுமாய் இருக்கிறார்கள்.


பக்தி என ஆபத்தற்ற காரியங்களை செய்வது கூட பிரச்சனையில்லை. ஆனால், விறகு கட்டைகளைப் போட்டு எரித்து,  சில மணி நேரம் தயார் செய்து, கொதிக்க, கொதிக்க தீக்குண்டத்தில் இறங்குவது எல்லாம் ஆபத்தான செயல் அல்லவா! ஒவ்வொரு வருடமும், சிலர் தடுக்கி விழுந்து படுகாயமடைகிறார்கள்.   பெரியவர்கள் மட்டுமில்லாமல், தங்கள் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தீ மிதிக்கிறார்கள். இன்றைய செய்தித்தாளில் சென்னையில் இரண்டு பெரியவர்கள் அப்படி காயமடைந்த செய்தி வந்திருக்கிறது.  பொதுவாக இப்படி காயமடைந்தவர்கள் அதற்கு பிறகு குணமடைந்தார்களா?  இறந்து போகிறார்களா என்பதை தொடர்ந்து நாம் கவனிப்பதில்லை.


பொதுவாக விளையாட்டுகளில் பங்கெடுக்கும் பொழுது கூட, பங்கெடுப்பவர் ஆரோக்கியமாய் இருக்கிறாரா? நோய்வாய்ப்பட்டு இருக்கிறாரா என்பதையெல்லாம் பார்த்து தான் அனுமதிக்கிறார்கள். இப்படி தீ மிதிக்கும் பொழுது, அதில் பங்கெடுக்கிற அத்தனை பேரும் ஆரோக்கியமாய் இருக்கிறார்களா?  என்பதை எல்லாம் சோதிப்பதேயில்லை. இதில் பலருக்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை பிரச்சனைகளில் இருப்பவர்களும் அதிகம். நோய்வாய்ப்பட்டு இருப்பவர், உடலளவிலும், மனதளவிலும் பலவீனமாய் தான் இருப்பார். அப்படிப்பட்டவர் தீ மிதிக்கும் பொழுது தவறி கீழே விழுவது சகஜம்.   ஆனால், பக்தி பரவசத்தில் இருக்கும் மக்கள், இதைப் பற்றி கருத்து சொல்பவர்கள், அவர்கள் சுத்தப் பத்தமாய் இருந்திருக்கமாட்டார்கள் என்று தான் பெரும்பாலும் பேசுவார்கள். தீக்காயத்தோடு இருப்பவர்களும் குற்ற உணர்ச்சியில் தான் குமைந்துகொண்டு இருப்பார்கள்.


ஒரு வாரத்திற்கு முன்பு, பழனி அருகே ஒரு கிராமத்தில் மகாலெட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்ததைப் பார்க்கும் பொழுது நமக்கு பகீரென்று இருக்கிறது.


வயதான ஆண்கள், நடுத்தர வயதினர், இளைஞர்கள் என வரிசையாய் அமர்ந்திருக்க… பூசாரி போல வயதான ஒருவர் ஒவ்வொருவரின் தலையிலும் தேங்காய் உடைத்துக்கொண்டே செல்கிறார்.   உடலில் வேறு எந்த இடத்தில் காயம்பட்டாலும், காப்பாற்றுவதற்கு வைத்தியம் வளர்ந்துவிட்டது.  ஆனால், மூளை பாதிக்கப்பட்டால், இங்கு குணப்படுத்துவது என்பது இன்னும் சிக்கலாகத்தான் இருக்கிறது.  இப்படி தேங்காய் உடைப்பதினால்..மூளைப் பாதிக்கப்பட்டால், என்ன செய்வார்கள்? பைத்தியம் பிடித்து திரியவேண்டியது தான்.  அவரை நம்பி உள்ள குடும்பம் என்ன ஆவது? 


ஆகையால், இப்படி ஆபத்தான வேண்டுதல்களை முதலில் பக்தர்கள் நிறுத்தவேண்டும் , அவர்களது உடல்நலத்தின் மேல் அக்கறை கொண்ட குடும்பத்தினர் தடுக்கவேண்டும்.  அரசும் இதையெல்லாம் பக்தி என்ற பெயரில் முற்றிலும் அனுமதிக்காமல், எத்தனைப் பேர் இதுவரை இறந்துள்ளார்கள், படுகாயமுற்றவர்கள் என்பதை கணக்கிட்டு, இப்படி ஆபத்தான வேண்டுதல் நிறைவேற்றுதலை முறைப்படுத்தவேண்டும். மக்களின் மீது அக்கறை கொண்டு தடை செய்தால் கூட தப்பில்லை.







0 பின்னூட்டங்கள்: