> குருத்து: ஊட்டிப் பயணம்

August 29, 2024

ஊட்டிப் பயணம்


மதுரைக்கு அருகே இருப்பதால் கொடைக்கானலுக்கு பலமுறை போயிருக்கிறேன். ஆனால் ஊட்டி கொஞ்சம் தூரம் என்பதால், இதுவரை நான்கு முறை தான் போயிருக்கிறேன்.

 


இந்த முறை நண்பர் ஒருவர் இதுவரை போகவில்லை என சொன்னதால், வாங்க கிளம்புவோம் என கிளம்பிவிட்டோம்.  சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை நீலகிரி விரைவு ரயிலில் பயணம். அங்கிருந்து குன்னூர் வரை காரில் பயணம்.  போகிற வழியில் காட்டேரி பூங்காவில் கொஞ்சம் இளைப்பாறினோம்.

 


முதல்முறை வரும் நண்பருக்கு கொஞ்சம் தலைச்சுற்றலும், வாந்தியும் நிறைய சிக்கல் செய்துவிட்டது. முதல் நாள் நான் தான் வாந்தி தவிர்க்க மாத்திரைகள் வாங்கிவரவேண்டிய பொறுப்பை ஏற்றிந்தேன். நண்பர் தான் வாங்கி வருவதாக பொறுப்பாக ஏற்றுக்கொண்டு, மாத்திரைகளை வாங்கி வீட்டிலேயே மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டார். 

 



ரயிலை விட்டு இறங்கினால், ஞாயிறு விடிகாலை. கடை திறக்க நேரமாகும். சரி கிளம்பலாம் என கிளம்பியது தான் இரண்டாவது தவறு.  காலை உணவையும் தவிர்த்துப் பார்த்தார். அப்படியும் முடியவில்லை. மதிய உணவும் சாப்பிட முடியாத நிலையானதால், கொஞ்சம் சுதாரித்து, மருத்துவமனை போய் நிலைமையை சரி செய்தோம்.

 



சில வருடங்கள் கடந்து வந்திருக்கிறோம். ஊட்டி அன்று பார்த்த மாதிரியே அதே இளமையோடும், பசுமையோடும் இருக்கிறது.  ஊரே பிரிஜ்ஜில் வைத்த மாதிரியே சில்லென இருக்கிறது. மக்கள் ஸ்வெட்டர் உதவியுடன் வலம் வருகிறார்கள்.

 



டால்பின் வியூ பாயிண்ட் போய் சுற்றி வந்தோம்.   மருத்துவமனை போனதால், சிம்சன் பார்க்கிற்குள் உள்ளே நுழைந்துப் பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது.

 

மாலை ஊட்டிக்கு வந்து சேர்ந்தோம். ஏற்கனவே திட்டமிட்டு இருந்த, ஹோட்டலில் தங்கினோம்.  ஆகஸ்டு கடைசி என்பதால், பகலில் 17 டிகிரி இருந்த குளிர், இரவில் 12 டிகிரி வரைக்கும் கீழே செல்கிறது. வெயில் எவ்வளவு என்றாலும் தாங்கிக்கொள்ள முடிகிறது. இந்த குளிர் கொஞ்சம் சிரமம் தான்.

 


நண்பருக்கு உடல்நிலை கொஞ்சம் சோர்வானதால், அறையில் ஒரு ஹீட்டர் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டதில், குளிர் தாக்காமல் கத கதவென்று இருந்தோம்.

 

காலையில்  முதலில் தொட்டப்பெட்டா வியூ பாயிண்ட்க்கு வந்தோம். அடுத்து படகு குழாம். யாருக்கும் போக பெரிதாக ஆர்வமில்லை. நண்பர்கள் இருவரும் பெரிய பெரிய படகுகளில் அடிக்கடி சென்று வருபவர்கள்.  ஆகையால், கரையிலேயே  இருந்து சிறிது நேரம் ஏரியை வேடிக்கைப் பார்த்தோம்.

 


அடுத்து,  மைசூர் அரசர் ஆண்ட காலத்தில் ஊட்டியில் அரசருக்கு நிலம் இருந்திருக்கிறது. பிறகு அந்த நிலம் கர்நாடக அரசுக்கு கை மாற, இப்பொழுது கர்நாடக அரசு பராமரித்து வருகிறது. நல்ல பெரிய பூங்கா. பராமரிப்பும் நன்றாக இருக்கிறது. தொங்கு பாலம் சிறப்பாக இருந்தது.

 


நேரே (Bench Mark) சாக்லேட் தொழிற்சாலை வந்து சேர்ந்து, சொந்தங்களுக்கு விதவிதமான சாக்லெட்டும், வர்க்கியும் டீத்தூள் விதவிதமாய் இருந்தது.  அதிலும் கொஞ்சம் வாங்கிக்கொண்டோம்.    சில சாகச வேலைகள் செய்ய அருகிலேயே இருந்தது. இந்த முறை வேண்டாம் என கட்டுப்படுத்திக்கொண்டோம்.

 


பிறகு தங்குமிடம் போனோம்.  அடுத்த நாள் காலையில் பைக்காரா அருவி செல்லும் பாதையில் பைன் காடுகளைப் பார்த்தோம்.  அங்கு இருந்த ஏரியும் அருமையாக இருந்தது.   பிறகு முன்னொரு காலத்தில் நிறைய திரைப் படப்பிடிப்புகள் நடந்ததால், ஷூட்டிங் பாயிண்ட் என ஒரு புல் குன்று இருந்தது.  அருமையான இடம்.  செமத்தியான காற்று.  அட்டகாசமாய் இருந்தது.

 


பைக்காரா அருவி போய் பார்த்தோம்.   பெரிதான ஒரு அருவியை எதிர்பார்த்து போனால்,  குட்டியாய் இருந்தது.  அதுவும் நன்றாக தான் இருந்தது.  அப்படியே வண்டியை வந்த வழியிலேயே திரும்பினோம்.

 

ஒரு வழியாய் பொட்டனிக்கல் கார்டன் வந்து சேர்ந்தோம்.  ஒரு சுற்று வந்தோம். ஒரு வழியாய், ஊட்டி பய்ணம் இறுதிக் கட்டத்திற்கு வந்து சேர்ந்தோம்.

 


இந்தமுறை கொஞ்சம் திட்டமிட்டு, ஊட்டி – மேட்டுப்பாளையம் ரயிலில் போகலாம் என முன்பதிவு செய்திருந்தோம்.  கடந்த வாரம்  விட்டுவிட்டு பெய்த மழையால், ஆங்காங்கே பாதையை செப்பனிட வேண்டியிருந்ததால், 31ந் தேதி வரை ரத்து செய்துவிட்டார்கள். 

 

ஆகையால், வந்தது போலவே காரிலேயே மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தோம்.   கீழே வருவதற்குள் தலைச்சுற்றலும் வாந்தியும் என்னை சிக்கல் செய்துவிட்டன.   அதற்காக எல்லாம் கவலைப்பட்டால், ஊட்டி, கொடைக்கானலை மறந்துவிடவேண்டியது தான்.  

 


மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்ததும், இயல்பு நிலைக்கு வந்துவிட்டேன்.  இரவு வந்த நீலகிரி ரயிலைப் பிடித்து  காலையில் ஊர் வந்து சேர்ந்துவிட்டோம்.

 

பயணம் இனிதே முடிவுற்றது.  இந்தப் பயணத்தில் இன்னும் சில அம்சங்களை எழுதலாம். பிறகு எழுதுகிறேன்.

 

0 பின்னூட்டங்கள்: