> குருத்து: Wildlife of Karnataka (2019)

August 9, 2024

Wildlife of Karnataka (2019)

 


கர்நாடக வன விலங்குகள்   ஆவணப்படம் – 52 நிமிடங்கள்

 

கர்நாடக வனப்பகுதியில் புலி, யானை என பெருமிருகங்களையும், தவளை, நண்டு என சின்ன உயிரினங்களையும், அவைகளுடைய இயல்புகளையும், வாழ்வையும் அருமையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.

 

எட்டிப்பழம் ஒன்று ஒரு மனிதனை கொல்லும் அளவிற்கு வீரியம் உண்டாம். ஆகையால் மற்ற பறவையினங்கள், விலங்குகள் அந்த மரத்தைத் தெறித்து ஓடும் பொழுது, இருவாச்சி பறவைகள் மட்டும் அதனை உணவாக உட்கொள்கிறது. அதையும் செரித்து விடுகிற ஆற்றல் அந்த பறவைக்கு இருக்கிறது.

 

இப்படி நுட்பமான தகவல்களையும் ஆங்காங்கே தூவி செல்கிறார்கள்.  பல மொழிகளில் உருவாக்கியிருந்தாலும், தமிழில்  இதற்கு அருமையாக குரல் கொடுத்து மெருகேற்றியிருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். 

 

நிலப்பரப்பில் இந்தியாவின் 6வது மாநிலம் கர்நாடகா.   இதில் வனப்பகுதி 20.19% என்பது ஆச்சரியமான செய்தி.   இங்கு இந்திய யானைகளில் 25% இங்கு இருக்கிறதாம்.  புலி 20% இருக்கிறதாம்.  தமிழ்நாட்டின், கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பயணித்திருக்கிறேன்.  கர்நாடகவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் போனதில்லை. அவசியம் போகவேண்டும்.

 


1500 நாட்கள். 15000 மணி நேர படப்பிடிப்பு.   நவீன 20 கேமராக்கள்.  2400 நிமிடங்கள் என ஒரு நீள பட்டியல் சொல்கிறார்கள். உண்மையான நிகழ்வு என்பதால், நிச்சயம் காலம் பிடித்திருக்கும்.  இதில் டிரோன் காட்சிகள் அதிகம்.  இந்தப் படத்தின் சிறப்பான அம்சம் கூட.

 

தேசிய விருதுகள் உட்பட நிறைய விருதுகளை வென்றிருக்கிறது.  முதன்முதலாக இப்படி ஒரு ஆவணப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டிருக்கிறார்கள்.  இந்தப் படத்தை நிச்சயம் திரையரங்கில் பார்ப்பது ஒரு நல்ல அனுபவமாகத் தான் இருந்திருக்கும்.

 

காடுகளில் உள்ள பாதிப்பு, மாறிவரும் காலநிலை அதன் பாதிப்பு எவ்வளவு என்பதை படம் எட்டிப்பார்க்கவேயில்லை.  அதை நாம் தாம் தேடிப்பார்க்கவேண்டும்.

 

இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை. நான் முன்பு தரவிறக்கி இப்பொழுது பார்த்தேன்.

 

0 பின்னூட்டங்கள்: