> குருத்து: Kung fu zohra (2021) பிரெஞ்சு

January 4, 2023

Kung fu zohra (2021) பிரெஞ்சு



கணவன், மனைவி, எட்டு வயது குழந்தை. அவன் எதற்கெடுத்தாலும், கை ஓங்குகிற ஆளாக இருக்கிறான். டைவோர்ஸ் வாங்கிவிடலாம் என யோசித்தால், மோசமான புருஷன் தான். ஆனால் பிள்ளையிடம் பாசமாக இருக்கிறான் அல்லது குழந்தையோடு நெருக்கமாய் இருந்தால் தான் பொண்டாட்டி தன்னை விட்டு பிரிந்து போகமாட்டாள் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறான். இருப்பினும் ஒருமுறை புகார் தந்து, போலீசெல்லாம் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. சிறைக்கு செல்வதாய் காட்டுகிறார்கள். போய் வந்த பிறகும் மாறாமல் இருக்கிறான்.


பேருந்து ஓட்டுநராக இருக்கும் அவள் தோழி, அவனை விவாகரத்து செய் என சொல்லும் பொழுது, அப்பா இல்லாத குழந்தையாகிவிடுவாள் என்கிறாள். அவனிடமிருந்து தற்காத்து கொள்ள யூடியூப் பார்த்து தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள துவங்குகிறாள். பிறகு என்ன ஆனது என்பதை கலாட்டாவுடன் சொல்லியிருக்கிறார்கள்.

***

”ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” சமீபத்தில் மலையாளப் படம் இந்தப் படத்தைப் பார்த்து தான் கேரள மண்ணுக்கு தகுந்தமாதிரி மாற்றியிருக்கிறார்கள். இந்த கதையை ஒரு நண்பரிடம் சொன்ன பொழுது, பிரான்சிலுமா இப்படி என ஆச்சர்யமாய் சொன்னார்.

குடும்ப வன்முறை – பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை என்பது உலகம் முழுவதிலும் இருக்கத்தான் செய்கிறது. எல்லா நாடுகளிலும் புகார்கள் பதிவாகிக்கொண்டு தான் இருக்கிறது. அங்கேயாவது பிரிந்து செல்வது என்கிற சமூக நிலை இருக்கிறது. நம் சமூகத்தில் அடி, உதைகளை சகித்துக்கொண்டு அப்படியே வாழ்ந்துவிடுகிறார்கள்.

நாம் வாழ்கிற சமூகத்தில், சமூகம் தனியுடைமை சமூகமாக இருக்கிறது. ஆணாதிக்கத்துடன் நடந்துகொள்கிறது. இருக்கிற நிலைமைகளில் பெண்கள் இன்னும் பொருளாதாரத்தில் வலுவுள்ளவர்களாக மாறும் பொழுது, குறையலாம். முற்றிலும் ஒழிக்க முடியுமா? என்ன செய்தால் முற்றிலும் ஒழிக்க முடியும் என ஆலோசனைகள் இருந்தால் சொல்லுங்கள்.

படத்தில் மிக குறைவான பாத்திரங்கள் தான். நாயகியை மிகவும் பிடித்துப்போய்விட்டது. வேறு படங்கள் ஏதேனும் இருக்கிறதா என தேடிப் பார்க்கவேண்டும். அதே போல கணவனாய் வருகிறவரும்! மற்றவர்கள் எல்லாம் குறைவான நேரத்திற்கு வந்து போகிறார்கள்.

hungama தளத்தில் இருப்பதாக இணையம் சொல்கிறது.

0 பின்னூட்டங்கள்: