இப்பொழுதுள்ள பெரும்பாலான குழந்தைகள் கழுதைகளை பார்த்திருக்க வாய்ப்பேயில்லை! குதிரையின் இனங்களில் ஒன்றாக கழுதை இருக்கிறது. வெப்ப மண்டல பகுதிகளில் வாழ்கின்றன. சுமை தூக்குவதற்கு பயன்படுவதால்… மனிதர்களின் வாழ்வில் பல ஆண்டு காலம் உடன் பயணித்திருக்கிறது.
என்னுடைய சிறுவயதில் மதுரையின் வைகையில்… துணிகளை துவைக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் அழுக்குத் துணிகளை, துவைத்த துணிகளை தூக்கிச் செல்ல கழுதைகளை பயன்படுத்துவார்கள்.
கழுதையை ஒரு முக்கிய பாத்திரமாக வைத்து ”பஞ்ச கல்யாணி ” என்ற பெயரில் 1979ல் ஒரு படம் தமிழில் வெளிவந்தது. இப்பொழுதும் யூடியூப்பில் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் சில கடைகளில் கழுதைப் படத்தை வைத்திருப்பார்கள். ”என்னைப் பார் யோகம் வரும்” என எழுதி வைத்திருப்பார்கள். இப்பொழுது கழுதைகள் அருகி வருவதால், கடைகளில் அந்த கழுதைப் படங்களும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.
1952ல் இந்தியாவில் இருந்த கழுதைகளின் எண்ணிக்கை 13 லட்சம் என்கிறார்கள். இப்பொழுது 1 லட்சத்திற்கும் கீழே குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் எண்ணிக்கை கடந்த ஆண்டு கணக்கின்படி 1428 என சுருங்கிவிட்டது. நமது வாழ்வில் துவைக்கும் மிஷின்கள் வந்து, அவரவர் துவைக்க துவங்கிய பிறகு … துவைக்கும் தொழிலும் நசிய துவங்கிவிட்டது. மெல்ல மெல்ல கழுதைகளும் காணாமல் போன துவங்கின. கழுதையைப் பார்த்து பல வருடங்களாயிற்று!
சமீபத்தில் ராஜஸ்தான் போயிருந்த பொழுது… அஜ்மீர் நகரத்தின் நெருக்கடியான தெருக்களில் கழுதைகள் கடந்து சென்றன. புகைப்படம் எடுப்பதற்குள் வேகமாக சென்றுவிட்டன. அங்கு செங்கல் சூளைகளில் செங்கலை எடுத்துச் செல்ல பயன்படுத்துகிறார்கள். ராஜஸ்தானில் மட்டும் 23000 கழுதைகள் இருப்பதாக பிபிசி தளம் தெரிவிக்கிறது.
ஆகையால், கழுதைக்கு அங்கு நல்ல மதிப்பு இருக்கிறது. சமீபத்தில் கழுதை வளர்ப்பவர்கள், மேய்ச்சலுக்கு விட்ட கழுதைகளை காணோம் என புகார் கொடுத்திருக்கிறார்கள். மொத்தம் 70 கழுதைகள். ஒரு கழுதையின் விலை ரூ. 20000. மொத்த மதிப்பு 14 லட்சம்.
போலீசார் புகாரை வழக்கம் போல கண்டுகொள்ளவில்லை. தொடர்ச்சியாய் போராட துவங்கி, விசயம் பெரிதாகிவிட்டது. பிரச்சனையை முடிப்பதற்காக… போலீசு தனது வழக்கமான பார்முலாவான எங்கோ ”கிடைத்த” 15 கழுதைகளை கொண்டு வந்து புகார் கொடுத்தவர்கள் முன்னால் நிறுத்தியிருக்கிறார்கள். தொலைத்தவர் வந்து… ”பிங்கு, பபுலு” என அழைத்திருக்கிறார். எந்த கழுதையும் சமிக்ஞையும் கொடுக்காததால்… இது எங்கள் கழுதையில்லை என போய்விட்டார்கள். இரும்பு கோடாரி கதை நினைவுக்கு வருகிறதா?
”கழுதை கெட்டால் குட்டிச்சுவர்!”
”வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்!”
”கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!”
- இப்படி நம் பேச்சு வழக்கில் கழுதைகள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
அழிந்து வரும் கழுதைகளை காப்பாற்ற 2020ல் தமிழக அரசு கவனத்தில் கொண்டு சில முயற்சிகளை செய்யப்போவதாக ஒரு செய்திப் படித்தேன்.
உழைத்து தரும் மனிதர்களையே அரசுகள் கண்டு கொள்வதில்லை! கழுதைகளையா கண்டு கொள்ளப் போகிறார்கள்?
கழுதைகளைப் பற்றி உங்களுக்கு என்ன நினைவுகள் இருக்கின்றன?
0 பின்னூட்டங்கள்:
Post a Comment