> குருத்து: August 2024

August 31, 2024

The Hole (1960)


சிறையில் இருந்து தப்பித்தல் – உண்மை சம்பவங்களின் அடிப்படையில்!

****

நீண்ட சிறை வாழ்க்கைக்குப் பின் வெளியேறும் ஒருவன் இந்த உலகைக் குழந்தையின் கண் கொண்டு காண்பான்.

- தஸ்தயேவ்ஸ்கி 'மரண வீட்டின் குறிப்புகள்' நாவலில்…
*****

1957ல் The break என ஒரு நாவல். பாரிஸ் சிறையில் 1947ல் உண்மையில் நடந்த சம்பவம் அது. அதைப் படமாக்கியிருக்கிறார்கள்.


சிறையில் நான்கு பேர் ஒரு அறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். வேறு ஒருஅறையில் உள்ள தற்காலிக பிரச்சனையால், ஐந்தாவது நபராக ஒருவரை அழைத்து வருகிறார்கள். ஏற்கனவே இடப் பிரச்சனை. இன்னும் ஒருவரா? என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் அங்கு மதிப்பு இல்லை.

தனிப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, சட்ட ரீதியாக இனி வெளியேறுவது சாத்தியமில்லை என்ற நிலையில், சிறையில் இருந்து எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள். ஐந்தாவது நபரை எப்படி நம்புவது என்பது தான் அவர்களது முக்கிய பிரச்சனை. இப்பொழுது வேறு வழியில்லை. ஐந்தாவது நபரை நம்பியாகவேண்டிய நிலை.

சிறையில் எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது. யார் தப்பிக்க முயன்றாலும், உதவவேண்டும். அப்படித்தான் உதவுகிறார்கள். அவர்களின் திட்டம் இது தான். சிறை அறையின் மூலையில் ஓட்டை ஒன்றை போட்டு... அதன் வழியாக தப்பிப்பது. சிறையின் விதிமுறைகள் கடுமையானவை. இரவில் தூங்கும் பொழுது கூட ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சிறை கண்காணிப்பு இருக்கிறது.

அங்கிருந்து தப்பித்தார்களா என்பதை சுவாரசியமாய் சொல்லியிருக்கிறார்கள்.
*****


சிறை என்பது சமூகத்தில் ஒரு மனிதன் குற்றம் இழைக்கும் பொழுது, அவன் செய்த தண்டனைக்கு தகுந்த காலத்தில் தனிமைப் படுத்தி பிறகு விடுவிப்பது.

தவறு இழைத்த மனிதனுக்கோ, தனி மனிதனுக்கோ சிறை என்பது ஆகப்பெரிய கொடுமை தான். அதனால் தான் உயிர் போனாலும் பரவாயில்லை என காலம் காலமாக தப்பிக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் தான் உடன் இருப்பவர்களும் கடமை என உதவுகிறார்கள்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் என்பதால், அதற்குரிய தன்மையுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே தப்பித்த ஒருவரும் இந்தப் படத்தில் அவராகவே வலம் வருகிறார். ஒரு கான்கிரீட் தளத்தை அடித்து உடைப்பதாய் இருந்தால், உண்மையிலேயே உடைக்க விட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் உணரமுடிகிறது.

சிறையில் இருந்து தப்பித்தல் என நிறையப்படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படம் முதல் படமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

இயக்குநர் Jacques Becker பிரான்சை சார்ந்தவர். படத்தில் நடித்தவர்கள் சரியாக பொருந்தியிருக்கிறார்கள்.

August 29, 2024

ஊட்டிப் பயணம்


மதுரைக்கு அருகே இருப்பதால் கொடைக்கானலுக்கு பலமுறை போயிருக்கிறேன். ஆனால் ஊட்டி கொஞ்சம் தூரம் என்பதால், இதுவரை நான்கு முறை தான் போயிருக்கிறேன்.

 


இந்த முறை நண்பர் ஒருவர் இதுவரை போகவில்லை என சொன்னதால், வாங்க கிளம்புவோம் என கிளம்பிவிட்டோம்.  சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை நீலகிரி விரைவு ரயிலில் பயணம். அங்கிருந்து குன்னூர் வரை காரில் பயணம்.  போகிற வழியில் காட்டேரி பூங்காவில் கொஞ்சம் இளைப்பாறினோம்.

 


முதல்முறை வரும் நண்பருக்கு கொஞ்சம் தலைச்சுற்றலும், வாந்தியும் நிறைய சிக்கல் செய்துவிட்டது. முதல் நாள் நான் தான் வாந்தி தவிர்க்க மாத்திரைகள் வாங்கிவரவேண்டிய பொறுப்பை ஏற்றிந்தேன். நண்பர் தான் வாங்கி வருவதாக பொறுப்பாக ஏற்றுக்கொண்டு, மாத்திரைகளை வாங்கி வீட்டிலேயே மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டார். 

 



ரயிலை விட்டு இறங்கினால், ஞாயிறு விடிகாலை. கடை திறக்க நேரமாகும். சரி கிளம்பலாம் என கிளம்பியது தான் இரண்டாவது தவறு.  காலை உணவையும் தவிர்த்துப் பார்த்தார். அப்படியும் முடியவில்லை. மதிய உணவும் சாப்பிட முடியாத நிலையானதால், கொஞ்சம் சுதாரித்து, மருத்துவமனை போய் நிலைமையை சரி செய்தோம்.

 



சில வருடங்கள் கடந்து வந்திருக்கிறோம். ஊட்டி அன்று பார்த்த மாதிரியே அதே இளமையோடும், பசுமையோடும் இருக்கிறது.  ஊரே பிரிஜ்ஜில் வைத்த மாதிரியே சில்லென இருக்கிறது. மக்கள் ஸ்வெட்டர் உதவியுடன் வலம் வருகிறார்கள்.

 



டால்பின் வியூ பாயிண்ட் போய் சுற்றி வந்தோம்.   மருத்துவமனை போனதால், சிம்சன் பார்க்கிற்குள் உள்ளே நுழைந்துப் பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது.

 

மாலை ஊட்டிக்கு வந்து சேர்ந்தோம். ஏற்கனவே திட்டமிட்டு இருந்த, ஹோட்டலில் தங்கினோம்.  ஆகஸ்டு கடைசி என்பதால், பகலில் 17 டிகிரி இருந்த குளிர், இரவில் 12 டிகிரி வரைக்கும் கீழே செல்கிறது. வெயில் எவ்வளவு என்றாலும் தாங்கிக்கொள்ள முடிகிறது. இந்த குளிர் கொஞ்சம் சிரமம் தான்.

 


நண்பருக்கு உடல்நிலை கொஞ்சம் சோர்வானதால், அறையில் ஒரு ஹீட்டர் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டதில், குளிர் தாக்காமல் கத கதவென்று இருந்தோம்.

 

காலையில்  முதலில் தொட்டப்பெட்டா வியூ பாயிண்ட்க்கு வந்தோம். அடுத்து படகு குழாம். யாருக்கும் போக பெரிதாக ஆர்வமில்லை. நண்பர்கள் இருவரும் பெரிய பெரிய படகுகளில் அடிக்கடி சென்று வருபவர்கள்.  ஆகையால், கரையிலேயே  இருந்து சிறிது நேரம் ஏரியை வேடிக்கைப் பார்த்தோம்.

 


அடுத்து,  மைசூர் அரசர் ஆண்ட காலத்தில் ஊட்டியில் அரசருக்கு நிலம் இருந்திருக்கிறது. பிறகு அந்த நிலம் கர்நாடக அரசுக்கு கை மாற, இப்பொழுது கர்நாடக அரசு பராமரித்து வருகிறது. நல்ல பெரிய பூங்கா. பராமரிப்பும் நன்றாக இருக்கிறது. தொங்கு பாலம் சிறப்பாக இருந்தது.

 


நேரே (Bench Mark) சாக்லேட் தொழிற்சாலை வந்து சேர்ந்து, சொந்தங்களுக்கு விதவிதமான சாக்லெட்டும், வர்க்கியும் டீத்தூள் விதவிதமாய் இருந்தது.  அதிலும் கொஞ்சம் வாங்கிக்கொண்டோம்.    சில சாகச வேலைகள் செய்ய அருகிலேயே இருந்தது. இந்த முறை வேண்டாம் என கட்டுப்படுத்திக்கொண்டோம்.

 


பிறகு தங்குமிடம் போனோம்.  அடுத்த நாள் காலையில் பைக்காரா அருவி செல்லும் பாதையில் பைன் காடுகளைப் பார்த்தோம்.  அங்கு இருந்த ஏரியும் அருமையாக இருந்தது.   பிறகு முன்னொரு காலத்தில் நிறைய திரைப் படப்பிடிப்புகள் நடந்ததால், ஷூட்டிங் பாயிண்ட் என ஒரு புல் குன்று இருந்தது.  அருமையான இடம்.  செமத்தியான காற்று.  அட்டகாசமாய் இருந்தது.

 


பைக்காரா அருவி போய் பார்த்தோம்.   பெரிதான ஒரு அருவியை எதிர்பார்த்து போனால்,  குட்டியாய் இருந்தது.  அதுவும் நன்றாக தான் இருந்தது.  அப்படியே வண்டியை வந்த வழியிலேயே திரும்பினோம்.

 

ஒரு வழியாய் பொட்டனிக்கல் கார்டன் வந்து சேர்ந்தோம்.  ஒரு சுற்று வந்தோம். ஒரு வழியாய், ஊட்டி பய்ணம் இறுதிக் கட்டத்திற்கு வந்து சேர்ந்தோம்.

 


இந்தமுறை கொஞ்சம் திட்டமிட்டு, ஊட்டி – மேட்டுப்பாளையம் ரயிலில் போகலாம் என முன்பதிவு செய்திருந்தோம்.  கடந்த வாரம்  விட்டுவிட்டு பெய்த மழையால், ஆங்காங்கே பாதையை செப்பனிட வேண்டியிருந்ததால், 31ந் தேதி வரை ரத்து செய்துவிட்டார்கள். 

 

ஆகையால், வந்தது போலவே காரிலேயே மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தோம்.   கீழே வருவதற்குள் தலைச்சுற்றலும் வாந்தியும் என்னை சிக்கல் செய்துவிட்டன.   அதற்காக எல்லாம் கவலைப்பட்டால், ஊட்டி, கொடைக்கானலை மறந்துவிடவேண்டியது தான்.  

 


மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்ததும், இயல்பு நிலைக்கு வந்துவிட்டேன்.  இரவு வந்த நீலகிரி ரயிலைப் பிடித்து  காலையில் ஊர் வந்து சேர்ந்துவிட்டோம்.

 

பயணம் இனிதே முடிவுற்றது.  இந்தப் பயணத்தில் இன்னும் சில அம்சங்களை எழுதலாம். பிறகு எழுதுகிறேன்.

 

August 26, 2024

வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 8


ஆவணங்களின்றி முன்பணம் (Advance) பெறும் வசதி நிறுத்தப்பட்டது

 

கொரானா பெருந்தொற்று காலத்துக்கு முன்பு, பி.எப் கணக்கில் கடன் வாங்குவது என்பது திருமணம், மருத்துவ செலவுகள், வீடு கட்டுதல், வீட்டை புதுப்பித்தல், கல்விக் கட்டணம் செலுத்துவது என வரையறுக்கப்பட்ட காரணங்களுக்கு மட்டும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதற்குரிய சான்று ஆவணங்களை சமர்ப்பிக்கும் பொழுது தான் பி.எப். கடன் வழங்கிக்கொண்டிருந்தது.

 

 

கொரானா பெருந்தொற்றால்  மார்ச் 2020ல் அரசு ஊரடங்கு அறிவித்த பொழுது,  பல தொழில்கள் முடங்கின. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.   அடுத்த வேளை சோற்றுக்கே திண்டாடிய சூழ்நிலையில், தொழிலாளர்களின் நெருக்கடியான வாழ்நிலையை கணக்கில் கொண்டு,  பி.எப். ஒரு அவசர அறிவிப்பை செய்தது.  

 

எந்த ஆவணமும் இல்லாமல், தொழிலாளர்கள் அவர்கள் செலுத்திய பணத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.  அவர்களுடைய பி.எப். நிதி இருப்பில் அந்த பணம் கழித்துக்கொள்ளப்படும்.  அதைத் திருப்பி செலுத்தவேண்டியதில்லை எனவும் அறிவித்தது.

 

கொரானா முதல் அலை முடிந்து, இரண்டாம் அலையும் கொடூரமாக மக்களை தாக்கியது.  ஆகையால், முன்பணம் வாங்கும் காலத்தையும் நீட்டித்து அறிவித்தது.  நான்கு ஆண்டு காலம் ஆகிவிட்டபடியால், இப்பொழுது முன்பணம் தருவதை நிறுத்துவதாக கடந்த ஜூன் 12ந் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

 

ஆகையால், தொழிலாளர்கள் ஆவணங்களின்றி முன்பணம் வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

 

இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint declaration)



பி.எப். திட்டத்தில்  ஆதாரின் வருகைக்கு முன்பு ஒரு தொழிலாளி குறித்த தனிப்பட்ட விவரங்களைத் தளத்தில் பதிவு செய்யும் பொழுது,  தொழிலாளர்கள் வாய்மொழியாக தெரிவிக்கும் விவரங்களை கொண்டு பதிவு செய்வது வழக்கமாய் இருந்தது.  அவர் தெரிவிக்கும் அடிப்படைத் தகவல்களை சரிப்பார்ப்பதற்கு ஆவணங்களை கேட்கும் பொழுது, அதற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து  பல தொழிலாளர்கள் தருவதில்லை அல்லது தாமதப்படுத்துவார்கள்.

 

ஆகையால், பெயர், அப்பா/கணவர் பெயர், பிறந்த தேதி என பதிவு செய்ததில் நிறைய குழப்பங்கள்  இருந்தன. பிறந்த வருடத்தில் ஏழு வருடங்கள் வித்தியாசம் இருந்த தொழிலாளியை என் அனுபவத்தில் அறிவேன்.   இணையும் பொழுது, நாம் கொடுக்கும் தனிபட்ட விவரங்களை ஏற்றுக்கொள்ளும் பி.எப். தளம்  பி.எப் பணத்திற்காக விண்ணப்பிக்கும் பொழுது எளிதாக தந்துவிடுவதில்லை.  சம்பந்தப்பட்ட தொழிலாளியினுடைய விவரங்களில் உள்ள எல்லா பிழைகளையும் சரி செய்து வந்த பிறகே பணத்தை வங்கிக்கு அனுப்பிவைக்கும்.   அந்த தவறுகளை சரி செய்வதற்கு பல நாட்கள் அலைந்த தொழிலாளர்களை நானறிவேன்.

 

ஆதார் வருகை



ஆதார் வருகைக்கு பிறகு, இந்த குழப்பங்கள் பெருமளவில் குறைந்தன எனலாம்.  ஒரு நிறுவனம்  ஒரு தொழிலாளியை பதிவு செய்யும் பொழுது, இப்பொழுது ஆதார் இல்லாமல் பி.எப். தளத்தில் இணைக்க முடியாத நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். ஆதாரில் உள்ள பெயர், அப்பா பெயர், பிறந்த தேதி என எல்லா விவரங்களையும் ஆதாரில் உள்ளவற்றை பி.எப் தளம் ஏற்றுக்கொண்டது. ஆகையால் அடிப்படை விவரங்களை சரியாக பதிய முடிந்தது.

 

பி.எப். பணத்தைப் பெறுவதற்கு, ஆதாரில் உள்ள விவரங்கள் மட்டும் சரியானவையாக இருந்தால் போதாது.   தொழிலாளியின் பான் கார்டு விவரங்கள், வங்கி கணக்கில் உள்ள விவரங்கள் எல்லாம் ஆதாரில் உள்ள விவரங்களோடு சரியாக ஒத்துப்போகவேண்டும்.  அப்பொழுது தான் பி.எப் தொழிலாளரின் நிதியை வங்கி கணக்கு அனுப்பிவைக்கும்.

 

முன்பு தொழிலாளியின் பெயர், பிறந்த தேதி, பாலினம் என குறைவான அம்சங்களை மட்டுமே திருத்துவதற்கு பி.எப் தளத்தில் வசதி இருந்து வந்தது.

 

ஆனால் நடைமுறையில் இப்படி தொழிலாளர்களின் தனிப்பட்ட விவரங்களையும்,  நிறுவனத்தில் இணைந்த தேதி, விலகிய தேதி என பல அம்சங்களில் உள்ள பிழைகளை சரி செய்வதற்கு தளத்தில் வசதி இல்லாமல் இருந்தது.  இதற்காகவே இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint Declaration form)  ஒன்றை பி.எப் வைத்திருந்தது.  

 

அந்த விண்ணப்பத்தில்  தொழிலாளியின் எது சரியான விவரங்கள், எந்த விவரங்கள் தளத்தில் பிழையாக இருக்கின்றன என்பதை குறிப்பிட்டு, வேலை செய்யும் நிறுவனத்தின் பொறுப்பாளர் கையெழுத்திட்டு, நிறுவனத்தின் சீல் வைத்து, தொழிலாளியும் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட பி.எப். அலுவலகத்தில் ஒப்படைத்தால், பிழைகளை சரி செய்யும் வழக்கமிருந்தது.

 

உறுப்பினருக்கான பி.எப். தளத்திலேயே இப்பொழுது இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint Declaration)



தொழிலாளர்களின்  தனிப்பட்ட விவரங்கள், மற்ற அம்சங்களையும் திருத்துவதற்கு பி.எப் அலுவலகத்துக்கு நேரில் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் எப்பொழுதும், பி.எப் அலுவலகங்களில் தொழிலாளர்கள் நிரம்பி வழிந்தார்கள்.

 

இதற்கும் இப்பொழுது பிஎப் நிறுவனம் ஒரு தீர்வைக் கண்டுப்பிடித்து, உறுப்பினர்கள் பயன்படுத்தும் பிஎப் தளத்திலேயே இணை உறுதிமொழிப் பத்திரத்தை வலையேற்றும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம்,  அப்பா/கணவர் பெயர், பாலினம், படிப்பு தகுதி, திருமணம் ஆனவரா, இல்லையா என பல அம்சங்களையும் திருத்துவதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இந்த வசதியை பி.எப் உறுப்பினருக்கான தளத்தில் நிர்வகி (Manage) என்ற தலைப்பின் கீழ் முதல் அம்சமாக இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint Declaration)  ஒன்றை இணைத்திருக்கிறார்கள்.  அதைக் கிளிக் செய்தால், நாம் வேலை செய்த நிறுவனத்தின் பெயர்/பெயர்கள் தெரியும்.  ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால், ஒரு கணக்கும், சில நிறுவனங்களில் வேலை செய்தால், சில கணக்குகளும் தளம் காட்டும்.  எந்த கணக்கிற்கு நாம் திருத்தம் செய்யும் தேவையிருக்கிறதோ, அந்த கணக்கைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

 

பிறகு, தனிப்பட்ட விவரங்களுக்கான பகுதியில் (Personal Details) மூன்று அம்சங்களைக் காட்டும். ஒன்று தேவையான மாற்றம் செய்யும் பகுதி (Update Details),  அடுத்தது, எந்த மாற்றம் செய்ய கோருகிறோமோ, அதற்கான ஆவணங்களை வலையேற்றும் (Upload documents)  பகுதி,  மூன்றாவது நாம் விவரங்களை சரிப்பார்த்து, சமர்ப்பிக்கும் பகுதி (Preview/Submit Application) இருக்கும்.

 

இரண்டாவது பகுதியில், நமது வேலை செய்த விவரங்களான (Update Service Details), வேலையில் இணைந்த தேதி, விலகிய தேதி, வேலையில் இருந்து விலகியதற்கான காரணம், அதே போல ஓய்வூதிய கணக்கில் உள்ள விவரங்களையும் தளம் காட்டும்.  அதில் செய்யவேண்டிய திருத்தங்களுக்கும் நாம் விண்ணப்பிக்கலாம்.

 

இதில் நாம் செய்கிற திருத்தத்துக்கு உரிய ஆவணங்களையும் தாக்கல் செய்யவேண்டும்.  என்னென்ன திருத்தம் செய்யமுடியும், எத்தனைமுறை திருத்தமுடியும், ஒவ்வொரு திருத்தத்திற்கும்  என்ன ஆவணம், ஆவணங்கள் வலையேற்ற வேண்டும் என்பதற்கு, பி.எப். விளக்கமான கையேடு (SOP – Standard of Procedures) ஒன்றை 23/08/2023 அன்றும், அதற்கு பிறகு இன்னும் மேம்படுத்தி,  26/03/2024 அன்றும்  வெளியிட்டு இருக்கிறது.  இணையத்தில் தேடினால் எளிதாக கிடைக்கிறது.


தொழிலாளர்கள் மேற்கண்ட விவரங்களை சமர்ப்பித்த பிறகு, நிறுவனத்தின் பார்வைக்கு செல்லும். சம்பந்தப்பட்ட நிறுவனம் அவற்றை உரிய ஆவணங்களுடன் வலையேற்றப்பட்டிருக்கிறதா என்பதை சரிப்பார்த்து, ஒப்புதல் வழங்குகிறது.  பிறகு, அந்த விண்ணப்பம் பி.எப் நிறுவனத்திற்கு செல்கிறது.  அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பிஎப். அலுவலர் சரிப்பார்த்து ஒப்புதல் கொடுத்ததும்,  தொழிலாளர் கோரிய மாற்றம் தளத்தில் மாற்றம் செய்யப்படும்.

 

தொழிலாளி தனது கணக்கை பராமரிக்க கூடிய பி.எப். அலுவலகத்தை எப்படி தெரிந்துகொள்வது?

 


பல தொழிலாளர்களுக்கு இந்த சந்தேகம் இருக்கிறது.  ஒரு நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தை பி.எப். தளத்தில் பதிவு செய்யும் பொழுது நிறுவனம் எந்த பகுதியில் இருக்கிறதோ,  அதற்கு அருகிலேயே பி.எப். அலுவலகத்தின் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. ஒவ்வொரு பி.எப். அலுவலகமும் அஞ்சலக குறியீடுகளை பிரித்துகொண்டு பொறுப்பேற்கிறது.  ஆகையால், எந்த நிறுவனத்தில் நாம் வேலை செய்கிறோமோ, அந்த நிறுவனத்திடம் எந்த பி.எப். அலுவலகம் நமது கணக்கை பராமரிக்கிறது என தெரிந்துகொள்ளவேண்டும்.

 

இந்த முறை என்பது தொழிலாளர்களுக்கு மிகவும் சிரமம் தரக்கூடியதாக இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் இருக்கிறது. அதனுடைய கிளை அலுவலகம் சென்னையில் இருக்கிறது.   தமிழ் பேசும் தொழிலாளி சென்னையில் வேலை செய்து, பிறகு வேலையை விட்டு நின்ற பிறகு, அவருடைய பி.எப். பணத்தை வாங்குவதற்கு பிஎப் தளத்திலேயே விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது.  அந்த தொழிலாளியினுடைய தனிப்பட்ட தகவல்களில் பிழைகள் இருக்கும் பட்சத்தில்,  தலைமையிடமான மும்பை அலுவலகத்தையும், மும்பை அலுவலகம் இருக்ககூடிய பகுதியிலேயே சம்பந்தப்பட்ட பி.எப். அலுவலகமும் இருப்பதால், அவர்களை தொடர்புகொண்டு, அந்த பிழைகளை சரி செய்வதற்குள் அந்த தொழிலாளி பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்.  இந்த மாதிரி சிக்கலான சமயங்களில் தன்னுடைய பி.எப் பணத்தை வாங்கமுடியாமல் சோர்வடைந்து விட்டுவிடுவதும் நடக்கிறது.

 

இப்பொழுது உலகம் டிஜிட்டல் உலகமாக மாறிக்கொண்டிருக்கும் பொழுது, இந்தியாவும் மெல்ல மெல்ல டிஜிட்டல்மயமாக மாறிக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் ஒரு தொழிலாளி இந்தியாவில் எங்கு வேலை செய்தாலும், எந்த பி.எப். அலுவலகத்தை வேண்டுமென்றாலும் அணுகலாம்.  தனக்கு தேவையான செய்திகளைப் பெறலாம். தன் கணக்கில் ஏற்படும் பிழைகளை சரி செய்ய அணுகலாம் என்கிற நிலையை பி.எப்கொண்டுவர அதற்கான செயல்களை விரைவாக முன்னெடுக்கவேண்டும் என தொழிலாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்வோம்.

 

தொழிலாளர்கள் பி.எப். குறித்து உங்களுக்கு இருக்கும் கேள்விகளை, சந்தேகங்களை தொழில் உலகம் இதழுக்கு எழுதி அனுப்புங்கள்.  அடுத்தடுத்து வரும் இதழ்களில் பதிலளிக்கிறேன்.

 

இன்னும் வளரும்.

 

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

9551291721

பிஎப். : (Second factor Authentication) ஓடிபி ஒரு அனுபவம்


கடந்த 17ந் தேதியில் இருந்து… பி.எப்.  நிறுவனத்திற்காக இயங்கும் தளத்தில் ஒவ்வொருமுறை நுழையும் பொழுதும்,  நிறுவன முதலாளியிடம்/பொறுப்பாளரிடம் ஓடிபி பெறவேண்டும்.

 

ஒரு நிறுவன முதலாளியிடம், பி.எப் தளம் உள்ளே போக ஓடிபி கேட்ட பொழுது...

 

"எதுவும் ஓடிபி வரல்லையே சார்"

 

பதிவு பெற்ற மொபைல் எண்ணை  கண்டுபிடித்து தெரிவித்த பொழுது...

 

"அந்த எண்ணா? வீட்டில் கொடுத்திருக்கிறேன். இருங்க கேட்கிறேன்" என்றவர்

 

ஓடிபிக்கான ஐந்து நிமிடங்கள் முடிவடைந்த நிலையில்...

 

"என் மனைவி போனை எடுக்க மாட்டேங்கிறாங்க சார்!"

 

அப்ப மொபைல் எண்ணை மாத்திரலாம். வீட்டுக்கு போனதும் அந்த மொபைல் எண் வைத்திருப்பீர்கள் அல்லவா? அப்பொழுது அழைக்கவா சார்?”

 

" அப்ப பசங்க கிட்ட செல் சிக்கியிருக்குமே! அவங்ககிட்ட இருந்து வாங்குறது கஷ்டம்! நாளை காலையில் அழையுங்கள் சார்".

 

காலையில் அழைத்து ... முதல் காரியமாய் அவருக்கு போன் செய்து மாற்றிவிட வேண்டும்.

 

அடுத்த நாள் காலையில்...

 

"ஓடிபி சொல்லுங்க சார்!"

 

"ஏதும் வரல்லையே!"

 

திரும்பவும் முயற்சி.

 

”இப்பவும் வரல்லையே!”

 

சந்தேகம் வந்து… “நீங்க வைச்சிருக்கிறது பட்டன் போனா? அப்படி இருந்தால், இன்பாக்ஸ்  நிறைந்திருக்கும்.  சில செய்திகளை அழியுங்கள்”

 

“நான் வைச்சிருக்கிறது ஆண்ட்ராய்டு சார்”

 

மீண்டும் யோசித்து,  “ரீசார்ஜ் செய்திருக்கிறீர்களா?”

 

“ரீசார்ஜ் செய்தால் தான் வரும்ல!  இப்பொழுதே பண்ணிவிடுகிறேன்”.

 

ஒரு வழியாய் வீட்டு போனில் இருந்து,  அவர் போனுக்கு வெற்றிகரமாய் மாறிவிட்டோம். இனி எல்லாம்  நலம் தான் என நினைத்தேன்.

 

மதியம் 4 மணிக்கு அழைத்தால்… “என் பசங்க ஸ்கூல் வந்திருக்கிறேன். பேரண்ட்ஸ் மீட்டிங் சார். பிறகு அழைக்கிறீர்களா?!”

 

அட போங்கப்பா!  ஒரு பி.எப். தளத்திற்குள் போவதற்குள் எத்தனைப் போராட்டம்?

August 17, 2024

Round up : Punishment (2024) தென்கொரியா


சட்ட விரோதமாக கேசினோ சூதாட்ட அமைப்பு இயங்கிவருகிறது. அவர்களைத் தவிர வேறு யாரும் இயங்ககூடாது என அடாவடியாக நடந்துகொள்கிறார்கள். அப்படி யாராவது துவங்கினால், உள்ளே புகுந்து மொத்த செட்டப்பையும் நொறுக்கிவிடுகிறார்கள்.


இதற்கிடையில், இந்த விளையாட்டுக்காக கணிப்பொறியில் நல்ல அறிவு உள்ள இளைஞர்களை இழுத்து வந்து, கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறார்கள். அதில் ஒரு இளைஞர் தப்பித்துப் போகிறார். அவரைத் தேடிப்பிடித்து கொடூரமாக கொல்கிறார்கள்.

இந்த வழக்கு போலீசிடம் விசாரணைக்கு வருகிறது. நாயகன் விசாரிக்க துவங்குகிறார். அந்த இளைஞரின் அம்மா, “இந்த மாபியா கும்பலை எப்படியாவது தண்டியுங்கள்’ என கேட்டுக்கொள்கிறார். துக்கம் தாளாமல் தற்கொலை செய்து இறந்தும் போகிறார். போலீசாக இருந்தாலும், இளகிய மனம் கொண்டவரான நாயகன் அந்த கும்பலை பிடிக்கப் போராடுகிறார்.

இதற்கிடையில், அந்த கேசினோவை நடத்தும் முதலாளிக்கும், அடியாட்படைகளின் தலைவனுக்கும் கமிசன் கொடுக்கல் வாங்கலில் முரண் எழுகிறது. அந்த அடியாட்படை தலைவன் மிக கொடூரமான ஆள். எவ்வளவு கொலைகளுக்கும் துணிந்த ஆள் அவன்.

அந்த கும்பல், அடியாட்களிலும் பெரிய படையாக, கொடூரமாக கொலை செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். மில்லியன்களில் பணம் கொட்டுவதால், கணிப்பொறி தொழில்நுட்பத்திலும் கில்லாடியாக இருக்கிறார்கள். நாயகன் மெல்ல மெல்ல விசாரணையில் முன்னேறி அந்த காசினோ மாபியா கும்பலை பிடித்தாரா என்பதை அடிதடி, கலாட்டாகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.
***


ஜாக்கிசான் கொடிக்கட்டி பறந்த காலத்தில்... 1985 துவங்கி 2013 வரை போலீஸ் ஸ்டோரி என ஏழு பாகங்கள் வரை எடுத்து வெளியிட்டார்கள். மாபியா கும்பலை பிடிப்பதற்கான போலீசின் போராட்டம் தான் மையமாக இருக்கும். அதில் ஜாக்கிசானின் சாசகங்கள் பிரதானமாக இருக்கும்.

அது போல தென்கொரிய வரிசையாக, Don Lee யின் அடிதடி படங்களாக இந்த வரிசையில் நான்காவது படமாக வெளிவந்து, நன்றாக கல்லாவும் கட்டியிருக்கிறது.

போலீசு படங்கள் என்பதால், முற்றிலும் கற்பனையாக எடுக்காமல், சம காலத்தில் நடந்த விசயங்களையும் இணைத்துக்கொண்டு எடுப்பதால், படம் கொஞ்சம் நம்பகத்தன்மையுடன் இருப்பது நல்ல விசயம்.

மாபியா கும்பல் கொழுத்த பண வசதியுடனும், தொழில்நுட்ப திறனுடனுடன், அடியாட் படைகளுடன் இருப்பதையும், போலீசுக்கு எல்லாமே பற்றாக்குறை என்பதையும் நன்றாக காட்டியிருப்பார்கள்.

இது தென்கொரிய போலீசுக்கு மட்டுமல்ல! உலகம் முழுவதிலுமே இந்தப் பிரச்சனை இருக்கிறது. இந்தியா டிஜிட்டல் உலகமாக சில வருடங்களாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், டிஜிட்டல் குற்றங்களும் நாள்தோறும் பெருகிக்கொண்டே போகின்றன. அதைக் கண்டுபிடித்து குற்றங்களை களைவதில் பெரிய தேக்கம் இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்கிறோம்.

படம் கலகலப்பாக செல்கிறது. டோன் லீ தன் குழுவினருடன் மொத்தப் படத்தையும் தாங்குகிறார். ஆள் ஓங்கு தாங்காக இருந்தாலும், ஒரு அடி கொடுத்தால், பொறி கலங்கவைப்பவராக இருந்தாலும், அவருடைய நடவடிக்கையில் ஒரு வெள்ளந்தித்தனம் இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.
ஆக்சன் ரசிகர்கள் பார்க்கலாம்.

Golam (2024) மலையாளம்


ஒரு பிரபல நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம். பதினைந்து பேருக்கும் மேலான நபர்கள் வேலை செய்கிறார்கள். வழக்கம் போல அலுவலகம் அன்றைக்கும் இயல்பாக துவங்குகிறது. நிறுவனத்தின் முதலாளி வருகிறார். பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு விசயம் குறித்து விவாதிப்பதற்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்கிறார்கள்.


காபி குடிக்க எந்திரத்துக்கு போகிறார். (முதலாளியே போய் காபியை உருவாக்குவாரா என்ன?) அவர் மேல் காபி சிந்துகிறது. துடைப்பதற்காக வாஷ்பேசின் உள்ள அறைக்குச் செல்கிறார்.

சில நிமிடங்களில் அவருடைய தொழில்முறை கூட்டாளி அழைக்கிறார் என்பதற்காக… அலுவலக நிர்வாகி கதவைத் தட்டுகிறார். உள்ளிருந்து பதில் வராததால், செக்யூரிட்டியிடம் இருந்து சாவி வாங்கி வந்து திறக்கிறார்கள். உள்ளே தலையில் அடிப்பட்டு, அந்த முதலாளி இறந்து கிடக்கிறார்.

ASPயாக இருக்கும் நாயகனான போலீசு படையுடன் வருகிறார். விசாரணையை துவக்குகிறார். இயல்பான மரணமா? கொலையா? என்ற அந்த விசாரணையில் தெரிய வரும் சில மர்மங்கள் அவரை எங்கேயோ அழைத்து செல்கிறது. அதை சுவாரசியமாய் சொல்லியிருக்கிறார்கள். இரண்டாவது பாகத்துக்கும் அடி போட்டிருக்கிறார்கள்.

****


மொத்தப்படத்தையும் நுணக்கமாக எழுதி, அதை வெற்றிகரமாக படமும் ஆக்கியிருக்கிறார்கள்.

படம் முடியும் பொழுது, ”இதில் காண்பிப்பது எல்லாம் நடைமுறையில் சாத்தியமா?” என என் மகள் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தாள்.

நாவலசிரியர் அகதா கிறிஸ்டி 1900 களில் எழுதிய ஒரு நாவலால் ஈர்க்கப்பட்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக ஆங்காங்கே கண்ணில்பட்டது. படக்குழு ஒத்துக்கொள்கிறதா என தெரியவில்லை.

தமிழ் தெலுங்கு படங்களின் பாதிப்பு நாயகன் ரஞ்சித் சஜீவ் தன் ஜிம் பாடியை ஆங்காங்கே காட்டுவதில் தெரிகிறது. ஆச்சர்யம் ஜோடியாக யாரையும் காட்டவில்லை. சித்திக், திலீஷ் போத்தன், மற்ற நடிகர்களும் நன்றாக துணை நின்றிருக்கிறார்கள். சம்ஜத் இயக்கியுள்ளார். முதல் படம் போலவே தெரியவில்லை.

அமேசானில் வெளியாகியிருக்கிறது. திரில்லர் ரசிகர்கள் பாருங்கள்.

வேள்பாரி நாடகம்


நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில், சு. வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” நாடகத்தை சிவப்பு யானைக் குழுவைச் சார்ந்த திரு. சந்திரமோகன் நாடகு குழு அரங்கேற்றினார்கள். நானும், இலக்கியாவும் கலந்துகொண்டோம்.


நாவலின் முதல் பகுதியை ஏற்கனவே நாடகம் போட்டதாக சொல்லி, இரண்டாவது பகுதியாக, நாவலின் சில பகுதிகளை அரங்கேற்றினார்கள்.

பாரி மன்னன், புலவர் கபிலர், பறம்பு நாட்டு மக்கள், பாண்டிய மன்னன், அவர்களுடைய படைகள் என ஒரு மணி நேரம் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள்.


அதில் ஒரு காட்சி.

பறம்பு மலையில் தெய்வவாக்கு சொல்லும் தேவாங்கின் சிறப்பு எப்பொழுதும் வடக்கு திசையைக் காட்டி நிற்பது. இந்த விலங்கு குறித்து அறிகிறான் குலசேகர பாண்டிய மன்னன். கடலில் தன் வீரர்களுக்கு வழிகாட்ட பெரிய உதவியாக இருக்கும் என புரிந்துகொண்டு, ஒரு இனக்குழுவை கைது செய்து, பறம்பு மலையில் இருந்து நிறைய தேவாங்குகளை திருடிக்கொண்டு வர உத்தரவிடுகிறான். அவர்களும் வேறு வழியேயில்லாமல் செய்கிறார்கள். திருடும் பொழுது பாரி மன்னன் தடுக்கிறான்.

பறம்பு மலையை ஆண்ட ஒரு குறுநில மன்னன் பாரியை, மூவேந்தர்களும் சேர்ந்து சதி செய்து கொன்றிருக்கிறார்கள்.

ஒரு மணி நேரம் நடத்தினார்கள். அந்த Stage மேடை மிகவும் சின்ன இடம். அந்த இடத்திற்குள், இப்படி சாத்தியப்படுத்தியது ஆச்சர்யம். நாடகம் முடிந்ததும், பார்வையாளர்கள் பாராட்டினார்கள். சிலர் கருத்து தெரிவித்தார்கள்.

அதில் ஒரு இளம்பெண். ”நாடகம் அருமையாக இருந்தது. எனக்கு தமிழ் வாசிக்க தெரியாது. அம்மாவின் வழியாக வேள்பாரியை தெரிந்துகொண்டேன். வேள்பாரியை படிப்பதற்காக இனி தமிழ் படிக்கப் போகிறேன்” என்றார்.


நேற்றைய நிகழ்வில் நிறைய குழந்தைகள் பங்குகொண்டார்கள். ஆசிரியர்கள் சிலர் தன்னார்வத்தில் வேள்பாரி நாவலைப் பற்றி பள்ளியில் குழந்தைகளிடம் விரிவாக பகிர்ந்துகொள்ள அவர்களும் ஆர்வத்துடன் பங்குகொண்டிருக்கிறார்கள்.

”வெறுப்பு அரசியலை பரப்பும் சம கால அரசியல் சூழ்நிலையில், வேள்பாரியின் விழுமியங்கள் நாடு முழுவதும் பரவவேண்டும். வாழ்த்துகள்” என நானும் தெரிவித்தேன்.

இன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடத்த இருக்கிற செய்தியை அதன் அமைப்பாளர் தெரிவித்தார். வாய்ப்பு உள்ளவர்கள் நிச்சயம் பாருங்கள். அதற்காகவே உடனே இப்பொழுது எழுதுகிறேன்.