> குருத்து: December 2022

December 26, 2022

Doctor G (2022) இந்தி



நாயகன் மருத்துவம் (MBBS) படித்துவிட்டு, மேற்படிப்பாக எலும்பியல் (Ortho) துறையில் படிக்கவேண்டும் என்பது சிறுவயது முதலே பெரிய விருப்பமாக இருக்கிறது. ஆனால், தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு அவன் விரும்பிய படிப்பு எங்கோ ஒரு மூலையில் இடம் கிடைக்கிறது. அம்மா தனியாக இருக்கிறார். அவரை விட்டுவிட்டு போகமுடியாத நிலை. ஆகையால் அவன் ஊரிலேயே மகப்பேறு மருத்துவருக்கான (Gynaeocology) படிப்புக்கு இடம் கிடைக்கிறது. தற்பொழுது இணைந்து படிக்கவிட்டால், ஒருவருடம் வீணாகிவிடும். அடுத்தவருடம் தேர்வு எழுதி தன் விருப்பமான துறைக்கு மாறிக்கொள்ளலாம் என முடிவு செய்கிறான்.


இளநிலை மருத்துவம் படிக்கும் பொழுதே ஒரு பெண்ணை காதலித்து, அவள் என்ன சொல்கிறாள் என்பதையோ, அவளின் உணர்வுகளை புரிந்துகொள்வதிலோ உள்ள சிக்கலில் அவள் பிரிந்துபோகிறாள்.

பிடிக்காத துறை படிப்பு. அவனோடு அந்த குழுவில் இருக்கும் அனைவருமே பெண்கள். சீனியர் பெண்களும் வெறுப்பேற்றுகிறார்கள். பெண் நோயாளிகளை சோதனை செய்வதில் இவனுக்கு ஒவ்வாமை இருக்கிறது. நர்சு, சக மாணவிகளின் உதவியுடன் நாட்களை கடத்துகிறான். துறைத்தலைவர் இவனுடைய அணுகுமுறையைப் பார்த்து கண்டிப்புடன் நடந்துகொள்கிறார்.

இதற்கிடையில் நாயகியான சீனியர் பெண் இவனுடன் சகஜமாக பழக, அதை காதல் என புரிந்துகொள்கிறான். அவளுக்கு வேறு ஒருவருடம் நிச்சயம் ஆகியிருக்கிறது. நாயகனின் அண்ணன் ஒரு மருத்துவர். அவன் செய்யும் ஒரு பெரிய தவறால், இவனுக்கு பெரிய சிக்கலாகிறது.

ஒரு வழியாக படிப்பை முடித்தானா? என்ன ஆனது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.
****

மருத்துவராக இருந்தாலும், நாயகன் ஒரு சராசரியான மனநிலையில் இருக்கிறான். ஒரு பெண்ணுடன் பழகினாலே காதலாக தான் இருக்கமுடியும் என்ற சிந்தனை. மற்றவர்கள் பேசும் பொழுது காது கொடுத்து கேட்காமல் இருப்பது, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத தன்மையுடன் இருக்கிறான். நாயகனின் அம்மா, நாயகி, அண்ணனின் ’காதலி’ என குறிப்பாக மூன்று பெண்களும், மற்ற பெண்களும் அவனின் வாழ்க்கையை நேர்மறையாக எப்படி மாற்றுகிறார்கள் என்பது தான் படமே.

இந்தியாவில் ஆண் மகப்பேறு மருத்துவர்கள் தான் அதிகம். ஆண் தொடுதல் (Male Touch) என்பதை ஒரு மருத்துவர் கைவிடவேண்டும் என சின்ன சின்னதாய் நிறைய விசயங்களை பேசியிருக்கிறார்கள். ஒரு துறை ரீதியாக புரிந்துகொண்டு, கதையிலும், எடுப்பதிலும் மெனக்கெட்டு இருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசியிருக்கலாம். ஒரு அளவோடு போதும் என வரம்பிட்டு நிறுத்திக்கொண்டார்களோ என தோன்றுகிறது.

ஆயுஷ்மான் குரானா தான் நாயகன். தொடர்ச்சியாக இதுவரை பரவலாக பேசப்படாத கதைகள் என Article 15, Badhaai Ho என தொடர்ந்து நடித்து வருகிறார். நன்றாகவும் நடிக்கிறார். நாயகியாக ரகுல் ப்ரீத்சிங் என மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ”கேங்ஸ் ஆப் வாசேபூர்” புகழ் அனுராக் காஷ்யப்பின் சகோதரி அனுபூதி (Anubhuti) தான் இயக்கியிருக்கிறார். அடுத்தப் படம் இன்னும் ஆழமான கதையுடன் வாருங்கள் என வாழ்த்துவோம். நெட் பிளிக்சில் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் இருக்கிறது. பாருங்கள்.

December 23, 2022

நூல் அறிமுகம் : உப்பிட்டவரை


”உப்பு பெறாத விசயத்தை பேசிகிட்டு…” என யாராவது சொன்னால் அவர்களுக்கு நிச்சயம் உப்பின் வரலாறு தெரியாது என நிச்சயம் சொல்லலாம்.


உப்பு எதற்கெல்லாம் பயன்படுகிறது?

”உப்பு இல்லா பண்டம் குப்பையிலே” என்பது புகழ்பெற்ற சொலவடை. சமையலில் சகலத்துக்கும் பயன்படுத்துகிறோம். பழரசம் தயாரிக்கும் பொழுது கூட கொஞ்சூண்டு உப்பு சேர்த்தால், இனிப்பின் சுவையை கூட்டித் தருகிறது. நாம் அன்றாடம் துவைக்கும் சோப்பை தயாரிப்பதற்கு, மருந்து தயாரிப்பதற்கு, விவசாய உரத்திற்கு, ஆலைகளில் சில பொருட்களை தயாரிப்பதற்கு என உப்பின் பயன்பாட்டை நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

நமது பண்பாட்டிலும், பழக்க வழக்கங்களிலும் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகளில் மக்கள் உப்பை பயன்படுத்துகிறார்கள். வீடு கட்ட துவங்கும் பொழுது, ’கெட்ட ஆவிகள்’ புகாமல் இருக்க , புதுவீடு புகும் பொழுது, ’கடவுளுக்கு’ நேர்த்திக்கடனாக உப்பை படைக்கிறார்கள்.

சங்க காலத்தில் உப்பு

சங்க காலத்தில் உப்பு அரிதான பொருளாக இருந்திருக்கிறது. வறுமையின் கொடுமையை உணர்த்த, ”உப்பில்லாமல் உண்பது” என எழுதியிருக்கிறார்கள். அந்த காலத்தில் உப்பு தயாரித்தவர்கள் பரதவர்கள். அதை வாங்கி மக்களிடம் விநியோகித்தவர்களை உமணர்கள் என அழைத்துள்ளனர். உப்பு விற்ற பெண்களை “உமட்டியர்” என்கிறது சிறுபாணாற்று படை.

உப்பின் மீது வரி

எல்லாவற்றிக்கும் உப்பு தேவை. அப்ப அதற்கு போடு வரி என ஏழாம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவ மன்னர்கள் காலத்தில் இருந்தே உப்பின் மீது வரி போட்டு மக்களை வாட்டியிருக்கிறார்கள். ஒரு படி உப்புக்கு ஒரு படி நெல் என சரிக்கு சமமாக மக்களிடம் விற்பனை செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் 1805ல் நுழைந்த பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள். வகை தொகையில்லாமல் உப்பின் மூலம் கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆட்சியில் இருந்த 1947வரை உப்பு வரியாக மட்டும் கொள்ளையடித்த தொகை மட்டும் ஆண்டுக்கு 9 கோடி. அந்த காலத்தில் ஒரு நீதிபதியின் மாதச் சம்பளம் ரூ.1000 என்கிறார்கள். அப்படியென்றால், இது எவ்வளவு பெரியதொகை என புரிந்துகொள்ளலாம்.

இப்படி கொள்ளையடித்ததால், பெரும்பாலான ஏழை மக்கள் அரிசி, பருப்பு வாங்கவே சிரமப்படும் வேளையில் உப்பு இல்லாமலே தான் சாப்பிட்டிருப்பார்கள் என நிலைமையில் இருந்து புரிந்துகொள்ளமுடியும். சரி தொலையுது! நாமே உப்பை காய்ச்சி பயன்படுத்தலாம் என்றால்… சட்டத்திற்கு புறம்பாக உப்பைத் தயாரித்தால்… ”ஆறு மாதம் சிறைதண்டனை. ரூ. 500 ரொக்கம் தண்டம். இரண்டையும் சேர்த்து கூட விதிக்கப்படும்” என அறிவித்திருக்கிறார்கள். உப்பளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசை பாதுகாப்புக்கு நிறுத்தியிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் காலத்திற்கு முன்பு உப்பு விற்றவர்கள் குறவர்கள். ஆட்சிக்கு வந்த பிறகு, மற்றவர்களிடம் உப்பு விற்கும் வியாபாரத்தை கைமாற்றிவிட்டார்கள். அரசின் உத்தரவை எதிர்த்து உப்பு தயாரித்த குறவர்களை முத்திரை குத்தி குற்ற பரம்பரையாக்கியிருக்கிறார்கள்.

உப்பு என கேட்டதற்காக தலித் அடித்தே கொலை

சாதிய வேறுபாடுகள் ஆதிக்கம் செலுத்திய இந்திய சமூகத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட உப்பு என்ற சொல்லிலும் பயன்படுத்தியுள்ளனர். அம்பேத்கர் ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

“மலபாரில் உள்ள ஒத்தப்பாலம் என்ற இடத்தில் ஈழவ சாதியைச் சேர்ந்த சிவராமன் என்ற 17வது இளைஞர், சாதி இந்து ஒருவரின் கடைக்குச் சென்று உப்பு வேண்டும் என்று கேட்டார். அவர் ‘உப்பு’ என்ற மலையாள வார்த்தையைப் பயன்படுத்தினார். மலபாரில் உள்ள வழக்கப்படி ’உப்பு’ என்ற சொல்லைச் சாதி இந்துக்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அந்த இளைஞர் ஹரிஜன் என்பதால் அவர் ’புளிச்சாட்டன்’ என்று தான் கேட்டிருக்கவேண்டும். இதனால் கோபமடைந்த உயர்சாதிக் கடைக்காரர், சிவராமனை பலமாக அடித்ததால் அவர் இறந்து போனார்”

உப்புச் சத்தியாகிரகம்

பிரிட்டிஷார் உப்பில் கொள்ளையடிக்கிறார்கள் என மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. காங்கிரசு கட்சி இதை எதிர்க்கவேண்டும் என விவாதம் எழுந்த பொழுது, வருமான வரியை உயர்த்தப் போவதாக பிரிட்டிஷார் யோசித்த பொழுது, காங்கிரசில் ஒரு பிரிவினர், வேண்டுமென்றால் உப்பின் மீதான வரியை ஏற்றிக்கொள்ளுங்கள் என அயோக்கியத்தனமாய் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

1923ல் பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த சிங்காரவேலர் தாங்கள் உருவாக்கிய கட்சியின் வேலைத் திட்டங்களில் ஒன்றாக உப்பு வரி ஒழிப்பு என்பதையும் வைத்திருந்தார்கள்.

பின் வந்த ஆண்டுகளில் சிவில் சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தை காந்தி தலைமையிலான காங்கிரசு துவக்கியது. தம் தேவைக்கான உப்பை மக்களே தயாரித்துக்கொள்ளலாம் என அறிவித்தார். கால்நடையாக உப்பு எடுக்கப் போவதாக 1930 ஏப்ரல் 6ல் காந்தி போராட்டம் அறிவித்தார்.

இந்தப் போராட்டத்தில்… தமிழ்நாட்டு மக்கள் உணர்வுபூர்வமாய் கலந்துகொண்டிருக்கிறார்கள். நாகையில் உள்ள உப்பளம் நோக்கி மற்ற மாவட்டத்தில் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள நடை பயணம் சென்றவர்களுக்கு எதுவும் கொடுக்க கூடாது என்பது பிரிட்டிஷ் அரசின் கடுமையான உத்தரவு. உத்தரவையும் மீறி மக்கள் ஊருக்கு வெளியே ஒரு மரத்தில் முன்னாடியே போய் சாப்பாடை கட்டி வைத்துவிட்டு, நடை பயணம் போகிறவர்களிடம் மரத்தில் உள்ள உணவு குறித்து ரகசியமாய் தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.

உப்புக்கான போராட்டத்தை தடுக்கும் போலீசை கண்டிக்கும் விதமாக நாவிதர்கள் ”இனி அவர்களுக்கு சவரம் செய்யமாடோம்” என அறிவித்திருக்கிறார்கள். பதினாறு வயதுடைய வைரப்பன் என்ற நாவிதர் ஒரு போலீஸ்காரனுக்கு சவரம் செய்ய மறுக்க, அவரை அடித்து, ஆறு மாதம் சிறையில் தள்ளியிருக்கிறார்கள். அவரின் உறுதி காரணமாக அவருக்கு நாகை மாவட்டதின் வேதாரண்யத்தில் நினைவுத்தூண் அமைத்திருக்கிறார்கள். இன்றைக்கும் இருக்கிறது.

உப்பளகங்களும் தொழிலாளர்களும்

இந்தியா ஆண்டுக்கு 300 மில்லியன் டன் உப்பு உற்பத்தியில் உலகத்தில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. குஜராத்தில் 79%யும், தமிழகத்தில் 10%யும், இராஜஸ்தானில் 9%யும் உப்பு தயாரிக்கிறார்கள். குஜராத்தில் கணிசமான அளவு தயாரிப்பதால், குஜராத்தில் உப்புத்துறைக்கு தனி அமைச்சகமே உருவாக்கியிருக்கிறார்கள். நவீன உற்பத்தி முறையை பின்பற்றுகிறார்கள். தமிழகத்திலும் நவீன உற்பத்தி முறையை பயன்படுத்தவேண்டும் என கடந்த வாரம் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியிருக்கிறார். ஆனால் தமிழக உப்பு உற்பத்தியாளர்களுக்கு வங்கிகளிலிருந்து உரிய கடன் வசதி கிடைப்பதில்லை என புலம்புகிறார்கள்.

தமிழகத்தில் பெரும்பாலும் தூத்துக்குடி மாவட்டத்திலும், நாகை மாவட்டத்திலும் உப்பைத் தயாரிக்கிறார்கள். இலட்சக்கணக்கான குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியிருக்கிறார்கள். அதிகப்பட்ச சம்பளமாக ஆண்களுக்கு ரூ. 500யும், பெண்களுக்கு ரூ. 400யும் தினக்கூலியாக தருகிறார்கள். ஞாயிறு வேலை கிடையாது. சம்பளமும் கிடையாது. வருடத்திற்கு மூன்று மாதம் மழைக் காலங்களில் வேறு வேலை தேடி, கிடைத்தவரை செய்கிறார்கள். அந்த காலத்தில் எந்த உதவித் தொகையும் தருவதில்லை.

உப்பு என்பது கண்ணாடியைப் போல, உடல் முழுவதும் கீறும் தன்மையுடையது. உப்பு வயல்களில் வேலை செய்யும் பொழுது உரிய பாதுகாப்பு உடைகள் கிடையாது. காலை 5 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை வேலை. கடுமையான வெயிலில் வேலை செய்யும் பொழுது, போதுமான குடிநீர் குடிக்கவேண்டும். ஆனால் போதுமான குடிநீர் தருவதில்லை. எங்கும் பார்த்தாலும் உப்பின் வெண்மை. வெயில் பட்டு இன்னும் மினுமினுக்கும். ஆகையால் கண்கள் கடுமையாக பாதிக்கும். பாதிக்கிறது. அதைத் தவிர்ப்பதற்காக கருப்பு கண்ணாடி அணியவேண்டும். நிர்வாகம் தருவதுமில்லை. அப்படியே அபூர்வமாய் தந்தாலும் விழிப்புணர்வு இல்லாததால் தொழிலாளர்கள் அணிவதுமில்லை.

தமிழக உப்பளகங்கள் கடலில் இருந்து நீர் எடுப்பதில்லை. ஏனென்றால் கடலில் உப்பின் அடர்த்தி குறைவு. அதனால் போர் போட்டு அல்லது கிணற்றில் இருந்து மோட்டார் வழியாக நீர் எடுக்கிறார்கள். ஆகையால் மின்சார செலவு இருக்கிறது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை மிகவும் அதிகப்படுத்திவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து உப்பை அகற்றியதால், 1800 டன் உப்பு இருந்தால் மட்டுமே ரயிலில் எடுத்துசெல்லமுடியும் என்ற நிலை இருக்கிறது.

குஜராத்திலோ நேரடியாக கடல் நீரை பயன்படுத்துகிறார்கள். அதனால் மின்சார செலவு குறைவு. குஜராத்தில் தொழிலாளர்களின் சம்பளம் தமிழகத்தை விட இன்னும் மோசம். திறன் ஊழியருக்கே (Skilled) ஒரு நாளைக்கு ரூ. 371.30 தான் சட்டப்பூர்வமாக தீர்மானித்திருக்கிறார்கள். நடைமுறையில் அவ்வளவு தருவார்களா என நிச்சயம் சொல்வதற்கில்லை. உப்பு உற்பத்தி அதிகம் என்பதால், ரயிலிலும், கப்பலிலும் உப்பை கொண்டுவருகிறார்கள். குஜராத் அரசும் உப்புத் தொழிலுக்கு சலுகைகள் தந்து ஆதரவு தருகிறது. விளைவு, தமிழக உப்பை விட, குஜராத் உப்பின் விலை குறைவாக சந்தையில் கிடைக்கிறது. தமிழகத்தில் உப்பு விலை உயர்ந்துவிட்டது என குஜராத்தில் இருந்து 27500 டன் உப்பை குஜராத்தில் இருந்து 2019 நவம்பரில் வரவழைத்தார்கள்.

தமிழகத்தில் உப்புத் தொழிலை நம்பி நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும், உப தொழில்களில் நான்கு லட்சம் தொழிலாளர்களும் என மொத்தம் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் நம்பி வாழ்கிறார்கள். இலாபம் குறைந்து கொண்டே வருவதால், மெல்ல மெல்ல தமிழகத்தில் உப்பு உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. தொழிலை நவீனப்படுத்த சொல்லும் தமிழக அரசு அதற்கேற்ப மான்யங்களை, கடன் வசதிகளை, வங்கிகளின் வழியே ஏற்பாடு செய்வதற்கான ஆக்கப்பூர்வ வழிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

உப்பு குறித்த அத்தனை தகவல்களையும் தலைப்பு வாரியாக அருமையாக தொகுத்து தந்திருக்கிறார் ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன். உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் எழுதிய ”கரிப்பு மணிகள்” (1978) நாவலிலும், எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன் எழுதிய ”உப்பு வயல்” (1995) நாவலிலும், எழுத்தாளர் தமிழ்ச்செல்வி எழுதிய ”அளம்” (2002) நாவலிலும் விரிவாக பதிவு செய்துள்ளனர்.

அனைவரும் படிக்கவேண்டிய நூல் இது.

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்.
பக்கங்கள் : 154
விலை : ரூ. 190
ஆசிரியர் : ஆ. சிவசுப்பிரமணியன்

December 22, 2022

சில அரிய பயனுள்ள இணையதளங்கள்...

(1) மேற்கத்திய தத்துவம் முழுவதும் அறிய


(அ) http://www.iep.utm.edu/

(ஆ) http://www.philosophypages.com/hy/index.htm


(2) கோட்பாடுகள் பற்றி 


        (அ) http://www.uta.edu/huma/illuminations/

        (ஆ) http://www.ruf.rice.edu/~wamorris/theory.html

        (இ) http://www.kristisiegel.com/theory.htm

        (ஈ) http://carbon.ucdenver.edu/~mryder/itc/postmodern.html

        (உ) http://french.chass.utoronto.ca/as-sa/EngSem1.html 


(3)   லத்தின் அமெரிக்க இலக்கியம் 


        (அ) http://lanic.utexas.edu/la/region/literature/


(4)    ஃபிரெஞ்ச்  இலக்கியம்


     (அ) http://www.digital-librarian.com/frenchlit.html

     (ஆ) http://athena.unige.ch/athena/admin/ath_txt.html


(5)   ஐரோப்பிய இலக்கியம்


     (அ) http://westlit.wordpress.com/about/

     (ஆ) http://www.wwnorton.com/college/english/nawest/


(6)   ருஷ்ய இலக்கியம்


     (அ) http://www.nlr.ru/eng/


(7)  ஆசிய இலக்கியம்


    (அ) http://literatureforreal.blogspot.in/

     (ஆ) http://hubpages.com/.../literature/eastern-literature/581


(8)அரேபிய இலக்கியம்


    (அ) http://www.library.cornell.edu/colldev/mideast/arablit.htm

    (ஆ) http://www.libraryofarabicliterature.org/

    (இ) http://www.al-bab.com/arab/literature/lit.htm


(9)   ஆப்பிரிக்க இலக்கியம்


    (அ) http://aflit.arts.uwa.edu.au/FEMEChomeEN.html

   (ஆ) http://www-sul.stanford.edu/depts/ssrg/africa/lit.html


(10)  அமெரிக்க இலக்கியம்


   (அ) http://public.wsu.edu/~campbelld/amlit/sites.htm

   (ஆ) http://lang.nagoya-u.ac.jp/~matsuoka/AmeLit-G.html


(11) கிரேக்க இலக்கியம்


   (அ) http://classics.mit.edu/


(12) கி.பி.1500 முதல் வெளிவந்த ஆங்கில இலக்கிய,கவிதை மற்றும் கட்டுரை நூல்களை வாசிக்கலாம்.


(அ) http://etext.lib.virginia.edu/collections/languages/english/


(13)  இவ்வளவும் வாசித்து, கொஞ்சம் ஜாலியாக வாசிக்க (மகா நக்கல்,நையாண்டி தளம்) 


    (அ) http://www.theonion.com/

    (ஆ) http://www.newsmax.com/jokes

    (இ) http://www.dilbert.com/

December 19, 2022

மருந்துச் செலவுக்கு வழியில்லாமல் தற்கொலை பண்ணுகிறவர்களின் அமெரிக்கா


ஒரு பரிமாற்ற கல்வித்திட்டத்தின் பகுதியாக வந்திருந்த சுமார் முப்பது அமெரிக்க மாணவர்களைப் பார்த்தேன். அவர்களுக்கு வயது 25க்குள் தான் இருக்கும். பாதி பேர்களுக்கு மேல் ஆண்களும் பெண்களும் கிரைண்டர் சைஸுக்கு இருந்தார்கள். அப்போது நான் அண்மையில் பார்த்த ஒரு ஆவணப்படத்தில் இருந்து சில புள்ளிவிபரங்கள் நினைவுக்கு வந்தன. அமெரிக்க மக்கள் தொகையில் 11% நீரிழிவு நோயாளிகள். 5இல் ஒருவர் தனக்கு நீரிழிவு இருந்தும் அதை அறியாமல் இருக்கிறார். அமெரிக்க மக்கள் தொகையில் 48.9% பேர் மிக அதிகமான உடல் (obesity) எடை கொண்டவர்கள். இதற்கு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - ஐம்பது, அறுபதுகளுக்குப் பிறகு - அங்கு அறிமுகமாக துரித உணவுகள், சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் உணவுகள், ஐஸ்கிரீம், இனிப்புகள் போன்றவையும், சாப்பிடுவது ஒரு கலாச்சார நடவடிக்கையாக விளம்பரப்படுத்தப்பட்டதும் பிரதான காரணம். அந்த ஆவணப்படத்தில் இன்னொரு ஆச்சரியப்படத்தக்க செய்தியைச் சொன்னார்கள் - உலகின் வேறெந்த நாட்டையும் விட அமெரிக்காவில் டைப் 1 மற்றும் சில நேரங்களில் டைப் 2 நீரிழிவாளர்களுக்கு தவிர்க்க முடியாத மருந்தான இன்சுலினின் விலை மிக மிக அதிகம் என்பது.


ஒரு மாதத்திற்கு தேவையான இன்சுலின் வாங்க இந்திய ரூபாயின் மதிப்பின் படி 80,000இல் இருந்து ஒரு லட்சம் வரை ஆகிறது. அதாவது ஒரு சராசரி அமெரிக்கனின் மாத சம்பளத்தில் 60% மேல் வெறும் இன்சுலின் வாங்கவே செலவாகிறது. நம்மூரில் இன்சுலின் விலை எவ்வளவு தெரியுமா? ரத்தத்தில் உடனடியாக வேலை செய்யும் short-acting இன்சுலினான அக்டிராபிட் போன்றவை - உங்களுக்கு மாதத்திற்கு 4-6 தேவைப்பட்டால் - சராசரியாக மாதத்திற்கு ரூ 600-900 ஆகும். (அரசு மருத்துவமனைகளில் இலவசம்.) எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். (Long acting இன்சுலினான வைலி கம்பெனி தயாரிக்கும் லாண்டஸ் தான் உலகம் முழுக்க விலை மிக அதிகம். அதன் அரசியல் ஒரு தனி கதை.) இந்த ஆவணப்படத்தில் இன்சுலின் வாங்க வழியில்லாமல் கிட்டத்தட்ட தற்கொலை பண்ணிக்கொண்ட ஒருவரைப் பற்றி சொன்னார்கள்.

அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். மனைவி, குழந்தைகள், பெற்றோர் என பெரிய குடும்பம். வாடகை வீடு. இவருடைய வருமானத்தையே நம்பியிருக்கிறார்கள். அதனால் குடும்பத்தில் செலவுகள் ஒரு முறை அதிகமாக அவரது கையிருப்பு பணம் முதல் வாரத்திலேயே காலியாகி விடுகிறது. எல்லா பில்களையும் கட்டி வாடகையையும் செலுத்தி விடுகிறார். இன்சுலின் வாங்க பணமில்லை. அமெரிக்காவில் பெரும்பாலான மெடிக்கல் இன்சுஷரன்ஸ் திட்டங்களின் கீழ் இன்சுலின் வாங்க முடியாது. வேறுவழியின்றி இன்சுலினே போட்டுக்கொள்ளாமல் இருக்கிறேன், டயட் மூலம் பார்த்துக்கொள்கிறேன் என முடிவெடுக்கிறார். ஒரு மாதத்தில் சர்க்கரை அளவு 500, 600, 800 என எகிறிக் கொண்டு போக ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகமாகி கீட்டோ அஸிடோஸிஸ் வந்து கோமா நிலைக்குப் போய் செத்து விடுகிறார். தங்கள் மகன், தங்கள் அப்பா, தன் கணவன் இப்படி குடும்ப செலவுக்காக தன் உயிரையே பணயம் வைத்த விசயம் அவர் சாகும் வரை தமக்குத் தெரியாது என அவர்கள் நேர்முகத்தில் கவலையுடன் சொல்கிறார்கள். இன்சுலின் வாங்க பணமில்லாமல் இவரைப் போல டயட் மூலமாக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முயலும் மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினர் அமெரிக்காவில் அதிகமாகி வருவதாக சொல்லுகிறார்கள். நிறைய பேர் மாற்று மருத்துவத்தை நாடுகிறார்களாம். என்ன செய்வது எனத் தெரியாமல் பலர் தவித்து நிற்கிறார்கள். அவர்கள் மாதம் ஒருமுறை மருந்து கம்பெனிகளின் வாசலில் போய் பதாகைகளுடன் போராடுகிறார்கள்.

ஒரு பெண் தன்னுடைய மருத்துவர் தனக்கு ஒரு வருடத்திற்கு தேவையான இன்சுலினை இலவசமாகத் தந்துவிட்டதாக, அது தனக்கு ஒரு வருட ஆயுளைத் தந்துள்ளதாக கண்ணீர் மல்க கூறினார். அந்த இன்சுலினானது அண்மையில் இறந்து போன ஒரு நீரிழிவு நோயாளியின் சேமிப்பில் இருந்தது. நோயாளியின் குடும்பத்தார் மருத்துவரிடம் ஒப்படைக்க அவரோ இவரைப் போல இன்சுலின் வாங்க பணமில்லாதவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார். இப்படி இன்சுலினை கடன்பெற்று உயிரை நீட்டிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அந்த பெண் தானும் தனது கணவனும் நீரிழிவாளர்கள் என்பதால் குழந்தையே பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாக சொல்லுகிறார்.

இன்சுலினின் விலை மிக அதிகமாக போனதற்கு மருந்து வணிகம் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணி தான் காரணம் என்கிறார்கள். ஏன் இவ்வளவு விலையென்றால் இருவரும் பழியை இன்னொருவர் மீது சுமத்தி தப்பிக்கிறார்கள். அரசாங்கம் இவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப் பார்த்தால் பெரும் தொகையை ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் கொடுத்து அவர்களுடைய கையைக் கட்டிப்போட்டு விடுகிறார்கள். கட்டற்ற சந்தைப் பொருளாதாரத்தின் மோசமான விளைவு இது என விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். கட்டற்ற சந்தையின் ஒரு முக்கிய பிரச்சினை அது ஆளும் அரசை விட, மக்கள் விட அதிகாரம் படைத்ததாக மாறி, மக்களின் உயிரை உறிஞ்சிக் கொல்லும் உரிமையைப் பெற்றுவிடுகிறது என்பது.

இன்சுலின் ஒரு காலத்தில் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் வரமாகத் தோன்றி இன்று அமெரிக்கா போன்ற தேசங்களில் சாபமாகி விட்டது. இப்போது அம்மக்களுக்கு இருக்கும் ஒரே வழி 24 மணிநேர உண்ணாநோன்பு டயட்டை மேற்கொண்டு, சாப்பிடும் ஒருவேளையின் போதும் காய்கறி, மாமிசம் போன்ற மாவுச்சத்து இல்லா உணவை எடுத்துக்கொள்வது. இப்படிச் செய்து இன்சுலின் அளவை மிகவும் குறைவாக எடுத்துக்கொண்டு செலவை வெகுவாக குறைக்க முடியும். ஆனால் எத்தனை பேருக்கு அந்த தெளிவும் கட்டுப்பாடும் உண்டு?

இந்தியாவில் மருந்து தயாரிப்பு, விற்பனை நிறுவனங்கள் ராட்சஸ வளர்ச்சி பெற்று, அரசைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இன்னும் பலம் பெறவில்லை. இங்கு நிறைய அரசு மருத்துவமனைகள் உள்ளன. அங்கு இன்சுலின் போன்ற மருந்துகள் இலவசம். ஆனால் எதிர்காலத்தில் இந்த மருந்து நிறுவனங்களும் மருத்துவமனைகளும் சேர்ந்து அரசியல்வாதிகளுக்கு நிதியளித்து அரசு மருத்துவமனைகளையும் சிறுக சிறுக மூட வைப்பார்கள். நாம் அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுத்து அதன் மூலம் தனியார் மருத்துவமனை செலவுகளை, மருந்து செலவுகளை பார்த்துக்கொள்ளும் நிலையை ஏற்படுத்துவார்கள். அதன் பிறகு சில குறிப்பிட்ட மருந்துகளின் விலைகளை இதே போல எகிற வைத்து, அவற்றை மட்டும் காப்பீட்டின் கீழ் வராமல் பார்த்துக் கொண்டு மக்களை சாகடிப்பார்கள். மருத்துவம் முழுக்க கட்டற்ற பொருளாதார சந்தையின் கீழ்வரும் அன்று இந்தியாவிலும் மருந்து நிறுவனம், விற்பனையாளர்கள், மருத்துவமனை, காப்பீட்டு நிறுவனங்களின் வலைப்பின்னல் தோன்றி நம் மென்னியைப் பிடிப்பார்கள். அன்று அமெரிக்காவைப் போல மெட்டொபொலிக் நோய்கள் இங்கு அதிகமாகி முக்கிய மருந்துகளுக்காக மாதச் சம்பளத்தில் 60% செலுத்துகிற நிலைமைக்கு மக்கள் தொகையில் பாதி பேர் ஆட்படுவார்கள். சில பத்தாண்டுகளில் இங்கு அந்நிலை வந்துவிடும்.

நான் பயமுறுத்தும் நோக்கில் சொல்லவில்லை - தனியார்மயமாக்கலின் சியர்கெர்ல்ஸ், சியர்பாய்ஸுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சொல்லுகிறேன்.

- பிலாஷ் சந்திரன்,
எழுத்தாளர்.

முதல் ஆசிரியர் நாவல்


வரலாற்றில் முதன்முறையாக தொழிலாளர்களும், விவசாயிகளும் இணைந்து ஆட்சி செய்த சோவியத் ரசியா. புரட்சி நடந்து ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும், அதிகாரத்தை இழந்த பிற்போக்கு கும்பல்கள் ஏகப்பட்ட தொல்லைகளை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.


ஏற்கனவே ஜார் மன்னன் ஆண்டு கொண்டிருந்த பொழுது, ரசியா கல்வி, பொருளாதாரம் என எல்லாவற்றிலும் பின்தங்கி இருந்தது. எல்லோருக்கும் உடனடியாக கல்வி தரவேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள்.

1924-ஆம் ஆண்டு. சோவியத்தின் கீர்கீஸியப் பகுதியில் ஒரு மலையடிவாரத்தில் இருந்தது குர்கூரெவு என்னும் சின்ன ஊர். வறுமையில் வாடுகிற பல நாடோடி குடும்பங்கள் அங்கே வசித்தனர்.

அங்குள்ள சிறுவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்காக சோவியத் அரசால் அனுப்பிவைக்கப்பட்ட துய்சேன் வந்து சேருகிறார். அவர் இளம் கம்யூனிஸ்டு கழகத்தை சேர்ந்த இளைஞர். முன்பு பஞ்சத்தில் ஊரை விட்டு சென்றவர், இப்பொழுது பள்ளி ஆசிரியராக வந்து சேர்கிறார்.

மக்களிடம் போய் பேசிப் பார்க்கிறார். அறியாமையில் இருந்த மக்கள் அவரை சட்டை செய்யவில்லை. குழந்தைகளை அவர்கள் விவசாய வேலைகளில் உதவிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அங்கு குன்றின் மீது சிதிலமடைந்த ஒரு குதிரை லாயத்தை சரி செய்து பள்ளிக்கூடமாக மாற்றுகிறார். சிறுவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்கள். சோவியத் உத்தரவைக் காண்பித்து, பெற்றோர்களிடம் பேசி, வற்புறுத்தி, சிறுவர்களை அழைத்து வருகிறார்.

துய்ஷேனும் முறையாக கற்ற ஆசிரியர் இல்லை. ஓரளவு எழுதவும், எழுத்துக் கூட்டி படிக்க மட்டுமே தெரிந்தவர். தனக்கு தெரிந்ததை பிள்ளைகளுக்கு கற்றுத்தந்துவிட வேண்டும் என்ற ஆர்வம் அவரை இயக்குகிறது. முதல் தலைமுறையாக படிக்கும் அந்த குழந்தைகளிடம் இனிமையாகவும், பொறுமையாகவும் பழகுகிறார். அவர்களும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.

இப்படி செல்லும் பொழுது, பெற்றோரை இழந்து, தன் உறவுக்காரர்களிடம் வளர்ந்து
வரும் ஒரு இளம் பெண்ணை ஒரு கிழவனுக்கு கட்டி வைக்க, முயல்கிறார்கள். ஆசிரியர் தடுத்தும், அவரை கடுமையாக தாக்குகிறார்கள். சோவியத் செம்படை வீரர்களுடன் சென்று அல்தினாயை மீட்கிறார். உயர்படிப்புக்கு நகரத்திற்கு அனுப்பி வைக்கிறார். பிறகு என்ன ஆனது என்பதை நெகிழ்வான சம்பவங்களுடன் நாவல் முடிவடைகிறது.

இப்படி பல லட்சக்கணக்கான ஊழியர்களின் தியாகத்தில் எழுந்தது தான் சோவியத் சமூகம். அதற்கு பிறகு கல்வியிலும், விளையாட்டிலும், பொருளாதாரத்திலும், விஞ்ஞான ஆராய்ச்சியிலும், என அனைத்து துறைகளிலும் பெரிதாய் வளர்ந்து நின்ற முதலாளித்துவ நாடுகளை எல்லாம் வந்து பார் என்றது வரலாறு.

ஆசிரியர்கள் எப்பொழுதும் போற்றத்தக்கவர்கள் தான். கடந்த காலங்களில் பின்தங்கிய கிராமங்களில் வெளியில் இருந்து வந்து கல்வியுடன் சமூக விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு தந்தவர்கள் ஆசிரியரகள் தான். அப்படி ஒரு ஆசியரைப் பற்றிய நாவல் தான் இது.

நம் நாட்டில் கல்வியின் சமகாலம் என்பது சிக்கலானதாக இருக்கிறது. அரசுகள் கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருக்கிறார்கள். காசிருப்பவர்கள் மட்டுமே இனி படிக்கலாம் என நிலையை இன்னும் சில ஆண்டுகளில் எட்டிவிடுவார்கள் அதற்கான எல்லா வேலைகளையும் நகர்த்திவருகிறார்கள். நாம் விழிப்போடு இருந்து, போராடினால் தான் அனைவருக்கும் கல்வி என்பதை பாதுகாக்கமுடியும்.

சோவியத் நூல்களில் புகழ்பெற்ற நூல்களில் இதுவும் ஒன்று. இந்த நாவலை The First Teacher என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் யூடியூப்பில் இலவசமாக காணக்கிடைக்கிறது. பாருங்கள்.

இன்றைக்கும் திருமண, பிறந்தநாள் என்றால் இந்தப் புத்தகத்தை பரிசாக கொடுத்து வருகிறேன். அருமையான நாவல். படியுங்கள்.

ஆசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்
தமிழில் : பூ. சோமசுந்தரம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 80

December 18, 2022

Wednesday (2022) வெப் சீரிஸ்


Supernatural mystery Comedy horror

பதினாறு வயது நாயகி தான் வெட்னஸ்டே ஆடம்ஸ். தான் படித்தப் பள்ளியில் சேட்டைகள் அத்துமீறியதால், வெளியேற்றப்படுகிறாள். நெவர்மோர் எனப்படும் உண்டு உறைவிட பள்ளிக்கு அவள் பெற்றோர் வந்து சேர்த்துவிடுகின்றனர். அந்தப் பள்ளி என்பது சேவியர் நடத்தும் மியூடண்ட் (Mutant) பள்ளி போல! ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு திறனோடு இருக்கின்றனர்.

”நான் செய்கிற சேட்டையில் அவர்களே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள்” என பெற்றோரிடம் சவால்விட்டு தான் அந்தப் பள்ளிக்கு வருகிறாள். அவள் மக்கு அல்ல! திறமையாய் கத்திச் சண்டை போடுகிறாள். வில் வித்தை தெரிந்தவள். நுட்பமாக துப்பறிகிறாள். இளவயதில் நாவல் எழுதி சாதனைப் படைத்த ஒருத்தியை அந்த சாதனையை முறியடிக்கவேண்டும் என்கிற முனைப்போடு இயங்குபவள். என்ன கொஞ்சம் முசுடு! யாரிடமும் ஒத்துப்போக மறுக்கிறாள்.

அந்தப் பள்ளிக்கும், சராசரி மக்களுக்கும் ஒரு ஒரு வாய்க்கா, வரப்பு தகராறு இருந்துகொண்டே இருக்கிறது. அடுத்தடுத்து சில கொலைகள் மர்மமான முறையில் நடக்கின்றன. ஏன் இந்த கொலைகள்? என்ன காரணம் என்பதை துப்பறிய துவங்குகிறாள். பிறகு என்ன ஆனது என்பதை கலாட்டாகளுடன் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

படத்தில் ஒரு விருந்தில் நாயகி ஆடிய நடனம் ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. அதைப் பார்த்து, என்ன என தேடிப்போன பொழுது கிடைத்தது தான் இந்த சீரிஸ். DC காமிக்ஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு நாயகி தான் இவள். அந்த காமிக்ஸிற்கு வெப் சீரிஸ் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.

அவளைச் சுற்றியே எல்லா பாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் சீரிஸ்க்கு இருக்கிற இழுவைத் தன்மை இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கிறது. மர்ம (Mystery) படம் என்பதால், இறுதி வரை யார் கொலைகாரர் என்பதை சாமர்த்தியமாக மறைத்திருக்கிறார்கள்.

அந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமையுடன் இருப்பதை இன்னும் கொஞ்சம் வெளிப்படுத்தி இருந்தால், இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். நாயகியைத் தவிர மற்றவர்கள் எல்லோரையும் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள்.

ஏன் அவளை அவ்வளவு உம்மாண மூஞ்சியாக காண்பிக்கவேண்டும் என தெரியவில்லை. படத்தில் தன் மாமாவை பார்க்கும் பொழுது மட்டும் முகம் மலர புன்னகைக்கிறாள். அழகாக இருக்கிறது.

இந்த சீரிஸ் நல்ல வெற்றிபெற்றிருக்கிறது. அடுத்தடுத்து சீரிஸ் நிச்சயமாய் எதிர்பார்க்கலாம். நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கிலும் இருக்கிறது. பாருங்கள்.

சீசன் 1 அத்தியாயங்கள் 8

December 16, 2022

மிட்டாய் கதைகள் – கலீல் ஜிப்ரான்


சின்ன சின்ன கதைக்களுக்குள் பெரிய கருத்துக்களை ஒளித்துவைத்திருக்கும் கதைத் தொகுப்புதான் இந்த மிட்டாய் கதைகள்.


இவற்றைச் சிறுகதை என்று கூட சொல்ல இயலாது. ஒவ்வொன்றும் சின்ன சின்ன பட்டாசுகள். சில கதைகள் புன்னகைக்க வைக்கின்றன. சில கதைகள் வெடித்துச் சிரிக்க வைக்கின்றன. (கலீல் ஜிப்ரானை படித்தால்... இப்படி எல்லாம் எழுத வைத்துவிடுவார்.)

தொகுப்பில் 50 கதைகள் இருக்கின்றன. இந்த கதை தான் முதலாவதாக இருக்கிறது. அது தான் எனக்கு மிகவும் பிடித்தனமானவையாகவும் ஆகிவிட்டது. இந்தக் கதை பல விசயங்களை சொல்லாமல் சொல்லி செல்கிறது.

காலைப் பனிப்போல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமானவனாக்கும்' என்று அலட்டிக்கொண்டது.

'நான் பிறக்கும்பொழுதே தூய்மையாகப் பிறந்தேன். காலம் முழுவதும், நான் நான் இவ்வாறே தூய்மையாக இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலாக்கினாலும் பரவாயில்லை, பொறுத்துக் கொள்வேன். ஆனால் கறுமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கமாட்டேன், தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில்கூட வரமுடியாது'.

இந்தப் பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுகட்டிக் கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன. அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும், கற்போடும் வாழ்ந்தது.
வெறுமையாகவும்.

ஆசிரியர்: கலீல் கிப்ரான் (1883 - 1931) லெபனான்

தமிழாக்கம்: என். சொக்கன்

பக்கங்கள் : 96

December 15, 2022

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே (2022) மலையாளம்



பெண்களைப் பொருத்தவரை, தெருக்களும் வெளியிடங்களும் அவர்களுக்குப் பாதுகாப்பற்றவை என்றும்; வீடுதான், குடும்பங்கள்தான் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும் ஒரே இடமென்றும் சராசரியான இந்திய மக்களால், குறிப்பாகப் பெண்களாலும் நம்பப்படுகிறது. ஆனால் எதார்த்த நிலைமையோ பல்லிளிக்கிறது.


துவக்கத்தில் வீட்டில் அண்ணன், தங்கை இருவரையும் எப்படி நடத்துகிறார்கள் என்பதை வரிசையாக சொல்கிறார்கள். அண்ணன் படித்த புத்தகம் தான், அடுத்த ஆண்டு தங்கைக்கு வருகிறது. அண்ணனின் சட்டையை, அவளுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் மாற்றி தைத்து தருகிறார்கள். கல்லூரி படிக்கும் பொழுது பிஎஸ்சி மானுடவியல் படிக்கவேண்டும் என்பது விருப்பம். ஆனால், கல்லூரி தூரமாய் இருப்பதால்… உள்ளூரிலேயே பிஏ மலையாளம் படிக்க அனுமதிக்கிறார்கள்.

நாயகி கல்லூரியில் படிக்கிறார். ஒரு வாத்தியார் முற்போக்காக பேச… அவரை விரும்புகிறாள். பின்பு அவரும் பிற்போக்காக நடந்துகொள்ள, காதல் விவகாரம் வீட்டிலும் தெரியவர…படிப்பை நிறுத்தி விட்டு, உடனே வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து, திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். திருமணம் நடக்கிறது. கணவன் சரியான முன்கோபியாக இருக்கிறான். அவனுக்கு இடியாப்பம் என்றால் பெருவிருப்பம். ஒருநாள் மாற்றினாலும், கடும்கோபம் கொள்கிறான். பிறகு சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் மனைவியை அடிக்க ஆரம்பிக்கிறான். பிறந்த வீட்டில் தெரிவித்தால், குடும்பத்தில் அது ஒரு சகஜமான ஒன்று என்பது என கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள். இனி நம்மை நாமே தான் காக்கவேண்டும் என முடிவு செய்து … ஒரு கராத்தே உதை கொடுக்கிறாள். ஏழு அடி தள்ளிவிழுகிறான். பொறி கலங்கிவிடுகிறான். பிரச்சனை பெரிதாகிவிடுகிறது.

இனி சேர்ந்து வாழமுடியாது என கணவன் சொல்கிறான். அவனின் உறவுக்காரன் ”இந்த விசயம் உலகுக்கு தெரியவந்தால் உனக்குத் தான் அசிங்கம். ஆகையால், அவளுக்கு இரண்டு பிள்ளைகளை கொடுத்துவிட்டால், உன்னை விட்டு போகமாட்டாள். அதற்கு பிறகு உன் ராஜ்யம் தான்” என சதி ஆலோசனை சொல்கிறான். இவனும் ஒத்துக்கொள்கிறான்.

பிறகு என்ன ஆனது என்பதை பல்வேறு கலாட்டாகளுடன் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

பெண்களைப் பொருத்தவரை, தெருக்களும் வெளியிடங்களும் அவர்களுக்குப் பாதுகாப்பற்றவை என்றும்; வீடுதான், குடும்பங்கள்தான் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும் ஒரே இடமென்றும் சராசரியான இந்திய மக்களால், குறிப்பாகப் பெண்களாலும் நம்பப்படுகிறது. ஆனால் எதார்த்த நிலைமையோ பல்லிளிக்கிறது.

குடும்ப வன்முறை என்றால்?

உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, பொருளால் தாக்குவது போன்றவை இதில் அடங்கும். இது, கணவனால் மட்டுமே பெண்களுக்கு வன்முறை நடப்பது என்றில்லை. மற்ற உறவினர்களாலும் நடக்கலாம்.

குடும்ப வன்முறை வழக்குகளின் பட்டியல்

குடும்ப வன்முறை வழக்குகளை பொறுத்தவரை உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 65,481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக 38,381 வழக்குகளுடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும், 37,876 வழக்குகளுடன் ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. கேரளா (20,826), மத்தியப் பிரதேசம் (16,384), மகாராஷ்டிரா (16,168), அசாம் (12,739), கர்நாடகா (11,407), மேற்கு வங்காளம் (9,858), ஹரியானா (7,715) என்கிற பட்டியல் நீண்டு செல்கிறது. உத்திரபிரதேச கணக்கை கொஞ்சம் உடைத்துப் பார்த்தால், ஒரு நாளைக்கு 180 பேர். ஒரு மணி நேரத்திற்கு 8 பேர்.

பொதுவாக குடும்ப பிரச்சனைகளை தெருவுக்கு கொண்டுவரக்கூடாது என்ற நிலவுடைமை கட்டுப்பெட்டித்தனத்தால், பெண்கள் சகித்துக்கொண்டு போகிறார்கள். இதன் அடுத்தநிலை இந்தப் படத்தில் வருவது போல உறவுக்காரர்கள் வந்து பஞ்சாயத்து செய்வதில் கொஞ்சத்தை வடிக்கட்டுவார்கள். கொஞ்சம் கை மீறி, பெரிய அடிதடி, வன்முறை என போகும் பொழுது தான் போலீஸ் ஸ்டேசன் வந்து பதிவு செய்வார்கள். மேலே சொல்லப்பட்ட பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என எடுத்துக்கொண்டால், பதிவு செய்யப்படாத வழக்குகள் எவ்வளவு என உங்களுடைய ஊகத்திற்கே முடிவு செய்துகொள்ளலாம்.

இந்த வழக்குகளில் அதன் தீவிரத்தன்மைக்கு ஏற்றவாறு, கொஞ்சம் விழிப்புணர்வுக்கு தக்கவாறு, அந்த பெண்ணுக்கு இருக்கும் ஆதரவுக்கு தகுந்த மாதிரி சில வழக்குகள் விவாகரத்துக்கு செல்லும். மாற்று வழி தெரியாதவர்கள் தற்கொலையில் மாண்டுப்போகிறார்கள். சில கொலைகள் வரைக்கும் கொண்டுபோய் விடுகின்றன. தற்கொலைகள் எவ்வளவு? கொலைகள் எவ்வளவு? என்பதற்கும் ஒரு நீளப் பட்டியல் இருக்கிறது. கட்டுரை நீண்டு போவதால், உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.

குடும்ப வன்முறைக்கு தீர்வு என்ன?

தனியார்மயம்-தாராளமயம் பெண்களைச் சந்தைப் பொருளாக மாற்றியிருக்கும் பாலியல் வக்கிரம் ஒருபுறம்; ஏற்கெனவே நிலவிவரும் சாதி-மத ஆதிக்கம் நிறைந்த பிற்போக்கு சமூகத்தின் அடக்குமுறை மறுபுறம் என்ற இரட்டை நுகத்தடியைப் பெண்ணினத்தின் மீது சுமத்தியிருக்கிறது.

ஒரு புறம் பாலியல் சுதந்திரம் என்ற வரம்பற்ற பாலியல் உறவு; இன்னொருபுறம் கற்பு நெறி தவறாமை, குடும்ப விளக்காகப் பெண்கள் திகழ வேண்டிய ஆணாதிக்கப் பண்பாடு என்ற இரட்டைக் குழல் துப்பாக்கி பெண்களை நோக்கி நிறுத்தப்படுகிறது. உலகமயம் இத்தாக்குதல்களை முன்னெப்போதும் காணாத அளவில் தீவிரப்படுத்தியிருக்கிறது. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்கு சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.

பெண் கல்வி, வேலைவாய்ப்பு எல்லாம் சில மாற்றங்களை உருவாக்கித் தந்தாலும், பெண் விடுதலையை முழுமையாகப் பெற்றுத் தந்துவிடாது. மாறாக, மேலே நாம் குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு நுகத்தடிகளும் அடித்து நொறுக்கப்படுவதுதான் இப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வாக இருக்கும். இந்த இரண்டு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்குவது சாதாரணமானதல்ல. அதற்கு இச்சமூகத்தையே புரட்டிப் போடக் கூடிய போராட்டங்களை, குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தைக் கொண்டுவரக்கூடிய போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டம் இந்த இரண்டு நுகத்தடிகளையும் காத்து வருகின்ற கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிப்பதாக இருக்கவேண்டும்.

குடும்ப வன்முறை என்ற ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு, சீரியசாக கொண்டு செல்லாமல், மாத்திரைக்கு இனிப்பு தடவி தருவது போல, நகைச்சுவை கலந்து தந்திருக்கிறார்கள். மலையாளத்தில் வெளிவந்த ”தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தின் தொடர்ச்சி என எடுத்துக்கொள்ளலாம்.

படத்தில் நடித்த தர்ஷனா, பசில் ஜோசப் என பலரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். விபின் தாஸ் இயக்கியுள்ளார். அனைவருக்கும் நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

இப்பொழுது கேரளத்திலும், தமிழகத்திலும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. அவசியம் பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

December 12, 2022

குமாயுன் புலிகள் – ஜிம் கார்பெட்



ஜிம் கார்பெட் வேட்டைகாரராக மட்டுமில்லாமல், சூழலியலிலும் அக்கறையுள்ளவராக இருந்திருக்கிறார். ஏழை மக்களையும் நேசித்திருக்கிறார். இன்றைக்கும் அவர் பெயரில் ஒரு வன உயிரியல் பூங்கா உத்தரகாண்டில் இயங்குகிறது.

**

ஒரு புலி ஆட்கொல்லியாக எப்பொழுது மாறுகிறது?  பிற விலங்குகளால் கடுமையாக காயம் ஏற்பட்டோ, வயோதிகத்தாலோ பிற விலங்குகளை வேட்டையாட முடியாமல் போகும் பொழுது ’எளிதாக’ சிக்கும் மனிதர்களை வேட்டையாட துவங்குகிறது. மேலும் வேட்டையாடுபவர்களால் தாக்கப்பட்டு ஊனம் ஏற்பட்டால் கூட ஆட்கொல்லியாக மாறுகிறதாம்.


ஜிம் கார்பெட் (1887 – 1955) தனது வாழ்நாளில் 1907 துவங்கி 1938 வரைக்குமான காலங்களில் 1200 மனிதர்களை கொன்று ஆட்கொல்லியாக சுற்றித் திரிந்த 33 புலிகளை (Man eaters) கொன்றுள்ளார். சில ஆட்கொல்லி சிறுத்தைகளையும் கொன்றுள்ளார். அதில் ஒரு சில அனுபவங்களை தொகுத்து ”குமாயுன் புலிகள்” என்ற பெயரில் கொண்டு வந்திருக்கிறார்கள்.   ஜிம் கார்பெட் தனது அனுபவங்களை பெரிய பந்தா இல்லாமல், எதார்த்தமாக பகிர்ந்துள்ளார்.


ஒவ்வொரு புலியும் தன் வாழ்நாளில் பல மனிதர்களை கொன்று தின்றுள்ளது. சம்பாவதி பெண் ஆட்கொல்லி புலி மட்டுமே நேபாளத்தில் 200 பேரையும், இந்தியாவின் குமாயுன் பகுதியில் 234 பேரையும் கொன்றிருக்கிறது.   அந்த காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட ஆட்கொல்லி புலிகளை கொன்றால்… அரசு நிறைய பரிசுகளை அறிவித்துள்ளது.  ஆகையால், பலரும் கொல்ல கிளம்பியிருக்கிறார்கள். கொன்றும் இருக்கிறார்கள்.


இதில் ஜிம் கார்பெட் கொஞ்சம் தனித்துவமானவர் என அவர் சிந்திக்கும் விதத்தில், அணுகுமுறையில் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் அவர் ஒரு பகுதிக்கு போகவேண்டுமென்றால்… ”முதலில் பரிசுத்தொகை அறிவிப்பை திரும்ப பெறுங்கள்.  யாரெல்லாம் அந்த பகுதியில் வேட்டையாடுபவர்கள் இருக்கிறார்களோ அவர்களை திரும்பி வர அறிவியுங்கள்” என முன்நிபந்தனை விதிக்கிறார்.  காரணம் புலியை சுடுகிறேன் என தன்னை சுட்டுவிடுவார்கள் என்ற எதார்த்தமான பயம் இருக்கிறது.  இவர் புலியைத் தேடி தன்னந்தனியாக செல்கிறார்.  தனது ஆட்களை கூட சுமைகளைத் தூக்குவதற்கு தான் பயன்படுத்திக்கொள்கிறார்.


ஆட்கொல்லி புலிகளின் இயல்பு, அதன் மோப்பத்திறன், எங்கு வசிக்கும், எப்பொழுது தாக்கும் என பல நுட்பமான தகவல்களை சொல்லி செல்கிறார்.  ஆட்கொல்லிகளுக்கு மனிதர்கள் மீது பயமில்லை என்பதால் பகலில் வேட்டையாடுகின்றன.   சிறுத்தைகளுக்கு இன்னும் அந்த பயம் போகவில்லை.  ஆகையால் இரவில் வேட்டையாடுகின்றன என்கிறார். வேட்டைக்கு போகும் பொழுது, கொஞ்சம் அசந்தால் தன்னையே கொன்றுவிடும் பயமும் எப்பொழுதுமே அவருக்கு இருந்திருக்கிறது. அதை வெளிப்படையாகவும் பதிவு செய்கிறார்.


அக்காவும், தங்கையும் ஓரிடத்தில் புல் நறுக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.  ஆட்கொல்லி புலி வந்து அக்காவை தங்கை கண் முன்பே இழுத்து செல்கிறது. ”அக்காவை விடு!” என இவள் சத்தம் போட்டுக்கொண்டே பின்னால் ஓடுகிறாள். தூக்கி சென்றுக்கொண்டிருந்த புலி, இவளைத் திரும்பி பார்த்து… திரும்பி இவளை நோக்கி வர, தலைத் தெறிக்க இவள் ஓடுகிறாள்.  இந்த உயிர்ப் பதட்டத்தில் அவளுக்கு பேச்சுவராமல் போகிறது.  ஒரு வருடம் கழித்து, ஜிம் அந்த பகுதிக்குப் போய், அந்த புலியை கொன்ற உடன், அந்த பகுதிக்குப் போய் அந்த பெண்ணிடம் காட்டும் பொழுது, மகிழ்ச்சியில் அவளையும் அறியாமல், ”எங்க அக்காவை கொன்ன புலி செத்துவிட்டது” என பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சத்தமாக பேச துவங்குவது ஆச்சர்யம்.  தமிழ்ப்படங்களில் இப்படி காட்சி வைத்தது உண்மை தான் போலிருக்கிறது.


ஜிம் கார்பெட் ஒரு வேட்டைக்காரராக மட்டுமில்லாமல், சூழலியலாளராகவும் இருந்துள்ளார். இந்திய கிராமப்புற மக்களுடனும் அவர் நெருக்கமாக இருந்துள்ளார்.  தான் வசித்த பகுதியில் இருந்த சோட்டி ஹால்தானி என்ற கிராமத்தை தத்தெடுத்து, அவர்களை வனவிலங்குகளின் தாக்குதலிலிருந்து காப்பற்றுவதற்கு கிராமத்தைச் சுற்றி மதில் சுவரை எழுப்பியிருக்கிறார்.   1925ல் கட்டப்பட்ட இந்த சுவர் இன்றும் மக்களை காக்குகிறது.


ஜிம் எழுதிய இன்னொரு நூலான “எனது இந்தியா” என்ற நூலில்  “இவர்கள் ஏழைகள், பட்டினியால் வாழும் லட்சக்கணக்கானவர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுடன் தான் இவர்களை நேசிக்கும் நானும் வாழ்ந்தேன். எனவே, என் மரியாதைக்குரிய ‘இந்தியாவின் ஏழை நண்பர்களுக்கு இந்த நூலை சமர்பிக்கிறேன்” என நெகிழ்வோடு குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய சமூக பங்கின் காரணமாக உத்திரகாண்ட் மாநிலத்தில் வன உயிரியல் பூங்காவிற்கு  ”ஜிம் கார்பெட் தேசிய பூங்கா” என பெயர் வைத்திருக்கிறார்கள்.  இன்றைக்கும் இயங்கிவருகிறது.  “Man eater of Kumaon” என்ற பெயரில் 1948ல் ஒரு படமும், ”The Nature world Man eaters of Kumaon” (1986) என்ற பெயரிலும் படங்கள் எடுத்திருக்கிறார்கள்.  இரண்டு படங்களும் இப்பொழுதும் யூடியூப்பில் கிடைக்கிறது.


புலிகளின் எண்ணிக்கை உலக அளவில் குறைந்துகொண்டே வருவது குறித்து,  கவலைப்பட்டு, புலிகளை காக்கவேண்டும் என தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இந்திய அரசு 1973ல் இந்தியாவின் தேசிய விலங்காக (வங்கப்) புலியை அறிவித்தது.  ஜூலை 26ஐ சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடுகிறார்கள். 2006ல் 1411, 2010ல் 1706, 2014ல் 2226, 2018ல் 2967   என புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.


ஏகாதிபத்திய நாட்டைச் சார்ந்த நிறுவனங்கள் உலகம் எங்கிலும் காடுகளை கணக்கு வழக்கில்லாமல் அழித்து வருகிறார்கள். எண்பதுகளின் இறுதி தொடங்கி தொண்ணூறு தொடக்கம் வரையிலான நான்கு ஆண்டுகளில் போர்னியோவில் மலேசியாவிற்கு உட்பட்ட பகுதியில் ஒரு மழைகாட்டையே கொன்ற வரலாற்றை எழுத்தாளர் நக்கீரன் “காடோடி’ நாவலில் பதிந்திருக்கிறார். சில பேரை கொன்றாலே ஒரு புலியை ஆட்கொல்லி என அழைக்கலாம் என்றால்,  ஒவ்வொரு ஆண்டும் இப்படி கணக்கு வழக்கில்லாமல் காடுகளை அழிப்பதன் மூலம், அதைச் சார்ந்த விலங்கினங்களையும்,  பல்வேறு பருவநிலை மாற்றத்தையும் உருவாக்கி, அதனால் ஏகப்பட்ட உயிரிழப்புகளை நிகழ்த்தி வரும் ஏகாதிபத்தியத்தை ஆட்கொல்லி ஏகாதிபத்தியம் என அழைப்பது தானே பொருத்தமானது. என்ன சொல்கிறீர்கள்?


பக்கங்கள் : 176

விலை ரூ. 280

மொழிபெயர்ப்பாளர் : தி.ஜா. ரங்கநாதன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்.

வாடிவாசல் - சி.சு. செல்லப்பா

 


”மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு; மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!’

- நாவலில் இருந்து…

”வாடிவாசல்” அவ்வப்பொழுது படிக்கவேண்டும் என தோன்றி… பிறகு அப்படியே விட்டுவிடுவேன். இந்த முறை ஒரு திருமணத்திற்கு பரிசு வாங்க புத்தகங்கள் வாங்க போனேன். அப்படியே வாடிவாசலையும் வாங்கி வந்தேன்.

அப்பாவை குத்தி, சீக்காளியாக்கி கொன்ற காரி என்ற காளை மாட்டை, மகன் பிச்சி அந்த காளையை அடக்குவதற்காக செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு தனது உறவுக்காரன் மருதனோடு வந்திருக்கிறான். அந்த காளை அந்த ஊரின் ஜமீன்தாரினுடையது. அந்தக் காளையை வாடிவாசலை விட்டு வெளியே வரும் பொழுது, வீரர்கள் யாரும் ஓரமாய் போய்விடுகிறார்கள். அவன் என்ன ஆனான்? காளைக்கு என்ன ஆனது என்பதை மண்ணின் மனத்தோடு சி.சு. செல்லப்பா சொல்லியிருக்கிறார்.

1959ல் வெளிவந்த நாவல். அதன் மொழி இன்னமும் உயிரோட்டமாய் இருக்கிறது. இப்பொழுது இயக்குநர் வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். நாவலுக்கு முன்னும் பின்னும் சேர்த்து ஒரு அருமையான படமாக கொண்டு வந்துவிடுவார். எதிர்பார்ப்போம்.

என்னுடைய பதினெட்டு வயதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு ஒருமுறை என் நண்பர்களுடன் போயிருக்கிறேன். வாடிவாசல் அருகே முதல் வரிசையில் மாடுபிடிவீரர்கள். அவர்களுக்கு பின்னால் முண்டிக்கொண்டு இரண்டாவது வரிசையில் வேடிக்கைப் பார்க்கப் போன நாங்கள். கொஞ்சம் தள்ளு முள்ளு நடந்தால், முன்வரிசைக்கு நாங்கள் வந்துவிடுவோம். அது தான் நிலைமை. இப்பொழுது நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக மாடுபிடி வீரர்களைத் தவிர மற்றவர்களை வெளியேற்றி, வேடிக்கைப் பார்ப்பதற்கு வசதியாக காலரி கட்டி வைத்திருக்கிறார்கள். நல்ல விசயம்.

இதோ பொங்கல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கான வேலைகளை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கிறார்கள். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று?

பக்கங்கள் : 70
விலை : ரூ. 100
வெளியீடு : காலச்சுவடு

December 7, 2022

பிரயாண நினைவுகள்


தமிழகத்தில் பயணக் கட்டுரைகள் எழுதுவதின் முன்னோடி என இவரை சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அண்ணாமலை கருப்பன் (ஏ.கே. செட்டியார் என அழைக்கிறார்கள்.) கருப்பன் மிக அருமையான பெயர். அதைச் சொல்லியே இனி அழைப்போம்.


பழைய ஆள். அதனால் எழுத்தும் கொஞ்சம் போரடிக்கும் என நானாக நம்பிக்கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தைப் படித்ததும், சே! எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என வருத்தப்பட வைத்துவிட்டார். நறுக்கென்றும், கொஞ்சம் கேலியோடும், நகைச்சுவையோடும், வரலாற்று கண்ணோட்டத்துடனும் அருமையாக எழுதுகிறார்.

இந்தத் தொகுப்பில் உலகநாடுகள், இந்தியா, தமிழ்நாடு என 12 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் சிலதை மட்டும் பகிர்கிறேன். இந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை 1940களில் என புரிந்துகொள்ளுங்கள்.

1. பிரான்சு : நம்ம ஊர் பேருந்துகளில் இப்பொழுதும் வல்லவனுக்கு இருக்கை கிடைக்கும் என்பது தானே வழக்கம். பிரான்சில் பேருந்துக்காக காத்திருப்பவர்களுக்கு அங்குள்ள எந்திரத்தில் டோக்கன் எடுத்துக்கொள்கிறார்கள். நாம் பத்தாவது ஆளாக இருக்கிறோம் என்றால்… ஒரு பேருந்து வருகிறது. அதில் பத்து பேருக்கு இடம் இருக்கிறது என்றால் பத்து பேரும் ஏறலாம். ஐந்து பேருக்கு தான் இடம் என்றால், முதலில் வந்த ஐந்து பேர் தான் ஏறமுடியும். அந்த டோக்கனை கொண்டு அடையாளப்படுத்துகிறார்கள். அருமையான முறையாக இருக்கிறதே!

2. ஜெர்மனியில் 1920களில் ஒரு பெரிய மிருக காட்சி சாலையில் விலங்குகளோடு, சில சீனர்களையும், 25 இந்திய ஆண், பெண்களையும் கூண்டில் பார்வைக்காக வைத்திருந்தார்களாம். இந்திய தலைவர்கள் தலையிட்டு விடுதலையடைய செய்திருக்கிறார்கள் என சொல்கிறார். அட கொடுமைக்காரங்களா!

3. செஞ்சிக்கு பயணம் செல்லும் வழியில், செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில் இட்லி நன்றாக இருக்கும் என கேள்விப்பட்டு அங்கு போகிறார். பிரமாணர் சாப்பிடும் இடம், பிரமாணரல்லாதவர் சாப்பிடும் இடம் என்ற போர்டுகள் காணாமல் போனதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார். பெரியாருக்கு நன்றி சொல்கிறார்.

4. காந்தி ஒருமுறை கன்னியாகுமரிக்கு போயிருக்கிறார். விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை அமைத்திருக்கிறார்கள். அங்கு காந்தியை அழைத்திருக்கிறார்கள். வாசகசாலைக்கு அடுத்த கட்டிடம், ஒரு விவேகானந்தா காபி கிளப். காந்தி காபி கிளப்பிற்குள் நுழைந்துவிட்டாராம். கடைக்காரருக்கு ஒரே குழப்பம். காந்தி ஆட்டுப்பால் தானே சாப்பிடுவார். காபி குடிக்கமாட்டாரே! என சிந்திக்கும் பொழுதே, அவர் தவறுதலாக வந்ததை உணர்ந்து, உடனே வெளியே போய்விட்டாராம்.

5. வெளிநாட்டில் ஒரு ஹோட்டலில் தங்குகிறார். காசை கொஞ்சம் மிச்சம் பிடிக்க வெளியில் சாப்பிடுகிறார். ஆனால் பில்லில் காலை உணவுக்கு 55 காசு என சார்ஜ் செய்திருக்கிறார்கள். என்னங்க? என விளக்கம் கேட்டால், இங்கு தங்கினால், இங்கு தான் காலை உணவு சாப்பிடவேண்டும் என விதி வைத்திருக்கிறோம் என பதில் சொல்லியிருக்கிறார்கள். சரி போகட்டும். டிபன் 50 காசு தானே! ஏன் 55 காசு? என கேட்டால், அந்த ஐந்து பைசா சர்வீசுக்கு 5 காசாம். டென்சனாயிட்டார்.


1911ல் பிறந்த கருப்பன் அவர்கள், படிப்புக்காக ஜப்பானுக்கும், பிறகு அமெரிக்காவிற்கும் பயணம் செய்திருக்கிறார். காந்தியைப் பற்றி ஆவணம் படம் எடுப்பதற்கு பல நாடுகள் பயணித்திருக்கிறார். வெற்றிகரமாக கொண்டும் வந்திருக்கிறார். ஆனால் அப்பொழுது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்ததால், திரையரங்கு முதலாளிகள் பயந்துகொண்டு வெளியிடவில்லையாம். பிறகு ”சுதந்திரம் அடைந்த” பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். பிறகு இந்த ஆவணப் படம் எங்கு போனது என தெரியாமல் தேடிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பிறகு கண்டுப்பிடித்தும் இருக்கிறார்கள். அந்த கதையை சொன்னால் நீண்டு விடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இப்பொழுது யூடியூப்பில் பார்க்க கிடைக்கிறது.

- பக்கங்கள் 61