> குருத்து: சுற்றல்!

April 28, 2020

சுற்றல்!


திடீரென இரண்டு நாட்கள் தலைச்சுற்றலை உணர்ந்தேன்.

கருப்பு தேநீர் தொடர்ந்து குடிப்பதால்... பித்தம் எகிறிடிச்சோன்னு நினைச்சு தேநீரை நிப்பாட்டினேன்.

ஐந்து நாட்கள் சுற்றல் இல்லாமல் இருந்தது. ஆனால் மீண்டும் வந்தது.
அலட்சியம் செய்யக்கூடாது என மருத்துவரைப் பார்த்தேன். கையை அழுத்தமாக கட்டி, ரத்த அழுத்தம் பார்த்து "நார்மல்" என்றார்.
சர்க்கரைக்கு ஏதாவது மருந்து எடுக்கிறீர்களா? என்றார். இவ்வளவு சின்ன வயதில் இப்படி கேள்விக் கேட்டுவிட்டாரே என விசனப்பட்டேன்.

இப்பெல்லாம் குழந்தையை கூட இரக்கமே இல்லாமல் சர்க்கரை தாக்குகிறதே என மனதை தேத்திக்கொண்டு.... 'இல்லை' என்றேன்.

ஒருவேளை இப்ப வந்திருக்கலாம் அல்லவா! சந்தேகம் கொண்டு... சோதனைக்கு எழுதிக்கொடுத்தார்.

சாப்பிடாமல் ஒருமுறையும், சாப்பிட்டு ஒருமுறையும் ரத்தம் எடுத்தார்கள். சர்க்கரை 'நார்மல்' என முடிவு சொன்னார்கள்.

மருத்துவர் கொஞ்சம் யோசித்து, ENT (காது, மூக்கு, தொண்டை) மருத்துவருக்கு பரிந்துரை செய்தார்.

பொதுவாக நாம் நடப்பது காலால் அல்ல! காதால் என்பார்கள். திரும்ப, குனிய, நடக்க, ஓட என காது தான் மூளைக்கு தகவல் அனுப்பி கட்டுப்படுத்துகிறது. ஆகையால் தலைச்சுற்றலுக்கு காரணம் 80% காது தான் என ஒரு மருத்துவர் நிறைய நுட்பமாக ஒரு இதழில் நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். கொஞ்சம் தலைச்சுற்றலுடன் படித்து முடித்தேன்.

ENT மருத்துவர் தலையில் ஒரு விளக்கை மாட்டியிருந்தார். கொஞ்சம் பெரிய நெற்றிக்கண் போல இருந்தது. இரண்டு காதையும் திரும்ப, திரும்ப சோதித்தார். காதில் பிரச்சனை இருப்பது போல தெரியவில்லை.
காது கேட்கும் திறனை சோதித்து வர எழுதி தந்தார்.

சோதிக்கும் இடத்தில் அந்த பெண் மிக சத்தமாக கேள்விகேட்டார். அங்கு வருபவர்கள் பெரும்பாலும் காது கேட்காமல் வருவார்கள் போல! நான் மெதுவாக 'எனக்கு நன்றாக காது கேட்கும்' என்றேன். புன்னகைத்தார்.
காதில் ஹெட்போனை மாட்டியதும் ஏற்ற இறக்கங்களுடன் பீப் சத்தம் வந்தது. அந்த சத்தத்தை விட அந்த அறையின் ஏசி இயந்திரத்திலிருந்து அதிக சத்தம் வந்தது. சொன்னேன். அதை கண்டுகொள்ளாதீர்கள் என்றார்.

சோதித்து, காது கேட்கும் திறன் 'நார்மல்' என அறிக்கை தந்தார்கள்.

ENT மருத்துவர் சோர்வாகி, நரம்பியல் மருத்துவருக்கு பரிந்துரை செய்தார்.
அவரைப் பார்த்தேன். இதுவரைக்குமான சோதனைகளை சொன்னேன். அவர் சில அடிப்படை கேள்விகளை கேட்டு, சோதித்துவிட்டு, 'நார்மல்' என அறிக்கை தந்தார்.

அடுத்து, அவர் Neurotology மருத்துவருக்கு பரிந்துரைத்தார். "செய்கிற சோதனைகளினால் கொஞ்சம் தலைச்சுற்றல் வரும்" என்றார்.
15 நிமிடம் பல்வேறு சோதனைகள் செய்ததில் அவர் சொன்னபடியே வந்தது.
இருப்பினும், அவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. "பல் மருத்துவரையும், கண் மருத்துவரையும், மூன்று விதமான ரத்த பரிசோதனைகள் செய்துவிட்டு வாருங்கள்" என எழுதி தந்தார்.

கண் மருத்துவரிடம் எல்லா விவரத்தையும் சுருக்கமாக விவரித்தேன். கண்ணில் மூன்று முறை மருந்து ஊற்றி, கலங்கலாக்கி அரை மணி நேரத்திற்கும் மேலாக சோதித்தார். கண்ணில் அழுத்தம் நார்மலாக இருக்கிறது. ரெட்டினாவும் நன்றாக இருக்கிறது. கண்ணுக்கும் தலைச்சுற்றலுக்கும் சம்பந்தமில்லை என உறுதியாய் சொன்னார். வெளியில் வந்தேன். மருந்தின் விளைவால்.. எல்லா விளக்குகளும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பளிச் பளிச்சென தெரிந்தன. ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தேன்.

இதற்கிடையே மூன்று ரத்த பரிசோதனைகளில் மூன்றில் இரண்டின் முடிவுகள் வந்தன. இரண்டு பரிசோதனைகளிலும் இருபது அயிட்டங்கள் இருந்தன. மருத்துவர் ஒவ்வொன்றாக கவனமாக பார்த்து 'நார்மல்' என்றார்.
அடுத்து பல் மருத்துவரைப் பார்த்தேன். சோதித்துவிட்டு, தாடையை எக்ஸ்ரே எடுக்க சொல்லி எழுதிக்கொடுத்தார்.

வரிசை நீளமாக இருந்தது. அந்த இடைவெளியில் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

எனக்கென்னவோ எல்லா டிபார்மென்ட்டும் சுற்றி வந்து... எல்லா சோதனைகளும் செய்துவிட்டு, இறுதியாக மருத்துவர் இப்படித்தான் எழுதி தருவார் என நம்புகிறேன்.

"சமூக வலைத்தளங்களில் உலா வராதீர்கள். கண்டிப்பாக வாட்சப் செய்திகள், காணொளிகளை பார்க்காதீர்கள். தலைச்சுற்றல் தானாக சரியாகிவிடும்."

0 பின்னூட்டங்கள்: