சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கோடம்பாக்கத்தில், நண்பரின் நண்பர் அறையில் தங்கி ஒரு சில மாதங்கள் தங்கி வேலை தேடிக்கொண்டு இருந்தேன். (திரைத்துறையில் அல்ல!) டிகிரி முடித்திருந்த காலம்.
நண்பரின் நண்பர்கள் இருவர் திரைத் துறையில் இருந்தனர். அந்த அறையில் 'அழகிய தமிழ் மகன்' இயக்கிய பரதனும் இருந்தார்.
அவரைப் பார்க்க துறை சார்ந்த நண்பர்கள் வந்துபோவார்கள். அதில் தில், தூள் இயக்குநர் தரணியும் ஒருவர். மறைந்த கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். அப்பொழுது அவர் தயாரிப்புத்துறை நிர்வாகியாக (Production Manager) இருந்தார். வாரம் ஒருமுறையாவது கூடி மணிக்கணக்கில் பேசுவார்கள்.
இவர்களில் பரதன், கிருஷ்ணமூர்த்தி இருவருமே அன்பாக பழககூடியவர்கள். பலருக்கும் உதவும் குணமுடையவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, பரதன் நடிகர் பார்த்திபனை வைத்து இயக்கிய படம் பாதியில் நின்று போய்விட்டது. படம் பெயர் கூட "கல்யாணசுந்தரம்" என்பதாக நினைவு. மீண்டும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்.
ஒருநாள் "உனக்கும் எனக்கும்' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி நண்பரிடம் கொடுத்தேன். அவர் கிருஷ்ணமூர்த்தி, பரதன் இருவரிடம் படிக்க கொடுத்தனர்.
கவிதையை பாராட்டிய கிருஷ்ணமூர்த்தி அவர்கள், திடீரென ஒரு கேள்வி கேட்டார். "சினிமாவுக்கு எழுதுறீங்களா தம்பி?". அவர் என்னை உற்சாகப்படுத்துவதற்காக சொன்னாரா? உண்மையில் கேட்டாரா என தெரியாது. ஆனால் அவருக்கு பல இயக்குநர்களிடம் நல்ல நட்பு இருந்தது!
நான் இயல்பில் கூச்ச சுபாவம் உடையவன். அவர் கேட்டதும் சட்டென்று "எப்போதாவது தான் எழுதுவேன். அந்த அளவுக்கு வொர்த் இல்லண்ணே!" என சிரித்துக்கொண்டே சொன்னேன். அவரும் புன்னகைத்தார்.
அவருடைய இறப்பு செய்தி அதிர்ச்சியாய் இருந்தது!
அவரை பிரிந்து வாழும் அவருடைய குடும்பத்தாருக்கு அஞ்சலி!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment