> குருத்து: பறவையே எங்கு இருக்கிறாய்!

April 23, 2020

பறவையே எங்கு இருக்கிறாய்!

பறவையே எங்கு இருக்கிறாய்!

Still i remember my first letter

பிரபா,

நீ என்ன தேடி இருப்பன்னு எனக்கு தெரியும்…
நானும் அம்மாவும் இங்க மகாராஷ்டிரா’ல துரத்து மாமா வீட்டுல இருக்கோம்….

நீ வரதுக்கோ லெட்டர் எழுதுரதுக்கோ ஏத்த சமயம் வர்றபோ நான் சொல்லறேன்…

நேரத்துக்கு சாப்புடு… வாரத்துக்கு முணு நாளாவது குளி…
அந்த ‘சாக்ஸ தொவச்சு போடு.. நெகம் கடிக்காத… கடவுளை வேண்டிக்கோ..

- என்று ஆனந்தியின் கடிதம் படிக்கப்படுவதிலிருந்து(voice over) ஆரம்பம் ஆகிறது பாடல் ………

சில பாடல்களே அழகான திரைமொழி, பாடல்வரிகள் என எல்லாம் சரியாக அமையப் பெற்று இருக்கும். அப்படி ஒரு பாடல் கற்றது தமிழில் வரும் பறவையே எங்கு இருக்கிறாய். ராமின் திரைமொழி, நா.முத்துக்குமாரின் கவிமொழி, யுவனின் அழகான இசை, ராஜா குரல் என்று கலக்கும் பாடல் என்பேன்.

“பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய் …
தடயங்கள் தேடி வருகிறேன்
அன்பே”

கேமரா எடுத்தவுடன் ரயில் தண்டவாளங்களில் பறவையைத் தேடி வேகமாகச் செல்கிறது. தடயங்கள் என்ற வார்த்தை வரும்பொழுதெல்லாம் கதாநாயகன் பிரபாவின் கையில் மேப் அல்லது கடுதாசி போன்ற தடயங்களை வைத்துள்ளார். ஒரு காட்சியில் ஒரு பெரியவரிடம் விசாரிப்பது எனப் பாடலின் முதல் பகுதி எல்லாம் பறவையின் தேடல்களிடமே செல்கிறது.

“அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீ தானே ? என்ற பாடல் வரிகளில் டனலுக்குள் செல்லும் ரயில் வெளியே வருகிறது. புதிய வெளிச்சம் பிறக்கிறது.

“அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீ தானே” என்ற பாடல் வரிகளில் ஆனந்தி இருக்கும் ஊருக்குள் பிரபா வந்திருப்பார்.

“மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ…” பிரபா ரோட்டில் நடந்துகொண்டு இருப்பார், கானல் நீர் ரோட்டில் தெரியும்.

“நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக…
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக…”
கடலாக என்ற வார்த்தைகள் வரும்பொழுது ஒரு மலை காட்டப்பட்டு இருக்கும், அதில் பிரபா தனியாக நடப்பார். அங்கு கடல், இங்கு மலை. இயக்குனர் அதை அப்படியே காட்சிப்படுத்தவில்லை. நா முத்துக்குமார் அவர்களின் கவிதையை வேறு ஒரு தளத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பேன்.

கடலோ, மலையோ தனிமை என்பதே படிமம். அந்தத் தனிமை மிகச் சரியாக மொழிபெயர்க்கப்பட்டு இருக்கும். அப்படியே காட்ட வேண்டுமா என்ன?, கொஞ்சம் வேறு நிலப்பரப்பில் காட்டி இருப்பதும் கவிதை தான். “அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக…” என்ற வரிகளில் மாட்டுவண்டியில் பிரபா வந்து கொண்டு இருப்பார்.

கடல் படகு, நிலம் மாட்டு வண்டி அவ்வளவே. மீண்டும் “தடயங்கள் தேடி வருகிறேன்” எனும் பொழுது போஸ்ட் பாக்ஸ், ஆனந்தியைப் பற்றித் தெரிந்த பெரியவரின் உரையாடும் காட்சி…… ஒரு நாள் இரவு, மறுநாள் விடியல், ஆனந்தி தன்னை நோக்கில் சைக்கிள் மிதித்து வரும் காட்சி பாடலின் முதல் பகுதி முடிகிறது.

“உன்னோடு நானும் போகின்ற பாதை…
இது நீளதோ தொடு வானம் போலவே”

இந்த இடம் கவிதையிலும் கவிதை. இந்த இடத்தில் பிரபாவும் ஆனந்தியும் சைக்கிள் மிதித்து வருவார்கள். சாலை ஏறி இறங்கி வானத்துடன் இணைந்து இருக்கிற காட்சி போல இருக்கும். பின்னாடி இருப்பது மேட்டுப்பகுதி. “இது நீளதோ தொடு வானம் போலவே” எனும் பொழுது பிரேமுக்கு உள் ஆனந்தி, பிரபா மற்றும் வானம் மட்டுமே இருக்கும் .

ஒரு லோ ஆங்கிள் ஷாட், “இந்த புல் பூண்டும் பறவை நாமும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா ?” இந்தக் காட்சி அப்படியே எடுக்கப்பட்டு இருக்கும். பூலோகம் இவர்கள் காதலுக்கு கீழே என்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இவர்கள் பூமியில் மேல் பரப்பில் உட்கார்ந்து பூமியை வியந்து பார்த்து பேசிக்கொண்டிருப்பார்கள்.

“ஏழை………….
காதல்………..
மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்….. மண்ணில்……
விழுந்து ஒரு காயமின்றி உடையாமல் உருண்டோடும்”

இதில் நான் புரிந்துகொண்டது பிரபா மண், ஆனந்தி நதி. “மண்ணில் விழுந்து ஒரு காயமின்றி” என்று சொல்லும் பொழுது ஆட்டோவில் உட்கார்ந்து இருக்கும் ஆனந்தி, பிரபாவின் தோளில் சாய்வார். கவிதை, “உடையாமல் உருண்டோடும்” என்று சொல்லும் பொழுது ஆட்டோ குலுங்கிக் குலுங்கிச் செல்லும் …..ஆனந்தியின் தலை, பிரபாவின் தோள்களில் அடிபடாமல் குலுங்கும். இப்படி கவிதையை காட்சிகளாக மொழிபெயர்க்க முடியுமா? கவிதை கற்பனையே, அதை எழுதிவிட முடியும். அதை கதையோடு எதார்த்தம் சிதறாமல், பார்ப்பதற்கு உறுத்தாமல் எடுக்க முடியுமா? ராமின் திரைமொழி அவ்வளவு அழகு. ஒரு கவிதையைக் கற்பனையாக எழுதப்பட்டதை, வாழ்வியல் எதார்த்தமாகக் காட்டிய பாடல் .

பாடலின் பெரும்பகுதி காதலியைத் தேடுவது, சந்திப்பது, பிரிவது. பாடலில் பெரும் சோகம் ஒன்று இருக்கும், ஆகப்பெரும் தனிமை இருக்கும். அது ஒரு தேர்ந்த கலைஞனால் மட்டுமே காட்சிப்படுத்த முடியும். ராமின் மேல் ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்படலாம். இப்படி ஒரு திரைமொழி தெரிந்த கலைஞனுக்கு அரசியல் ரீதியாய் அரசியல் மொழியைப் பக்குவமாய் எடுக்கும் பட்சத்தில் ராம் ஒரு உலக சினிமா இயக்குனர்.

- கார்த்திக்
 
#எனக்கு_பிடித்தப்பாடல் 6

பின்குறிப்பு : இந்த பாடல் குறித்து தேடிய பொழுது, நான் என்ன உணர்ந்தேனோ, அதை விட காட்சிக்கு காட்சி உணர்ந்து எழுதியிருக்கிறார்.

0 பின்னூட்டங்கள்: