> குருத்து: Crash (2004)

May 3, 2020

Crash (2004)

கதையில் பிரதான கதாப்பாத்திரங்கள் 12. அரசுத் தரப்பு வழக்கறிஞர். அவருடைய துணைவியார் வேலை செய்யும் கருப்பின பெண் மீது காரணமே இல்லாத வெறுப்பை உமிழ்கிறார்.

ஒரு வெள்ளையின போலீசு அதிகாரி. தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. வேறு மருத்துவருக்கு மாற்றி எழுதித்தர சொல்லி, கருப்பினப்பெண் இன்சூரன்ஸ் அதிகாரியிடம் இனவெறுப்போடு நடந்துகொள்கிறான்.

கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி இயக்குநரும், அவருடைய துணைவியாரும் ஒரு பார்ட்டிக்கு போய்விட்டு வரும் பொழுது, மேலே சொன்ன அதே வெள்ளையின போலீசு அதிகாரி ஒருவனால் மோசமாக நடத்தப்படுகிறார்கள். அமைதியாக நடந்துகொண்டதால், கணவனுடன் கடுமையாக வாக்குவாதம் செய்கிறாள்.

இரண்டு கருப்பின இளைஞர்கள். கார் திருடர்கள். அதில் ஒருவன் வெள்ளை இனவெறியை கடுமையாக திட்டிக்கொண்டே இருக்கிறான். ஒரு காரை திருடிச் செல்லும் பொழுது, ஒரு சீனக்காரரை கடுமையாக காயப்படுத்திவிடுகிறார்கள்.

பெர்சிய இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடை நடத்துகிறார். பூட்டை சரிசெய்ய ஆளை வர சொல்கிறார். வந்த கொரியக்காரர் “அவர் பூட்டு நன்றாக இருக்கிறது. கதவை சரிசெய்யுங்கள்” என்கிறார். கடைக்காரர் கடுமையாக சண்டை போடுகிறார். அதற்கு பிறகு வந்த நாட்களில் கடை கொள்ளையடிக்கப்படுகிறது. கதவை சரிசெய்ய சொல்லியும் சரி செய்யாததால், அவருக்கு இன்சூரன்ஸ் மறுக்கப்படுகிறது. காரணமே இல்லாமல், பூட்டு சரி செய்தவரை கொலைவெறியோடு தேடிச்செல்கிறார்.

இன்னும் சொன்னால், நீளும் என்பதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். அவர்களுக்குள் இன, உயர்வு தாழ்வு, அதிகார போட்டி என நடக்கும் முட்டல் மோதல்களும், அவர்கள் என்னவாக மாறுகிறார்கள் என்பதே முழு நீளக்கதை.

*****
படத்தைப் பார்க்கும் பொழுது, ”அமெரிக்கன் பியூட்டி” படம் நினைவுக்கு வந்தது. இரண்டு குடும்பங்களை எடுத்துக்கொண்டு அமெரிக்க ‘அழகை’ அருமையாக விளக்கியிருப்பார். இந்தப் படமும் அப்படியே. பல்வேறு இனமக்கள் வாழும் ’வல்லரசு’ அமெரிக்காவில் அவர்களிடம் உள்ள இனவெறி, அதிகாரப்போக்கு, பதட்டம், கோபம், என எல்லாவற்றையும் விளக்குகிறார். படம் பார்க்கும் பொழுது, கதாப்பாத்திரங்களின் உணர்வுகள் நம்மை கடுமையாக தாக்குவதை தவிர்க்கமுடியவில்லை. கொரானா காலத்தில் கொஞ்சம் பதட்டத்துடன் இருந்தால், இந்த படத்திற்குள் நுழைய வேண்டாம் என்றே சொல்கிறேன். படத்தின் இறுதியில் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களையும் பாசிட்டிவாக பதிவு செய்திருக்கிறார். உடைமை சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யாமல், சமூக பிரச்சனைகளை தீர்க்கமுடியாது என்பது தான் நிதர்சனம்.

சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த எடிட்டிங் என மூன்று பிரிவுகளில் ஆஸ்காரை வென்றிருக்கிறது. பார்க்கவேண்டிய படம். பாருங்கள். தமிழிலும் கிடைக்கிறது.

0 பின்னூட்டங்கள்: