> குருத்து: Wailing (2016) தென்கொரியா

May 3, 2020

Wailing (2016) தென்கொரியா



கதை. ஒரு அமைதியான மலைகிராமம். கிராமத்தில் ஒரு தொற்றுநோய் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக வதைப்பட்டு சாகிறார்கள். சாவதற்கு முன் உடனிருப்பவர்களை கடுமையாக காயப்படுத்தியும்விடுகிறார்கள். அவர்களும் அதைப்போலவே வதைப்படுகிறார்கள். மக்களுக்கு பயம் தொற்றிக்கொள்கிறது.

நாயகன் போலீசு அதிகாரி. பரபரப்பாக ஏதும் நிகழ்ந்திடாத ஒரு மலை கிராமத்தில் வாழும் ஒரு சராசரி போலீசை போலவே பலவீனங்களுடன் இருக்கிறார். அவருடைய 10 வயது பெண்ணுக்கும் அந்த நோய் பிடித்துவிடுகிறது. காப்பாற்றியாக வேண்டுமே என பதைபதைக்கிறார். இது தொடர்பாக விசாரிக்கும் பொழுது, ஊருக்கு புதிதாக வந்த நபர் தான் இதற்கெல்லாம் காரணம் என சந்தேகிக்கிறார். போலீசு என்பதால், மூன்று நாட்களில் ஊரை காலிசெய்துவிடு என மிரட்டிவிட்டு வருகிறார். இங்கு நடக்கும் மோசமான நிகழ்வுகளை நிறுத்துவதற்காக வந்த நபர் எனவும் சொல்கிறார்கள்.

நாயகன், தன் பெண்ணை பேய் பிடித்திருப்பதாக நம்பி, விரட்டுவதற்காக ஒருவரை அழைத்து வருகிறார். பேயை விரட்டினார்களா? அடுத்தடுத்து அமானுஷ்யமாய் சில சம்பவங்கள் நடக்கின்றன. இப்படி நடப்பதற்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தார்களா என்பது மீதிக்கதை.

****
கதை மெல்ல மெல்ல துவங்கி, இடைவேளை வரும் பொழுது சுறுசுறுப்பாகிவிடுகிறது. இறுதி காட்சிவரை யார் காரணம் என்பதை சொல்லாமலேயே நம்மை அங்கும் இங்குமாய் அலைக்கழித்து, கடைசி காட்சியில் சொல்கிறார்கள்.

வழக்கமான ஹாரர் படங்களின் வகை இல்லை இந்தப்படம். மண்ணின் மனத்தோடு இருக்கிறது. படத்தில் பேயோட்டும் காட்சி ஒன்று இருக்கிறது. செய்கின்ற சடங்குகளும், இசையும் நம்மையும் பயமுறுத்திவிடுகிறது.

நம்மூரில் சொல்லப்படுகிற பேய்க்கதைகளும், ஓட்டுகிற சடங்குகளுமே சுவாரசியமானவை தான். இந்தப் படம் மாதிரி தமிழிலும் யாராவது எடுத்தாலும் நன்றாகத்தான் இருக்கும்.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

"See my hands and my feet, that it is I myself. Touch me, and see. For a spirit does not have flesh and bones as you see that I have.”

- Luke 24:37-39

0 பின்னூட்டங்கள்: