> குருத்து: மாஸ்க்

May 8, 2020

மாஸ்க்



கொரானா காலம் மக்களுக்கு மிகவும் நெருக்கடியாக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவுகளை நீட்டித்துக்கொண்டே செல்கிறார்கள். அரசு செய்த தவறுகளால், இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இப்பொழுது டாஸ்மாக்கை சின்சியராக திறந்துவிட போகிறார்கள். வெளியே செல்லும் பொழுது பார்க்கிறேன். இப்பொழுது வரைக்கும் கூட சிலர் மாஸ்க் அணியாமல் தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். நம்மூரில் குறைந்தபட்சம் மாஸ்க் அணியவேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை அல்லது வாங்குவதற்கு காசு இல்லை எனலாம். மாஸ்க் எவ்வளவு அவசியம் என்பதற்கு உதாரணம்.

மலையாளத்தில் ”வைரஸ்” படத்தில், நிப்பா வைரஸை எதிர்கொண்ட கதையை எடுத்திருப்பார்கள்.

அந்த படத்தில், மருத்துவமனையின் ஒரு குறிப்பிட்ட நோயாளியிடமிருந்து தான், அங்கிருந்த சிலருக்கு பரவியிருப்பதாக பின்னாடி கண்டுபிடிப்பார்கள். அந்த நோயாளி படுக்கையருகே ஐம்பது வயதளவில் அம்மாவும் இருந்திருப்பார். மற்றவர்களுக்கெல்லாம் வைரஸ் தொத்தியிருக்கும். அந்த அம்மா மட்டும் தப்பியிருப்பார்.

எப்படி அந்தம்மாவுக்கு மட்டும் வைரஸ் தொற்று இல்லை என மருத்துவக்குழு விவாதிக்கும் பொழுது பொழுது, அரசு மருத்துவமனையில் ஒரு நெடி இருக்கும் அல்லவா! அதிலிருந்து தப்பிக்க, தன் சேலையின் முந்தானையின் ஒரு பகுதியை வைத்து மருத்துவமனையில் இருக்கும் வரைக்கும் வாயை மூடிக்கொண்டே இருப்பார். அதனால் தான் தப்பித்திருப்பார்.
படத்தில் அதை சீரியசாக போகிற போக்கில் சொல்லியிருப்பார்கள். அரசு மருத்துவமனையின் நிலையை சத்தமேயில்லாமல் கிண்டல் செய்கிற காட்சி அது!

மற்றபடி, மாஸ்க்கின் அவசியத்தை உணர்வோம். மாஸ்க் அணிவோம்.

0 பின்னூட்டங்கள்: