> குருத்து: Miracle in cell No:7 - south Korea (2013)

May 8, 2020

Miracle in cell No:7 - south Korea (2013)

“மறந்திடாதே ye-Seung”
“எதை அப்பா?”
“இந்த சூரிய உதயத்தையும், உன் அப்பாவையும்!”

****

கதை. கார் பார்க்கிங்கில் வேலைசெய்யும், கொஞ்சம் மனநிலை குன்றிய (mentally impaired) நாயகன், தன் ஆறு வயது மகளுடன் தனது சின்னஞ்சிறு வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அப்பாவும், பிள்ளையும் ஒரு கடையில் விற்கும் சிறப்பு ஸ்கூல் பேக்கை சம்பளம் வந்ததும் வாங்குவதென முடிவு செய்கிறார்கள். ஷோகேசில் இருக்கும் அதை தினமும் ஒருமுறையோ, இருமுறையோ தினமும் பார்த்துவருகிறார்கள். வழக்கம் போல அந்த கடையை கடக்கும் பொழுது, ஷோகேசில் இருந்த அந்த பேக்கை போலீசு அதிகாரி அதை தன் மகளுக்கு வாங்கித்தருகிறார். நாயகன் அதை கேட்க போக, போலீசு அதிகாரி அவரை அடித்துவிடுகிறார். பிறகு நாயகனும், பெண்ணும் வருத்தமாய் வீடு வந்து சேர்கிறார்கள்.

அடுத்து வந்த நாட்களில், வழியில் நாயகனைப் பார்த்த அந்த அதிகாரியின் பெண், ”ஒரு கடையில் அதே பேக்கை பார்த்ததாகவும், உங்கள் பெண்ணுக்கு வாங்கித்தாருங்கள்” எனச் சொல்லி, அழைத்து செல்கிறாள். உற்சாகமாய் போகும் வழியில் பனிக்காலம் என்பதால், பனியில் வழுக்கி விழுந்து தலையில் அடிப்பட்டு இறக்கிறாள். இறந்தது தெரியாமல், முதலுதவி செய்ய முயல, இவர் தான் கொலை செய்துவிட்டார் என, கடையில் அடித்த அந்த பெண்ணின் தந்தை போலீசு அதிகாரி என்பதால், அடித்ததற்காக பிள்ளையை கொலை செய்துவிட்டார் என பழியை போட்டுவிடுகிறார்கள்.

அப்பா சிறையில். மகள் அனாதை ஆசிரமத்தில். ஒரு குழந்தையை கொன்றவர் என்பதால், சிறை வார்டனும், சக கைதிகளும் அவரை செமத்தியாய் அடிக்கிறார்கள். பிறகு, சிறையில் செல்வாக்கு உள்ள ஒரு தாதாவின் உயிரை காப்பாற்றுகிறார். ”உயிரையே காப்பத்திட்ட! என்ன வேணும்னு சொல்ல!” என கெத்தாய் கேட்க, தன் பிள்ளையை பார்க்கவேண்டும் என்கிறார். நிறைய ரிஸ்க் எடுத்து சிறைக்குள் கொண்டுவந்துவிடுகிறார்கள்.

பிறகு, அவருடைய வெள்ளந்தித்தனம் தெரிய வர, அவரை அந்த வழக்கிலிருந்து காப்பாற்ற அவரைச் சுற்றி உள்ள அத்தனைப் பேரும் போராடுகிறார்கள். அவர் விடுதலையாகி வெளியே வந்தாரா? என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

*****
சமீபத்தில் நிறைய கண்கலங்க வைத்தப் படம். இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றி, உலக அளவில் பலரையும் ஈர்த்திருக்கிறது. பிற மொழிகளிலும் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

உலக அளவில் சிறைக்குள் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. சிறையில் இருந்து யாரேனும் தப்பிக்க முயற்சி செய்தால், அவர் எவ்வளவு பெரிய குற்றமழைத்தவர் என்றாலும், மற்றவர்கள் உதவி செய்யவேண்டும் என்பது தான். இந்த படத்தில் நாயகன் அப்பாவி, அவரை நம்பி ஒரு குட்டிப்பெண்ணும் இருப்பதால், அவரைச் சுற்றி உள்ள, சக கைதிகள், சிறை போலீசார் என அனைவருமே அதற்காக போராடுவது அருமை.

அதிகார வர்க்கம் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் என்பதை இந்த படத்திலும் அழுத்தமாய் சொல்லியிருக்கிறார்கள்.

”நல்லது நல்லதோடு சேரும். தீயது தீயதோடு சேரும்” என்பார்கள். நாயகனோடு ஒரு அறையில் குற்றப்பின்னணியில் இருந்தவர்களுடைய வாழ்க்கைப் பாதை பின்னாட்களில் மொத்தமாய் மாறிவிடும்.

சிறைக்குள் குழந்தையை கொண்டு செல்லமுடியுமா? என நமக்குள் எழும் கேள்வியை காட்சிகள் மூலம் நம்ப வைத்திருக்கிறார்கள். மொத்த படத்தையும் அழுகாச்சியாக கொண்டு செல்லாமல், முதல் பாதியை கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள். எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதில் அப்பாவும், பொண்ணும் நிறைய காலம் மனதில் நிற்பார்கள்.

குடும்பத்தோடு பார்க்க கூடிய படம். தமிழில் இல்லை. அமேசான் பிரைமில் இருப்பதாக சொல்கிறார்கள். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: