> குருத்து: The silence of the Lambs – (1991) Pshychological Horror

May 13, 2020

The silence of the Lambs – (1991) Pshychological Horror

கதை. ஒரு Buffalo Bill என்ற சீரியல் கில்லர் இளம்பெண்களை கடத்தி, கொடூரமாக கொன்றுவருகிறான். நாயகி FBIயில் பயிற்சி (Trainee) பெறும் ஒரு இளம் பெண் அதிகாரி. தான் பயிற்சியின் ஒரு பகுதியாக, மனிதனை கொன்று மாமிசம் சாப்பிடதற்காக சிறையில் இருக்கும் மருத்துவரைச் சந்தித்து பேட்டி எடுக்க அனுப்புகிறார்கள். அந்த ஆள் அழுத்தமான ஆளாக இருக்கிறார். அவரை சம்மதிக்க வைக்க போராடுகிறார்.

இதற்கிடையில் ஒரு செனட்டரின் மகளை சீரியல் கில்லர் கடத்துகிறான். அதிகாரிகளுக்கு அழுத்தம் அதிகமாகிறது. எட்டு வருடமாக ஒரே அறையில் அடைந்து கிடக்கும் சைக்கோ மருத்துவருக்கு வேறொரு சிறையை மாற்றித்தருகிறேன். ”Buffalo Bill குறித்து துப்புகள் தா” என ஆசைக்காட்டுகிறாள். ”சொல்கிறேன். அதற்கு உன்னுடைய கடந்த கால கசப்பான அனுபவத்தை சொல்லவேண்டும்” என்கிறார். வேறுவழியில்லாமல் சொல்கிறாள். அவனும் கொலையாளியின் மனநிலை, இடம், அவன் கொன்ற முதல் ஆள் அவனுக்கு நெருக்கமான ஆளாகத்தான் இருக்கவேண்டும் என சில துப்புகள் தருகிறான்.

அதற்கு பிறகு சைக்கோ மருத்துவரும் கடுமையான பாதுகாப்பிலிருந்து தப்பித்துவிடுகிறார். அந்த சீரியல் கில்லரை பிடித்தார்களா? செனட்டரின் மகளை உயிரோடு கண்டுபிடித்தார்களா? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

****
1991ல் வெளிவந்து, சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம் ஐந்து பிரிவுகளில் ஆஸ்கார் வென்றிருக்கிறது. இந்த ஐந்து வகைகளிலும் வெல்வது அபூர்வம் என்கிறார்கள். படமும் தரமாகத்தான் இருக்கிறது.

இளம்பெண்களை கொன்று அவர்களின் தோலை உரித்து ஆடைகள் தைத்து போட்டுக்கொள்கிறவன், மனிதனைக் கொன்று சாப்பிடுகிற மருத்துவர் – இதைக் கேட்கும் பொழுதே டெரராக இருக்கிறது. அவர்களை திரையில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாக தமிழ்ப்படங்களில் ஏன் இப்படி ஆனார்கள் என கொஞ்சம் விளக்குவார்கள் அல்லது விளக்குவதற்கு முற்படுவார்கள். ஆங்கிலப்படங்களில் அப்படியே விட்டுவிட்டு நகர்ந்துகொல்கிறார்கள். அதை ஆய்வு செய்யப்படும் பொழுது தான் எங்கிருந்து இந்த கோளாறுகள் ஆரம்பிக்கின்றன என்பதை நாம் அறிந்துகொள்ளமுடியும். மாற்றிக்கொள்ளவும் முடியும்.

எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த நாயகியும், மருத்துவரும் அருமையாக செய்திருக்கிறார்கள். அதனால் தான் இருவருக்குமே ஆஸ்கார் கிடைத்திருக்கிறது.

இடையில் கொஞ்சம் காட்சிகள் கோரமாக இருப்பதால் குழந்தைகளோடு பார்க்க வாய்ப்பில்லை. பார்க்க வேண்டிய படம் தான். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: