> குருத்து: உருகுதே மருகுதே!

May 3, 2020

உருகுதே மருகுதே!

வெயில் திரைப்படத்தில் இடம் பெற்ற உருகுதே மருகுதே பாடல் காலம் கடந்தும் காதலின் பேரானந்தத்தை, பெருவலியை காற்றில் கசிய விட்டபடியே இருக்கிறது. இந்த பாடல் ஒரு மோனமயக்கம். தீராத காதல் வெள்ளம் கொட்டும் பாடல்.

காதலின் துயரமும், அன்பும், காதலும், காமமும், கண்ணீரும் ஒருசேர கலந்த பாடல்.இது போன்ற பாடல் வகைகள் வெகு அரிது. இசைஞானி இளையராஜா அவர்களின் மெல்லிசைப்பாடல்கள் மனதை உருக்கியவண்ணம் இருக்கும். உதாரணமாக இதயத்தைத்திருடாதே திரைப்படத்தில் இடம்பெற்ற ஓ பாப்பா லாலி பாடலை கேட்கும் போதெல்லாம் என் உயிர் என்னை விட்டு ஒரு ஜஸ்கீரீமைப்போல உருகி சென்ற வண்ணம் இருக்கும். காதலின் துயரத்தை, பீறிடும் அழுகையை, ஆனந்தக்கண்ணீரை இசைமாலையாக்கியிருப்பார். தெலுங்கில் அந்த பாடலை எஸ்பிபி அவர்கள் இதயம் கரைய பாடியிருப்பார்.

அதே போன்று காலத்திற்கும் காதல் நறுமணம் வீசுகிற, இரு இதயம் இணைகிற போது அழுகை பீறிடுமே அப்படி ஒரு பாடலை நாம் உருவாக்கிவிடவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

என் முதல் படமான ஆல்பம் திரைப்படத்தில் செல்லமாய் செல்லம் என்றாயடி என்ற பாடல் அப்படி ரசித்து ரசித்து உருவாக்கிய பாடல்.ஸ்ரேயா கோசல் அவர்கள் பாடிய முதல் தமிழ் பாடல்.அந்த படத்திற்கு பிறகு தமிழில் அவர் தவிர்க்க முடியாத பெண் பின்னணி பாடகராக மாறினார்.

வெயில் திரைப்படத்தில் இந்த பாடல் அப்படி தேகம் உருகுகிற, ஆன்மா உருகுகிற,காதல் கசிந்து உருகுகிற பாடலாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.வெயில் திரைப்படத்தின் கதாபாத்திரமான தங்கம் காதலுக்காக எதையும் தருவாள், தன்னையும் தருவாள் அதையும் தாண்டி தன் உயிரையும் தருவாள்.முத்தங்களால் மூழ்குகிற காதல் அவர்களுடையது. இப்படி தான் முருகேசன் தங்கத்தின் காதலை வடிவமைத்திருந்தேன்.

வெயில் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனவுடன் முதல் பாடல் வெயிலோடு விளையாடி பாடலை முதல் ஒரு வாரத்திற்குள் முடித்துவிட்டோம்.

இந்த காதல் பாடலை உருவாக்க அவருக்கு கதையை,அந்த கதாபாத்திரத்தின் தன்மையை, இளையராஜாவின் மெல்லிசைப்பாடல்களையும் நினைவுபடுத்தி அப்படி ஒரு பாடல் வேண்டும் டார்லிங் என்றேன். எங்கேயாவது ஒரு தனியான இடத்தில் கீபோர்டுடன் அமர்ந்து வேலை செய்தால் முடித்து விடலாம் என்று ஜீவி விரும்பினார்.அந்த நேரத்தில் ஜீவிக்கு தனியாக ஸ்டுடியோ இல்லை. ஆகவே எங்கள் கம்போசிங் அவர் வீட்டில் வைத்து நடக்கும் அல்லது வெயில் அலுவலகத்தில் நடக்கும். வெயிலோடு பாடல் கம்போசிங்கை வெயில் அலுவலகத்திலே முடித்து விட்டோம். ஆகவே இந்த பாடலிற்கு எங்கையாவது வெளிய போகலாம் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. அந்த சமயத்தில் திரையுலகில் பாடல் கம்போசிங் செய்வதற்கு வெளிநாடு செல்வது வழக்கம். என் நண்பன் வரதனிடம் மகாபலிபுரம் கடற்கரையோர விடுதி எதாவது கிடைக்குமா என்று கேட்டேன். பட்ஜெட்டுல படம் எடுப்போம்ன்னு சொல்லி கமிட் ஆகியிருக்கோம். இதெல்லாம் கேட்டீன்னா நாளைக்கே இந்த புரொஜெக்ட் கான்சல் ஆகிடும் பாத்துக்கோ என்று மிரட்டினான்.

எஸ்.பிக்சர்ஸின் நிர்வாகத் தயாரிப்பாளர் சுந்தர்ராஜனிடம் யோசனை கேட்டோம். இயக்குநரின் கடற்கரையோர பங்களா உபயோகமற்று உள்ளது. அந்த பங்களாவை மறுசீரமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு அறைகள் மட்டுமே உபயோகத்திற்கு தகுந்தாற் போல் உள்ளது. மேடத்திடம் கேட்டு சொல்கிறேன் என்று சம்மதம் வாங்கி தந்தார். இரண்டு நாட்கள் கழித்து ஒரு நண்பகல் அங்கே சென்றோம்.

நான் தரைத்தளத்தில் உள்ள அறையில் என் உதவியாளர்களுடன் இருந்தேன். மேல்தளத்தில் உள்ள அறையில் ஜீவியும் அவரின் இஞ்சினீயர் ஜோ என்கிற ஜோஸனும் இருந்தனர். மாலையில் இருந்தே கம்போசிங் வேலைகளில் ஜீவி மூழ்கிவிட்டார். இரவு உணவு கூட வேண்டாமென்று மறுத்துவிட்டார். நள்ளிரவு தாண்டி ஜோ வந்து என்னை எழுப்பி ஜீவி அழைப்பதாக கூறினார். தூக்கக்கலக்கத்தில் அந்த அறைக்குள் நுழைந்தேன். கம்ப்யூட்டர் ஸ்கீரினின் மெல்லிய வெளிச்சம் மட்டும் பரவியிருந்தது. ஜீவி ஜன்னலோர திரைச்சீலைக்குள் நின்று கொண்டிருந்தார்.

ஜோ கீபோர்டு முன்னால் இருந்த ஹெட்போனை எனக்கு தந்தார். திரும்பி ஜீவியைப் பார்த்தேன். ஒருவித மனக்குழப்பத்துடன் என்னைப் பார்த்தார். ஹெட்போனை என் காதுகளில் பொருத்திக்கொண்டேன். ஜீவியின் குரலில் அந்த டியூன் ஒலித்தது. கீபோர்டின் தாளஒலியும் இணைந்து ஒலித்தது. பாடல் வரிகளை தவிர ஒரு பாடலின் மொத்த இசையையும் கேட்டால் எப்படி இருக்குமோ அப்படியிருந்தது அந்த இசை. மீண்டும் மீண்டும் ஒரு பத்து முறை கேட்டிருப்பேன். மனம் மயங்கத் துவங்கியது. அந்த டியூனின் ஆழத்திற்குள் சென்றேன். ஜீவியின் ஆன்மாவின் குரல் எனக்கு கேட்டது. ஹெட்போனை கழட்டிவிட்டு எழுந்தேன்.

ஜோ “என்ன சார்” என்றார்.
ஜீவிக்கு குரலே இல்லை.
”மிக பிரமாதமாக இருக்கு டார்லிங் பெரிய ஹிட்டாகும்” என்றேன்.
”அப்படியா சார் அப்படியா” என்றார்.
ஜீவியின் கைகளை இறுக பற்றிக்கொண்டேன். 17 வயது பையனின் கைகளுக்குள் இருந்து எப்படி இந்த அற்புதமான இசை பிறந்தது.

குறைவான இருளில் ஜீவியைப் பார்க்க எனக்கு ஒருவித பரவசமாக இருந்தது.
வாங்க ஜீவி சாப்பிடபோகலாமுன்னு பைக்கை எடுத்துக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பறந்தோம்.
மனசுக்குள் உருகுதே மருகுதே பாடலின் இசை என்னை உருக்கிக் கொண்டிருந்தது.
இன்று வரை அந்த மயக்கம் ரசிகர்களைப் போல எனக்கும் குன்றாத உணர்வாக உள்ளது.

இதை எழுதும் போது கூட எங்கோ ஒரு வானொலியில் உருகுதே பாடலின் இசை கேட்கிறது.

காதலுக்கு உருகாத இதயம் உண்டா….?

- இயக்குனர் வசந்தபாலன்

0 பின்னூட்டங்கள்: