> குருத்து: Bad Genius (2017) – Thailand

May 3, 2020

Bad Genius (2017) – Thailand

கதை. தன் மகளை அழைத்துக்கொண்டு அந்த புதிய பள்ளியில் மேல்நிலை வகுப்பில் சேர்க்க அழைத்துவருகிறார். தன் மகள் கணக்கிலும், படிப்பிலும் கெட்டிக்காரி. இவ்வளவு பரிசுகள் வென்றிருக்கிறாள் என பரிசு கோப்பைகளையும் காண்பிக்கிறார். மகளுக்கோ அது காசு பிடுங்கும் பெரிய பள்ளி. அப்பாவை சிரமப்படுத்தவேண்டாம். பழைய பள்ளியிலேயே படிக்கிறேன் என்கிறாள். புதிய தலைமை ஆசிரியரோ ”இந்த பள்ளியிலேயே படி. ஸ்காலர்ஷிப் தருகிறேன். மேற்படிப்புக்கும் ஸ்காலர்ஷிப் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்”என்கிறார். அந்த பள்ளியில் சேர்கிறாள்.

நாயகியின் வகுப்புத் தோழி கணக்கில் கொஞ்சம் டல்லான மாணவி. நாயகியோடு நெருக்கம் ஆகிறாள். தான் நிறைய மார்க் வாங்கினால், பள்ளி சில சலுகைகளை தரும். ”உதவி செய்” என கெஞ்சுகிறாள். பியானோவில் விரலில் வாசிப்பார்கள் அல்லவா! விரல்களை ஒரு லயத்தில் வாசிப்பது போல, பிட் அடிக்க புதுவித உத்தியை கண்டுபிடித்து சொல்லித்தருகிறாள். தோழி கூடுதல் மார்க்கும் வாங்குகிறாள்.

அந்த தோழி பள்ளியில் படிக்கும் தன் நண்பனுக்கும் அந்த உத்தியை சொல்கிறாள். அவன் தனக்கும், தன் நண்பர்களுக்கும் சொல்லித்தந்தால், தலைக்கு இவ்வளவு தருகிறேன் என பேரம் பேசுகிறான். பள்ளி ஸ்காலர்ஷிப் தருவதாக பொய் சொல்லிவிட்டு, நாயகியின் அப்பாவிடம் கூடுதலாக பணத்தை கறந்துவிட்டது என உண்மையைச் சொல்லி பள்ளி மீது கடுப்பேத்துகிறான். அவளும் ஒத்துக்கொள்கிறாள். வகுப்பில் நாயகிக்கு இணையாக படிக்கும் ஒரு மாணவனுக்கு இந்த விசயம் தெரியவர, நிர்வாகத்திடம் போட்டுக்கொடுத்துவிடுகிறான். தலைமை ஆசிரியரோ, நாயகியின் அப்பாவை வரவழைத்து, மகளின் நடத்தையை கண்டித்து, இதற்கு தண்டனையாக மேற்படிப்புக்காக ஸ்காலர்ஷிப் கிடைக்காது எனவும் சொல்லிவிடுகிறார்.

இதுவரை சொன்னதெல்லாம் துவக்கம் தான். அந்த பணக்கார பையன் மிகவும் புகழ்பெற்ற பல்கலை கழகங்களில் சேர்வதற்காக பல நாடுகளில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தானும் தனது நண்பர்களும் வெற்றிபெற உதவி செய்ய கோருகிறான். அவளும் ஒத்துக்கொள்கிறாள். அதற்காக என்னவெல்லாம் செய்தார்கள்? தேர்ச்சியடைந்தார்களா? மாட்டிக்கொண்டார்களா? என்பதை பரபரவென சொல்லியிருக்கிறார்கள்.

****

உலகம் முழுவதும் கல்விக்காகவும், அரசு பணிகளுக்காகவும் என நடக்கும் நுழைவுத்தேர்வுகளில் மோசடிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

2007ல் நமது TNPSC போல மத்திய பிரதேசத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்காகவும், அரசுத்துறை பணிகளுக்காகவும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் நடந்த வியாபம் ஊழல் மிகவும் இழிபுகழ் பெற்றது. இந்த வழக்கில் மாநில கல்வி அமைச்சர் உட்பட 2100 பேர் வரை கைது செய்யப்பட்டனர். பெரிய தலைகள், சிறிய தலைகள் என 47 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இன்றைக்கு வரைக்கும் வழக்கு தீர்க்கப்படாமல் தான் இருக்கின்றன. இங்கும் TNPSC ஊழல்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

அதிகாரமும், வசதி படைத்தவர்களும் தங்கள் சொந்தங்களின் வளமான எதிர்காலத்திற்காக எவ்வளவு செலவழிக்கவும் தயாராக இருக்கிறார்கள். சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை இப்படிப்பட்ட தேர்வுகள் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை தான்.

நேர்மையாக இருப்பவர்கள், வசதி இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்களே என எந்தவித சலனமும் இல்லாமல் படம் எளிதாக கடந்து செல்கிறது. படத்தில் நுழைவுத்தேர்வு தவறை மாணவர்கள் மட்டுமே ஈடுபடுவது மாதிரி இயக்குநர் காட்டுகிறார். இதற்காக கட்டுக்கட்டாக பணம் தருவது பெற்றோர்கள் தானே! இது மிகப்பெரிய ஊழலாக தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் இயக்குநர் அதை எல்லாம் கவனமாக தவிர்த்திருக்கிறார்.

உண்மைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டு இயக்குநர் பரபரப்பாகவும், ஒரு திரில்லர் பாணியிலும் படத்தை எடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த படத்தைப் பற்றி எழுதியவர்களும் பேசியவர்களும் கூட இந்த விசயத்தை பேசத்தவறுகிறார்கள். படத்தின் இறுதியில் நாயகிடம் ஏற்படும் மனமாற்றம் மட்டும் ஒரு பெரிய ஆறுதல். மங்காத்தா மாதிரி முடித்துவிடுவார்களோ என்ற பயம் இருந்தது.

நான் பார்த்த முதல் தாய்லாந்து படம் இது தான். இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. நடிப்பு, தொழில்நுட்பம் என அனைத்தும் தரமாக இருக்கின்றன.

பார்க்ககூடிய படம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: