> குருத்து: Bucket List 2020

May 3, 2020

Bucket List 2020

ஒவ்வொரு வருடமும் நான் இந்த வருடம் என்னெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு Bucket List தயார் செய்வேன். அதில் சில விஷயங்கள் அப்படியே நடந்திருக்கிறது சில விஷயங்கள் அதற்கு அடுத்த வருடங்களில் நடந்து இருக்கிறது. ஆனால் எதுவும் இதுவரை வீணானது இல்லை. ஆகவே இந்த வருடமும் எனது பட்டியலை புதுப்பித்து பதிவிடுகிறேன்.

1. மேற்கு தொடர்ச்சி மலை முழுக்க சுற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்த வருடமும் தொடரும். எவ்வளவு சுற்றினாலும் போதாது. அதில் அவ்வளவு இருக்கிறது.

2. அடித்தட்டு மக்களை, மாணவர்களை சந்திப்பதும் தீராத மகிழ்ச்சியை கடந்த ஆண்டுகளில் கொடுத்திருக்கிறது. இந்த ஆண்டும் இன்னும் அதிகமாக கூட்டங்களில் பங்கு கொண்டு மக்களை சந்திக்க வேண்டும்.

3. புத்தகம் பப்ளிஷ் பண்ண வேண்டும் என்ற எண்ணம் கடந்த ஆண்டு பலித்தாலும் இன்னும் பிரமாண்டமாக இதை செய்ய வேண்டும். முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்கும் முற்போக்கு எண்ணத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு. அது தனி மனிதனாக இருந்தாலும் சரி ஒரு தேசமாக இருந்தாலும் சரி எவ்வளவு அவசியம் என்பதை பற்றி எழுதிட வேண்டும்

4. நாஸ் டெய்லி எனக்கு மிகவும் பிடித்தமான பேஸ்புக் சேனல். நானும் ஊர் சுற்றி என்பதால் அதுபோல ஒன்று இந்த ஆண்டு தொடங்கிட வேண்டும்.

5. நாங்கள் இப்போது உருவாக்கிக்கொண்டு வரும் MyFinanza என்ற மொபைல் ஆப் தனி மனிதர்களின் பொருளாதார ஆலோசகராக இருந்து செயல்படும். அதை இப்பொழுது தமிழ்,ஆங்கிலம் என்று 2 மொழிகளில் உருவாக்கி வருகிறோம். எல்லா முக்கிய மொழிகளிலும் கொண்டு சேர்க்க வேண்டும். இதற்கு ஸ்டார்ட்அப் முதலீடு தேடலாம் என்ற எண்ணம் இருக்கிறது

6. இந்திய பொருள்பங்குச் சந்தையில் மட்டுமே கால்பதித்த எங்களுடைய மொபைல் ஆப் (Commodity Market Tracker) கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களையும் ஈர்த்து வருகிறது. ஆகவே உலகின் முக்கிய பொருள்பங்குச்சந்தையில் நேரடியாக களம் காண வேண்டும்.

7.மேற்குலக நாடுகளில் கால் பதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல வளரும் நாடுகள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் எங்கள் நிறுவனம் கால் பதிக்க வேண்டும்.

8. கடந்த ஆண்டு நாங்கள் கொண்டுவந்த, தனிமனித பொருளாதாரத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணத்தோட்டம் பேஸ்புக் குரூப் மற்றும் யூட்யூப் சேனல் இரண்டும் லட்சம் பேர்களுக்கும் மேலாக சென்று சேர வேண்டும்.

9. கடந்த ஆண்டுகளில் புத்தக வாசிப்பில் என் இலக்கை முழுமையாக சென்று சேரவில்லை எனினும் நிறைய வாசித்தேன் என்ற திருப்தி இருக்கிறது. இம்முறையும் ஒரு 25 புத்தகங்கள் எடுத்து வைத்திருக்கிறேன். முழுமையாக முடித்து விடவேண்டும்

10. இந்த ஆண்டு மிக அதிகமாக பயணம் செய்ய வேண்டும். குடும்பத்துடன், நண்பர்களுடன், நிறுவனம் ஊழியர்களுடன், தனியாக என்று கடந்த ஆண்டுகள் பயணத்திற்கு எந்த குறையும் இல்லை. இந்த ஆண்டும் அது இன்னும் அதிகமாக விரிவாக உலகமெங்கும் செல்ல வேண்டும். செல்லாத இடங்களுக்கு செல்ல வேண்டும்.

11. Craziness Level-ஐ கொஞ்சம் கூட்ட வேண்டும். நம்ம மனசுக்குள்ள இருக்கிற வெட்கத்தை மனத்தடையை உடைப்பதற்கு இதைவிட சிறந்த கருவி வேறு எதுவும் இல்லை. இதுவரை முயற்சி செய்யாத பல Crazy முயற்சிகளை இந்த வருடம் செய்ய வேண்டும்.

12. போன வருடம் யூட்யூப் பார்த்து பார்த்து லேப்டாப் மெக்கானிக்ஸ் கொஞ்சம் கத்துக்கிட்டேன். என்னோட லேப்டாப்ப அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு பழையபடி அசெம்பிள் பண்ணி வெற்றிகரமாக ஓட வைத்தேன். பழைய லேப்டாப் எல்லாத்தையும் பிரித்து அதிலுள்ள ஹார்ட் டிஸ்க் தனியாக ரேம் தனியாக எடுத்து அதை எங்கள் லேப்டாப்புக்கு பயன்படுத்தி கொண்டேன். அதேபோல இந்த வருடமும் இன்னும் நிறைய புது தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அதை வாழ்வில் பயன்படுத்த வேண்டும்.

13. இந்த வருடம் பேஸ்புக்கில் சங்கிகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காமல் நான் சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.

14. கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னோட வெயிட் ஏறவுமுமில்லை இறங்கவுமில்லை. இந்த வருடம் 10 கிலோ இறங்க வேண்டும் என்று நானும் ரஞ்சியும் ஏற்கனவே பேசியிருந்தோம். அதை நடத்திக் காட்ட வேண்டும்.

15. சிறுவயதிலிருந்தே எனக்கு டான்ஸ் ரொம்பவும் பிடிக்கும். நன்றாக ஆடவும் செய்வேன். இந்த வருடம் டான்ஸ் கிளாஸ்ஸில் ரஞ்சியுடன் சேர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்னும் நிறைய இருக்கிறது. நேரமும் வேணும் இல்ல. அப்புறம் இதெல்லாம் ஏன் இங்க சொல்ல வேண்டும் என்று தோன்றலாம். இப்படி சொல்வதால் கனவு என்பது கமிட்மெண்ட் ஆகிவிடுகிறது. ஒரு டெட்லைன் கிடைக்கிறது. ஒத்தகருத்து உடையவர்கள் மூலம் எனக்கு உதவிகள் அல்லது யோசனைகள் கிடைக்கலாம். இது வாழ்க்கையை கொண்டாட ஊக்கம் கொடுக்கலாம். இந்த உலகத்தோடு உறவாட நாம் கொள்ளும் ஆசையை நான் அதனிடம் தானே சொல்லவேண்டும்.

#BucketList2020

Karthikeyan Fastura

0 பின்னூட்டங்கள்: