> குருத்து: ரொட்டித்துண்டுகள்

May 8, 2020

ரொட்டித்துண்டுகள்

பல மைல்கள் ஊர்ந்து
களைப்பாக தூங்கியவர்களை
ரயில் கொன்றுவிட்டது என்கிறார்கள்.

"வீட்டுக்குள்ளேயே இரு!
ஏதும் தரமாட்டேன்!"
என பேரரசர் ஒருமுறை கொன்றார்.

கோதுமையும்,
கிழங்கும் தராமல்
அரசர் ஒருமுறை கொன்றார்.

ரயிலில் செல்ல
நிறைய காசு கேட்டார்கள்!
சாலையில் சென்றால்
போலீசு உதைத்தார்கள்!
முகாம்களில் வதைத்தார்கள்!

கஞ்சியோ, சாவோ
சொந்த ஊரில் என
தண்டவாளங்களில்
மெல்ல நகர்ந்தார்கள்!

எல்லா பழிகளையும்
சரக்கு ரயில்
அள்ளிக்கொண்டு போய்விட்டது!

பின்னால் வருகிற
தங்கள் சகோதரர்களுக்காக
எறிந்த ரொட்டித்துண்டுகள் அவை!
பத்திரப்படுத்துங்கள்!

பேரரசருக்கும், அரசரருக்கும்
நிறைய முக்கியவேலைகள் இருக்கின்றன.
நாம் நமது ரொட்டித்துண்டுகளில்
கவனம் கொள்வோம்!

0 பின்னூட்டங்கள்: