கொரானா காலத்தில் ஒரு பழைய எம்ஜிஆர் படம் பார்க்கலாம் என யோசித்தேன். அன்பேவா, எங்க வீட்டுப்பிள்ளை பலமுறை முன்பே பார்த்திருந்ததால், இந்தப் படம் யூடியூப்பில் கண்ணில்பட்டது. பார்த்தேன்.
கதை. எம்ஜிஆர் தம்பி நாகேஷ், அப்பா பாலையா, அம்மாவுடன் கிராமத்தில் வசித்துவருகிறார். எம்ஜிஆர் மாநில அளவில் விளையாட்டு வீரர். தம்பியுடன் கல்கத்தாவிற்கு விளையாட செல்கிறார். சென்ற இடத்தில் அங்கு வசிக்கும் ஒரு செல்வந்தர், அவருடைய இரண்டு பெண்களும் (அக்கா – செளகார் ஜானகி) கொண்ட ஒரு தமிழ் குடும்பம் அறிமுகமாகிறது. விருந்துக்கு வீட்டுக்கு அழைக்கிறார்கள்.
அந்த செல்வந்தர் எம்ஜிஆருடைய தந்தைக்கு நண்பரும், ஒரே ஊர்காரராகவும் ஆகிவிடுகிறார். இரண்டு பசங்க. இரண்டு பெண்கள். கல்யாணம் செய்து வைக்கலாம் என பேசுகிறார்கள். இதில் செளகார் ஜானகி 'நவநாகரிக' மங்கையாக வருகிறார். எம்ஜிஆர் படித்தவராக இருந்தாலும், 'நவநாகரிகம்' செட்டாகவில்லை. இதற்கிடையில் செல்வந்தர் வீட்டில் வேலை செய்யும் கே.ஆர். விஜயாவை எம்ஜிஆர் காதலிக்கிறார்.
ஆனால் தம்பி நாகேசும், செளகார் ஜானகியின் தங்கையும் ஜோடி சின்சியராக காதலிக்கிறார்கள். செல்வந்தரின் இளைய மகளை மட்டும் பெண் எடுப்பதாக சொல்கிறார்கள். "கொடுத்தால், இரண்டு பெண்களையும் ஒரே வீட்டிற்கு அனுப்புவேன். இல்லையென்றால், வேண்டாம்" என கறாராக மறுத்துவிடுகிறார்.
நாகேசு நாள்முழுவதும் தண்ணியடித்து தேவதாஸ் போல சுற்றுகிறார். தம்பியின் நிலைமை பார்த்து அண்ணன் வருந்துகிறார்.
எம்ஜிஆர் என்ன முடிவெடுத்தார்? என்ன ஆனது என்பது மீதிக்கதை.
****
கதையில் ஆதிக்க சாதி, தாழ்த்தப்பட்ட சாதி பிரச்சனை வருகிறது. பழைய தமிழ் படங்களில் சாதி பிரச்சனையை தொட தயங்குவார்கள். இதில் சாதிப் பிரச்சனையை எதிர்கொண்டிருப்பார்கள்.
நவநாகரீக பெண் எப்படி கிராமத்தில் வாழ ஒத்துக்கொண்டார் என்பது ஆச்சர்யம். கல்கத்தாவிலேயே செ. ஜானகி கதையை முடித்துவிடுவோம். அதனால் பிரச்சனையில்லை என கதை விவாதத்தில் பேசியிருப்பார்கள் என நினைக்கிறேன். இந்த படத்தில் நடித்ததைப் பார்த்து தான் புதிய பறவையில் செ.ஜானகியை போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். 6 மாத இடைவெளியில் இரு படங்களும் வெளியாகியிருக்கிறது.
எம்ஜிஆருக்கு தம்பி நாகேஷ். நகைச்சுவைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் போட்டிருப்பார்கள் போல!
ஏன் கல்கத்தா வரைக்கும் சென்றார்கள் என தெரியவில்லை. கதைக்கு சென்னையவே காண்பித்திருக்கலாம். புது இடங்கள் காண்பிக்கலாம் என்ற எண்ணத்தில் போயிருப்பார்கள் என நினைக்கிறேன்.
அந்த சின்ன ஊரில் எம்ஜிஆர் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் வேலை செய்வார். பேண்ட், சட்டை கூட பிரச்சனையில்லை. அதில் டையெல்லாம் அணிந்திருப்பார். வித்தியாசமாக தெரியும்.
பிரபல இயக்குனர் ராமண்ணா இயக்கிய சில எம்ஜிஆர் படங்களில் இதுவும் ஒன்று. விஸ்வநாதன் இராமமூர்த்தி இசையில் ஏழு பாடல்களுமே சிறப்பு. கருப்பு வெள்ளை திரைப்படம். பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment