> குருத்து: குடிமகனை தேடிய கதை!

May 3, 2020

குடிமகனை தேடிய கதை!

வக்கீல் அலுவலகம். அன்றைக்கு காலையில் அலுவலகத்தில் அன்றாட வேலைகளை செய்ய துவங்கி இருந்த பொழுது... நண்பனின் உறவுக்கார பெண்மணி அவருடைய அண்ணனுடன் எங்களைத் தேடிவந்தார். அந்த பெண்ணுக்கு வயது முப்பது இருக்கும். ”நேற்றைக்கு முதல்நாள் காலையில் வீட்டை விட்டுப்போன கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்லுக்கு கூப்பிட்டா, போகவும் மாட்டேங்குது! நேற்றைக்கே திரும்பிவிடுவார் என எதிர்பார்த்தேன். வரவில்லை. எனக்கு தெரிந்த எல்லோரிடமும் கேட்டுப்பார்த்துவிட்டேன். யாருக்கும் விவரம் தெரியவில்லை” என எப்பொழுது வேண்டுமென்றாலும் கண்ணீர் வந்துவிடும் அளவில்.. அடக்கிக்கொண்டு பேசினார்.

"இப்ப எங்கே போயி தேடுவது? போலீசில் ஒரு புகார் கொடுத்துவிடலாமா?" அந்த பெண்ணிடமே கேட்டோம்.

"இங்க டாஸ்மாக் கடைக்கு லீவு விட்டுட்டாங்கன்னா அவரும், அவங்க கூட்டாளியும் சேர்ந்து டிரெயின் ஏறி (ஆந்திரா) சூலூர்ப்பேட்டை போயி, முன்னாடி ஒருமுறை குடிச்சாங்கண்ணா! அதே கூட்டாளிக்கு போன் அடிச்சா ரிங் போகுது! ஆனா எடுக்க மாட்டேங்குகிறார்." என்றார். பர பரவென வேலைகளில் இறங்கினோம். அந்த கூட்டாளியின் வீட்டை விசாரித்து கண்டுபிடித்தோம்.

நிறைபோதையில் இருந்தார். எதையும் கேட்டு பதில் சொல்லும் நிலையில் இல்லை. தண்ணீரை முகத்தில் தெளித்தும், வேறு வகைகளில் கேட்டும் பிரயோஜனமில்லை. போதை இறங்கும் வரை, காத்திருக்க வேண்டியது தான். காத்திருந்தோம். பிறகு கொஞ்சம் தெளிந்து, "சூலூர்ப்பேட்டைக்கு போய் குடிச்சோம். திரும்ப டிரெயின்ல நான் ஏறிட்டேன். அவனால ஏறமுடியவில்லை. அடுத்த டிரெயின்ல வந்துருவான்னு நினைச்சேன். இன்னும் வரல்லையா!" என அரைபோதையில் நம்மையே திரும்ப கேட்டார்.
சாதாரணமாக இருந்தால் பரவாயில்லை. ஆந்திரா போய் குடித்துவிட்டு காணாமல் போனால்... விசும்ப ஆரம்பித்தார். அப்போதே மதியம் 12 மணியாகிவிட்டது. சூலூர்பேட்டை போய்த்தான் தேடனும் என்ற முடிவுக்கு வந்தோம்.

நானும் சக வழக்கறிஞரும், ஆந்திரா என்பதால், தெலுங்கு கொஞ்சம் தெரிந்த இன்னொரு வழக்கறிஞர், காணாமல் போனவருடைய மனைவி, அவருடைய அண்ணன், அவரது மனைவி என ஆறு பேரும் திருவெற்றியூர் போய் டிரெயின் ஏறினோம். மொத்தம் 80 கிமீ. டிக்கெட் விலை ரூ.20. டாஸ்மாக் விடுமுறை நாட்களில் இங்கிருந்து டூப்ளிகேட் சரக்கு அடிச்சு சிரமப்படுறதுக்கு அடுத்த மாநிலத்திற்கு போய் சரக்கடிச்சிரலாம் என்ற தொலைதூர சிந்தனை தான் இவ்வளவு தூரம் போகவச்சிருக்கு!

வாழ்க்கையில ஒரு குடிகாரனைத் தேடி இப்படி பயணம் போறோமே என்கிற சிந்தனை வந்தது. "இரண்டு பிள்ளை வைச்சிருக்கேண்ணா!" என அந்த பெண் அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது. குடிகாரன்கள் அப்பனாகவும் இருந்து தொலைக்கிறார்களே! என கோபம் வந்தது.
மதியம் 2.30மணிக்கு ஒரு வழியாக சூலூர்ப்பேட்டை வந்து சேர்ந்தோம். நிலைய அதிகாரியைப் போய் பார்த்து விசயத்தைச் சொன்னோம். தமிழ்நாட்டுல டாஸ்மாக் கடை லீவுன்னா ரயிலேறி கூட்டம் கூட்டமா வந்து குடிக்க வந்துவிடுகிறார்கள். ஒரு ரயில்ல 1000 பேர், 1500 பேரெல்லாம் வருகிறார்கள் என தெலுங்கில் அலுத்துக்கொண்டார்.

பிறகு, கடந்த இரண்டு நாட்களில் இந்த ஏரியாவில் இரண்டு பேர் ரயிலில் அடிப்பட்டு இரண்டு பேர் செத்துப்போயிருக்கிறார்கள். அதில் ஒருவர் அம்பத்தைந்து வயதுகாரர். இன்னொருவருக்கு முப்பதைந்து வயதிருக்கும் என அவர் சொன்னதும், அந்த பெண்மணி அழவே ஆரம்பித்துவிட்டார்.
இறந்ததுமே புகைப்படம் எடுத்து பைலில் வைத்துக்கொள்கிற நடைமுறை ரயில்வேதுறையில் இருந்ததால், அதை உடனே வாங்கி சோதித்தோம். இரண்டு புகைப்படங்களுமே கோரமாய் இருந்தன. முப்பதைந்து வயதுகாரருடைய புகைப்படம், அவர் போட்டிருந்த ஆடைகளும் நாம் தேடிவந்தவருடையதில்லை. நிம்மதி அடைந்தோம்.

பிறகு அங்கிருந்தவர்களிடம் கையில் கொண்டு போயிருந்த புகைப்படம் காட்டி விசாரித்துக்கொண்டிருந்த பொழுது, மாலை ஐந்துமணியாகிவிட்டது. அந்த பெண்ணுக்கு அவருடைய கணவர் செல்லிலிருந்து அழைப்பு வந்தது. வீட்டுக்கு வந்ததாகவும், மனைவியை காணோம் என உடனே அழைத்திருக்கிறார். இந்தம்மா இந்த விவரங்களைத் தெரிவித்ததும், “நான் என்ன சின்ன பிள்ளையா, வீடு வந்துசேர தெரியாது!” என கெத்தாக பேசினார். நேரில் பார்த்திருந்தால், இரண்டு அறைவிடும் அளவிற்கு கோபம் வந்தது. ஆள் கிடைத்துவிட்டார் என்றதும் எல்லோருக்குமே நிம்மதி. உடனே அடுத்த வண்டியை பிடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.

குடிச்சது சரி! அதென்ன ஊர் வந்து சேர இரண்டு நாள் ஏன் ஆச்சு? என பிறகு ஆற அமர விசாரித்த பொழுது, நல்லா தண்ணியடிச்சிட்டு, தெற்கு பக்கம் தமிழ்நாட்டு ரயில்ல ஏறுவதற்கு பதிலா, வடக்கு பக்கம் போகிற ரயில்ல போதையில் ஏறிவிட்டார். போதை தெளிஞ்சு ஊர்ப்பக்கம் வருவதற்கு தாமதமாகி இருக்கிறது.

டாஸ்மாக் இப்படி எத்தனையோ குடும்பங்களின் வாழ்வை தினந்தோறும் சீரழித்து வருகிறது. எவன் குடி கெட்டால் என்ன? யார் தாலி அறுந்தால் என்ன? எங்களுக்கு கல்லாப்பெட்டி நிறைஞ்சா போதும் என்கிற உயர்ந்த சிந்தனை தான் அரசுக்கு இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: