> குருத்து: அடூர் படங்கள்

May 3, 2020

அடூர் படங்கள்



அடூரின் ஒன்பது திரைப்படங்களில் இரண்டைத் (மதிலுகள், விதேயன்) தவிர பிற ஏழு திரைப்படங்களின் கதைக்கருக்களும் அடூருடையவையே.

சமூகச் சட்டங்களுக்கெதிராக வாழ முற்பட்டவர்களைச் சமூகம் எவ்வாறு குற்றவாளிகளாகப் பார்க்கிறது என்பதையும் எந்த ஒரு மனிதனும் சமூகத்தை விட்டு விலகி நின்று விட முடியாது என்பதையும் மையமாக வைத்து உருவானதே ‘சுயம்வரம்’ ஆகும்.

உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே ‘கொடியேற்றம்’ என்னும் திரைப்படம் ஆகும். பொறுப்பில்லாமல் நடந்த ஒரு மனிதன் குடும்ப வாழ்க்கைக்குள் நுழையும் போது அவனுக்குக் கிடைக்கும் வாழ்க்கை அனுபவங்களும், அவனிடம் ஏற்படும் மாற்றங்களுமே இதில் கூறப்பட்டுளன.

அடூரின் படங்களில் முதல் வண்ணப்படம் ‘எலிப்பத்தாயம்’ ஆகும். ஒரு தாயின் பிள்ளைகளான 3 சகோதரிகளையும், ஒரு சகோதரனையும் கொண்ட குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டதே இப்படம்.

வாழ்க்கையில் தோல்வி ஏற்படும் போது மதுக்கோப்பைக்குள் சுயப் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியதே ‘முகாமுகம்’ ஆகும்.

மனப்பிறழ்வு கொண்ட மனிதன், தான் எப்படி இந்நிலைக்கு ஆளானேன் என்பதைப் பிறரிடம் கூறுவதற்கு முயற்சி செய்வதே ‘அனந்தரம்’ ஆகும்.

வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதிலுகள்’ என்ற நாவலே அடூரின் ‘மதிலுகள்’ என்ற திரைப்படம் ஆகும். சிறைச்சாலையின் சுதந்திரமின்மைக் கூட, ஆழமான அன்புடையவர்களுக்குச் சுகமான அனுபவங்களாக மாறும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

சக்கரியாவின் ‘பாஸ்கர பட்டேலரும் எனது வாழ்க்கையும்’ என்ற கதையே அடூரின் ‘விதேயன்’ என்ற திரைப்படம் ஆகும். அதிகாரத்தின் கட்டமைப்பினைப் பற்றியும், அடிமைத்தனத்தைப் பற்றியும் கூறுவதே ‘விதேயன்’ ஆகும்.

அடூரின் 46 ஆண்டுகால சொந்த அனுபவங்கள், பிறரது அனுபவங்கள், அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றில் தன்னைப் பாதித்த நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கிய திரைப்படமே ‘கதாபுருஷன்’ ஆகும்.

கொலை செய்வதற்கு விதிக்கப்பட்ட அதாவது ஒரு தூக்குமரத் தொழிலாளியின் கதையைக் கூறுவதே ‘நிழல்குத்து’ ஆகும்.
நவீன காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஊடகமாகக் கருதப்படும் திரைப்படத்தை உருவாக்கும் ஒரு கலைஞன் மனித மனங்களை வாசித்து அறிந்து கொள்ளும் திறன் பெற்றவராகவும், தன்னையும், சமூகத்தையும் பற்றிய நல்ல புரிதல் உள்ளவராகவும், யதார்த்ததை வெளிப்படுத்தும் திறன் உடையவராகவும் இருத்தல் வேண்டும். இவரது திரைப்படங்கள் அனைத்துமே தனிமனிதன் மற்றும் சமூகத்தின் யதார்த்தங்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

- ப. விமலா ராஜ்

0 பின்னூட்டங்கள்: