> குருத்து: மதிலுகள் (1990) மலையாளம் - அடூர் கோபாலகிருஷ்ணன்

May 3, 2020

மதிலுகள் (1990) மலையாளம் - அடூர் கோபாலகிருஷ்ணன்

கதை. எழுத்தாளர் பஷீர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து எழுதியதால் ராஜ துரோக குற்றச்சாட்டால் இரண்டரை ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைக்குள் வருகிறார். அங்கு அவரைப் போலவே பல கட்சித் தலைவர்களும் உள்ளே இருக்கிறார்கள். சிறை அதிகாரிகளின் உதவியால் தொடர்ந்து எழுதுகிறார்.

ஒரு கட்டத்தில் அரசியல் சிறைவாசிகளுக்கு விடுதலை என செய்தி வருகிறது. எல்லோரும் மகிழ்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் பஷீரூக்கு மட்டும் விடுதலை இல்லை என்கிறார்கள். கடும் ஏமாற்றம் அடைகிறார்.

தனிமை வாட்டுகிறது. ஆண்கள் சிறைக்கு அருகே பெண்கள் சிறையும் இருக்கிறது. ஒரே ஒரு உயரமான சுவர் தான் பிரிக்கிறது. 22 வயது நாராயிணியின் நட்பு கிடைக்கிறது. உயர்ந்த சுவரை சாட்சியாக வைத்து இருவரும் பேசி பேசி காதல் வளர்க்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரும் சிறையில் உள்ள மருத்துவமனையில் சந்திக்கலாம் என முடிவு செய்கிறார்கள். இறுதியில் சந்தித்தார்களா என்பது மீதிக்கதை.

*****
அடூர் எடுத்த 9 படங்களில் இரண்டு படங்கள் தான் பிறருடைய கதைகளை இயக்கியிருக்கிறார். இந்த கதை எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருடையது.


1965ல் எழுதி புகழ்பெற்ற கதையை 1990ல் எடுத்திருக்கிறார். படம் பல விருதுகளை வென்றிருக்கிறது.

படத்தின் பின்னணி அரசியல் கதை போல தோற்றமளித்தாலும், அடிப்படையில் காதல் கதை தான்.

பஷீர் - நாராயணி இடையிலான உரையாடலில் நாராயணியை நாமும் காதலிக்க ஆரம்பித்து விடுகிறோம். நாராயணி குரலில்தான் அப்படி ஒரு காதல். கடைசி வரை நாராயணியை கண்ணில் காண்பிக்கவே இல்லை. அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. அவரவர் கற்பனைக்கு விட்டுவிடலாம்.

ஆங்கில சப்-டைட்டிலுடன் வண்ணத்தில் தெளிவான பிரதி யூடியூபில் இலவசமாக கிடைக்கிறது.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: