> குருத்து: டாக்டர் அம்பேத்கார் பகுத்தறிவு பாடசாலைக்கு அன்பு பரிசாய் புத்தகம் தாருங்கள்!

February 21, 2021

டாக்டர் அம்பேத்கார் பகுத்தறிவு பாடசாலைக்கு அன்பு பரிசாய் புத்தகம் தாருங்கள்!








வியாசைப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது டாக்டர் அம்பேத்கார் பகுத்தறிவு பாடசாலை! அந்த பாடசாலை கடந்து வந்த பாதை என்பது மிகவும் உணர்வுபூர்வமானது.

அந்த பகுதியில் வாழும் இளைஞர்களுக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் தமது தங்கை, தம்பிகளுக்கு ஒரு இலவச பாடசாலை அமைக்கவேண்டும் என்பது சில வருடங்களாக தூங்கவிடாமல் செய்த கனவு!
இளைஞர்களின் உணர்வைப் புரிந்துகொண்ட பகுதியில் வாழும் ஒருவர் தன் மொட்டை மாடியை பாடசாலைக்கு தந்தார். பெண் ஆசிரியர் ஒருவர் இலவசமாய் கல்வி கற்றுத்தர முன்வந்தார். இடம் சிறிது என்பதால், 10, +1, +2 மாணவர்களுக்கு மட்டும் மாலை நேரங்களில் டியூசன் கற்றுத்தரப்பட்டது. மழை வந்தால், வேறு வேறு காரணங்களால், டியூசன் தடைப்பட்டாலும், தொடர்ந்து நடத்தப்பட்டது. சில வருடங்கள் இப்படி சென்றது. அங்கு படித்த மாணவர்கள் எல்லோரும் சிறப்பாக தேர்ச்சி பெற்றது அவர்களது முயற்சிக்கு உற்சாகமாக அமைந்தது.
அந்த மொட்டைப் மாடி இடமோ சிறிது. பகுதியில் பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் இலவச டியூசன் தரவேண்டும் என்பது அவர்களது இலக்கு. ஆகையால், பகுதியில் உள்ள பொது இடத்தில் ஒரு பாடசாலை அமைக்கவேண்டும் என்ற தனது கனவுத் திட்டத்தை செயல்படுத்த நினைத்தார்கள்.
பகுதி மக்களிடம் தங்கள் கனவை சொன்னார்கள். மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் வட்டங்களில் உள்ளவர்களிடம் கோரினார்கள். சமூக அக்கறை கொண்டவர்களிடன் சொன்னார்கள். ”டாக்டர் அம்பேத்கார் பகுத்தறிவு பாடசாலை” என்ற கனவின் நோக்கத்தை மக்கள் புரிந்துகொண்டார்கள். ஒருவர் செங்கல் தந்தார். ஒருவர் சிமெண்ட் தந்தார். பலர் தங்களிடமிருந்து சேமிப்பை முழுவதும் தந்தார்கள். பற்றாக்குறைக்கு பகுதி இளைஞர்கள் கொஞ்சம் கடனை பெற்று கட்ட துவங்கினார்கள். பகுதி இளைஞர்களே மேஸ்திரியாகவும், சித்தாள் வேலைகளையும் செய்தார்கள். அனைவரின் தொடர்முயற்சியில் வியாசை பகுதியில் ஜெகஜீவன்ராம் நகரில் “டாக்டர் அம்பேத்கார் பகுத்தறிவு பாடசாலை” கம்பீரமாய் எழுந்து நின்றது.
பகுதி இளைஞர்கள் ஆசைப்பட்டது போலவே இப்பொழுது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பகுதியில் மாலை நேரங்களில் டியூசன் படிக்கிறார்கள்.
இப்பொழுது அவர்கள் ஒரு சிறு நூலகத்தை உருவாக்க நினைத்து நண்பர்களிடம், சமூக அக்கறை கொண்டவர்களிடம் புத்தகங்களை பரிசாக தாருங்கள் என கேட்டுவருகிறார்கள். கடந்த புத்தக திருவிழாவின் பொழுது, சமூக அக்கறை கொண்ட ஒருவர் ரூ.10000த்துக்கு புத்தகங்கள் வாங்கித்தந்தார்.
நேற்று என்னுடன் வேலை செய்தவர் வீட்டில் ஒரு மேஜை இருக்கிறது. உங்களுக்கு தேவைப்படுமா? என கேட்டார். பாடசாலையைப் பற்றி விளக்கினேன். மகிழ்ச்சியாய் தர ஒப்புக்கொண்டார். எங்கள் வீட்டிலும் ஒரு மேஜை இருந்தது. வீட்டில் இருந்த புத்தகங்களில் படித்த (குழந்தைகளுக்கான, இளைஞர்கள் படிக்க கூடிய) புத்தகங்களை ஒரு பெட்டியில் தேற்றியதில், 50 புத்தகங்கள் வரை தேறியது. வந்து எடுத்துக்கொள்ளுங்கள் என கூறினேன். இரண்டு மணி நேரத்தில் சுறுசுறுப்பாய் வந்து எடுத்துவிட்டு போய், பாடசாலைக்கு கொண்டு சேர்த்துவிட்டார்கள்.
உங்களிடம் கோருவது எல்லாம், நீங்கள் படித்த புத்தகங்களை காமிக்ஸ், இலக்கியம், அரசியல், பண்பாடு, வரலாறு என எந்த புத்தகம் என்றாலும் தாருங்கள். அவர்களுக்கு பயன்படும். இரண்டு புத்தகங்கள் என்றாலும் சரி! இருபது புத்தகங்கள் என்றாலும் சரி! தயங்காமல் தாருங்கள்.
சென்னைக்குள் என்றால் முகவரி தந்தால், பாடசாலையின் பொறுப்பாளர்களே வந்து பெற்றுக்கொள்வார்கள்.
பாடசாலையின் அன்பு கோரிக்கையை உங்கள் முன்வைத்துவிட்டேன். இனி நீங்கள் தான் உதவவேண்டும்.
டாக்டர் அம்பேத்கார் பாடசாலையின் தொடர்புக்கு :
தமிழ்மணி,
வியாசை தோழர்கள்.
8807445857
9789004822
தொடர்பு முகவரி :
(நீங்கள் தூரமாய் இருந்தால், தபாலில் அனுப்புங்கள். அள்ளித் தந்தால், பார்சல் சர்வீசில் அனுப்புனீர்கள் என்றால், போய் எடுத்துக்கொள்வார்கள்)
பி. பிரேம்குமார், BA., LLB.,
எண்:157, 4வது தெரு,
ஜெகஜீவன்ராம் நகர்,
வியாசர்பாடி, சென்னை – 39.

0 பின்னூட்டங்கள்: