> குருத்து: ரப்பர் வளையல்கள் – சிறுகதை தொகுப்பு - சிவஷங்கர் ஜெகதீசன்

February 21, 2021

ரப்பர் வளையல்கள் – சிறுகதை தொகுப்பு - சிவஷங்கர் ஜெகதீசன்


முகநூலில் நண்பராக இருக்கும் ( Sivashankar Jagadeesan) சிவசங்கர் ஜெகதீசன் தான் எழுதிய புத்தகத்தை தபாலில் அனுப்பிவைத்தார். தொகுப்பில் 19 கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பிரிவை சார்ந்தவைகளாக இருக்கின்றன. இதில் ஒரு சரித்திர கதையும் உண்டு. எதிர்காலத்தில் நடக்கிற கதை கூட உண்டு. இன்னும் கூட நிறைய கதைகள் கைவசம் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.

புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும், சமீபத்தில் பிக்பாஸில் கமல் ’ரப்பர் வளையல்களை’ கண்டுப்பிடித்ததே கூட்டுக்குடும்பத்தில் உள்ள சூழ்நிலை தான் என சொன்ன பொழுது ஈர்த்தது.

கடந்த சில மாதங்களாக கொரானா தொற்றை முன்வைத்து திடீரென அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பலர் வேலை இழந்தார்கள். தொழில்கள் முடங்கின. பொருளாதார சிக்கலில் பலரும் மன உளைச்சலில் சிக்கிக்கொண்டார்கள். இன்னொரு பக்கம் பொருளாதார ரீதியில் கொஞ்சம் சமாளிக்க முடிந்தவர்கள் நிறைய படித்தார்கள். நிறைய விதவிதமாய் சமைத்தார்கள். யூடியூப்பில் சானல் ஆரம்பித்தார்கள்.

இதில் இந்த ஊரடங்கில் சிவசங்கர் ஜெகதீசன் சிறுகதை எழுத்தாளராகியிருக்கிறார். வெற்றிகரமாக புத்தகமாகவும் கொண்டு வந்திருக்கிறார். முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ’ரப்பர் வளையல்கள்’ கதையிலும், ’மாற்றுக்கொலை’ கதைகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் அவர் நிற்பதில் சந்தோசம்.

தனக்கு ஒன்று மனதில் பட்டதும், உடனே கதையாக மாற்றியிருக்கிறார். உள்ளடக்கத்தை தேர்வு செய்வதில் இன்னும் மெனக்கெடல் வேண்டும்.

அதே போல தரவுகள் நம்பகத்தன்மையுடன் இருக்கவேண்டும். முதல் கதையில் மெக்கானிக் அன்புக்கு வங்கி ஆறு லட்சம் கடன் தந்திருப்பதாக சொல்கிறார். பொதுவாக வங்கிகளை எல்லாம் எளியவர்கள் அணுக முடிவதேயில்லை. அப்படியே விதிவிலக்காய் தந்தாலும் ஆறு லட்சம் தர வாய்ப்பேயில்லை. தொழில்துறையில் சேவைத்துறையில் தான் நானும் இருக்கிறேன்.

ஆகையால், கதையின் உள்ளடக்கம்; தரவுகள்; வடிவம் என எல்லாவற்றிலும் மெனக்கெடவேண்டும்.

இருபது வயதில் என்னைவிட என் நண்பர்கள் இருவர் நன்றாக கவிதை எழுதுவார்கள். ஆனால் தொடர்ச்சியாய் அவர்கள் எழுதுவதில்லை. அந்த கோபத்தில் அவர்களை பழிவாங்க நான் எழுத துவங்கினேன். நாலு பேருக்கு படிக்க கொடுத்தேன். முகத்தில் அடித்தாற் போல எதுவும் சொல்லாமல், கொஞ்சம் பாராட்டும், கொஞ்சம் விமர்சனமும் செய்தார்கள். அந்த பாராட்டை வரவில் வைத்துக்கொண்டு, விமர்சனத்தை கவனமாய் எடுத்துக்கொண்டேன். நிறைய படித்தேன். தொடர்ந்து எழுதினேன். சில காலம் கழித்து, நான் மதிக்கும் ஒரு அண்ணன் ’கவிஞரே’ என அழைத்த பொழுது, உழைப்புக்கு கொடுத்த அங்கீகாரமாய் எடுத்துக்கொண்டேன். ( இப்பொழுது கவிதை எல்லாம் எழுதுவது இல்லை!)

சிவஷங்கர் ஜெகதீசனுக்கும் என் அனுபவத்தை தான் பகிர்ந்துகொள்கிறேன். இன்று காலையில் பானு இக்பால் எழுதிய ’ஜீரோ டாலரன்ஸ்” நாவல் வெளியிட்டு விழாவில் பேசிய கவிஞர் மனுஷ்யப்புத்திரன் பேசிய உரை தான் நினைவுக்கு வருகிறது. இளம் படைப்பாளிகள் கவனத்துடன் எடுத்துக்கொள்ளவேண்டிய உரை. சுட்டியை கீழே இணைத்து இருக்கிறேன். ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.

மீண்டும் ஒருமுறை சிவஷங்கர் ஜெகதீசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை வியாசை பகுதியில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கார் பகுத்தறிவு பாடசாலையில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுத்தருகிறார்கள். அங்கே மாணவர்கள், இளைஞர்கள் படிப்பதற்கு நூலகம் ஒன்றை உருவாக்கும் ஆரோக்கியமான முயற்சியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சிவஷங்கர் ஜெகதீசன் புத்தகத்தை அன்பளிப்பாக தர இருக்கிறேன். இளையவர்களுக்கு பயன்படும்.

0 பின்னூட்டங்கள்: