> குருத்து: Kothanodi (The River of Fables) - (2015) Assamese

February 18, 2021

Kothanodi (The River of Fables) - (2015) Assamese






கதை. நான்கு நாட்டுப்புற கதைகள்.

வெளியூர் சென்று வியாபாரம் செய்யும் வியாபாரி தனது இளம் வயது பெண்ணை அவள் சித்தியின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கிளம்புகிறார். தன்னை இராணி போல வைத்துக்கொள்வான் என நம்பி வாய்க்கப்பட்டவள் இப்பொழுது தன் பிள்ளைக்கு காவலுக்கு இருக்க வைத்துவிட்டானே என்ற வெறுப்பில், அந்த பெண்ணை கொடுமைப்படுத்த துவங்குகிறாள். இறுதியில் என்ன ஆனது?

வசதிப் படைத்த நிலச்சுவான்தாரர்க்கு இரண்டாவது மனைவி அவள். மலைபாம்பை திருமணம் செய்து வைத்தால், அதிர்ஷ்டம் கொட்டும் என நம்பிக்கையில், தன் மகளுக்கு மலைபாம்புடன் திருமணம் செய்து வைத்து, ’முதலிரவு’ அறைக்குள் கூண்டில் இருந்த அந்த பெரிய மலைபாம்பை திறந்துவிட்டு, அந்த சின்ன பொண்ணையும் அனுப்பிவைக்கிறாள். இறுதியில் என்ன ஆனது?

நெசவு தொழிலாளி அவள். அவளுக்கு குழந்தை இல்லை என வீட்டை விட்டு வெளியே போ! என கணவன் சொல்கிறான். தனியே ஒரு வீடெடுத்து நெசவு செய்து தன்மானத்துடன் பிழைத்து வருகிறாள். அங்கு எங்கு சென்றாலும், அவள் பின்னாலேயே ஒரு காய் (Outenga – Elephant Apple) உருண்டு வந்துகொண்டே இருக்கிறது. எல்லோருமே அதை ஆச்சரியமாய் பார்க்கிறாரகள். அதன் பின் உள்ள மர்மம் என்ன?

மீன் பிடித்து வியாபாரம் செய்யும் அந்த தம்பதிக்கு அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுதும் “உயிரோடு புதைத்துவிடு!” என அவனுடைய மாமா சொல்கிறார். அவனும் தன் மனைவியை ஏற்கவைத்து, புதைத்துவிடுகிறான். நாலாவது குழந்தை பிறக்கும் பொழுது, தன் குழந்தையை தர உறுதியாய் மறுத்துவிடுகிறாள். அதன் பின் என்ன ஆனது?

***

ஒரு வலைப்பூக்காரர் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பார். கற்பனை வறட்சியில் பேய் படம் எடுத்து மக்களைக் கடுப்பேத்தறதை காட்டிலும், நாட்டுப்புற அமானுஷ்ய கதைகளை எடுத்தால், மண்ணின் மணத்தோடு இருக்கும். நன்றாக கல்லாவும் கட்டும். ஜப்பானில் இப்படி படம் எடுத்து நிறைய வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பார். இந்தப் படம் அவருடைய கருத்தை உறுதி செய்கிறது.

இந்தப் படம் பொதுநிதியில் (Crowd Funding) படம் எடுத்தது கூடுதல் சிறப்பு. படம் வெற்றியும் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். நமக்கு தெரிஞ்ச முகம் சீமா பிஸ்வாஸ் இருக்கிறார். அந்த வியாபாரி முகம் பரிச்சயமான முகமாக இருக்கிறது. படத்திற்கு மாநில விருது, தேசிய விருது என இன்னும் சில விருதுகளை வென்றிருக்கிறது.

பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

0 பின்னூட்டங்கள்: