> குருத்து: திருடன் மணியன் பிள்ளை (2013)

February 2, 2021

திருடன் மணியன் பிள்ளை (2013)


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புத்தக சந்தையில் சுத்தி சுத்தி புத்தகங்களை வாங்கி, கால் கடுக்கும் வேளையில் காலச்சுவடு அரங்கில் இந்த புத்தகத்தை பார்த்தேன். கையில் உள்ள பணம் குறைவாக இருந்ததால், பிறகு வாங்கிக்கொள்ளலாம் என கடந்துவந்துவிட்டேன். 

ஆனால், அவ்வப்பொழுது முகநூலில் கண்ணில்பட்டுக்கொண்டும் இருந்தது. மற்ற துறை சார்ந்த மக்களின் அனுபவங்களை நாம் படித்திருக்கிறோம். சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு திருடனுடைய அனுபவங்கள் என்பது நாம் அறிந்திராத வாழ்க்கை. ஆகையால் இந்த புத்தகம் படிக்கவேண்டும் என்ற உந்துதல் இருந்தது.


ஊரடங்கு காலத்தில் இந்தப் புத்தகத்தை படிக்க துவங்கினேன். படிக்க, படிக்க இவ்வளவு காலம் படிக்காமல் இருந்ததற்காக மிகவும் வருத்தப்பட்டேன். அருமையான புத்தகம். ஒரு திருடனுடைய அனுபவம் என்பதாக இல்லாமல், மணியனே ஓரிடத்தில் சொல்வது போல “இது ஊரின் கதை”யாக இருக்கிறது.

மணியனின் முதல் திருட்டு, சொந்தங்களின் துரோகம், பல்வேறு திருட்டு அனுபவங்கள், சிறை வாழ்க்கையில் உள்ள துயரங்கள், போலீஸின் அணுகுமுறை, அராஜகம், மக்களின் மனநிலை, சக திருடர்களின் அணுகுமுறை, வாழ்க்கை என இன்னும் பல அம்சங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. புத்தககங்களில் சில முக்கிய இடங்களை குறித்துக்கொள்ளும் வழக்கம் உண்டு. இந்த புத்தகத்தில் அப்படி குறித்துக்கொண்டவை மிக அதிகம். சில பதிவுகளை அவ்வப்பொழுது எனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளேன்.

எப்பொழுதும் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தி எழுதுவதில் தயக்கம் இருந்ததில்லை. இந்த புத்தகத்தை போன வாரமே படித்து முடித்துவிட்டேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால், மிக நீண்டு சென்றுவிடும் அல்லது பாதியிலேயே நிறுத்திவிடுவோம் என்ற பயத்திலேயே எழுதாமல் இழுத்துக்கொண்டே வந்தேன். ஏனென்றால் புத்தகத்தில் மணியன் பேசியவை நிறைய. ஆகையால், புத்தகத்தின் அளவைப் பார்த்து யாரும் தயங்கவேண்டாம்.

மணியனின் அனுபவங்களை, உள்வாங்கிக்கொண்டு எழுத்தில் அருமையாக கொண்டுவந்துள்ளார் மலையாள மனோராமாவில் பணிபுரியும் ஜி.ஆர். இந்துகோபன். மலையாள மனோராமா இதழில் “தஸ்கரன் மணியன் பிள்ளயுடெ ஆத்மகத” என்ற தலைப்பில் 88 அத்தியாயங்களில் தொடர்ச்சியாக வெளிவந்து, பலதரப்பட்ட மக்களை போய்சேர்ந்திருக்கிறது.

புத்தகத்தின் தரம் குறையாமல், குளச்சல் மு. யூசுப் மொழிப்பெயர்ப்பு என்ற உணர்வு வராத அளவிற்கு தமிழிற்கு தந்துள்ளார். சில மலையாள வார்த்தைகளால் மட்டும் தான் இது கேரள களம் என்பதையே நாம் உணர்கிறோம்.

புத்தகம் படித்த உடனே எழுத்தாளர்களிடம் பேசவேண்டும் என தோன்றியது இல்லை. என்னுடைய இயல்பும் ஒரு காரணம். ஆனால், மணியனிடம் பேசவேண்டும் என நினைத்தேன். நாகர்கோவிலில் உள்ள காலச்சுவடு அலுவலகத்தை தொடர்புகொண்டதில், அவர்கள் மணியனிடம் தொடர்பு கொள்ள முயற்சி செய்து முடியவில்லை. ”வழக்குகளில் சிக்குண்டு மணியன் இப்பொழுது சிறையில் இருக்கிறார். ஆகையால் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை” என சொன்னதும் மிகவும் வருத்தமாக இருந்தது.

1950யில் பிறந்த மணியன், 1995 –யிலேயே உடலும் தளர்ந்துவிட்டது. உள்ளமும் தளர்ந்துவிட்டது. ஆகையால் திருடுவதை விட்டுவிட்டதாகவும், இப்பொழுது தன் மகனின் பராமரிப்பில் இருப்பதாகவும் எழுதியிருப்பார். ஆனால், இன்னமும் புதிய வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார். திருந்தி வாழ போலீஸ் விடுவதேயில்லை.

கவிஞர் சாம்ராஜ் மணியனுடைய வாழ்வை திரைப்படம் ஆக்குவதற்கான முயற்சிகளில் இருப்பதாக கேள்விப்பட்டேன். மணியனின் வாழ்வில் காதல், சாகசம், சண்டை, பல திருப்பங்கள், நகைச்சுவை என எல்லா சுவையும் உண்டு. ஒருவேளை படமாக்கப்பட்டு வெளிவந்தால், பரவலாக மக்களிடம் சென்றடைவார். முயற்சி வெற்றியடைய வாழ்த்துவோம்.

தமிழில் வெளியான புத்தகம் சரியாக விற்கவில்லை என மணியனுக்கு வருத்தமுண்டு. அருமையான புத்தகம். ஆகையால், தமிழ் வாசகர்கள் பலரும் வாங்கிப் படிக்கவேண்டும். அவருடைய மனக்குறையை தீர்க்கவேண்டும்.

- முகநூலில்... 26/11/2020

0 பின்னூட்டங்கள்: