ஒருநாள் நம் வீட்டு கழிவறை அடைத்துக்கொண்டால், வீடே நாறி திணறிப்போய்விடுகிறோம். நமது பகுதிகளில் இரண்டு நாட்கள் குப்பைகளை அகற்றாவிட்டால், பாதாள சாக்கடை அடைத்துவிட்டால், அந்த பகுதியே நாசமாகிவிடுகிறது. அந்த பகுதியை கடப்பதற்குள் நரக வேதனையாகிவிடுகிறது.
ஆனால், அந்த கழிவுகளையும், குப்பைகளையும் நாள் முழுவதும் கையாளும் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கையை நாம் பல சமயங்களில் நினைத்துப் பார்க்க தவறுகிறோம்.
“கக்கூஸ்” ஆவணப்படத்தில், மதுரையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்யும் அந்த இளம் தாய், “என் மேலே நாத்தமடிக்குதுன்னு.. என் குட்டி பையன் என் பக்கத்துல வரமாட்டேன்னு தினம் சொல்றான்” என கண் கலங்கி சொல்கிற காட்சி ஆண்டுகள் கடந்தும் இன்னும் மனதைவிட்டு அகல மறுக்கிறது.
ஊரையை சுத்தமாக வைத்திருக்க கூடிய அவர்களின் சமூக மதிப்பும் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே தான் வைத்திருக்கிறோம்.
எங்கள் பகுதியில் குப்பை சேகரிக்கிற தூய்மை பணியாளர் ஒரு விசேசத்தில் தனது சொந்தங்களூக்கு சந்தோசமாய் சாப்பாடு பரிமாறிய பொழுது, ஓடி வந்து, அவரை அங்கிருந்து “நைசாக” நகர்த்தி கூட்டிப் போய்விட்டார்கள்.
இப்படி ஊரையே சுத்தமாக வைத்திருப்பதற்கு தூய்மை பணியாளர்களுக்கு தண்டனையாக வருடத்திற்கு சில பேரை அரசு பலிகொடுக்கிறது. இது என்ன நியாயம்?
பல துறைகளில் “தலை நிமிரும் தமிழகம்” என ஊடகங்களில் அரசு விளம்பரம் செய்து பெருமை கொள்கிறது. தூய்மை பணியாளர்களின் விசயத்தில் எப்பொழுதும் “தலை குனியும் தமிழகம்” தான்!
இதை கண்டும் கேட்டும் ’நாகரிக’ சமூகமான நாமும் தலை குனிந்து செல்வது சரியா?
0 பின்னூட்டங்கள்:
Post a Comment