> குருத்து: பிசினஸ் சைக்காலஜி – சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

February 21, 2021

பிசினஸ் சைக்காலஜி – சதீஷ் கிருஷ்ணமூர்த்தி


கடைகளில், இசையை பயன்படுத்துகிறோம். வாடிக்கையாளர்களை நெடுநேரம் இருக்கவைக்கவேண்டுமா? வந்ததும் ஓட வைக்கவேண்டுமா? அதற்கான இசையை நாம் தேர்ந்தெடுத்தால் போதும்!

நமது வாடிக்கையாளர்களை பொருளை/சேவையை வாங்கினால் போதும்! நாம் நாலு காசு பார்த்தால் போதும்! என நினைக்காமல், அவர்களை தொடர்ந்து பயன்படுத்த வைப்பதின் மூலம் தான் தொடர்ந்து லாபம் பார்க்கமுடியும்.
வர்ணங்களும், வாசனையும் எப்பொழுதும் ஈர்ப்பானவை. இரண்டையும் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் ஐம்புலன்களையும் ஈர்ப்பது எப்படி? உதாரணம் : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
பற்றாக்குறை கோட்பாடு – குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ஒரு பொருளை வெளியிட்டு, எப்படி வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டு, பொருளை விற்றுத்தீர்ப்பது!
நிறுவனங்களில் எல்லா நிலைகளிலும் உள்ள ஊழியர்கள் மேலே என்ன சொல்கிறார்களோ, ”நமக்கென்னப்பா! அவங்க சொன்னதை அப்படியே கேட்போம்” என அதை அப்படியே கேட்டு நடக்கிறார்கள். விளைவு நிறுவனத்திற்கு தான் இழப்பு ஏற்படுகிறது. இந்த அணுகுமுறைக்கு பதிலாக, “நிர்வாகம் இப்படி யோசிக்கிறது! உங்கள் ஆலோசனைகளையும் மனந்திறந்து சொல்லுங்கள்” என்றால், ஆலோசனைகளையும் சொல்கிறார்கள். எடுக்கப்படும் முடிவுகளை ஆர்வத்துடனும் செயல்படுத்துகிறார்கள்.
இப்படி 20 தலைப்புகளில் பல சந்தை ஆய்வு (Market Psychology) குறித்த தகவல்களுடனும், நகைச்சுவையாகவும் பல எளிய உதாரணங்களுடனும் எழுதியிருக்கிறார். தொழில் செய்பவர்களுக்கு பயன்படக்கூடிய நல்ல புத்தகம்.
****
புத்தத்தின் தலைப்புக்கு கீழே “போட்டியாளர்களை முறியடித்து, வாடிக்கையாளர்களைப் பெற்றுத்தரும் பார்முலாக்களை உள்ளடக்கிய வெற்றிப் புத்தகம்” என போட்டிருக்கிறார்.
எளியவனை வலியவன் அமுக்குவது தான் முதலாளித்துவ கோட்பாடாக இருக்கிறது. அதனால் தான் “போட்டியாளர்களை முறியடித்து” என்ற சொற்பதத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
நாம் எல்லோரும் அறிந்த நடைமுறை. இந்தியாவில் இப்பொழுது சந்தைப்படுத்துவதில் உள்ள முதன்மையான நடைமுறை. அரசாங்க ஆட்களை கைக்குள் போட்டுக்கொண்டு, மறைமுகமாக எல்லாம் இல்லை. வெளிப்படையாகவே தங்கள் தொழிலை சந்தைப்படுத்துவது! போட்டியாக இருக்ககூடிய நிறுவனங்களை அரசப் படைகளையே அடியாட்களாக வைத்து காலி செய்வது!
****
ஆசிரியர் அமெரிக்காவில் முதுகலை நிர்வாக படிப்பு முடித்திருக்கிறார். பிரபல நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். இப்பொழுது பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறார்.
***
புத்தகத்தில் எனக்கு உள்ள குறை. புத்தகம் தமிழில் இருந்தாலும், ஆங்கிலத்திற்கு நடு நடுவே தான், தமிழ் வருகிறது. நிறைய வாசிப்பு இல்லாமல், இந்த புத்தகத்தை எளிமையாக புரியும்படி எழுதுவது சாத்தியமில்லை. ஆனால், இப்படி எழுதினால் தான் வாசகர்களை எளிதாக சென்றடைய முடியும் என நினைத்து தமிங்கிலீசில் எழுதியிருக்கிறார். ஆசிரியர் இந்த நடையை தேர்ந்தெடுத்ததால், அவர் சொல்ல வருகிற எதுவும் மனதில் அழுத்தமாய் பதிய மறுக்கிறது. ஆகையால், ஆசிரியர் அடுத்த புத்தகத்தை எளிய தமிழில் எழுதவேண்டும் என கோருகிறேன்.
பக்கங்கள் : 117
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ. 135
இணையத்தில் தேடினால், கொஞ்சம் விலை குறைவாகவே கிடைக்கிறது. படியுங்கள்.
#2021/1

0 பின்னூட்டங்கள்: