> குருத்து: நமது பலம், மக்களோடு கலந்திருப்பதே! தோழர் ஸ்டாலின்

February 18, 2021

நமது பலம், மக்களோடு கலந்திருப்பதே! தோழர் ஸ்டாலின்

 


"எவ்வளவு காலம் பரந்த, பெரும் திரளான மக்களுடன் தொடர்புகளை வைத்திருக்கிறோமா, அவ்வளவு காலமும் நாம் வெல்லற்கரியவர்களாக இருப்போம்."

****
கிரேக்கப் புராணத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு கதாநாயகனாக அண்டாயெஸ் இருந்தான். அந்தப் பழங்கதை இவ்வாறு செல்கிறது: அண்டாயெஸ் கடல்களின் கடவுளான போஸெய்டன் மற்றும் பூமியின் தேவதையான கயீயாவின் மகன். அண்டாயெஸ் தன்னைப் பெற்றெடுத்த, பாலூட்டிய, வளர்த்தெடுத்த தனது தாயிடம் குறிப்பிடத்தக்க வகையில் இணைந்திருந்தவன். இந்த அண்டாயெஸ் வென்றடக்காத நாயகன் எவனும் இல்லை. அவன் வெல்லப்பட முடியாத நாயகனாகக் கருதப்பட்டான். அவனது வலிமை எங்கு படிந்திருந்தது? தனது பகைவனுக்கு எதிரான சண்டையில் ஒவ்வொரு முறையும் அவன் கடுமையாக அழுத்தப்படும்போது அவன், பூமியை, தன்னைப் பெற்றெடுத்துப் பாலூட்டிய தாயைத் தொட்டான். அது அவனுக்குப் புதிய சக்தியை அளித்தது.

ஆனால் அவனிடம் காயம்படத்தக்க ஒரு குறிப்பிட்ட இடம் இருந்தது. ஏதோ ஒரு வகையில் பூமியிலிருந்து பிரிக்கப்பட்டுவிடக் கூடிய ஆபத்து இருந்தது. அவனது பகைவர்கள் இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் ஒரு பகைவன் இந்த பலவீனமான குறிப்பிட்ட இடத்தை அனுகூலமாக எடுத்துக் கொண்டு தோன்றினான், அண்டாயெஸ்ஸை வென்றடக்கினான். அவன்தான் ஹெர்குலஸ். எவ்வாறு ஹெர்குலஸ் அண்டாயெஸ்ஸை வென்றடக்கினான்? ஹெர்குலஸ் அண்டா யெஸ்ஸை பூமிக்கு மேலே தூக்கினான். அவனை தற்காலிகமாக பூமியிலிருந்து நீக்கினான், அவன் பூமியைத்தொடுவதிலிருந்து தடுத்தான், அவனைக் குரல்வளையை நெரித்துக் கொன்றான்.

போல்ஷ்விக்குகள் கிரேக்கப் புராணக்கதையின் கதாநாயகன் அண்டாயெஸ் -ஐ நினைவுபடுத்துகிறார்கள் என்று நான் கருதுகிறேன். அவர்கள் அண்டாயெஸ் -ஐப் போலவே வலிமை மிக்கவர்கள். ஏனென்றால் தங்களைப் பெற்றெடுத்த, தங்களுக்குப் பாலூட்டிய, தங்களை வளர்த்தெடுத்த தாயுடன், அதாவது பெரும்திரளான மக்களுடன் தங்கள் தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு காலம் தங்கள் தாயுடன் – அதாவது மக்களுடன் தொடர்புகளை அவர்கள் கொண்டிருக்கிறார்களோ அவ்வளவு காலமும் தாங்கள் வெல்லற்கரியவர்களாக விளங்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் பெற்றுள்ளார்கள்.

- இன்று தோழர் ஸ்டாலின் பிறந்தநாள் (18/12/1978)

முகநூலில் இருந்து.... (18/12/2020)

0 பின்னூட்டங்கள்: