> குருத்து: இருதுருவம் (2019) பார்க்க கூடிய திரில்லர்

February 18, 2021

இருதுருவம் (2019) பார்க்க கூடிய திரில்லர்


முதல் வலைத்தொடர் (Web series)

9 அத்தியாயங்கள் (Episodes)

கதை. நாயகன் ஒரு போலீஸ் ஆய்வாளர். தனது குட்டிப்பெண்ணுடன் வாழ்ந்துவருகிறார். அவருடைய துணைவியார் திடீரென ஆறு மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விடுகிறார். போலீஸ் இந்த வழக்கை விரைவுப்படுத்தாமல், கிடப்பில் போட்டுவிட்டதால், கடுப்பில் சில மாதங்களாக விடுப்பு எடுத்துக்கொண்டு ஸ்டிரைக் செய்கிறார்.

இதற்கிடையில், ஒரு பெண்ணை சேரில் கட்டிபோட்டு வாயை கிழித்து கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். “உன்னால மட்டும் தான் இந்த கொலையாளியை கண்டுபிடிக்க முடியும். வேலைக்கு வாங்க!” என மிகையாக ஏதும் சொல்லாமல், ”துறையில் ஆள் பற்றாக்குறையாக இருக்கிறது. உன் துணைவியார் காணாமல் போன வழக்கை விரைவுப்படுத்த பேசுகிறேன். இந்த கொலை வழக்கை விசாரி” என பேசுகிறார் உயரதிகாரி. “பொண்டாட்டியை இவனே கொன்னுட்டு சீனை போடுறான்” என சக போலீசுகாரர்களே அவனுக்கு பின்னால் சிலர் பேசுகிறார்கள்.

ஏற்றுக்கொண்டு துப்புத்துலக்க ஆரம்பிக்கிறான். கொலை செய்த இடத்தில் ஒரு கைப்பட எழுதி வைத்த திருக்குறள் ஒன்று கிடைக்கிறது. இதை விசாரித்துக்கொண்டு இருக்கும் பொழுதே, இதே போல இன்னொரு கொலையும், திருக்குறளும் கிடைக்கிறது. இந்த முறை கண்களை மோசமாக சிதைத்து இருக்கிறான்.

நாயகன் மெல்ல மெல்ல முன்னேறுகிறான். அடுத்தடுத்து கொலைகள் என்பதால் மேலிருந்து வரும் அழுத்தத்தால், வழக்கை அவனிடமிருந்து வேறு ஒருவருக்கு கைமாற்ற உத்தரவிடுகிறார்கள்.

இறுதியில் கொலையாளியை பிடித்தார்களா என்பதை சீரிஸ் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

******

நாயகனாக நந்தா. பொண்டாட்டி காணாமல் போனதால், தொடர் முழுவதுமே இறுக்கமான முகத்துடனே வருகிறார். நாயகனின் நினைவலைகளில் அவ்வப்பொழுது பிக்பாஸ் அபிராமி தலை காட்டுகிறார். அவருக்கு உதவியாக இருக்கும் துணை ஆய்வாளர் கலகலப்புக்கும், வழக்கை விசாரிக்கவும் உதவுகிறார்.

தொடர் கொலைகள். விசாரணை என்பது வழக்கமானது தான் என்றாலும், விசாரணையை எதார்த்தமாகவும், தொடர் கொலையாளியை கொஞ்சம் புத்திசாலியாகவும் காட்டியிருப்பதால், எலியும், பூனையும் விளையாட்டு கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது.

திருக்குறள் ஒரு ஆளை செம்மைப்படுத்தும். ஆனால், கொலையாளி திருக்குறளை பயன்படுத்துகிறான். முரண் தான்.

அதே போல வெப் சீரிஸ் என்பதால், சென்சார் இல்லாமல் இருக்கிறது. சென்சார் தேவை. ஆனால், ஆட்சியாளர்கள் அரசியல் காரணங்களுக்காக சென்சாரை விரைவில் கொண்டு வர இருக்கிறார்கள். அப்படி கொண்டுவந்தால், ஆளும் ஆட்சியாளர்களின் கொள்கைகளை விமர்சிக்கும் சீரிஸ்கள் இனி வருமா என்பது சந்தேகம் தான். பார்க்கலாம்.

ஒவ்வொரு அத்தியாயமும் 30 நிமிடங்களுக்குள் இருக்கிறது. இரண்டாவது தொடருக்கான ஏற்பாடுகளையும் இறுதியில் வைத்திருக்கிறார்கள். இந்த தொடர் வெற்றி பெற்றிருப்பதால், இரண்டாவது தொடர் வருவதற்கு நிறையை வாய்ப்பிருக்கிறது. பார்க்க கூடிய தொடர். பாருங்கள். SonyLivல் இருக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: