> குருத்து: ஸ்டார்ட்-அப் சண்டை பழகலாம் வாங்க! – ஒரு அனுபவம்

February 18, 2021

ஸ்டார்ட்-அப் சண்டை பழகலாம் வாங்க! – ஒரு அனுபவம்


Karthikeyan Fastura - ஐ சில மாதங்களாக அவரை முகநூலில் தொடர்ந்து பின்தொடர்ந்து வருகிறேன். சிலருக்கு எழுத வரும். சிலருக்கு பேசவரும். சிலருக்கு தொழில்வரும். கார்த்திகேயனுக்கு மூன்றும் வருகிறது. பகுத்தறிவாளராக இருப்பதால், யதார்த்தமாகவும் இருக்கிறார். அவர் ”ஸ்டார்ட்-அப் சண்டை பழகலாம் வாங்க!” என அழைத்தார்.


எனக்கு தொழில் - தொழில் செய்பவர்களுக்கு சேவை தருவது. ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ, வருமான வரி தொடர்பாக வரி ஆலோசனைகளும், மாதம் மாதம் ரிட்டன் பைல் செய்வது போன்ற பணிகளை செய்துவருகிறேன். தொழில் செய்பவர்களுடன் தான் தொடர்ந்து பயணிக்கிறேன். தொழில்முனைவோர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன, என்னென்ன சங்கடங்களை எதிர்கொள்கிறார்கள் என கார்த்திகேயன் விளக்குகிறேன் என சொன்ன பொழுது, கலந்துகொள்ளலாம் என முடிவெடுத்தேன்.

முதல் சவால். மார்கழி மாத பனிக் காலத்தில் காலை 6 மணியிலிருந்து 7 வரை வகுப்பு என்றார். ஊரடங்குக்கு முன்புவரை காலை 5 மணிக்கு எழுந்து 5.30 முதல் 6.30 யோகா வகுப்புக்கு சில வருடங்களாக சென்றுகொண்டிருந்தவன் தான். ஊரடங்கில் வீட்டில் முடக்கப்பட்ட வாழ்க்கை - தூங்குகிற நேரம், எழுகிற நேரம் எல்லாத்தையும் மாற்றிப்போட்டுவிட்டது. கார்த்திகேயனை வைத்து திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பலாம் என நினைத்தேன். முதல் நாள் வகுப்புக்கு முதல் நாள் காலையில் வகுப்பு என்பதை மறந்து, ஒரு அசாமிய படம் பார்த்துவிட்டு தூங்கும் பொழுது இரவு 2 மணி. இருப்பினும் விடக்கூடாது என மல்லுக்கட்டி எழுந்துவிட்டேன். மற்ற நாட்கள் சிரமம் இல்லாமல் எழுந்துவிட்டேன்.

கார்த்திகேயன் ஒரு பொறியியல் பட்டதாரி. சாப்ட்வேர் பொறியாளராக சில வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். பிறகு ஒரு தொழில்முனைவராக துவங்கி, உருண்டு, பிரண்டு ஓடி, காயங்களோடு நிறைய பாடம் கற்றிருக்கிறார். நிறைய படித்திருக்கிறார். தேடித்தேடி தொழில் குறித்த விசயங்களை கற்றிருக்கிறார். பிறகு தொழில்முனைவராக முன்னேறியிருக்கிறார்.

தான் கற்ற அனுபவங்களோடு ஒரு தொழில்முனைவோர் துவக்க நிலையில் என்ன செய்யவேண்டும்? முதலீட்டுக்கான வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன? தொழிலை பதிவு செய்வது எப்படி? அதில் தவிர்க்கவேண்டியவை என்ன? துவக்க காலத்தில் எதில் கவனம் செலுத்தவேண்டும்? தன் தொழிலை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது? அதை எப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவது என பல்வேறு தலைப்புகளில் ஏழு நாட்களும் தரவுகளோடும், பவர் பாயிண்ட் ஸ்லைடுகளுடனும் சொல்லி முடித்தார்.

என்னுடன் ஜூம் வழியாக ஏழு நாட்களும் பயணித்த சக நண்பர்களில் சிலர் தொழில் துவங்காத நிலையில் சிலர் இருந்தார்கள். சிலர் தொழில் துவங்கி கையை சுட்டுக்கொண்டவர்களாக இருந்தார்கள். இரண்டு பெண்கள் இருந்தார்கள். பலரும் இந்த ஏழு நாட்கள் பயணம் தங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருந்ததாக சொன்னார்கள்.

சேவை தொழில் செய்துவருகிற என்னை, பல விசயங்கள் கவர்ந்தாலும், அதிகம் ஈர்த்த விசயம். தொழிலை குறைவான செலவில் எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்பதும், தொழில்நுட்பம் பல உருவாக்கியுள்ள அளவில்லா வாய்ப்புகளும் தான்!

சின்ன சின்ன ஆலோசனைகள் சொன்னால், வரவேற்கிறார். எங்க ஊர்க்காரராக இருக்கிறார். 🙂
”ஸ்டார்ட்-அப் சண்டை பழகலாம் வாங்க!” என தொடர்ந்து அழைப்பார். நம்பி கலந்துகொள்ளுங்கள். அதற்கு நானே சாட்சி!
நன்றியும் வாழ்த்துகளும் கார்த்திகேயன்.

0 பின்னூட்டங்கள்: