> குருத்து: இருவர் செத்த பிறகு கால்வாயை மூடும் பணி!

February 21, 2021

இருவர் செத்த பிறகு கால்வாயை மூடும் பணி!






மதுரவாயில் பகுதியை ஒட்டி புறவழிச் சாலை (Bypass Road) கடந்து செல்லும். அந்த பாலத்திற்கு கீழே உள்ள சாலையை நொளம்பூர், முகப்பேர், அயனம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி என பல பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் அந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த கூவம் கரையோரம் தான் எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஹாஸ்டல்களும் இருக்கின்றன. அந்த மாணவர்களும் அந்த பாலத்தின் வழியே தான் தினம் போய்வருகிறார்கள்.

அந்த பாலத்திற்கு அடியே கூவம் ஓடுகிறது. அந்த கூவத்திற்கு மேலே உள்ள பாலம் தாழ்வானது. அந்த பாலத்திற்கு எந்த தடுப்பும் கிடையாது. அந்த பகுதியில் வெளிச்சமும் கிடையாது. அங்கு கடந்து செல்பவர்கள் கொஞ்சம் பிசகினாலும் கூவத்தில் கவிழ்ந்துவிட கூடும்.
புறவழிச் சாலையில் பெய்கின்ற மழையும், அந்த பகுதியில் பெய்கின்ற மழையும் நொளம்பூர் பகுதியிலிருந்து வரும் திறந்த வழி கால்வாய் வழியே தான் கூவத்திற்கு வந்து சேரும். அவ்வப்பொழுது எங்கிருந்தோ கழிவுநீரை எடுத்து வரும் லாரிகள் அந்த கால்வாயில் கலந்துவிடும் காட்சியையும் அவ்வபொழுது பார்க்கமுடியும். பலமுறை மக்கள் புகாரளித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரம். ஒரு மழை நாளில் தனியார் மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்த பெண் பேராசிரியரும் (வயது 45), அவருடைய மகள் (22) இருவரும் ஒரு லாரி கடந்து போகும் பொழுது சறுக்கியதில் இருவரும் இரு சக்கர வண்டியோடு கால்வாயில் விழுந்துவிட்டார்கள். அவர்களால் உடனடியாக தப்ப முடியவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து தூக்கிய பொழுது இருவரும் இறந்துபோயிருந்தார்கள்.
இருவர் பலி கொண்ட பிறகும் கூட அந்த கால்வாயை மூட, கூவத்தில் உள்ள பாலத்திற்கு தடுப்பு சுவர் எழுப்ப மிகவும் தாமதப்படுத்தினார்கள். தொடர்ச்சியாக மக்கள் கேள்வி எழுப்பிய பிறகு, மனித உரிமை ஆணையமும் முன்வந்து அரசை கேள்வி எழுப்பியிருக்கிறது. இப்பொழுது தான் கால்வாயை மூடும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கூவத்தில் மேலே உள்ள தரைப்பாலத்திற்கு தடுப்பு கம்பிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. சில உயிர்களை பலி கொடுத்தால் தான் ஒரு கால்வாய்க்கு மூடியே போடுவார்கள் என்றால், இந்த நாட்டில் மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு அரசிடம் எவ்வளவு கடுமையாக போராடவேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கும் விவசாயிகள் போராட்டம் ஒரு வாழும் சாட்சியாக நம்முன் நடந்து கொண்டிருக்கிறது.
#புகைப்படங்கள் : இறந்த பேராசிரியரும், அவரது மகளும், திறந்த கால்வாய், தரைப்பாலத்தில் போடப்பட்ட தடுப்பு கம்பிகள், கால்வாயை மூடும் பணி

0 பின்னூட்டங்கள்: