> குருத்து: புத்தகங்களை எழுதுனவங்களுக்குத் தான் நன்றி சொல்லணும்!

February 18, 2021

புத்தகங்களை எழுதுனவங்களுக்குத் தான் நன்றி சொல்லணும்!

 "நான் நன்றி சொல்லணும்னு நினைச்சா அந்தப் புத்தகங்களை எழுதுனவங்களுக்குத் தான் நன்றி சொல்லணும்."

****
“1954ல் லைப்ரரிக்கு வர ஆரம்பிச்சேன். தற்செயலாத் தான் வந்தேன். அப்போ எனக்குப் பதினாறு வயது இருக்கும். சினிமா தியேட்டருக்கு போய் டிக்கெட் கிடைக்காமல் தான் லைப்ரரிக்கு வந்தேன். அது கூட நானா வரலை. கந்தசாமினு ஒரு பிரண்டு தான் என்னை அழைச்சிட்டு வந்தான். அவன் இப்போ இல்லை. இறந்து போயிட்டான். ஆனால் அவன் எனக்குச் செய்த பெரிய உபகாரம் லைப்ரரிக்கு அழைச்சிட்டுப் போனது தான்.

அவன் தான் என்னை மெம்பராக்கி விட்டான். அப்போ என்ன வேலை செய்யப்போறோம். எப்படிப் பிழைக்கப்போறோம்னு மனசுல ஒரே குழப்பமா இருக்கும்.

எங்க அப்பா ஜவுளிகடையிலே வேலை பார்த்தார். நாங்க ஆறு பிள்ளைகள். வீட்டில ரொம்பக் கஷ்டம். வறுமை. எட்டாம் வகுப்பு வரை தான் படிச்சேன். அப்புறம் நானும் கடைவேலைக்குப் போயிட்டேன். ஆனா அந்தக் கடை வேலை பிடிக்கலை. வேற என்ன செய்றதுனு தெரியலை.

எங்க மாமா கடை தூத்துக்குடியில இருந்துச்சி அங்கே போய் வேலை செய்யலாமானு தோணுச்சி. அப்போ தான் லைப்ரரியில போய்ப் படிக்க ஆரம்பிச்சேன்.

என்ன படிக்கிறது எப்படிப் படிக்கிறதுனு எதுவும் தெரியாது. கையில கிடைக்கிற புத்தகத்தைப் படிப்பேன். நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிகிட முடிந்தது. புத்தகத்தைத் திறந்தவுடனே அது என்கூடப் பேசுறதா உணர்வேன். யாரோ பக்கத்துல இருந்து ஆலோசனை சொல்ற மாதிரியே இருக்கும்.

அப்போ லைப்ரரி வேற இடத்துல இருந்துச்சி. வீட்ல இருந்து நடந்தே வருவேன். புத்தகம் எடுத்துகிட்டு போய் ஸ்கூல் கிரவுண்ட்ல உட்கார்ந்து படிச்சிகிட்டு இருப்பேன். படிக்கப் படிக்க மனசுல ஒரு தெம்பு. தைரியம் வர ஆரம்பிச்சது. லைப்ரரி இடம் மாறிக்கிட்டே இருந்துச்சி. நானும் விடவேயில்லை.

நாமளே ஒரு தொழில் பண்ணி பார்த்தா என்னனு தோணுச்சி. சிவகாசியில் போய் ஸ்கூல் நோட்டுகளை வாங்கிட்டு வந்து பையில் வச்சி ஒவ்வொரு ஸ்கூலா போய் விற்க ஆரம்பிச்சேன். அதுல நிறைய ஆள் பழக்கம் ஆகிருச்சி. அப்புறம் சின்னதா ஒரு ஸ்டேஷனரி கடை ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷம் நடத்தினேன். நிறையக் கடன். கடையை மூட வேண்டியதாகிப்போச்சி. மனசு உடைந்து போய் வீட்ல இருந்தேன். அப்பவும் புத்தகம் தான் துணை. படிச்சி படிச்சி தான் மனதை தேத்திக்கிட்டேன்

பிளாஸ்டிக் குழாய் செய்ற கம்பெனிலே வேலைக்குப் போனேன். அப்புறம் கல்யாணம் ஆகிருச்சி. ரெண்டு பொம்பளை பிள்ளைகள் பிறந்தது. ஆறு வருஷம் அந்தக் கம்பெனியிலே வேலை செய்தேன். சம்பளம் கட்டலை.

நாமளே பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கிற கம்பெனி ஆரம்பிப்போம்னு பொண்டாட்டி நகையை வித்து ஆரம்பிச்சேன். அது பிக்கப் ஆகிருச்சி. இருபத்தைந்து வருஷமா அது தான் என் தொழில்.

இந்த ஊர்லயே பிறந்து இந்த ஊர்லயே கல்யாணம் பண்ணிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன். மெட்ராஸ் வரைக்குப் போயிருக்கேன். அதுக்கு மேல எந்த ஊருக்கும் போனதில்ல. ஆனா புத்தகம் எத்தனை நாடுகளை, எத்தனை ஊரை அறிமுகம் செய்து வச்சிருக்கு. பைசா செலவு செய்யாமல் புத்தகம் படிச்சே லண்டனை தெரிஞ்சிகிட்டேன். பெரிய பெரிய தலைவர்களைப் பற்றிப் படிச்சிருக்கேன். உலக யுத்தம் பற்றிப் படிச்சிருக்கேன்.

சொந்த வாழ்க்கையில எத்தனையோ கஷ்டங்கள். சோதனைகள். அப்பவும் படிக்கிறதை விடலை.

நாட்டுல புதுசு புதுசா கட்சி ஆரம்பிச்சி தேர்தல் நடந்து ஆட்சி மாற்றம் வந்துனு நிறையப் பாத்துட்டேன். ஆனா என்னை ஒண்ணும் பாதிக்கலை. பிள்ளைகள் படிச்சி வளர்ந்து பெரிய ஆள் ஆகிட்டாங்க. எனக்கும் தலை நரைச்சி போச்சி. பொம்பளை பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்துட்டேன். ஆனா படிக்கிறதுல இருக்கிற ஆர்வம் குறையவேயில்லை

இனிமே எதுக்குப் படிக்கணும்னு மனசுல தோணவேயில்லை. குற்றாலம் அருவியில போய் நின்னா குளிச்சிட்டு வெளியே வர தோணவே தோணாது. குளிச்சிகிட்டே இருக்கணும்னு ஆசையா இருக்கும். படிக்கிறதும் அப்படித் தான். நிறைய நல்ல புத்தகங்கள் என் மனசை குளிர வைச்சிருக்கு.

முன்னாடி எல்லாம் புத்தகம் படிச்சி முடிச்சதும் நம்ம வாழ்க்கை எல்லாம் ஒண்ணுமே இல்லைனு தோணும். தனியா உட்கார்ந்து வருத்தப்படுவேன். ஆனா இப்போ அப்படியில்லை. நமக்குக் கிடைச்ச வாழ்க்கை அவ்வளவு தான். இதுக்குள்ளே யாரையும் கெடுக்காமல், கெட்டது செய்யாமல் வாழ்ந்திருக்கோம்னு தோணுது. அந்த அறிவு புத்தகம் கொடுத்தது.

நான் நன்றி சொல்லணும்னு நினைச்சா அந்தப் புத்தகங்களை எழுதுனவங்களுக்குத் தான் நன்றி சொல்லணும். என்னைப் போல அறைகுறைகளுக்கு இந்த லைப்ரரி தான் கோவில்.

வாரத்துல ரெண்டு தடவை லைப்ரரிக்கு வருவேன். புத்தகம் எடுத்துட்டு போவேன். நூலகத்தில நிறைய படிச்ச ஆட்களைப் பாத்துருக்கேன். யார் கிட்டயும் எதுவும் பேசமாட்டேன்.

எடுத்துட்டுப் போன புக்கை வீட்ல வைத்து நைட் தான் படிப்பேன். ராத்திரி பதினோறு மணி வரைக்கும் படிச்சிகிட்டு இருப்பேன். ஆனா இத்தனை வருஷத்துல என் பொண்டாட்டி ஒரு வார்த்தை ஏன் இப்படிப் புத்தகத்தைப் படிச்சிட்டு இருக்கீங்கன்னு கோவிச்சிகிடலே. இன்னைக்கு அவங்களுக்கு நன்றி சொல்லிகிடுறேன்.

மனசுல என்ன என்னமோ தோணிகிட்டு இருக்கு. நான் பேசுனதுல ஏதாவது தப்பு இருந்தால் மன்னிச்சிடுங்க. இதுக்கு மேல என்னால பேச முடியலை. உங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி.


0 பின்னூட்டங்கள்: