டாக்டர் அம்பேத்கார் இரவு பாடசாலைக்கு புத்தகங்களை அனுப்பி வைத்த மோகன் குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
சென்னை வியாசர்பாடி சுருக்கமாக வியாசைப் பகுதியில் வசிக்கும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கற்றுத்தரவேண்டும் என்பது அந்த பகுதியில் உள்ள இளைஞர்களின் பல ஆண்டுகள் கனவு.
அந்த கனவை கடந்த சில ஆண்டுகளாக பகுதி மக்கள் உதவியுடனும், சமூக அக்கறை கொண்டவர்களின் உதவியுடனும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றிவருகிறார்கள். 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள்/மாணவிகள் அங்கு கற்று வருகிறார்கள்.
அந்த இரவு பாடசாலையில்  ஒரு நூலகம் அமைக்கவேண்டும் என்பது அவர்களது ஆசை.   புதுப்புத்தகங்கள் வாங்க விருப்பம் இருந்தாலும், வாய்ப்பில்லை.  பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடுகளில் அண்ணன், அக்காவினுடைய புத்தகங்கள் தான் தம்பி/தங்கைகளுக்கு கிடைக்கும்.  அது போல படித்த புத்தகங்களை சமூக அக்கறை கொண்டவர்களிடம் கேட்கலாம் என கேட்க ஆரம்பித்தார்கள். எனக்கு தெரிந்ததும், வீட்டில் இருந்து படிப்பதற்கான மேஜையையும், 50 புத்தகங்கள் வரை அனுப்பிவைத்தேன்.
முகநூல் வழியாகவும், நண்பர்களிடம் கேட்க ஆரம்பித்தோம். அவர்களும் கொடுக்க ஆரம்பித்தார்கள். சிறுக சிறுக புத்தகங்கள் சேர துவங்கியிருக்கின்றன.  அதன் தொடர்ச்சியில், மதுரையில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும்  என்னுடைய நண்பன் மோகன் குமாரிடம் தெரிவித்தேன்.  ”படிக்கும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு புத்தகங்கள் இல்லையா! உடனே அனுப்பி வைக்கிறேன்” என புத்தகங்களை ஒரு பெட்டியில் போட்டு மதுரை ரதிமீனா டிராவல்ஸ் வழியே அனுப்பிவைத்தார்.  தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கேட்டு, பிறகு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.   பாடசாலையை இயக்கும் இளைஞர்கள் நேற்று எடுத்துவந்தார்கள்.
பெட்டியில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. அதைப் பார்த்ததும் மாணவர்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சி.   மாணவர்கள் சார்பாக மோகன்குமார் அவர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  நூலகம் அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கை வலுப்பெற துவங்கியிருக்கிறது.




0 பின்னூட்டங்கள்:
Post a Comment