> குருத்து: January 2022

January 31, 2022

மரணம் - குஷ்வந்த் சிங்

 


கேள்வி
: எப்போதுமே உங்கள் வயது பொதுவாக விமர்சிக்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது. தனிமையில் இருக்கும்போது உங்கள் மரணத்தைப் பற்றி நீங்கள் சிந்திப்பதுண்டா?
 
குஷ்வந்த் சிங் பதில்:
 
ஆமாம். எனது மரணத்தைப் பற்றி அடிக்கடி நான் நினைக்கிறேன். இறந்துபோன எனது நண்பர்களை யெல்லாம் நினைத்து அவர்கள் எல்லாம் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று வியப்படைவேன். நமது இல்லங்களில் இறப்பைப் பற்றி நாம் ஏன் பேசுவதில்லை என்று ஆச்சரியப் படுவேன்.
எவருமே தப்பிக்க இயலாத உண்மை நிலைகளில் அதுவும் ஒன்று. இறப்பு கொண்டாடப்படவேண்டிய ஒன்று என்ற சமண மதத் தத்துவத்தை நான் நம்புகிறேன்.
 
 
சில ஆண்டுகளுக்கு முன் சுடுகாட்டுக்குச் சென்று அங்கே நான் உட்கார்ந்து கொண்டிருப்பேன். அது என் மீது ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மருத்துவ சிகிச்சை போன்று அது செயல் பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் என் கல்லறை மீது பொறிக்க வேண்டிய வாசகங்களை (Epitaph) நானே எழுதினேன்.
 
"கடவுளையோ மனிதனையோ விமர்சித்த, விட்டு வைக்காத ஒரு மனிதர் இங்கே உறங்குகிறார். உங்கள் கண்ணீரை அவருக்காக வீணாக்கவேண்டாம். அவர் ஒரு குழந்தை. மோசமான விஷயங்களை எழுதுவதை அவர் ஒரு தமாஷாகக் கருது பவர். ஒரு துப்பாக்கியின் மகனான அவர், இறந்து போனதற்கு கடவுளுக்கு நன்றி."

ரெம்ப ஓவரா போறீங்கப்பா! 🙂

 

வாரம் ஒருமுறை அந்த பகுதிக்கு வேலைக்கு போவேன். மதியம் சாப்பாடு சாப்பிடுவது வழக்கம். ஒவ்வொரு கடையா சாப்பிட்டு சாப்பிட்டு அதில் நல்லா இருக்கிற‌ மொத்தம் மூணு கடையை கண்டுபிடிச்சு வைச்சிருந்தேன்.
முதல் கடையில் போன ஆண்டு சாப்பாடு கிடையாது என்றார்கள். ஒன்லி பிரைடு ரைஸ் என்றார்கள். போச்சு!
 


இரண்டாவது கடையில் 6 மாதத்திற்கு முன்பு ஒன்லி பிரியாணி என்றார்கள். அதுவும் போச்சு!
 
இன்று மூன்றாவது கடைக்கு போனேன். அங்கும் சாப்பாடு இல்லை என்றார்கள். இன்னைக்கு மட்டும் இல்லையா? எப்பொழுதுமே இல்லையா? என்றதற்கு இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இல்லை என்றார்கள். ஏன் என்ன ஆச்சு? என துக்கம் விசாரித்தேன். சமைக்கிறவங்க இப்பொழுது இல்லை என்றார்கள்.
சோகமாய் இரண்டே இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு வந்துவிட்டேன். திரும்ப முதலில் இருந்து புது சாப்பாடு கடையை தேடி அலைய வேண்டியது தான்.
 
ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு தகவல் சொன்னார்கள். கடந்த ஆண்டு ஸ்விக்கி ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்கள் எடுத்தார்களாம். பிரியாணி ஆதிக்கம் அதிகமாகியிட்டே போகுது! இந்தியாவின் தேசிய உணவுக்கு மக்கள் கிட்ட வாக்கு கேட்டா, பிரியாணி தான் ஜெயிக்கும் போல!
நமக்கும் பிரியாணி மேலே வெறுப்பு கிடையாது. சாப்பிட்டா ஒரு மணி நேரத்திற்கு கிறக்கமா இருக்கு! வேலை பாதிக்குதுல்ல! 🙁

ஒரு நல்ல படைப்பின் இரகசியம் என்ன?

 


1. எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டு. உன்னால் முடிந்த அளவு அவதானி. சிறிது பார்த்த உடனேயே எழுதத் தொடங்கிவிடாதே.
 
2. உகந்த மனநிலை இல்லாதபோது எழுதுவதற்கு உன்னை நிர்பந்திக்காதே.
 
3. உனது கதாபாத்திரங்களுக்குத் திட்டவட்டமான மாதிரிகளைத் தெரிவு செய்யாதே. ஆனால் நீ பார்த்த எல்லோரிடமிருந்தும் அவற்றை உருவாக்கு.
 
4. எழுதி முடித்தபிறகு உனது கதையைக் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பூரணமாகப்படி. அவசியமற்றவை என்று படுகின்ற சொற்கள், சொற்தொடர்கள், பகுதிகள் அனைத்தையும் ஈவிரக்கமின்றி வெட்டு. ஒரு சித்திரத்துக்கான விஷயத்தை ஒரு கதையாக தீட்டி இருப்பதைவிட ஒரு கதைக்கான விஷயத்தை ஒரு சித்திரமாக செறிவாக்கி இறுக்குவது சிறந்தது.
 
5. பிறமொழிக் கதைகளைப் படி. குறிப்பாக கிழக்கு, வட ஐரோப்பியக் கதைகளையும் ஜப்பானியக் கதைகளையும் படி.
 
6. ஒருவராலும் விளங்கிக் கொள்ளமுடியாத அடைகளையும், தொடர்களையும் ஒருபோதும் உருவாக்காதே.
 
7. 'இலக்கிய விதிகள்' பற்றிய எந்தக் கதையையும் ஒருபோதும் நம்பாதே.
 
8. இலக்கிய விமர்சனங்களை ஒருபோதும் நம்பாதே. ஆனால் நம்பகமான விமர்சகர்களின் எழுத்துக்களைப் படி.
 
#லூசூன், எழுத்தாளர்.

Yeh Kaali Kaali Ankhein (2022) "அந்த கருப்பு கண்கள்” இந்தி Web Series

 


உத்திரபிரதேசம் லக்னோ தான் கதைக்களம். கொலைகளுக்கு அஞ்சாத, கேடுகெட்ட ”பவர் புல்” அரசியல்வாதியிடம் நாயகனின் அப்பா கணக்காளராக இருக்கிறார். அரசியல்வாதியின் மகளும் அரசியல்வாதியின் உதவியில் நாயகனும், ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். நாயகிக்கு நாயகன் மீது கொள்ளைப் பிரியம். ஆனால், நாயகனுக்கு நாயகியை பிடிக்கவில்லை. பிறகு நாயகி உயர் படிப்பிற்கு வெளியூர் போய்விடுகிறாள். 
 
நாயகன் படித்து பொறியாளராகிவிடுகிறார். கல்லூரியிலேயே ஒரு பெண்ணை காதலிக்கிறார். ’கந்தர்வ திருமணம்’ கூட செய்துகொள்கிறார். வெளியூரில் வேலை கிடைத்துவிடும். போய் குடும்பமாய் செட்டிலாகிவிடலாம் என ஒரு கனவோடு இருக்கிறார். ஆனால், நாயகி அவனை காதலிக்கிறாள். மறுத்தால், குடும்பத்திற்கு ஏகப்பட்ட தொந்தரவு தருகிறார். நாயகனின் காதலியை கொலை செய்ய துரத்துகிறார்கள்.
 
வேறு வழியில்லாமல் நாயகன் நாயகியை திருமணம் செய்துகொள்கிறார். அந்த கொலைகார கூட்டத்திலிருந்து விடுபட அவர் அரசியல்வாதி ரேஞ்சுக்கு இறங்கி செய்யும் செயல்கள் தான் ஒவ்வொரு அத்தியாயத்திலும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
 
****
 
“என்கிட்ட எது உன்னை ஹெவியை லைக் பண்ண வைச்சது? ஏன் இப்படி என்னை லவ் டார்ச்சர் பண்ற? என வடிவேல் ஒரு படத்தில் சொல்வாரே! அது தான் மொத்தக் கதையின் ஒன்லைன். சமீபத்தில் ”கலாட்டா கல்யாணம்” படத்தில் தனுசை தூக்கிக்கொண்டு போய் கல்யாணம் செய்வார்களே அந்த காட்சியும் உத்திரபிரதேசம் என்பதால் நினைவுக்கு வந்து போனது.
இடையிடையே கொஞ்சம் தொய்வு இருந்தாலும், மொத்தத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும், திருப்பங்கள் வைத்து, கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் ஒரு நல்ல திரில்லராக கொண்டு சென்றிருக்கிறார்கள். அடுத்த தொடருக்கான வாய்ப்புகளுடன் முதல் தொடரை முடித்திருக்கிறார்கள்.
 
தில்லுக்கு துட்டு முதல் பாகத்தின் நாயகி அஞ்சல் சிங் தான் அரசியல்வாதியின் பெண்ணாக வருகிறார். Tahir Raj Bhasin சிக்கிக்கொண்ட நாயகனாக முழுவதுமே இறுக்கமாகவே வருகிறார். மெகந்தி சர்க்கஸ் நாயகி ஸ்வேதா தான் நாயகியின் காதலியாக வருகிறார். மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
 
நெட்பிளிக்சில் ஒவ்வொரு அத்தியாயமும் 35 நிமிடங்கள் என எட்டு அத்தியாயங்கள் காண கிடைக்கிறது. தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது. வாய்ப்பு இருக்கிறவர்கள் பாருங்கள்.

January 29, 2022

நெடுஞ்சாலை மோட்டல் உணவகங்கள் - கொடுங்கனவு


அந்த அரசு பேருந்து மதுரையிலிருந்து கிளம்பிய பொழுது இரவு ஒன்பதை தாண்டிவிட்டது. குலுங்கி குலுங்கி தாலாட்டிக்கொண்டே சென்ற பேருந்து இன்னும் பலமாக குலுங்கி நின்றது. பேருந்தில் உள்ள சன்னலை ஒட்டி ஏதோ ஒன்றை வைத்து மோசமாக கீறிக்கொண்டே ஒரு குரல் பலரையும் எழுப்பியது. “பேருந்து இன்னும் 15 நிமிடம் தான் நிற்கும். ஆகையால் இறங்கி போங்க!” தூக்கம் கலைந்து, மெல்ல விழித்துப் பார்த்தால், பேருந்து நின்ற இடத்தில் அந்த சூழலுக்கு சம்பந்தமில்லாத மாதிரி சத்தமாக பாடல் கேட்டது. அநேகமாக மணி ஒன்றை தாண்டிவிட்டது. அது எந்த பகுதி? என்ன மாவட்டம்? என தேடிப்பார்த்தால், அந்த உணவகத்தின் பெயர் போர்டில் பேர் மட்டுமே இருந்தது.


கண்களை கசக்கிக்கொண்டே, டாய்லெட்டில் யூரின் போக நுழைந்தால் மூத்திர நாத்தம் மூக்கைத் துளைத்தது. பளிச்சென லைட் போட்டால், அங்கிருந்த மோசமான நிலைமை தெரிந்துவிடும் என்பதற்காக, ஒரு மங்கலான பல்பு எரிந்துகொண்டிருந்தது. அந்த சிறந்த சர்வீஸ் தந்ததற்காகவே அவருக்கு ரூ. 5 கொடுத்தேன்.

ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தேன். லேசாக பசித்தது. பிஸ்கெட் வாங்கலாம் என்றால், பிரிட்டானியாவை போல உள்ள டூப்ளிகேட் பிஸ்கட். சன் பீஸ்ட் போலவே ஒரு எழுத்து மாறி வேறு ஒரு பிஸ்கெட் பாக்கெட் இருந்தது. தூக்க கலக்கத்தில் மக்கள் வாங்கிவிடுவார்கள் என அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. குடிக்க தண்ணீர் எங்கும் இல்லை. ஒரு லிட்டர் பாட்டில் 25. அதுவும் அந்த உணவக முதலாளியே அந்த பிராண்ட் தயாரிப்பார் போலிருக்கிறது. வேறு எங்கும் அந்த பெயரைப் பார்த்ததில்லை.

”பசிக்குது ஏதாவது சாப்பிடலாம்” என உடன் வந்த நண்பர் என்னை அழைத்தார். விஷப்பரிட்சை வேண்டாம் என்றேன். கேட்கவில்லை. ’விதி’ யாரை விட்டது? இருவரும் உள்ளே போனோம். ”புரோட்டா சொல்லவா” என்றார். ”இருந்தாலும் இவ்வளவு தைரியம் ஆகாது!” என்றதும், கொஞ்சம் சுதாரித்து ஒரு தோசை கேட்டார். ”தோசை என்பது செட்டாக தான் கிடைக்கும். (பிரிக்க முடியாது. பிரித்தால் ஓனர் கோவித்துக்கொள்வார்) என்றார். ”சரி கொண்டு வாங்க! என்றார். உடனே வந்தது. பேருந்தை விட்டு இறங்கி ஓடிவருவார்கள். அப்படியே லபக்! லபக்குன்னு உள்ளே தூக்கிப்போட்டுவிட்டு திரும்பவும் ஓடிப் போய்விடுவது போல, சுட்டு ரெடியாக வைத்திருப்பார்கள் போல! ஆறிப்போயிருந்தது.

ஊரில் உள்ள தோசையின் அளவு வேறு. அங்கிருந்து இங்கு வரைக்கும் ஓடி வந்ததில், மிகவும் இளைத்திருந்தது. தட்டில் இருக்கும் பொழுதே புளிப்பு வாசனை மூக்கைத் தொட்டது. எப்பொழுது அரைத்த மாவோ? அதற்கு தொட்டுக்க கொடுத்த சாம்பாரை வாழ்நாளில் அவ்வளவு மோசமாய் பார்த்ததேயில்லை. சாப்பிட்டதுமில்லை., எப்படி சாப்பிட போகிறார்? என நினைக்கும் பொழுதே எனக்கே துக்கம் தொண்டையை அடைத்தது. ஒரு தோசையை தட்டு, தடுமாறி சாப்பிட்டு முடித்தார். இன்னொன்றை அப்படியே வைத்துவிட்டார். வைத்து விட்டு போன பிறகு, இந்த டேபிளின் பக்கம் அந்த சர்வர் வந்து எட்டியே பார்க்கவில்லை. அந்த குட்டித்தோசை இரண்டுக்கு விலை ரூ.80. கோபத்தை அடக்க முடியாமல், அந்த கேசியரிடமே ”புளிச்சுப்போன மாவுங்க! எப்படிங்க சாப்பிடுறது? என நண்பர் கேட்டேவிட்டார். உடனடியாக ஒரு ரெடிமேட் பதிலை சொன்னார். “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சாப்பிட்டேன். நல்லாத்தான் இருந்தது”

ஆறுதல்படுத்த ஒரு காபி வாங்கினார். சுடுதண்ணீரில் காபி பொடியை கலந்தது போல இருந்தது. அந்த நடுநிசியிலும், ”சுகராகம் சோகம் தானே” என இளையராஜா சளைக்காமல் இசைத்துக்கொண்டிருந்தார்.

மீண்டும் பேருந்தில் ஏறினோம். மீண்டும் தூங்கிக்கொண்டே சென்னை வந்து சேர்ந்தோம். இரவில் நடந்தது எல்லாம், ஒரு நரகத்தில் மாட்டிக்கொண்டது போலவும், அங்கு எங்களை விதவிதமாக கொடுமைப்படுத்தியது எல்லாம் ஒரு கொடுங்கனவாக நினைவில் வந்து போனது.

இரவு நேரத்திலோ, பகல் நேரத்திலோ கொஞ்சம் தூரமாய் பேருந்தில் பயணம் செய்த எல்லோருமே இதை எதிர்கொண்டிருப்பார்கள். அனுபவம் இதைப் போலவோ அல்லது இதைவிட மோசமாகவும் எதிர்கொண்டிருக்கலாம். இதைப் பற்றி தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தளத்தில் பலர் எழுதியிருக்கிறார்கள். ஊடகங்கள் பல்வேறு காலகட்டங்களில் இந்த அவலத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். பேசியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக அரசு இதை கண்டுகொள்ளவேயில்லை.

பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இருவருக்கும் ஓசியில சாப்பாடு. சிகரெட். அதனால் இங்கு நிப்பாட்டுகிறார்கள் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அவர்களிடம் பேசினால், ”வாயிலேயே வைக்க முடியவில்லை. இன்னும் நான்கு, ஐந்து மணி நேரம் போகனுமேன்னு எதையாவது சாப்பிட வேண்டியிருக்கு. எங்க டிப்போவில் அதிகாரிங்க எங்களுக்கு இங்கு வந்து நிப்பாட்டி செல்லனும்னு உத்தரவு போடுறாங்க! பயணிகள் மோசமாக திட்டறாங்கன்னு வேறு உணவகத்திற்கு போனால், அடுத்த நாளே மெமோ குடுக்கறாங்க!” என்கிறார்கள்.

இது சம்பந்தமாக விசாரித்தால், முன்பு அரசு பேருந்து டிப்போவில் உள்ள போக்குவரத்து மேலதிகாரிகளைப் பார்த்து தள்ள வேண்டியதை கணிசமாக தள்ளி, அனுமதி வாங்கி உணவகத்தை நடத்தினார்கள். இதிலும் காசு பார்க்கலாம் என தெரிந்ததும், அரசு சமீப காலங்களில் வெளிப்படையாகவே டெண்டர் வெளியிடுகிறது. உணவகத்தில் நிறுத்தி செல்லும் ஒவ்வொரு பேருந்திற்கும் ரூ. 75ஐ அரசு அந்த உணவகத்திடம் வசூல் செய்கிறது. டாய்லெட்டை கூட தனியாக டெண்டர் விடுகிறதாம். அரசுக்கு நல்ல வருமானம். உணவகத்திற்கு நல்ல வருமானம். அல்லல்படுவதோ பொதுமக்கள்.

டெண்டரில் உள்ள விதிமுறைகளைப் படித்து பார்த்தால், புல்லரிக்கிறது. ”மக்களுக்கு சுத்தமான இலவச குடிநீர் வழங்கவேண்டும். சுகாதாரமான முறையில் டாய்லெட்டை பராமரிக்கவேண்டும். எம்.ஆர்.பி விலைக்கு விற்கவேண்டும்” என எல்லா
அருமையான
விதிமுறைகளும் தாள்களிலேயே தூங்கிவிடுகின்றன. எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

உணவக அதிகாரிகளைப் பார்த்து ஊடகங்கள் சென்று கேள்விக்கேட்டால் “நாங்கள் புகார் வரும் பொழுது சோதிக்கிறோம். உணவில் தரமில்லை என அபராதம் விதிக்கிறோம். அதை கட்டிவிட்டு அவர்கள் எப்பொழுதும் போல தொடர்கிறார்கள்” என அலுத்துக்கொள்கிறார்கள்.

ஒரு நெடுஞ்சாலை உணவகத்தை நடத்த அரசின் 24 துறைகளிடமிருந்து அனுமதி பெறவேண்டியிருக்கிறதாம். ”யாரிடம் வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்! கொடுப்பவர்களுக்கு மாதம் மாதம் தள்ளிக்கொண்டு தான் இருக்கிறோம்” என அந்த உணவக நிர்வாகத்தினர் மக்களிடம் எகாத்தாளமாக பேசுவதின் பொருளை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறதல்லவா!

ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. அதே குறைகள் தொடர…. பொதுமக்கள், ஊடகங்கள் என பலரும் தொடர்ந்து அபாயச் சங்கு ஊதிக்கொண்டே இருந்ததால்…. இப்பொழுது விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வரும் அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றது ஆய்வின் போது கண்டறியப்பட்டதாகவும், மேற்கண்ட உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.

நெடுஞ்சாலை உணவகங்களின் நிலைமை தமிழ்நாடு தழுவிய தளவில் இப்படித்தான் இருக்கிறது. ஆனால் இப்பொழுதோ பேருக்கு ஐந்து இடங்கள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் என கணக்கு காட்டுவது போல இருக்கிறது!

கவனமாய் பார்த்துக்கொள்ள வேண்டிய குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பல தரப்பினரும் பல்வேறு காரணங்களுக்காக தினமும் தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்குமாய் பயணம் செய்துகொண்டே இருக்கிறார்கள். பயணத்தை
இனிமையாக
்குவதில் உணவுக்கும், சுகாதாரத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. பயணத்தை சுமையாக்குவதில் இவர்கள் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்கிறார்கள்.
தொடர்ந்து போராடுவதை தவிர நமக்கு வேறு குறுக்கு வழிகள் இல்லை!

கட்டுரை தொடர்பான ஆதாரங்கள்

அத்துமீறும் நெடுஞ்சாலை உணவகங்கள் - கட்டுப்படுத்துமா அரசு ? புதிய தலைமுறை– 21/09/2021

நெடுஞ்சாலை உணவகங்கள் - நியூஸ்7 – 24/02/2017

Shyam Singha Roy (2021) தெலுங்கு



”ஒரு குறும்படம் எடுத்து காட்டு! உனக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு தருகிறேன்” என தயாரிப்பாளர் சொல்ல.. படம் இயக்கும் வாய்ப்பையும் பெற்று, படமும் வெற்றி பெறுகிறது. இந்தியில் அதேப் படத்தை எடுக்கும் வாய்ப்பு அடுத்து கிடைக்க… அந்த கதை சுட்டது என கைது (!) செய்யப்படுகிறார்.


நாயகன் எடுத்த அந்த கதையை முன்பே எழுதியது யார்? என கதை 1960களில் துவங்கி 1970 களில் படம் நகர்கிறது. சாம் சிங்கா ராய். மேற்கு வங்கத்தில் ஒரு பணக்கார குடும்பத்தைச் சார்ந்தவர். முற்போக்கான எழுத்தின் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என நம்புகிறார். அந்த கிராமத்தை விட்டு கல்கத்தாவிற்கு குடிபெயர்ந்துவிடவேண்டும் என முடிவெடுக்கும் பொழுது, நடனத்தில் சிறந்து விளங்கும் ”தேவதாசி” பெண்ணை கோயிலில் பார்க்கிறார். காதல் வயப்படுகிறார். தேவதாசிகளை தன் காம இச்சைக்கு பயன்படுத்திக்கொள்ளும் ஒரு பார்ப்பானை நாயகி எதிர்க்க, கடுமையாக தாக்கப்படுகிறாள்.

அங்கு நடக்கும் மோதலில் அந்த பார்ப்பனனை கொன்று தீயில் பலியிடுகிறார். நாயகியை அழைத்துக்கொண்டு, கல்கத்தா நகருக்கு வருகிறார். பிறகு என்ன நடந்தது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

***

நானி, சாய் பல்லவி இருவருடைய காதல் பகுதி ரசிக்கும்படி இருந்தது. தங்கள் பாத்திரத்தில் அருமையாக பொருந்தியிருக்கிறார்கள். சாய் பல்லவியின் அந்த குழு நடனம் அசத்தலாக இருந்தது. படம் பரவலாக பேசப்படுகிறது.

கோயிலுக்கு சேவை செய்ய என்னும் போர்வையில், பெண்களை நிலபிரபுக்களும், அவர்களை அண்டிப்பிழைத்த பார்ப்பனர்களும் தங்களின் காம இச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். தொடர்ச்சியாக போராடி, 1947லிலேயே தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். அதற்கு பிறகு நீடித்ததா என வரலாற்றின் பக்கங்களில் தேடிப்பார்க்கவேண்டும். ஆனால், வங்கத்தில் 1970களுக்கு பிறகும் தேவதாசி முறை நீடித்ததாக படம் பேசுகிறது. இயக்குநர் 1970 களில் இந்தியாவில் அரசியல் ரீதியாக கொந்தளிப்பான காலகட்டம். அந்த காலக்கட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைத்தாரா என தெரியவில்லை. ஒன்று வரலாற்று ரீதியான படமாக எடுத்திருக்கலாம் அல்லது சம கால படமாக எடுத்திருக்கலாம். இரண்டையும் இணைக்கிறேன் என எடுத்தது தான் இந்த காலக் குழப்பத்திற்கு காரணம் என நினைக்கிறேன்.

எல்லோரும் சொல்வது போல, கதையை சுட்டதற்காக எல்லாம் கைது வரை சென்றது எல்லாம் அதீதம். அதை நியாயப்படுத்த இராமர் கோவில் விசயத்தை எல்லாம் இழுத்தது இன்னும் அபத்தமாகப்பட்டது. நல்லவேளை வழக்கை திரும்ப பெற்றுவிட்டதால் தப்பித்தோம்.

நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது.

படத்தின் இயக்குனருடைய புதிய தலைமுறை பேட்டி(யில் நான் எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறார்.)

https://www.puthiyathalaimurai.com/newsview/128095/shyam-singha-roy-director-rahul-sankrityan-exclusive-interview

January 26, 2022

Encanto (2021) டிஸ்னியின் வண்ணமயமான அனிமேசன் படம்



ஒரு நெருக்கடியில் அந்த ஊரில் உள்ள நாயகியின் குடும்பத்திற்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும், ஒரு மந்திர மெழுகுவர்த்தி கிடைக்கிறது. ஒவ்வொரு குழந்தை பிறந்ததும், குறிப்பிட்ட வயதில், அந்த குழந்தைக்கு அந்த மெழுகுவர்த்தி வாயிலாக ஒரு சிறப்பான மந்திர சக்தி கிடைக்கிறது. அந்த மந்திர சக்தி மூலம் அந்த ஊரில் உள்ள மக்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். ஆகையால், அந்த ஊரே அவர்களை மரியாதையாக பார்க்கிறது.


ஆனால், நாயகியான அந்த பெண்ணுக்கு மட்டும், அவளுக்குரிய வயதில் எந்த மந்திர சக்தியும் கிடைக்கவில்லை. இது அவளுக்கும், அந்த குடும்பத்திற்கும் பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. இருப்பினும் அதை வெளிக்காட்டாமல் இருக்கிறார்கள். அந்த வீட்டில் உள்ள நாயகியின் பாட்டி அதை அவ்வப்பொழுது வெளிக்காட்டுகிறார்.

இந்த சமயத்தில் அவர்கள் இருக்கும் வீட்டில் கீறல் விழுந்து மறைகிறது. வீடு ஒரு அபாயத்தில் இருக்கிறது என புரிந்துகொண்டாலும், அதை மக்களிடம் வெளிக்காட்டாமல் இருக்கிறார்கள். தன் குடும்பத்தை நேசிக்கும் நாயகி அந்த அபாயம் என்ன என்பதை கண்டறிந்து பிரச்சனையை தீர்க்க முயல்கிறாள்.

அவள் முயற்சியில் வெற்றி பெற்றாளா என்பதை ஆட்டமும், பாடல்களுமாய் சொல்லியிருக்கிறார்கள்.
****

ஒரு குடும்பத்தில் திறமை இல்லாதவர்களாக இருந்தாலும், குடும்பத்தை நேசிப்பவராக இருந்தால், அவரை மதிங்கப்பா! அலட்சியப்படுத்தாதீங்கப்பா! என்பதை சொல்கிறார்கள். வீட்டிற்கு என்ன அபாயம்? என எதிர்காலத்தை கணித்து சொன்னவன் அந்த வீட்டிற்குள்ளேயே தலைமறைவாய் சுற்றுகிறான். பாசமுள்ள குடும்ப உறுப்பினர்களின் முக்கியத்துவத்தையும், குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.

படம் பார்த்ததும், நமக்கு என்ன கேள்வி வருகிறது என்றால்..? குடும்ப உறுப்பினர்களின் நிலை சம காலத்தில் எப்படி இருக்கிறது வாழ்வாதாரத்திற்காக ஒரிசா, பீகாரிலிருந்து தமிழ்நாடு உட்பட வேறு மாநிலங்களுக்கு மக்கள் நகர்கிறார்கள். கொரானா லாக்டவுனில் தான். உலகம் முழுவதும் இந்தியர்களும், குறிப்பாக தமிழர்களும் எத்தனை நாடுகளில் தங்கள் குடும்பங்களை, சொந்தங்களை விட்டுவிட்டு யாருமற்ற அனாதைப் போல பணி செய்கிறார்கள் நன்றாக உணரமுடிந்தது. இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல! வளரும், பின்தங்கிய எல்லா நாட்டு மக்களுக்குமே உள்ள பிரச்சனை. வாழ்வதாரத்திற்காக, நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக என பல்வேறு காரணங்களுக்காக தன் சொந்த நாட்டை, வீட்டை விட்டு இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.

ஏன் ஓடவேண்டும்? அந்தந்த நாடுகளிலேயே, அவரவர் ஊரிலேயே ஏன் வாழ முடியவில்லை? உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை மட்டும் ”மிகுந்த” வளர்ச்சியில் இருக்கிறது. ஒரு மனிதனுக்கு கிடைக்கும் சத்துக்கள் உடல் முழுவதும் பரவவேண்டும். வலது கையின் ஓரத்திலோ, கழுத்திலோ மட்டும் சத்துக்கள் ஒன்று சேர்ந்தால், அதற்கு பெயர் வளர்ச்சி இல்லை. கட்டி என்போம். அதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்போம். அது போல தான் சென்னை இருக்கிறது. இதை பரவலாக்கி பாருங்கள். வளர்ந்த நாடுகளுக்கு நாம் ஏன் போகவேண்டும்?

ஆக, சமூக நிலைமை இப்படி சிக்கலாக இருக்கும் வரை, குடும்பத்தை விட்டு வேறு மாநிலம், வேறு தூர தேசத்து நாடுகளுக்கு ஓடும் நிலைமை தான் தொடரும். இதில் நம்மிடமே வந்து குடும்பத்தின் மகத்துவத்தை போதிப்பது தான் நகைமுரண். ஏன் ஓடுகிறோம்? என ஆய்ந்து படம் எடுத்தால், நமக்கும் நம் பிரச்சனை புரியும். நாட்டின் பிரச்சனையும் புரியும். அதிலிருந்து விடுபட நாமும் யோசிப்போம். செயல்படுவோம்.
நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு வண்ணமயமான அனிமேசன் படம். கொலம்பியா நாட்டின் பின்னணியில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Hot Starல் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. பாருங்கள்.

January 24, 2022

முதல் நீ முடிவும் நீ (2021)



1990களில் கதை பயணிக்கிறது. அது சென்னையில் உள்ள பள்ளி. பதினொன்னாம் வகுப்பில் உள்ள மாணவர்கள் மத்தியில் நட்பு, காதல், குறும்புகள், தேர்வுகள் என படம் நகருகிறது. அதில் ஒரு காதல் ஜோடி. இன்னொரு மாணவி செய்கிற சேட்டைகளினால் பிரிகிறார்கள். இடைவேளை.


சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒன்று கூடுகிறார்கள். ஓவ்வொருவரும் வேறு வேறு திசைகளில் பயணித்திருக்கிறார்கள். சிலர் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். சிலர் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

கதையின் போக்கில் ஒரு பேண்டசியை நுழைத்து.. எதார்த்தத்தைப் பார்த்து ஆயாசமாய் இருக்கும் பார்வையாளர்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்திருக்கிறார்.
***

90களின் பள்ளி வாழ்க்கையை மிகை இல்லாமலும், கொஞ்சம் சுவாரசியமாக பதிவு செய்திருக்கிற படங்களில் இதுவும் ஒன்று. இடைவேளைக்கு பிறகு உள்ள நீண்ட நேரம் நிகழ்கிற சந்திப்பு கொஞ்சம் இழுக்கிறது. இன்னும் கொஞ்சம் கவனம் கொடுத்து சரி செய்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கும்.

படத்தில் பலருடைய வாழ்க்கையிலும் மேஜிக்கை நடத்துகிற அந்த கற்பனை கடவுள் நிஜ வாழ்க்கையிலும் இருந்திக்கலாம். நன்றாக இருந்திருக்கும். 🙂 ஏன் நிஜ வாழ்க்கை இத்தனை சுமைகளுடன், சிரமங்களுடன் இருக்கிறது. அதை மாற்றுவது எப்படி என்பதை நாம் தாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

இயக்குநர் தர்புகா சிவாவை ”ராஜதந்திரத்தில்” ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் படம் முழுவதும் வந்து கலகலப்பாக்கினார். பிறகு ”கிடாரி”யிலும், ”என்னை நோக்கிப் பாயும் தோட்டா”விலும் இசையில் கவனம் ஈர்த்தார். இப்பொழுது இயக்குநராக களம் இறங்கியிருக்கிறார். படமும் நன்றாக வந்திருக்கிறது.

படத்தில் நடித்த பலரும் புதுமுகங்கள் தான். மாணவர்களாகவும், பிறகு இளைஞர்களாகவும் பொருத்தமாக இருக்கிறார்கள். நன்றாகவும் நடித்திருக்கிறார்கள்.

Zee5ல் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. இப்படி குறைந்த பட்ஜெட்டில், இனி வருங்காலத்தில் பல படங்கள் வரும் என நன்றாக தெரிகிறது. இது போல நல்ல படங்களாக வந்தால் சந்தோசம் தான்.

Bhoothakaalam – கடக்க முடியாத இரவுகள் (2022) மலையாளம்


நாயகன் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறான். அம்மாவுடனும், பாட்டியுடனும் வாழ்கிறான். பாட்டி படுத்த படுக்கையாய் இருப்பதால், அம்மா ஆசிரியர் வேலைக்கு செல்வதால், உள்ளூரிலேயே வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஆனால் வேலை கிடைத்தபாடில்லை.


பாட்டி இறந்துவிடுகிறார். அம்மாவிற்கு கொஞ்சம் மனம் சார்ந்த பிரச்சனைக்கு மருத்துவம் பார்த்துவருகிறாள். இரவானால் பழைய கசப்பான நினைவுகளாலோ, நோய் உண்டாக்கும் சிரமத்திலோ அவள் நீண்ட நேரம் அழுதுகொண்டே இருக்கிறாள். அம்மாவும், மகனும் பேசினாலே சண்டை வந்துவிடுகிறது. ஆகையால், மகனை திட்டிக்கொண்டே இருக்கிறார். அவன் தண்ணி, தம்முன்னு சுற்றிக்கொண்டிருக்கிறான்.

வீட்டில் அமானுஷ்யமாக சில நிகழ்வு நடப்பதாக மகன் சொல்கிறான். அவன் தொடர்ந்து தண்ணி அடிப்பதால், இரவுகளில் தூக்கம் இல்லாமல் இருப்பதால், அவனுக்கு சில பிரமைகள் உருவாகியிருக்கலாம் என உறவினர் சொல்கிறார். அதற்கான மருத்துவம் பார்த்தால், சரியாகிவிடும் என்கிறார்.

அவனுக்கு கவுன்சிலிங் கொடுத்தவர் அந்த வீடு பற்றி சொல்லப்படும் அமானுஷிய கதைக்கு பின்னால் உள்ள நிகழ்வுகளை தேடுகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதை கொஞ்சம் பயம் காட்டி அனுப்பி இருக்கிறார்கள்.
****

ஏழு வயதில் அப்பாவை இழந்தது, அம்மாவிற்கு சில மனப்பிரச்சனைகள், வேலைக்கு போகாதது, அம்மா உட்பட யாரிடமும் மனம் விட்டு பேசாதது என நாயகனின் சூழலே மிக இறுக்கமாக இருக்கிறது.

இரவுகளில் மட்டும் பெய்யும் பேய் மழை, மாத்திரையைப் போட்டுவிட்டு தூங்கும் அம்மா, அமானுஷ்யமான வீட்டின் செயல்கள், இவனின் தூக்கமில்லா இரவுகள், களை இழந்த கண்கள், மெல்லியதாய் இரவின் விசேசமான சத்தங்களோடு, நம்மை கொஞ்சம் பயமுறுத்தும் இசை எல்லாம் கலந்து நம்மையும் பயமுறுத்துகின்றன.

1997ல் Cure என ஒரு ஜப்பான் படம். 2004ல் Machinist என ஆங்கிலப்படம். இந்த இரண்டு படங்களை Depressed Movie வகைப் படங்கள் என்பேன். அந்த வரிசையில் இந்தப் படத்தையும் தாராளமாய் சேர்க்கலாம்.

அம்மாவாக வரும் நம்ம ரேவதியும், கும்பளங்கி நைட்ஸ் Shane Nigam மகனுமாய் மொத்தப்படத்தையும் தாங்கியிருக்கிறார்கள். மற்றவர்களும் சிறப்பு. ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு பெரிய பலம்.

சோனி லைவ்வில் 21ந் தேதி வெளியாகியிருக்கிறது. பேய், திகில் பட விரும்புவர்கள் பாருங்கள். குழந்தைகளை தவிருங்கள்.

January 21, 2022

Chandigarh Kare Aashiqui (சண்டிகரின் ரொமான்ஸ்) 2021 இந்தி


நாயகன் சண்டிகரில் தன் பாடியை பில்டப் செய்துகொண்டே, ஒரு பிட்னெஸ் ஜிம்மும் நடத்திவருகிறார். சண்டிகரில் மிஸ்டர் மெட்ராஸ் போல G.O.A.T என போட்டி நடக்கிறது. அதில் இரண்டு வருடமாக ஜெயிக்க மல்லுக்கட்டுகிறார். ஜிம் பெரிசா காத்து வாங்குது! அங்கேயும் புது வருடத்தில் சில நாட்கள் மட்டும் கூட்டம் பொங்கும் போலிருக்கிறது. 😄


வெளியூரில் இருந்து வரும் நாயகிக்கு ஜிம்மில் ஒரு பகுதியை ஜும்பா நடனத்திற்கு வாடகைக்கு விடுகிறார்கள். நடனத்திற்கு ஒரு பெண்கள் கூட்டம் வருகிறது. அதன் விளைவாய் ஜிம்மிலும் இளைஞர்கள் அதிகரிக்கிறார்கள். நாயகன், நாயகி இருவரும் பழகி, ரெம்ப நெருக்கமாய் இருக்கும் பொழுது, “நான் ஒண்ணு சொல்லனும்” என்கிறார். காதல் மயக்கத்தில் ”சொல்லாதே” என வாயிலேயே முத்தமிடுகிறார்.

பிறகு நிதானமான ஒரு நாளில் ”நாம கல்யாணம் செய்துக்கலாமா” என்கிறார் நாயகன். அப்பொழுது நான் ஒரு Trans Girl என்கிற உண்மையை சொல்கிறார். அதிர்ச்சி அடைகிறான். “அருவருப்பு” அடைகிறான். ”நீ என்னை ஏமாத்திட்ட!” என திட்டிவிட்டு போய்விடுகிறான். பிறகு அவனுக்கு ”அவமானமாய்” உணர்ந்து... “நீ ஊரைவிட்டு போய்விடு!” என்கிறான்.

பிறகு அவர்களுடைய உறவில் என்னென்ன நடந்தது? என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***

”இருபது வருடமா ஆண் பெயரில் வாழ்ந்துட்டேன். நான் எந்த காலத்திலும் உள்ளுக்குள்ளே ஆணா உணர்ந்தேயில்லை! என நாயகனிடம் கண் கலங்கி சொல்லும் பொழுதும், ”ஜிம்மை விட்டு நின்னுடும்மா! வேறு ஊருக்கு போயிரலாம்” என ஆறுதலாய் பேசும் அப்பாவிடம் ”இப்படித்தான் பள்ளியை விட்டேன். கல்லூரியை விட்டேன். இன்னும் எத்தனையைத் தான் விடுறது!” என சொல்லும் பொழுது நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.

கூவாக திருவிழா கதை என்ன? மகாபாரத கதையில் போரின் துவக்கத்தில் அரவானை பலி கொடுக்க முடிவெடுக்கிறார்கள். அவன் திருமணம் ஆகாத இளைஞன். அவனை ஒரு நாளாவது மனைவியோடு ”வாழ வைக்க” முடிவெடுக்கிறார்கள். அடுத்தநாள் பலியாக போகும் அரவானுக்கு யார் பெண் தருவார்கள்? ஆகையால், ”கிருஷ்ணனே பெண் அவதாரம்” எடுக்கிறார். திருமணம் செய்து வைத்து, ஒரு நாள் “வாழ” வைக்கிறார்கள். அடுத்த நாள், அரவானை பலிகொடுக்கிறார்கள். அந்த ”கிருஷ்ண பெண் அவதாரம்” என தங்களைப் பாவித்து தாலி அறுக்கிறார்கள் திருநங்கைகள். ஆக, மகாபாரதம் எழுதிய காலத்திலிருந்து ”திருநங்கை” இருக்கிறார்.

கப்பலில் வாஸ்கோடகாமாவை போல, 14ம் நூற்றாண்டில் உலகை சுற்றி வந்த சீனத்தின் ”செங் ஹே” ஒரு திருநங்கை தான். வரலாற்றின் பல பக்கங்களில் திருநங்கைகளும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

தமிழகத்திலேயே பல ஆயிரம் திருநங்கைகள் இருக்கிறார்கள். சமூகத்திலேயே பலரும் கேலி, கிண்டல் செய்வதின் விளைவு அவர்களுடைய சொந்த வீட்டிலேயே பெற்றோர், உறவினர்கள் அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அதனால் உருவாகும் டார்ச்சரில் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். அவர்களுக்கு என வேலை கிடைப்பதிலும் சமூகத்தில் பிரச்சனை. ஆகையால், பிச்சையெடுக்கிறார்கள். தன் உடலை விற்று பிழைக்கிறார்கள். நாகரீக சமூகம் என நம்மை சொல்லிக்கொண்டு சக மனிதர்களை இப்படி நடத்தினால் எப்படி?

தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக, கடந்த சில வருடங்களாக நல்ல செய்திகளாக வந்துகொண்டே இருக்கின்றன. ஒலிம்பிக்கில் முதல் திருநங்கை 2021ல் பங்கேற்றார். மணிப்பூரில் 2020ல் முதல் மருத்துவராகி உள்ளார். 2019ல் முதல் அரசு செவிலியர். இப்படி “முதல் முதல்” என செய்திகள் வந்துகொண்டே இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

திருநங்கை குறித்து சமூகத்தில் ஏற்படும் படங்கள் கலைகளிலும் வெளிப்படுவது சரியானது. தமிழில் ஐஸ்வர்யா நடித்த “திட்டம் இரண்டு” ஒரு நல்ல துவக்க முயற்சி. இப்பொழுது இந்தியில் வந்துள்ள இந்தப் படம் இன்னும் மேலே போய், பிரச்சனைகளை தைரியமாய் எதிர்கொள்கிற நாயகியாக, நாயகன் புரிந்துகொள்ள முயற்சிகள் எடுக்கிற, பெற்றோர் அங்கீகரிக்கிற படமாக வந்திருப்பது இன்னும் நல்ல முயற்சி.

வாணி கபூர் அற்புதமாக அந்த பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். நம் நாயகர்கள் எல்லாம் நடிக்க தயங்கும் கதையில், தைரியமாய் ஆயுஷ்மான் குரானா நாயகனாக நடித்திருக்கிறார். மற்றவர்களும் சிறப்பு. ”Kai po se” இயக்கிய இயக்குநர் அபிசேக் கபூர் தான் இயக்கியிருக்கிறார்.

நல்ல படம். பாருங்கள். சப் டைட்டிலுடன் நெட் பிளிக்சில் இருக்கிறது.

January 19, 2022

வைகுந்தபுரம் (2020)


ஒரு நிறுவனத்தின் முதலாளிக்கும், அவரிடம் வேலை செய்பவருக்கும் ஒரே மருத்துவமனையில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. தன் குழந்தை வசதியாக வளரவேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தையை மாற்றிவிடுகிறார். அதற்கு பிறகு 25 வருடங்கள் கழித்து கதை நகர்கிறது.


தன்னிடம் வளரும் (முதலாளியின்) மகனான நாயகனை மட்டம் தட்டி வளர்க்கிறார். முதலாளியின் வீட்டில் உள்ள பையன் வசதியாக வளர்கிறான். முதலாளிக்கு ஒரு மாபியா கும்பலால் தொல்லைகள் வருகின்றன. அந்த முதலாளியின் உயிரை காப்பாற்றுவதற்கு எதைச்சையாக நாயகன் உதவ, அந்த முதலாளியின் வாரிசு இவன் தான் என தெரியவருகிறது.

அதற்கு பிறகு நடந்ததை, கொஞ்சம் கலகலப்பாகவும், அடிதடியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

****

இயக்குநர் திரிவிக்ரம் ஸ்டைல் படங்களில் இதுவும் ஒன்று. தெலுங்கில் பெரிய வெற்றி. அடுத்த வாரத்தில் இந்தியில் ரீமேக் செய்து வெளியிடுகிறார்கள். ரெம்ப விரிவாக (Geographically) செல்லாமல் இரண்டு வீடு, ஒரு மருத்துவமனை, ஒரு ஹோட்டல் என சிம்பிளாக முடித்துவிட்டார்கள். அதை சரிக்கட்டும் விதமாக ஒரு பாடலில் 150, 200 பேர் ஆடுகிறார்கள். சண்டைகள் எல்லாம் டிசைன், டிசைனாக இருக்கிறது. வழக்கமான தெலுங்கு மசாலா இருந்தாலும், கொஞ்சம் அடக்கி வாசித்ததால், நமக்கும் பிடிக்கிறது.

அப்பாவை போல பிள்ளைகளுக்கும் அதே குணங்கள் வந்துவிடுமா என்ன? வளர்ப்பில் குணநலன்களை எல்லாம் மாற்ற முடியாதா? என்றெல்லாம் கேள்விகள் எல்லாம் கேட்டீர்கள் என்றால்… உங்களால இந்தப் படத்தை பார்க்க முடியாது. நாயகனுக்கு உண்மை தெரிந்த பிறகு, வழக்கமான முறையில் உறவினர்கள் இரண்டு பேரை கொடூரமாக காட்டாமல், கொஞ்சம் நிதானமாக நடந்துகொண்டது நன்றாக இருந்தது.

அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு என எல்லோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். சமீப காலங்களில் ஆந்திராவும், கேரளாவும் ரெம்பவும் கொஞ்சிகொள்கிறார்கள். எங்கே போய் முடியப்போகிறதோ?

நெட் பிளிக்சில் தெலுங்கிலும், மலையாளத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. மிக்ஸ் பிளேயரில் இலவசமாகவே பார்க்க முடிகிறது.

January 16, 2022

மனச்சோர்வு – கற்பிதங்களும் உண்மைகளும் - மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்


 ”என்னடா டிப்ரஸா இருக்கே?”

- என யாராவது நலம் விசாரித்தால்… அவர்களிடம் சொல்லிவிடுங்கள். இதெல்லாம் தற்காலிகமான சோர்வு தான். தொடர்ச்சியாக நான்கு வாரங்களுக்கு தன்னுடைய தினசரி நடவடிக்கைகளான வீட்டு வேலைகள், வேலைக்கு செல்லுதல் என எந்த வேலையும் செய்ய பிடிக்காமல், அடிப்படை வேலைகளை கூட செய்வதற்கு மற்றவர்களின் உதவி எதிர்பார்த்தால் மன்ச்சோர்வு ஒரு நோயாக தாக்கியிருப்பதாக முடிவு செய்யலாம் என்கிறார்.


யாராவது வழக்கமான இயல்பில் இல்லாமல் இருந்தாலோ, வாய்விட்டு சொன்னாலோ அதை மதியுங்கள். “உனக்கென்னப்பா? பணம் கொட்டி கிடக்கு! பதவி இருக்கு. புகழ் இருக்கு! மனசை ரிலாக்ஸா வை! யோகா செய்!” என போகிற போக்கில் இலவச ஆலோசனைகளை அள்ளிவிடாதீர்கள். நல்லா இருக்கிறவனே யோகா நல்லது! நல்லதுன்னு வாயிலேயே சொல்லிட்டு திரியறாங்க! மனச்சோர்வு கொண்டவர் மட்டும் ஒழுங்கா செய்துவிடுவாரா? ஒழுங்கு மரியாதையா மருத்துவரிடம் கூட்டிப்போங்க! என்கிறார்.

புறக்காரணங்களால், மனச்சோர்வு வருவதில்லை. உடலுக்குள் இருக்கும் சுரப்பிகளின் சமநிலை தவறுவது தான்! நடிகை தீபிகா படுகோனுடைய பேட்டியும், நோயர் சுமதி கதையும் நல்ல உதாரணங்கள் என்கிறார்.

உடல் நோய்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மனமும் உடலின் ஒரு பகுதி தான் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இப்படி உரிய நேரத்தில் முக்கியத்துவம் கொடுத்திருந்தால், தற்கொலை செய்துகொள்பவர்களை பலரை தடுத்திருக்கலாம் என்கிறார்.

உலக அளவில் 300 மில்லியன் பேரும், இந்திய அளவில் 20 பேருக்கு ஒருவரும் மனச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். மனிதனை தாக்கும் உடல், மன நோய்களை அது பாதிக்கும் தீவிர தன்மையில் பட்டியலிட்டால் மனச்சோர்வு நாலாவது இடத்தில் இப்பொழுது இருக்கிறதாம். உலகம் போகிற போக்கில் 2030ல் முதல் இடத்தில் வந்துவிடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்களாம்.

ஒன்றிய அரசும் அறியாமையில் இருப்பவரை போல “ரிலாக்ஸா இரு! யோகா செய்” என பத்துக் கட்டளைகளை அறிவித்துக்கொண்டிருக்கிறதாம். கொரானா இரண்டாம் அலையில் மனிதர்கள் கொத்து கொத்தா செத்து விழும் பொழுது கூட வேடிக்கைப் பார்த்த அரசு இது! கண்ணுக்கு தெரியாமல், இருளில் விழுந்து கிடக்கும் மனச்சோர்வு கொண்டவர்களையா அக்கறையோடு பார்த்துக்கொள்ளும் என ஆயாசமாக இருக்கிறது.

ஆகையால், பிரியத்திற்கு உரியவர்கள், இல்லாதவர்கள் யாராயிருந்தாலும், தொடர்ந்து டல்லாக இருந்தால், உடலோ, மனமோ எது பாதித்திருந்தாலும், மருத்துவரைப் பாருங்கள். அவர்களை காப்பாற்றுங்கள்! என்கிறார்.

துறைச் சார்ந்து எழுதுபவர்கள் தமிழில் குறைவு. அதுவும் மனம் சார்ந்த விசயங்களில் எழுதுவது இன்னும் குறைவு. அதை சமூக அக்கறையுடனும், மக்களுக்கு புரியும் விதத்திலும் எழுதுபவர்கள் மிகவும்குறைவு. முன்பு ருத்ரன் இரண்டு, மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இப்பொழுது சிவபாலன் இளங்கோவன் நன்றாக எழுதுகிறார்.

80 பக்கங்கள் என்றாலும், கையடக்க புத்தகமாக இருப்பதால், மனச்சோர்வு வராமல், உற்சாகமாக படிக்க முடிகிறது. மருத்துவர் தொடர்ந்து எழுதவேண்டும். எல்லோரும் படிக்கவேண்டிய, வீட்டிலும் வைத்து இருக்கவேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒரு புத்தகம். விலை தான் கொஞ்சம் அதிகம். இந்த மாதிரி புத்தகங்களை மலிவு விலையில் மக்களிடம் பரவலாக கொண்டு செல்லவேண்டும். சமூக அக்கறை கொண்ட ஒரு இயக்கமோ, இயக்கம் சார்ந்த பதிப்பகமோ அதை செய்யமுடியும். செய்யவேண்டும்.

பக்கங்கள் : 80
விலை : ரூ. 70
வெளியீடு : உயிர்மை

January 15, 2022

The Battle at Lake of changjin (2021) ஒரு பார்வை






னவரி மாத குளிரில் நடுநிசியில் தமிழ்நாட்டின் தெற்கு பகுதியை நோக்கி இதோ ரயில் போய்க்கொண்டிருக்கிறது. காற்றோட்டத்திற்காக ஒருவர் சன்னலை திறந்துவைத்து தூங்கி கொண்டிருக்கிறார்.  ரயிலின் வேகத்தில் விறு விறு என அடிக்கும் மார்கழி மாத குளிர் காற்று அந்த கம்பார்ட்மெண்ட் முழுவதும் குளிர செய்கிறது. பஞ்சு வைத்திருந்தாலும், காதை துளைத்து உடலுக்குள் செல்ல முயற்சி செய்கிறது.  இதெல்லாம் ப்ளஸ் 21 டிகிரி குளிர் செய்கிற வேலை.

 

திரைப்படத்தில் அந்த மலைப்பிரதேசத்திற்குள் சில நூறு வீரர்கள் தங்களுக்கு வரும் உத்தரவிற்காக கண்கொட்டாமல் காத்திருக்கிறார்கள். டிசம்பர் மாதத்து குளிர். மைனஸ் 40 டிகிரி. ஒரு வீரர் தனக்குள்ளேயே போராட தயங்கினால், அப்படியே குளிரில் உறைந்து போய், இறந்துவிடுவார். நினைத்துப் பார்த்தாலே நடுக்கம் வருகிறது.

 

1950 காலம். சீனத்தின் படையின் ஒரு உயர் அதிகாரி தன் கிராமத்திற்கு வந்து சேர்கிறார். தன் சொந்த தம்பியாலேயே அவரைப் பார்த்ததும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.  ஊரை விட்டு சென்று அவ்வளவு காலமாகிவிட்டது.   (இப்படிப்பட்ட தன்னலம் கருதாத வீரர்களின், மக்களின் போராட்டத்தில் தான் 1949ல்  மக்கள் சீனம்  விடுதலையடைந்தது)  அன்றிரவே “உடனே கிளம்பி வாருங்கள்” என அவருக்கு உத்தரவு வருகிறது.. ஆர்வக் கோளாறில் இளைய தம்பியும் படைக்கு வர ஆசைப்படுகிறான். அண்ணன் மறுக்கிறார்.  ஆனால் அவரை விடாமல் பின் தொடர்ந்து அவனும் படையில் வந்து சேர்கிறான்.

இரண்டாம் உலகப்போரில் ஏகாதிபத்திய ஜப்பான் வீழ்ச்சியடைய, அதன் ஆக்கிரமிப்பில் இருந்த கொரியா விடுபடுகிறது.  ஜெர்மனியின் இட்லரை போரில் வீழ்த்திய ரசியா இந்த போரில் இரண்டு கோடி மக்களை இழந்தது.  ரசியா இப்பொழுது கொரியாவிற்கு உதவவே, முன்பு ”கம்யூனிச பூதத்தின்” பிடியில்  ரசியா, இப்பொழுது சீனா. அடுத்து கொரியாவா? என பதட்டத்தில் அமெரிக்கா கொரியாவை ஆக்கிரமிக்க வருகிறது.

சீன எல்லைகளை மீறியும் உள்ளே வந்து தாக்குதலை நடத்துகிறது.  சீன அரசின் உயர்மட்டக் குழு கூடுகிறது. தேச பாதுகாப்பிற்காக அமெரிக்காவை எதிர்த்து போரிடவேண்டும் என முடிவு செய்யப்படுகிறது.

மாவோவின் வீட்டில் இளைஞனாக இருக்கும் மாவோவின் இளைய மகனும் போர் முனைக்கு செல்ல ஆசைப்படுகிறார்.  ”ஏற்கனவே ஒரு பையன் இறந்துவிட்டார். இன்னொருவர் உடல் சுகமில்லாமல் இருக்கிறார். எஞ்சியிருப்பது நீ மட்டும் தான். ஆகையால் போகவேண்டாம்” என்கிறார் மாவோவின் நண்பர். தற்செயலாக  அங்கு வரும் மாவோ, “மக்களுக்கும் இதே கருத்தைத் தான் சொல்கிறோம். மீறி விருப்பப்படுவர்களை அனுமதிக்கலாம். அவன் விருப்பப்படி போர் முனைக்கு செல்லட்டும்” என்கிறார். அதற்கு பிறகான நாட்களில், போரில் சில ஆயிரம் இளைஞர்களில் ஒருவராக மாவோவின் மகனும் கொல்லப்படுகிறார். (சொத்துக்களை காக்க அரசியலில் வாரிசுகளை ஈடுபடுத்தும் நமது அரசியல் வாதிகளை ஒப்பிட்டு பாருங்கள்)

 

போர்முனைக்கு செல்ல அந்த ரயில் தயாராக இருக்கிறது. நூற்றுக்கணக்கான இளைஞர்களும், அதிகாரிகளும் ரயிலில் கிளம்புகிறார்கள்.   அந்த குறிப்பிட்ட இடத்தை அடைவதற்குள்ளேயே அமெரிக்காவின் வான்வழிப்படைகள் ரயிலை திடீரென தாக்குகிறார்கள்.  சிலர் இறக்க, கையில் கிடைத்ததை வைத்து பலர் அந்த கடுங்குளிரில் நடந்தே முன்னேறுகிறார்கள். அமெரிக்காவின் நவீன துப்பாக்கிகளை, பீரங்கி டாங்குகளை சீனாவின் வீரர்கள் எதிர்கொள்கிறார்கள். கடுமையான சண்டை. பல உயிரிழப்புகள். இறுதியில் என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

 

கொரிய போர் 1950ல் துவங்கி, 1953 வரை நடைபெற்றது. அதற்கு பிறகு போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் சண்டை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கு வரைக்கும் அந்த சண்டை நீடித்துக்கொண்டே இருப்பதை தான் தொடர்ந்து வரும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.  இந்த போரில் மட்டும் 25 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக பிபிசி தனது கட்டுரையில் தெரிவிக்கிறது.  முதலாளித்துவ நாடுகள் தங்களுடைய சந்தைக்கு நாடு பிடிக்கும் சண்டைகள் தாம் முதலாம் உலகப்போரும், இரண்டாம் உலகப்போரும்! இதில் கோடிக்கணக்கான உயிர்களை பலி வாங்கின. நாடுகளிடையே, மனிதர்களிடையே சமத்துவம் விரும்பும் கம்யூனிசம் போரை வெறுக்கிறது. ஆனால், சந்தைக்காகவும், கொள்ளைக்காகவும் முதலாளித்துவம் சண்டைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. மூக்கு இருக்கும் வரைக்கும் சளி இருக்கும் என்பது போல முதலாளித்துவம் இருக்கும் வரைக்கும் போர் அச்சமும், கடுமையாக இழப்புகளும் இருந்துகொண்டே தான் இருக்கும்.

சீனாவின் கம்யூனிச கட்சி துவங்கி 100 ஆண்டு நிறைவில் இருக்கிறது. உழைக்கும் மக்கள் உலகம் முழுவதும் இந்த நாளை நினைத்துப் பார்க்கிறார்கள். ஆனால், சீனா பல இலட்சக்கணக்கான தோழர்களின், மக்களின் தியாகம், அர்ப்பணிப்பு, இழப்புகளுக்கு பிறகு 1949ல் மக்கள் சீனாவாக விடுதலையடைந்தது..  மாவோவின் இறப்புக்கு பிறகு சீனாவை முதலாளித்துவ பாதைக்கு திருப்பிவிட்டுவிட்டார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் மெல்ல மெல்ல உற்பத்தியை பெருக்கி, இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி சந்தையை விரிவாக்கிவிட்டார்கள்.  அத்தோடு கூடவே அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுடன் போட்டிப்போட்டுக் கொண்டு, தன்னையும் ”வல்லரசாக” தயார் செய்து கொண்டு வருகிறது. நிலைமை இப்படி இருக்கும் பொழுது, கம்யூனிஸ் கட்சியின் துவக்கத்தை கொண்டாடும் விதத்தில் பல கோடி பொருட்செலவில் படத்தை எடுத்து இருப்பது இப்போதைய சூழ்நிலையில் தன்னுடைய நலன்களுக்காக தான் என்பது வெளிப்படை.

 

படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு, சீனாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. ரசியா, தென்கொரியா, வடகொரியா, மலேசியா, ஜப்பான் என பல நாடுகளில் அந்தந்த நாடுகளின் அரசியல் நிலைக்கு தக்கவாறு ஆதரித்தோ, தாக்கியோ கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.  மலேசியாவில் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை தடை செய்திருக்கிறார்கள்.

 

சீனாவோடு இந்தியா எல்லை பிரச்சனையில் முரண்படும் வேளையில் அநேகமாக இந்தியாவிலும் தடை செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் எல்லைகளை எல்லாம் அழித்து நிதி மூலதனம் உலகை சூறையாடி வருகிறது.  இந்தியாவிலும் கார்ப்பரேட் கும்பல்களும், ஏகாதிப்பத்தியங்களும் தங்கு தடையின்றி, ஆட்சியதிகாரத்தில் உள்ள காவி கும்பல்களின் முழு ஆதரவுடன் சட்டப்பூர்வமாகவே கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் பொழுது எல்லைத் தகராறு, குறிப்பிட்ட பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டார்கள் என சண்டை, சச்சரவுகள் என பரபரப்பாக செய்திகளைச் சொல்லும் பொழுது சிரிப்புத்தான் வருகிறது. இதையே காரணமாக வைத்து, தேசப் பக்தியை தூண்டி, ஒவ்வொரு ஆண்டிலும் இராணுவ ஆயுத தளவாடங்கள் வாங்க மிகப்பெரிய பட்ஜெட்டை ஒதுக்குவதும், அதை தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் மறைப்பதும், அந்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு அடியாள் வேலை செய்வதும், மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஒதுக்கப்படும் மான்யங்களை கணிசமாக வெட்டிக்கொண்டே செல்வதும் அநியாயத்திலும் அநியாயம்.