> குருத்து: November 2009

November 26, 2009

தேசம் கடக்கும் முதலாளிகளும் தற்கொலையால் சாகும் விவசாயிகளும்!


பாட்ஷா படத்தில் ஒரு காட்சி!

மாணிக்கத்திற்கும் (ரஜினி) அப்பாவிற்கும் (விஜயகுமார்)க்கும் உரையாடல்.

"ஏதோ நீ என் பிள்ளைன்றதால தப்பிச்சே!"

பதறிப்போய், ரஜினி "அப்ப அனவர்?" என்பார்.

'அவ்வளவு தான்" என வார்த்தையை முடிக்கிற பொழுது....

அன்வரை சுற்றி நின்று வில்லனின் ஆட்கள் கொடூரமாக வாளால் வெட்டிக்கொண்டிருப்பார்கள்.

நிற்க!

***

அன்வரை போல அநாதையாய், இந்திய அரசால் கைவிடப்பட்டவர்களாய் இந்த நாட்டின் விவசாயிகள் கொத்து கொத்தாக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். (மறைமுகமாக) கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்)

இந்நாட்டில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகள் அமுல்படுத்த துவங்கி 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவிட்டன. கடந்து வந்த பாதையெங்கும் விவசாயிகளின் பிணங்கள். (அரசு தரப்பே 1 லட்சத்திற்கும் மேலாக தற்கொலை என ஒப்புக்கொண்டுள்ளது - 8 மணி நேரத்திற்கு 1 தற்கொலை).

இந்த ஆண்டில் நவம்பர் இன்றைய தேதி வரைக்கும் 892 விவசாயிகள் தற்கொலை. மராட்டியத்தின் விதர்பா மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 6 பேர் தற்கொலை (தினமணி - 27/11/2009 - பக். 10)

மரபணு மாற்ற விதைகள், உரங்களின் கட்டுபடியாகாத விலை, அரசு கடன், அதன் மீதான வட்டி, கந்து வட்டி கும்பலிடம் கடன், இப்படி பல மலைகளை கடந்து, விளைச்சல் விளைந்து, துன்பம் தொலையும் நினைக்கும் பொழுது, பருவநிலை மாற்றம், விளைச்சல் பல்லிளிப்பது, விளைச்சல் வந்தாலும், உரியவிலை கிடைக்காதது என்பதில் விவசாயிகள் துவண்டு போகிறார்கள்.

இதே இந்தியாவில், இன்னொரு புறம், தரகு முதலாளிகளின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. காரணம் - அரசு இவர்களை செல்லப்பிள்ளையாக நடத்துகிறது.

கடந்த பல ஆண்டுகளாக பெருமுதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடன் 'வராக்கடன்' என தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் ஜப்தி, கைது நடவடிக்கைகளை தரகு முதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக அரசு எடுக்க மறுக்கிறது.


39000 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி, 20000 கோடி ரூபாய் சுங்கவரி, கலால் வரி, சேவை வரி என நிலுவையாக உள்ளதை அரசு கறாராக வசூலிக்க மறுக்கிறது.

இது தவிர, (2007 - 08) கார்ப்பரேட் வரி, கலால் வரி, சுங்க வரி என பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வரியில் 2.3 லட்சம் கோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மொத்த வரியில் இதன் பங்கு 50%. மேலும், 42100 கோடி வருமான வரியை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறடு.

இப்படி அரசு செய்கிற தள்ளுபடிகள், மானியங்கள், சலுகைகள், தன் தொழிலில் வருகிற வருமானம், வெளிநாட்டு கடன் என எல்லாம் சேர்ந்து, கடந்த சில ஆண்டுகளில், தரகு முதலாளிகள் வெளிநாட்டு நிறுவனங்களை நாளும் வாங்கி குவித்து, தேசங்கடந்த தரகு முதலாளிகளாக பரிணாமம் பெற்றிருக்கிறார்கள்.

டாட்டா குழுமம் கோரஸ் உருக்காலையை (13000 கோடிக்கு) வாங்கியிருக்கிறது. இது தவிர, டாட்டா குழுமத்திற்கு இங்கிலாந்தில் மட்டும் 18 நிறுவனங்களை வாங்கியிருக்கிறார்கள். பிர்லா குழுமத்திற்கு ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இரும்பு தாது சுரங்கங்கள் இருக்கின்றன.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, விவசாயிக்கு வட்டியை தள்ளுபடி செய்தாலோ, கடன் தள்ளுபடி செய்தாலோ இங்குள்ளவர்கள் முனகுகிறார்கள். அரசுக்கு இதே வேலையா போச்சு! என சலித்துக்கொள்கிறார்கள். அறியாமை கூட வன்முறை தான்.

தொடர்புடைய சுட்டிகள் :

2 ஆண்டில் 143 அமெரிக்க நிறுவனங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கி சாதனை - தமிழ் தேசம்

Tata steel gets corus boost, net at Rs. 12322 Cr. - Financial Express


One Farmer's sucide Every 30 minutes - பத்திரிக்கையாளர் சாய்நாத்

November 25, 2009

கானிகோசென் - அதிகம் விற்கும் மார்க்சிய நாவல்! விரும்பும் படம்!


அமெரிக்காவிற்கு அடுத்து மிகப்பெரிய பொருளாதார நாடு ஜப்பான். 1995ல் குமிழி பொருளாதாரம் ஜப்பானில் வெடித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பங்கு சந்தை குறியீட்டு எண்கள் சட சடவென சரியத் துவங்கின. (20000 புள்ளிகளுக்கும் மேலாக). சிறிசும், பெரிசுமாய் பல வங்கிகள் ஆயிரக்கணக்கில் திவாலாகின. நிறுவனங்கள் மஞ்சள் கடுதாசியை வரிசையில் நின்று கொடுத்தன.

பொருளாதார சரிவிலிருந்து மீட்க... ஜப்பான அரசு வங்கி விகிதத்தை குறைத்துப் பார்த்தது. ஆயிரக்கணக்கான கோடிகளில் மக்களின் வரிப்பணத்தை அரசு பங்குச் சந்தையில இறக்கி பார்த்தது. அமெரிக்க அரசைப் போல திவாலான முதலாளிகளை காப்பாற்ற அள்ளிக்கொடுத்தது. நிலைமையிலிருந்து மீள்வதற்குள் உலக பொருளாதார மந்தத்தில் ஜப்பான் மாட்டிக்கொண்டது.

இதுநாள்வரை ஜப்பானில் இருந்து தொழிலாளர்களை சுரண்டி கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்கள், நெருக்கடியில் மாட்டியுள்ள ஜப்பானை கண்டுகொள்ளாமல், அடுத்து மலிவுவிலை உழைப்புச் சந்தையான சீனாவிற்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜப்பானில் நிரந்தர தொழிலாளர்களை லட்சகணக்கில் வீட்டிற்கு அனுப்புகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களை அதிகமாக்கி கொண்டே போகிறார்கள். (650 லட்சம் தொழிலாளர்களில் 200 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள்) . ஜப்பானிய தொழிலாளர்கள் இன்றைக்கு வேலைக்காக சீனாவுக்கு போகிறார்கள். மன அழுத்தம், நோய்க்கு வைத்தியம் பார்க்க முடியாத வசதியின்மை, கடன் தொல்லை போன்ற காரணங்களால்... ஆண்டுக்கு 33500 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.(தினமலர் - ஆக. 2008) சராசரியாக தினம் 100 பேர். தற்கொலையில் உலகத்தில் முதலிடம். வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடும் ஜப்பான் தான்.

ஜப்பானில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், நிதிமூலதன கும்பலகள்
மக்களின் சேமிப்புகளை கைப்பற்றி, பங்குச்சந்தையில் கொட்டு, எங்களுக்கு கொடு என ஜப்பான் அரசை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். உலகில் அதிகம் சேமிப்பவர்கள் ஜப்பானியர்கள் தான்.

ஜப்பான் மக்கள் முதலாளித்துவத்தை நம்பினார்கள். தொழிற்சங்கங்களில் இணைவது சொற்பமானார்கள் தான். முதலாளிகளோ பலமுறை கழுத்தறுப்பு செய்தார்கள். கம்பி நீட்டினார்கள். இன்றைக்கு, அரசிடம் காப்பாற்ற சொல்லி, கையேந்தி நிற்கிறார்கள்.

இனி முதலாளித்துவத்தை நம்பி பயனில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இன்றைக்கு ஜப்பானில் அதிகம் விற்கும் நாவல் 'கானிகோசென்" என்ற நாவல். 6 லட்சம் பிரதிகளூக்கும் மேல் விற்பனையாகியிருக்கிறது. 1929ல் வெளிவந்தது. இதை எழுதியவர் டகீஜீ கோயாஷி என்னும் கம்யூனிஸ்ட். தனது 29வயதிலேயே காவல்துறையின் சித்தரவதையால் கொல்லப்பட்டவர்.

நாவல், ஒரு கொடூரமான கப்பல் தலைவனின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தம் செய்ய விழைவதைப் பற்றியது. முதலாளித்துவத்தையும், அதன் பெருமுதலாளிகளையும் வெல்ல அவர்கள் சபதமேற்பதே அந்நாவலின் முடிவு

இந்நாவலை 1953லும், 2007 லிலும் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த பூஷன் திரைவிழாவில் திரையிட்டிருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் மார்க்ஸின் "மூலதனத்தை" புரட்டுகிறார்கள். ஜப்பானில், கம்யூனிசத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள். மார்க்ஸிற்கு மறைவில்லை.


தொடர்புடைய சுட்டிகள் :


அதிக அளவில் விற்பனையாகும் புத்தகங்கள் வரிசையில் மார்க்சிய நாவல் - இனியொரு

கானிகாசென் - விக்கிபீடியா

கானிகாசென் - திரைப்பட விமர்சனம்

தொழிலாளர்கள் பற்றிய இலக்கியங்கள்

November 22, 2009

பொருளாதாரம் - சில குறிப்புகள்

பொருளாதார சமச்சாரங்கள் மற்ற துறை சமாச்சாரங்களை போல நாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், பொருளாதார சமச்சாரங்கள் தான் நாட்டின் போக்கை தீர்மானிப்பதாக இருக்கின்றன.

பொருளாதார செய்திகளை பல தளங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பொருளாதார விசயங்களை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ள கூடிய கட்டுரைகள் தமிழில் கிடைப்பது அரிதாக தான் இருக்கிறது.

இதற்கு முன்பாக பொருளாதாரம் தொடர்பாக, கட்டுரைகள் எழுதப்பட்ட பொழுதும், வேறு சில பதிவர்கள் எழுதிய கட்டுரைகளையும் நன்றி சொல்லி வெளியிட்ட பொழுதும், எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாகவும் நண்பர்களும், தோழர்களும் தெரிவித்திருந்தார்கள்.

குருத்து தளத்தில் அரசியல், திரைப்படம், பண்பாடு என தலைப்புகளில் எழுதினாலும், கூடுதலாக பொருளாதார விசயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன். (நமக்கு எது உருப்படியாக வருகிறதோ அதையே செய்வோம் என்ற நல்லெண்ணம் தான்) உங்கள் கருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள். முடிந்தமட்டிலும் சுவாரசியமாக படிக்கும் விதங்களில் எழுத முயற்சிக்கிறேன்.

கட்டுரைகளின் தலைப்புகளை கிளிக்கினால், அந்தந்த கட்டுரைகளுக்கு இட்டுச்செல்லும்.

கடந்த பதிவுகளில்... எழுதப்பட்ட பொருளாதார கட்டுரைகள்:

* பணவீக்கம் என்றால் என்ன? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

* வறுமைக்கோடு என்றால்? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

* அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி - புதிய ஜனநாயகம்

* முதலாளித்துவ பொருளாதாரம்

* பங்குச்சந்தை சூதாட்டம்

* பங்கு சந்தையும் குரங்கு கதையும்

* டாலர் யானை புகுந்தாலும் நட்டம்; வெளியேறினாலும் நட்டம்

* ஊக வணிகம் - பந்தய ஒப்பந்தங்கள் என்றால்?

* கொள்ளையடிப்பது நிதிமூலதன கும்பல்கள்! பரிதவிப்பது தொழிலாளர்கள்!

* பந்தய ஒப்பந்தங்கள் - சில குறிப்புகள்

* பெட்ரோலில் முடிந்தமட்டும் கொள்ளையடி! - பதிவர் லைட்ங்க்

* என்ரான் ஊழல் - அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்!

* பந்தய ஒப்பந்தங்களின் தன்மை

* இந்திய வளர்ச்சியின் உண்மைநிலை - டாக்டர் அர்ஜூன் சென்குப்தா - மொழிபெயர்ப்பு - லைட்ங்க்

*. அந்நிய முதலீடு - சில குறிப்புகள் - பதிவர் லைட்ங்க்

* அமெரிக்க திவால் - பொன் முட்டை இடும் வாத்து" திட்ட ஊழல்

* அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் - புதிய ஜனநாயகம்

* முதலாளித்துவம் ஆளும் தகுதியை இழந்துவிட்டது.

* அமெரிக்க திவால் - மார்க்சியமே உரைகல் - புதிய ஜனநாயகம்

* சத்யம் கம்யூட்டர்ஸ் - இன்னொரு என்ரான் ஊழல்

* கார்ப்பரேட் கிரிமினல்கள் - பதிவர் லைட்ங்க்

* பற்றி பரவுகிறது வர்க்கப் போராட்டம், அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்.

* நான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால் - தட்ஸ்தமிழ்

* காங்கிரசு அரசின் புள்ளிவிவர பித்தலாட்டங்கள் - பதிவர் லைட்ங்க்

* பணவீக்கமும், பொருளாதார வீழ்ச்சியும்

* பணவீக்கமும், பொருளாதார வீழ்ச்சியும் - பாகம் 2

* தங்கம் விலை எகிறுவது ஏன்? -பாகம் 1 - டிமேட் அக்கவுன்ட் என்றால்? - தினமணிக்கதிர்

* தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 2 - தங்கம் எதற்காக? - செல்லமுத்து குப்புச்சாமி - உயிர்மை

* தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 3 - தங்கம் எதற்காக? கட்டுரையின் தொடர்ச்சி - செல்லமுத்து குப்புச்சாமி - உயிர்மை

November 21, 2009

தொழிலாளர்கள் பற்றிய இலக்கியங்கள்


"குறைந்த உழைப்பு, நிறைய பணம்" - ஈஸி மணி என்னும் கலாச்சாரம் சென்னை மாதிரி பெருநகர சூழலில் மனிதர்களை பிடித்திருக்கும் ஒரு வியாதி. இந்த நாட்டில் இப்படியெல்லாம் சிந்திக்க தெரியாத மனிதர்கள் காலம் காலமாக கடுமையாக உழைத்து, இந்த நாட்டை தாங்கி பிடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரமும், அவலமும் இருக்கிறது. இன்றைக்கு சென்னையில் மிகப்பெரிய கட்டிடங்கள் பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது. அந்த கட்டிடங்களை உருவாக்குவதற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவும் பகலுமாய் வேலை செய்கிறார்கள். அங்கு அடிப்படை வசதியான கழிவறை வசதி இருக்காது. நல்ல குடிநீர் கூட இருக்காது. ஒவ்வொரு கட்டிடமும் கட்டி முடிக்கும் பொழுது, குறைந்த பட்சம் ஒரு தொழிலாளியாவது மண் மூடியோ, மேலிருந்து கீழாக விழுந்தோ, மின்சாரம் பாய்நதோ பலியாகியிருப்பார். நம்மில் எத்தனை பெருக்கு தெரியும்?

10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசியாவில் கைத்துண்டு உற்பத்தியில் பெரும்பான்மை பங்கு வகித்த பகுதி மதுரையில் செல்லூர் பகுதி. அந்த சமய்த்தில் தினமணியின் வணிகமணியில் இது குறித்து சிறப்பு கட்டுரை ஒன்று வெளிவந்தது. உலகுக்கு கைத்துண்டு கொடுத்த அந்த கைத்தறி தொழிலாளர்களின் வீட்டில் நல்ல துண்டு வீட்டில் இருக்காது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

தமிழகத்தில் வேலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மற்றும் சென்னை குரோம்பேட்டை - நாகல்கேணி பகுதிகளில் தோல் பதனிடும் தொழில் நடைபெறுகிறது. 50000 தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். தோல்களை பதப்படுத்துவதற்காக அமிலம், ரசாயன உப்பு பயன்படுத்தப்படுவதால்... கை, கால்களில் புண்கள், கொப்பளம் ஏற்பட்டு மாதக்கணக்கில் புரையோடி போவதும், சில சமயங்களில் உறுப்புகள் வெட்ட்டி எடுக்கப்படுவதும் சகஜமாக உள்ளது. தோல் நோய் இல்லாதவரை காண்பது அரிது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதுவரை அறியாமல் இருந்தது போகட்டும். இனி அறிந்து கொள்ளலாம். தொழிலாளர்களை நெருக்கமாக அறிந்து அவர்களின் துயரங்களை சில நாவல்கள், சில கவிதைகள், சில கட்டுரைகள் சொல்ல முயற்சிக்கின்றன. நான் அறிந்த சில நாவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டதால், சில குறிப்புகள் மட்டும் தருகிறேன். இதுபோல நீங்களும் அறிமுகப்படுத்துங்கள்.

படித்த நாவல்கள் :

* பஞ்சும் பசியும் - 1950 -களில் தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய நாவல்களில் ஒன்று. திருநெல்வேலி மாவட்ட நெசவாளர்களை பற்றிய நாவல். தமிழில் யதார்த்தவாத நாவலில் முதல் நாவல் என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தேன். கதையின் போக்கு, கதாபாத்திரங்கள் பழைய தமிழ் படம் பார்த்தது போல இருந்தது.

* உப்பு வயல் - ஸ்ரீதர கணேசன் எழுதிய நாவல். தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளகத் தொழிலாளர்கள் பற்றிய வாழ்க்கைப் பற்றிய கதை. சிபிஐ அல்லது சிபிஎம் வட்டத்திலிருப்பவர் என நினைக்கிறேன். நாவலில் இறுதி காட்சி தாய் நாவலில் வரும் இறுதி காட்சியை காப்பியடித்திருப்பார்.

* நிழல் முற்றம் _ பெருமாள் முருகன் எழுதிய நாவல்களில் ஒன்று. திரையரங்கில் பணிபுரியும் இளைஞர்களைப் பற்றியது. கொஞ்சம் விவரமாக அறிய இங்கு சொடுக்கவும்.

* தாய் - ருசிய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய உலக புகழ்பெற்ற நாவல் இரண்டு பாகங்களை கொண்டது. முதல் பகுதி ஆலைத்தொழிலாளர்களின் வாழ்க்கைப் பற்றியது. இரண்டாம் பகுதி - விவசாயிகளைப் பற்றியது. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களில் முதலிடம் என படித்திருக்கிறேன்.

இன்னும் படிக்காத நாவல்கள்


* கல்மரம் - திலகவதி எழுதிய நாவல். கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய நாவல். படித்தவர்கள் எப்படி இருக்கிறது என சொன்னால், நன்றாக இருக்கும்.

* எரியும் பனிக்காடு - பி.எச். டேனியலால் எழுதப்பட்ட நாவல். வால்பாறை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றிய நாவல். எஸ். இராமகிருஷ்ணன் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். இங்கு சொடுக்கவும்.

* சுரங்கம் - கு.சின்னப்ப பாரதி எழுதிய நாவல். கல்கத்தா நிலக்கரிச் சுரங்கங்கள், அவற்றில் பணி செய்யும் தொழிலாளர்கள் வாழ்க்கை அவலம் பற்றிய நாவல்.

கவிதைகள்

* பூக்காயம் - துரை. சண்முகம் எழுதிய கவிதை.


பூக்கட்டும் தொழிலாளியின் சிரமங்களை சொல்லும் அருமையான கவிதை. இங்கு சொடுக்கவும்.

கட்டுரைகள்

* ஓனிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளிகளைப் பற்றிய கட்டுரை. - புதிய கலாச்சாரத்தில் வெளிவந்தது. படியுங்கள். இங்கு சொடுக்கவும்.

* 30 ரூபாய் கூலிக்காக நாளொன்றுக்கு 150 கீ.மீ ரயில் - சிறு நகரத்திலிருந்து கிராமம் நோக்கி வேலை தேடிப்போகும் விவசாய கூலி தொழிலாளர்களின் அவலத்தைப் பற்றிய பத்திரிக்கையாளர் சாய்நாத் எழுதிய கட்டுரை. இங்கு சொடுக்கவும்.

****

* நான் எழுதியிருப்பது எல்லாம் ஒரு அறிமுகத்திற்காக தான். இதை விட நீங்கள் நிறைய படித்திருக்க கூடும். பின்னூட்டங்களில் அறிமுகப்படுத்துங்கள்.

November 18, 2009

காவல்நிலையங்களின் தரம் - "ஏ" கிரேடு யாருக்கும் கிடைக்கவில்லை!

சென்னையில் இருக்கும் காவல்நிலையங்களின் தரம் பற்றி அறிய துறைவாரியான ஆய்வுக்கு கமிசனர் ராஜேந்திரன் ஓர் ஆய்வு ஒன்றை நடத்தி இருக்கிறார். முதலில் காவல்நிலையங்களில் உள்ள செயல்பாடுகளை 23 வகைகளாக பிரித்திருக்கிறார்கள். பிறகு, துணை கமிசனர்கள் தனக்கு கீழ் இயங்கும் காவல்நிலையங்களுக்கு பணிகளின் தரம் குறித்து, நேரடியாக சென்று ஆய்ந்து (!) மார்க் போட்டிருக்கிறார்கள். பிறகு, இணை கமிசனர்களும் மார்க் போட்டிருக்கிறார்கள்.

எல்லா ரிப்போர்ட்டுகளும் ஒன்றாய் சேர்த்து பார்த்தால், மொத்தம் 104 நிலையங்களில் "ஏ" கிரேடு எந்த காவல்நிலையத்துக்கும் கிடைக்கவில்லை. "பி" கிரேடு 22 காவல் நிலையங்களுக்கு கிடைத்திருக்கின்றன.
மற்றவையெல்லாம் "சி" கிரேடுகள். 104க்கு 22 தேறுகிறது என்றால்... சதவிகித அடிப்படையில் 21%. அப்படின்னா பெயில். எல்லா இன்ஸ்பெக்டர்களையும் நேரடியாக அழைத்து, கமிஷனர் (என்ன இப்படி மானத்தை வாங்கிட்டீங்க என!) அட்வைஸ் செய்கிறாராம். இனி, தரத்தை உயர்த்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம்.

இந்த நாட்டில், சட்டங்களை மீறுவது யார் என பட்டியலிட்டால்... அதில் முதலிடத்தை பெறுவது காவல்துறையாக தான் இருக்கும். ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் விசுவாசமாய் நடப்பது, பாவப்பட்ட தொழிலாளி ஏதேனும் புகார் கொடுக்க போனால், டீ வாங்கி வா! ஒரு குயர் பேப்பர் வாங்கி வா! என விரட்டுவதும். புகார் கொடுப்பவரிடம் காசு வாங்குவது, புகார் கொடுக்கப்பட்டவரிடமும், மிரட்டி காசு பிடுங்குவது, சட்ட விரோதமாக இரண்டு தரப்பினரையும் வைத்து கட்டபஞ்சாயத்து செய்து அநியாய தீர்ப்பு வழங்குவது, கைதிகளை சட்டவிரோதமாக அடிப்பது, உதைப்பது, தன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், டாஸ்மார்க் பாரிலிருந்து, தரையில் பரிதாபமாய் கடை விரித்திருக்கும் பாட்டி வரைக்கும் மிரட்டி மாமூல் வாங்குவது, ஏதேனும் போராட்டமென்றால், உடனே ஆஜராகி, துவைத்தெடுப்பது, பெண்கள் புகார் கொடுக்கப்போனால், அவர்களை பலாத்காரம் செய்வது. (இதற்காக தான் மொத்தம் 104 காவல் நிலையங்களில் 18 மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன) என மக்கள் விரோத, அராஜக செயல்களை செய்வதில் நம்பர் ஒன்னாக இருப்பது காவல்துறை தான். இதெல்லாம் கற்பனையாக சொல்லவில்லை. தினசரி செய்திகளில் மலிவாக கிடைக்கும் செய்திகள் தான். நிலைமை இவ்வாறு மோசமாக இருக்க, எப்படி "ஏ" கிரேடு கிடைக்கும்?

துறைவாரியாக அந்தந்த துறை நிர்வாகம் செய்யும் துணை கமிஷனர்கள் மார்க் போட்டதால் தான், 22 காவல்நிலையங்களுக்காகவாவது "பி" கிரேடு கிடைத்திருக்கிறது. மனித உரிமை அமைப்பு மற்றும் வேறு துறை சார்ந்த நபர்களை குழுவாக நியமித்திருந்தால், எந்த காவல் நிலையத்துக்கும் "சி" கிரேடு கூட கிடைத்திருக்காது.


செய்தி ஆதாரம் : தினத்தந்தி, 19/11/2009 இதழில்

November 12, 2009

தங்கம் - விலை எகிறுவது ஏன்? - பாகம் 3



குறிப்பு : தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே வருவதில், பல காரணிகள் இருக்கின்றன. அதில் தங்கம் எதற்காக என்று கேள்வி எழுப்பி, கட்டுரையில் பதிலளித்திருக்கிறார் செல்லமுத்து குப்புச்சாமி. இந்த கட்டுரை உயிர்மை தளத்தில் வெளிவந்தது. முதல் பகுதியை இரண்டாம் பாகத்தில் பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியைப் படித்து விட்டு தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

****

தங்கம் எதற்காக? - செல்லமுத்து குப்புச்சாமி

உதிரித் தகவல்.

- பெரும்பாலான தங்க வயல்கள் ஒரு டன் தாதுவிற்கு 1 முதல் 5 கிராம் வரை தங்கம் கொண்டிருக்கின்றன. அதாவது பத்து இலட்சம் துகள்களில் 1 முதல் 5 துகள்கள் தங்கமாக இருக்கலாம். இதெல்லாம் மண்ணில் உள்ள தங்கம். கடல் நீரில்கூடத் தங்கம் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு? ஆயிரம் கோடியில் ஒன்றிரண்டு பங்கு தங்கம் அதில் செறிந்திருக்கிறது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு கடல் நீரில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும் முயற்சி Fritz Haber என்ற விஞ்ஞானியின் முயற்சியால் ஜெர்மனியில் நடந்தது. பொருளாதாரச் சாத்தியமின்மை காரணமாக அது கைவிடப்பட்டது.

- தங்கம் பாதரசத்தைத் தவிர வேறு எதிலும் கரையாது. அதனோடு கலக்கப்படும் வெள்ளி முதலிய உலோகங்கள் நைட்ரிக் அமிலத்தில் கரையும். எனவே அந்த அமிலத்தில் தங்கத்தை கரைத்துப் பார்த்தால் சுத்தத் தங்கம் போக மற்றதெல்லாம் கரைந்து போகும். கரையாமல் அப்படியே இருந்தால் அது சுத்தத் தங்கம். இதனை 'அமிலப் பரிசோதனை' (acid tect) என்கிறார்கள். தனி மனிதனோ அல்லது நிறுவனங்களோ பெரிய சிக்கலை எதிர்நோக்கும் போது அதை acid test என்று வேடிக்கையாகவும் சொல்வதுண்டு, தீக்குளித்து தன் பரிசுத்தத்தை நிரூபித்த சீதையை நாம் அடிக்கடி உதாரணத்திற்கு இழுப்பது போல.

*********************

அதிகமாக உற்பத்தி செய்வது தென்னாப்பிரிக்காவாக இருக்கலாம். அதிகம் வைத்திருப்பது அமெரிக்காவாக இருக்கலாம். ஆனால் ஆபரணத்திற்காக அதிகம் பயன்படுத்துவது இந்தியாவே! நமது வருடாந்திய கோல்டு ஜூவல்லரி சந்தையின் மதிப்பு ரூ 50,000 கோடிக்கு மேல். உலக
அரங்கில் எந்த நாட்டிலும் இந்த அளவிற்குக் கிடையாது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒட்டு மொத்தத் தங்கத்தின் அளவைக் கணக்கில் கொண்டால் ரிசர்வ் வங்கி வைத்திருப்பதைவிட, அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி வைத்திருப்பதைவிட நம் மக்களிடம் அதிகமாக இருந்தாலும் வியப்படைவதற்கில்லை.

சுத்தத் தங்கத்தை அப்படியே நகை செய்யப் பயன்படுத்த முடியாது. தங்கத்தின் தரத்தை 'காரட்' கணக்கில் குறிக்கிறோம். 24 காரட் என்றால் முழுக்க முழுக்க தங்கம். ஆனால் அதன் கடினத்தன்மை குறைவு என்பதால் தாமிரம் அல்லது வெள்ளி போன்ற உலோகங்களைக் கலந்துதான் ஆபரணம் செய்கிறார்கள். அப்போது அது 22, 20, 18 காரட் என்றாகும். 18 காரட் தங்கம் என்றால், 24 கிராம் எடையில் வெறும் 18 கிராம் மட்டுமே தங்கம். மிச்ச 6 கிராம் வேறு ஏதாவது இருக்கும். அதனால்தான் சுத்தத் தங்கத்திற்கும், ஆபரணத் தங்கத்திற்கும் விலை வித்தியாசம் உள்ளது. காரட் குறையக் குறைய விலையும் குறையும்.

பெரும்பாலான ஜூவல்லரி கடைகளில் நகை வாங்கும் போது நம்மால் தங்கத்தின் தரத்தை - அதாவது காரட் அளவை - பரிசோதனை செய்ய முடியாத நிலையே நிலவுகிறது. ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளம். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்குப் பதிலாக தங்கத்தில் போட்டு சேமிக்கலாம் என்று நினைக்கும் போது குருட்டாம் போக்கில் ஏதாவது கடையில் நகையாக வாங்கும் போது செய்கூலி மற்றும் சேதாரத்தில் பெருமளவு இழப்பது மட்டுமல்லாமல், வாங்குகிற நகை தரமானதா என்ற ஆபத்து இன்னொரு பக்கம். அதற்குப் பதிலாக 'பிஸ்கெட்' அல்லது 'காசு' வடிவத்தில் வாங்கிச் சேமிக்கலாம். அப்படிச் செய்யும் போது ஆபரணத் தங்கமாக இல்லாமல் சுத்தமான 24 காரட் தங்கமாக வாங்கிக் கொள்ளலாம். வங்கிகளேகூட பொற்காசுகளை விற்பனை செய்கின்றன. அவை நம்பகமானவை. கூடவே அத்தாட்சிப் பத்திரமும் பெறலாம். அஞ்சல் நிலையங்களில்கூடத் தங்கக் காசுகளை விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் ராசா அறிவிக்கிறாராம்.

மதிப்பு குறைந்து கொண்டே செல்லக் கூடிய முதலீடுகளில் இருந்து தற்காப்பதற்காகவும், பணவீக்கத்தைச் சமாளிப்பதற்காகவும் நமது செல்வத்தின் ஒரு பகுதியைத் தங்கத்தில் இட்டுச் சேமிப்பது சரியான அணுகுமுறைதான். அதே நேரம் ஆபரண வடிவத்தில் வாங்காமல் காசு வடிவத்தில் வாங்குவது புத்திசாலித்தனமான காரியம். ஆனால் அதற்கு உங்கள் மனைவி சம்மதிக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் பகுத்தறிவின் பயன்பாடு குடும்ப வாழ்க்கையில் இருப்பதே இல்லை அல்லவா?

"ஏங்க. ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் எல்லாமே கம்மி ஆகிருக்கு. பவுன் மட்டும் பத்தாயிரத்தில இருக்கு. கொறைஞ்சிருக்கிறத வாங்குவீங்களா இல்ல அதிகமா இருக்கறத வாங்குவீங்களா?" என்று மட்டும் கேட்கிற மனைவி உங்களுக்கு அமைந்தால், நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி!! தங்கம் போனால் போகிறது விடுங்கள்.

நன்றி : உயிர்மை

November 6, 2009

லெனின் மீண்டும் இளமையாகிவிட்டார்...

நன்றி : போராட்டம்


















அவதூறுகளின் குப்பைகளால்
மூடப்பட்டு கிடக்கின்றன
வரலாற்றின் பக்கங்கள்.
கண்களை திசை திருப்பலாம்,
காதுகளை செவிடாக்கலாம்.
காற்றை என்ன செய்வாய்?

இதோ,
திசைகளைக் கிழிக்கும்
காற்று வீசுகிறது!
மண்டி கிடக்கும் குப்பைகள்
பறந்து போகின்றன…
ஜாரின் அரண்மனையை
சுற்றி வளைத்த குரல்கள்
நியூயார்க்கில் ஒலிக்கின்றன…
இராக்கில் எதிரொலிக்கின்றன!
பணப்பெட்டிகள்கவிழ்ந்து விழ,
பல்லிளித்தவாறு நிற்கிறாய்!

“முதலாளித்துவம் ஒழிக!”
“கம்யூனிசமே வெல்லும்!”
உனது கோட்டைக்குள்ளேயே
முழக்கங்கள் அதிருகின்றன…
உலகெங்கும் எதிரொலிக்கின்றன!
கொக்கரித்த சிரிப்படங்கி
நீ முகம் சிவக்கிறாய்!
மேசைக்கடியில்
ஒளிந்து கொள்கிறாய்!
அவசரமாக ஆயுதங்களை
தொட்டுப் பார்க்கிறாய்…

நனவான கனவுகளின்
நீண்ட பாதையில்
சில மைல் கற்களை
நீ பெயர்த்தெடுத்திருக்கலாம்!
அவசரமாக அவற்றைகுழி
தோண்டி புதைத்திருக்கலாம்.
எனினும்,
முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
புதிய மைல்கற்கள்.நனவுகளை நொறுக்கலாம்.
கனவுகளை என்ன செய்வாய்!

இதோ,
எதிர்காலத்தின் கனவுகள்
எமது மக்களின் கண்ணீரிலிருந்தும்,
உனது கொலைவாட்கள் ருசித்த குருதியிலிருந்தும்,
விடை தேடும் எங்கள் வியர்வையிலிருந்தும்,
நொடிக்கொரு முறை அலை அலையாய்
எழுந்து ஆர்ப்பரிக்கின்றன…

எங்கள் போர் மீண்டும் துவங்குகிறது..
இதயங்கள் பலமாகத் துடிக்கின்றன..
லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்…
அக்டோபர் மீண்டும் மலர்கிறது…*




இக்கவிதை இன்று நவம்பர்-7, ரசியப் புரட்சி நாளையொட்டி எழுதப்பட்டுள்ளது.

* என்.டொப்ரொன்ரவோவ் எழுதிய பாடல் வரிகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 1927-ல் செர்கேய் ஐசன்ஸ்டீன் இயக்கிய ‘அக்டோபர்’ திரைப்படத்தில், ரசியப் புரட்சியின் நாட்களை உணர்வுபூர்வமாக விவரிக்கும் காட்சித் தொகுப்பிற்கு இப்பாடல் பயன்படுத்தப்பட்டது. அக்காட்சி தொகுப்பு மேலே தரப்பட்டுள்ளது. இப்படம் ஜான் ரீடின் “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” நாவலை அடிப்படையாகக் கொண்டது.

November 5, 2009

தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 2


முன்குறிப்பு : தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே வருவதில், பல காரணிகள் இருக்கின்றன. அதில் தங்கம் எதற்காக என்று கேள்வி எழுப்பி, கட்டுரையில் பதிலளித்திருக்கிறார் செல்லமுத்து குப்புச்சாமி. இந்த கட்டுரை உயிர்மை தளத்தில் வெளிவந்தது. படித்து விட்டு தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

//தக்காளி, வெங்காயத்தைப் போல தங்கத்தின் விலையை அதன் உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு தீர்மானிப்பதில்லை. தங்கத்தின் தேவை என்பது 'ஆபரணத்திற்கான பயன்பாடு' என்ற சங்கதியைச் சார்ந்தது மட்டுமல்ல. பல காரணிகள் அதைத் தீர்மானிக்கின்றன. சவரன் கணக்கில் நகை வாங்குவதெல்லாம் தாண்டி உலகத்தில் உள்ள எல்லா நாடுகளின் மத்திய வங்கிகளும் (நமது ரிசர்வ் வங்கியைப் போல) தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. //

****

தங்கம் எதற்காக? செல்லமுத்து குப்புசாமி

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வியாக்கியானம் சொல்லப்படுகிறது. விளைவுகளுக்கான காரணிகளும், காரணிகளினால் ஏற்படும் விளைவுகளும் புதிது புதிதாகக் கண்டறியப்படுகின்றன அல்லது புதுப்பிக்கப்படுகின்றன. மழை பெய்தால் சிமெண்ட் கம்பெனிகளின் இலாபம் குறையும்; வட்டி வீதம் அதிகரித்தால் வங்கிகளின் பங்குகள் சரியும்; கச்சா எண்ணெய் விலை ஏறினால் ஷேர் மார்க்கெட் சறுக்கும். இப்படியெல்லாம் ஒவ்வொருவர் மீதும் ஒரு கற்பிதம், ஒரு வாய்ப்பாடு சுமத்தப்படுகிறது. அல்லது அது மாதிரியான கற்பிதத்தை அவர்களே விரும்பி ஏற்றுக்கொண்டு தமக்கும் பண்டிதத்தனம் வந்து விட்டதாகக் கருதுகிறார்கள்.

கச்சா எண்ணெய்க்கும், உலகலாவிய பங்குச் சந்தைகளுக்கும் எதிர்மறையான நிரந்தரத் தொடர்பு இருப்பதாக நம்பப்பட்டது. அப்படியே நடக்கவும் செய்தது. ஆனால் பங்குச் சந்தை, கச்சா எண்ணெய், ரியல் எஸ்டேட் என யாவும் ஒரு சேரக் குறைவதுகூடச் சாத்தியமே என்று கணித்தவர்கள் வெகு சிலரே. அப்படிப்பட்ட சூழலே பொருளாதாரத் தேக்கம் அல்லது பின்னடைவு என உருமாற்றம் கொள்கிறது, தற்போதைய சூழலைப் போல. எல்லாமே ஒரு சேரச் சரிந்தாலும் தங்கம் மட்டும் ஸ்டெடியாக நிமிர்ந்து நிற்கிறது.

இந்த உலகத்திலேயே உபயோகம் மிகுந்த உலோகங்களைப் பட்டியலிட்டால் அதில் இரும்பு அதிமுக்கியமான இடத்தைப் பெறும். உபயோகம் இல்லாத உலோகங்களைப் பட்டியலிட்டால் அதில் தங்கத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. இருந்தாலும் அதற்கு ஏகப்பட்ட கிராக்கியும், மதிப்பும் வாய்க்கிறது. துருப்பிடிக்காத, ஜொலிப்பான, அடர்த்தியான உலோகமாக அனைவரையும் ஈர்க்கிறது. பன்னெடுங்காலமாக செல்வத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முதலீடு செய்வதற்கு ஏதுவான அனைத்து உபகரணங்களோடும் ஒப்பிடப்படும் ஒரு பொருள் உண்டென்றால் அது தங்கத்தைத் தவிர வேறேதும் இல்லை.

அத்து அவசரத்துக்கு ஆகும் என்றுதான் நம் ஊரில் காலங்காலமாக தங்க நகைகளைச் சேகரிக்கும் கலாச்சாரத்தைப் பேணுகிறோம். ஷேர் வாங்கினால் முறைக்கும் மனைவிமார்கள், செய்கூலி சேதாரத்திற்கு 20 சதவீதம் போனாலும் பூரிப்போடு பொன்னகையை வரவேற்கிறார்கள். நம்மைப் பொறுத்த மட்டில் 'பொன்' என்பது வெறும் முதலீடு என்ற அளவோடு நின்று விடுவதில்லை. அது சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும், சேமிப்பின் வடிவமாகவும், எப்போது வேண்டுமானாலும் விற்க முடிகிற தன்மையோடும் திகழ்கிறது. அப்பழுக்கில்லாத மனிதனை, பத்தரை மாற்றுத் தங்கம் - அல்லது 24 காரட் தங்கம் - என்கிறோம்.

ஆபரணக் கண்ணோட்டத்தைத் தவிர்த்துவிட்டு தங்கத்தை முதலீட்டுக் கண்ணோட்டத்தோடு நோக்க வேண்டியது அவசியம். (அப்படி நோக்கும் போது காதலிகளைப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம்) உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தங்கம் என்பது இரும்பைப் போல பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு உலோகம். அதன் மதிப்பு அல்லது விலை என்பது அதை வெட்டி எடுப்பதற்கு ஆகும் செலவுக்குச் சமமாக இருக்க வேண்டும். வெங்காயத்தை விளைவித்து சந்தைக்கும் கொண்டு வருவதற்கு ஆகும் செலவு வெங்காயத்தின் விலையை நிர்ணயிப்பது போல, இரும்பை வெட்டி எடுக்க ஆகும் செலவு அதன் விலையை நிர்ணயிப்பது போல, தங்கத்தை வெட்டியெடுக்க ஆகும் செலவுதான் அதன் விலையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அப்படி நடப்பதில்லை. ஒரு லாரி வெங்காயத்தையோ, பத்து டன் இரும்புக் கம்பியையோ நாம் பத்து வருடத்திற்கு சேமித்து வைப்பதில்லை. ஆனால் தங்கத்தை சேர்த்து வைக்கிறோம். சிறிதளவே தேவைப்படுகிற இடம், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் செல்லும் வசதி, காலத்தால் அழியாத தன்மை மற்றும் இயல்பாகவே தங்கத்தின் மீது பெண்களுக்கு உள்ள மோகம் ஆகியன

தங்கத்தின் தேவையை நிர்ணயித்து அதன் விலையையும் நிர்ணயிக்கின்றன.
ஆக தங்கத்தின் தேவை என்பது அதன் பயன்பாடு சார்ந்தது மட்டுமல்ல. நகை வாங்குவதற்குச் சொல்லப்படும் முதன்மையான காரணம் 'பணவீக்கத்தைச் சமாளிப்பது'. உண்மையே! எப்படியானாலும் பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும், அதாவது விலைவாசி ஏறிக்கொண்டே போகும். பணத்தை அப்படியே வைத்திருப்பதற்குப் பதிலாக தங்கத்தில் போடலாம். விலைவாசி ஏற்றத்திற்கு எதிரான இன்சூரன்ஸ் என்றுகூட இதைக் கருதலாம்.

ஆனாலும் தங்கத்தை சேமிப்பாகக் கருத வேண்டுமே தவிர முதலீடு என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வாதத்தை ஏற்க வேண்டும். பணத்தை ஒரு நிறுவனத்தில்/தொழிலில் இட்டால் அதன் மூலம் உற்பத்தி கூடுகிறது. வேலை வாய்ப்பு ஏற்படுகிறது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவுகிறது. அப்படிப் போடும் பணத்திற்கு இலாபமும் கிடைக்கிறது. 'முதலீடு' என்பதன் உண்மையான பொருள் இதுதான். அப்படிச் செய்யாமல் நாட்டில் இருக்கிறவர்கள் எல்லோரும் தங்கத்தை வாங்கி வைத்துக்கொண்டு அல்லது ஒருவர் மாற்றி ஒருவர் தங்கத்தை விற்றுக்கொண்டும் வாங்கிகொண்டும் இருந்தால் உற்பத்தி எப்படிப் பெருகும், வேலைகள் எப்படிப் பெருகும்? சேமிப்பதைவிட முதலீடு செய்வதே நாட்டிற்கு மட்டுமல்லாமல் தனி நபருக்கும் நல்லது.

பொருளாதாரம் வலுவாக இருக்கும் போதும், வளரும் போதும் தொழில் முயற்சிகளில் அல்லது பங்குகளில் பணம் போடலாம். மேலே சொன்னது போல அது முதலீடு. வருங்காலத்தில் ஏற்படவிருக்கும் தொழில் வளர்ச்சியின் ஒரு அலகுதான் பங்கு. பெரும்பாலும் இது எதிர்காலம் குறித்தானது, எதிர்கால வளர்ச்சி குறித்தானது. ஒளிமயமான எதிர்காலம் புலப்படும் போது எல்லோருமே இப்படி முதலீடு செய்வதைக் காண்கிறோம். ஆனால் பொருளாதாரம் தேக்க நிலை அடையும் போதும், எதிர்காலம் குறித்தான கவலைகள் தோன்றும் போதும் மக்களுக்கு எழுகிற பிரதானமான கேள்வி, நிலையில்லாத எதிர்காலத்தை நம்பியிருப்பதா அல்லது நிலையான நிகழ்காலத்தைப் பாதுகாப்பதா என்பதே. முதலீடு வாயிலாகக் கிடைக்கப்போகும் இலாபம் என்பது எதிர்காலம் சம்மந்தப்பட்டது. அதைவிட நிகழ்காலத்தில் இருப்பதைச் சேமிப்பதே முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நிறுவனத்தின் எதிர்கால இலாபத்தைக் குறிக்கும்

அதன் 'பங்குகளை'விட, நிகழ்காலத்தில் குறிப்பிட்ட மதிப்புள்ள ஒரு பொருளைச் சேமிப்பதை மக்கள் நாடுவது நடந்தேறுகிறது. ஒரு கிராம் தங்கத்தில் எவ்வளவு என்ன இருக்கிறது என்பதை உறுதியாக எடை போட்டுச் சொல்ல முடியும். ஆனால் ஒரு இன்ஃபோசிஸ் ஷேரில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆகவேதான் பொருளாதாரத் தேக்க நிலை என்று வரும் போது தங்கத்தின் மவுசு ஏகத்திற்கு ஏறிப்போகிறது.

தக்காளி, வெங்காயத்தைப் போல தங்கத்தின் விலையை அதன் உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு தீர்மானிப்பதில்லை. தங்கத்தின் தேவை என்பது 'ஆபரணத்திற்கான பயன்பாடு' என்ற சங்கதியைச் சார்ந்தது மட்டுமல்ல. பல காரணிகள் அதைத் தீர்மானிக்கின்றன. சவரன் கணக்கில் நகை வாங்குவதெல்லாம் தாண்டி உலகத்தில் உள்ள எல்லா நாடுகளின் மத்திய வங்கிகளும் (நமது ரிசர்வ் வங்கியைப் போல) தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன.

இருக்கிற பணத்தைத் தங்கமாக மாற்றி வைத்திருந்தால் அந்தப் பணத்தின் மதிப்பு சரியாமல் காப்பாற்றப்படுமே தவிர அது உயராது என்பதையே கடந்த காலம் நமக்குப் புலப்படுத்துகிறது. நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் தங்கத்தில் செய்த சேமிப்பு ஏறத்தாழ அதே அளவில் மட்டுமே இருந்திருக்கும். ஆனால் இது சீராக இருந்ததில்லை. அதாவது பணவீக்கம் எந்த அளவுக்கு கூடுகிறதோ அதே அளவு தங்கத்தின் விலை கூடியதில்லை. பணவீக்கம் குறையும் போது அதே அளவுக்குக் குறைந்ததும் இல்லை. தங்கத்தின் விலை கூடுவதற்கும் குறைவதற்கும் பொருளாதார நிலைத்தன்மை முக்கியமான காரணியாக இருந்து வந்திருக்கிறது.

உதாரணத்திற்கு அமெரிக்க டாலரைக் கருதுவோம். பல காலமாக டாலர் கரன்சியின் புன்புலமாகத் தங்கம் செயல்பட்டது. 1 அவுன்ஸ் தங்கம் = 35 டாலர் என்று அமெரிக்கா நிர்ணயித்திருந்தது. அந்த நாட்டு கஜானாவில் அவ்வளவு தங்கம் இருந்தது. அப்போதெல்லாம் டாலர் என்பது நிஜமாலுமே as good as gold. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945 தொடங்கி சுமார் 1970 களின் ஆரம்பம் வரை இதே அளவில் தங்கத்தின் விலை நிலவியது. அதன் பிறகு டாலரைத் தங்கமாக மாற்ற முடியாத சூழ்நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டதும் தங்கத்தின் விலை டாலர் கணக்கில் உயரத் தொடங்கியது. 1980 ஜனவரியில் அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் 850 டாலர். 1970 களின் பொருளாதாரச் சூழல் அப்படி.

பிறகு எதிர்காலம் ஒளிமயமாக அனைவருக்கும் தோன்றியது. பங்குகள் உயர்ந்தன. தங்கம் சரிந்தது. படிப்படியாகக் கீழே இறங்கி வந்து 1999 இல் ஒரு அவுன்ஸ் வெறும் 252 டாலருக்கு இறங்கியது. 'டாட் காம் குமிழ்' என்று சொல்லப்படுகிற கணினி நிறுவனங்களின் பங்குகள் முன்னெடுத்துச் சென்ற மாபெரும் ஷேர் மார்க்கெட் விலையேற்றத்தின் மும்முரமான நாட்கள் அவை. குமிழ் உடைந்து பங்குச் சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் கஷ்ட காலம் மீண்டும் வந்த போது தங்கம் மறுபடியும் ஏறியது. தங்கம் தனது 1980 உச்சக் கட்ட விலையை இந்த ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி மீண்டும் எட்டிப் பிடித்தது. அதன் பிறகு மார்ச் மாதம் ஆயிரம் டாலரையும் எட்டியது. என்னதான் ஆயிரம் டாலர் என்றாலும், 1980 விலையைக் காட்டிலும் குறைவே என்கிறார்கள். பணவீக்கத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் 1980 இல் 850 என்பது இப்போது 2,400 என்று சொல்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால்கூட 1980 விலையின் பாதியில்தான் இப்போது இருக்கிறோம். ஆனால் தற்போதைய உலகப் பொருளாதாரச் சிக்கல் அப்போதைய சூழலைக் காட்டிலும் மோசமானதா என்றும், அப்படி இருந்தால் தங்கத்தின் விலை மேலும் ஏறக் கூடுமே என்றும் ஒரு தரப்பினர் விளக்கம் கொடுக்கிறார்கள். கவனிக்க வேண்டிய விஷயம்.

தங்கத்தின் முதன்மையான சந்தை இலண்டன் மாநகரம். அங்கே நாளுக்கு இரண்டு முறை விலை நிர்ணயிக்கிறார்கள். தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பது ஆபரணம் செய்வதற்கான தேவையைக் காட்டிலும், தேசங்களின் மத்திய வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் வாங்கி விற்கும் செயலே ஆகும். மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிச் சேகரிப்பது அந்தந்த தேசங்களின் கரன்சி மதிப்பு நிலையாக இருக்க வேண்டும் என்பதற்கே. மேலும் 1991 சமயத்தில் வெறும் இரண்டு வார இறக்குமதிக்குத் தேவையான அளவு மட்டுமே அந்நியச் செலவாணியை இந்தியா வைத்திருந்த போது ரிசர்வ் வங்கிக் கையிருப்பில் இருந்த தங்கத்தை இரண்டு விமானத்தில் ஏற்றி பேங்க் ஆஃப் இங்கிலாந்திற்கு அனுப்பி அடமானம் வைத்த நிகழ்ச்சி 'தங்கம் எதற்காக?' என்ற கேள்விக்கு விடை தருகிறது.

2004 கணக்குப்படி மனித குல வரலாற்றில் அது வரை தோண்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கம் என்று கணிக்கப்படுகிற சுமார் 1,60,000 டன்னில் கிட்டத்தட்ட 19 சதவீதம் பல்வேறு மத்திய வங்கிகள் வசம் இருந்தன. அதில் முதலிடம் அமெரிக்காவிற்கு. இந்தியாவிற்கு 14 ஆவது இடம். உலகத்திலேயே அதிகமாகத் தங்கம் வைத்திருப்பது அமெரிக்கா என்றால் அதிகமாகத் தோண்டி எடுப்பது தென்னாப்பிரிக்கா. 1886 ல் இருந்தே அந்த ஆப்பிரிக்க அடிமை தேசம் கணக்கில்லாமல் தங்கத்தைத் தோண்டி உலகத்திற்குக் கொடுத்துள்ளது. சுரங்க வேலைக்குப் போனவர்கள் உருவாக்கிய ஜொகன்னஸ்பர்க் நகரம் அந்த நாட்டின் மிகப் பெரிய ஊர்களில் ஒன்றாக உருவெடுத்தது. கேப்டவுன் நகரம் 200 ஆண்டுகளில் எட்டிய வளர்ச்சியை ஜொகன்னஸ்பர்க் வெறும் பத்தாண்டுகளில் எட்டியது. 1970 ஆம் வருட உலக உற்பத்தியில் தென்னாப்பிரிக்காவின் பங்கு மட்டும் 79 சதவீதம்.

நன்றி : உயிர்மை
****

பின்குறிப்பு : இந்த கட்டுரையின் இறுதியில் சில உதிரி தகவல்கள் இருக்கின்றன. கட்டுரையின் நீளம் கருதி... அடுத்த பதிவிடுகிறேன். உடனே படிக்க வேண்டும் என விரும்புவர்கள் உயிர்மை லிங்கை கிளிக்கவும். நன்றி.

தங்கம் - விலை எகிறுவது ஏன்?


முன்குறிப்பு : தங்கத்தின் விலை கடந்த 2000ல் ரூ. 3320, 2005ல் -ரூ. 6048, 2009 - பிப்ரவரியில் ரூ. 11232, இன்றைய விலை ரூ. 12520. கட்ந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ. 592 எகிறி இருக்கிறது.

எகிறுவதற்கான காரணங்களாக... தங்கம் வெட்டி எடுப்பது குறைந்து வருகிறது. இது தவிர பணவீக்கம், பங்கு சந்தை, டாலர் மதிப்பு, சர்வதேச அளவில் ஏற்படும் கச்சா பொருட்களின் விலை உயர்வு, ஆன்லைன் வர்த்தம் என சொல்லப்படுகின்றன. நம் அறிவுக்கு இவர்கள் சொல்வது சரிதானா என வரும் பதிவுகளில் தங்கத்தை உரசிப் பார்க்கலாம்.

கீழே உள்ள தினமணி கதிர் கட்டுரை நேசனல் ஸ்டாக் எக்சேஞ்சின் எம்.சி.எக்ஸ், என்.சிடி.இ.எக்ஸ் மூலமாக தங்கம் விற்கப்படுவதை பற்றி, அதன் விவரங்களை தருவதாக இருக்கிறது. தங்கத்தின் விலை எகிறுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. படியுங்கள். உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*****

வணிகம்: இன்றைய விலைக்கு 5 ஆண்டு கழித்து தங்கம்!

தேவைப்படும்போது தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் தங்கத்தின் விலையோ எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கிறது. தங்கத்தின் விலை குறைவதெல்லாம் முழம் ஏறி சாண் சறுக்குவதாகவே இருக்கிறது.

""இன்றுள்ள விலையில் தங்கத்தை நீங்கள் வாங்குவதாக ஓர் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டு சிறிது அட்வான்ஸôகப் பணம் செலுத்திவிட்டு உங்களுக்குத் தேவையானபோது மீதித் தொகையைச் செலுத்தி தங்கத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதி இப்போது வந்துவிட்டது. தங்கத்தை நீங்கள் கையில் பெறும்போது உள்ள மார்க்கெட் விலையைச் செலுத்தத் தேவையில்லை'' என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஃபின்மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பழ.லக்ஷ்மணன்.

இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்சின் என்சிடிஇஎக்ஸ் மற்றும் எம்சிஎக்ஸ் மூலமாக தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறும் அவரிடம் மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகப் பேசினோம்.

""முதலில் எல்லாம் கையில் பணத்தை வைத்துக் கொண்டு எதில் முதலீடு செய்யலாம் என்று விழித்துக் கொண்டிருந்தவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார்கள். பங்குச் சந்தையில் எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தாலும் சமயத்தில் காலை வாரிவிட்டுவிடும். அதில் ரிஸ்க் அதிகம்.

ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தால் நஷ்டம் வர வழியில்லை. தங்கத்தின் விலை எப்போதாவது குறைந்தாலும் ஏறிக் கொண்டே இருப்பதுதான் அதன் இயல்பாக இருக்கிறது.
......

சாதாரணமாக தங்கத்தை வாங்க நினைக்கும் ஒருவர் கடைகளில் விற்கும் 22 காரட் தங்கத்தை வாங்குவார். அது அன்றைய மார்க்கெட் விலையை விடச் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். அதாவது செய்கூலி, சேதாரம் என்று நிறையச் சொல்வார்கள். அதுபோல வாங்கிய தங்கத்தை விற்கப் போனாலும் அன்றைய மார்க்கெட் விலையைத் தரமாட்டார்கள்.

தங்கத்தின் தரத்தைத் தெரிந்து கொள்வதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இப்போது வங்கிகளில் தங்கம் விற்கிறார்கள். அப்படி வாங்கிய தங்கத்தை விற்க வேண்டும் என்றால் நீங்கள் வங்கிகளை அணுக முடியாது. கடைக்காரர்களையே அணுக வேண்டும்.
மக்களுக்கு தங்கம் வாங்குவதில் உள்ள இந்தச் சிரமங்களைப் போக்கும்விதமாக இப்போது தங்கம் வாங்குவதில், விற்பதில் புதியமுறைகள் வந்துவிட்டன.

நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்சின் எம்சிஎக்ஸ், என்சிடிஇஎக்ஸ் மூலமாகத் தங்கம் விற்கப்படுகிறது.
நீங்கள் கடையில் தங்கம் வாங்க வேண்டும் என்றால் முழுத் தொகையையும் உடனே செலுத்த வேண்டும். ஆனால் இந்த நிறுவனங்களின் மூலமாகத் தங்கம் வாங்க வேண்டும் என்றால் வாங்கும் தங்கத்தின் மொத்த மதிப்பில் 15 சதவீதத்தை உடனே செலுத்த வேண்டும். பின்னர் தங்கத்தைப் பெறும்போது மீதித் தொகையைச் செலுத்த வேண்டும்.

இதற்கு எம்சிஎக்ஸ் அல்லது என்சிடிஇஎக்ஸ்யுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக 3 மாதத்திற்குப் பின் தங்கத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒரு மாதத்திற்குப் பின், இரண்டு மாதத்திற்குப் பின் என்றும் கூட நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இந்த 3 மாத அளவை தொடர்ந்து புதுப்பிப்பதன் மூலம் எத்தனை ஆண்டுகாலம் வேண்டுமானாலும், ஒப்பந்தத்தைத் தொடரலாம்.
தங்கத்தை வாங்குவதில் நீங்கள் தங்கத்தைக் கைகளில் வாங்கிக் கொள்ளவும் முடியும். கைகளில் வாங்கிக் கொள்ளாமலேயே உங்கள் அக்கவுண்டில் வரவு வைத்துக் கொள்ளவும் முடியும்.

வங்கியில் நீங்கள் பணத்தைப் போட்டு வைத்துக் கொள்வதை சேமிப்புக் கணக்கு என்கிறோம். அதுபோல தங்கம், வெள்ளி போன்றவற்றைச் சேமித்து வைப்பதற்கு டி மேட் அக்கவுண்ட் என்கிறோம். இந்த டி மேட் அக்கவுண்டில் நீங்கள் வாங்குகிற தங்கத்தை உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். தங்கத்தை நீங்கள் விற்றுவிட்டால் அந்தத் தங்கத்தை உங்கள் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இத்தனைக்கும் தங்கத்தை நீங்கள் கண்ணில் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.

இதில் என்ன லாபம் என்றால் தங்கத்தின் மார்க்கெட் விலை ஏறிக் கொண்டே இருப்பதால் நீங்கள் டி மேட் அக்கவுண்டில் போட்ட தங்கத்தின் மதிப்பும் உயர்ந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் போட்டு வைத்த பணத்திற்கு வங்கியில் வட்டி கிடைக்கிறது. இந்த டி மேட் அக்கவுண்டில் தங்கத்தின் விலை உயர்வால் உங்களுடைய தங்கத்தின் மதிப்பு ஏறுகிறது. அதனால் உங்களுக்கு லாபம் கிடைக்கிறது.


தங்கம் வாங்கும் போது 8 கிராம், 16 கிராம், 24 கிராம் என்று எட்டின் மடங்குகளாக நீங்கள் வாங்கலாம். கொஞ்சம் வசதியான பார்ட்டியாக நீங்கள் இருந்தால் 100 கிராம், 200 கிராம், 300 கிராம் என்று வாங்கலாம். அதைவிட வசதியாக நீங்கள் இருந்தால் 1 கிலோ, 2 கிலோ, 3 கிலோ என்று கூட வாங்கலாம்.

இந்தப் புதிய முறையில் தங்கத்தை வாங்கிக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. ஐந்து வருடம் கழித்து நடக்க வேண்டிய திருமணத்திற்கு இப்போதுள்ள விலையில் தங்கத்தை வாங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு குறிப்பிட்ட அளவு பணத்தை முன் பணமாகச் செலுத்திவிட்டு மீதிப் பணத்தைத் தவணை முறையில் செலுத்தலாம். தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே போவதைப் பற்றிக் கலங்காமல் இருக்கலாம்.

சில நகைக் கடைகளில் தங்கம் வாங்குவதற்குச் சேமிப்புத் திட்டத்தை அறிவித்திருப்பார்கள். அந்தத் திட்டத்தில் சேர்ந்து மாதம் மாதம் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தி முடித்தவுடன் அன்றைய தங்க விலை நிலவரத்தின் அடிப்படையில் உங்களுக்குத் தங்கத்தைத் தருவார்கள். இதில் இன்னொரு ரிஸ்க்கும் உள்ளது. நீங்கள் தங்கம் வாங்குவதற்காகப் பணத்தைச் செலுத்திய கடை ஆறு மாதம் கழித்துக் காணாமல் போனாலும் போய்விடும்.
இன்றைய விலையில் தங்கத்தை வாங்குகிறபோது தங்கத்தை விற்கும் எக்சேஞ்சிற்கு நஷ்டம் ஏற்படுமே, அதை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்ற கேள்வி எழும்.

நீங்கள் 100 கிராம் தங்கத்தை இன்றைய விலையில் வாங்குவதாக ஓர் ஒப்பந்தம் போடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காகக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டு மீதிப் பணத்தை மூன்று மாதம் செலுத்துவதாகக் கூறுகிறீர்கள். மூன்று மாதம் கழித்து நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் தங்கம் உங்கள் கைகளுக்கு வரும். ஆனால் உண்மையில் நீங்கள் என்று ஒப்பந்தம் போட்டீர்களோ அன்றே தங்கத்தை வாங்கிவிட்டீர்கள். நீங்கள் ஒப்பந்தம் போட்ட அன்று யாராவது தங்கத்தை விற்பார்கள் அல்லவா? அந்தத் தங்கத்தை உங்களுக்கு மாற்றிவிட்டு விடுவார்கள். எனவே இன்றைய விலையில் தங்கத்தை உங்களுக்கு விற்பதால் நஷ்டம் ஏதும் எக்சேஞ்சிற்கு ஏற்படாது. தங்கம் விற்பது, வாங்குவது என்பது ஏதோ ஓரிரு நபர்கள் மட்டுமே பங்கு பெறும் நிகழ்வாக மட்டும் நடப்பதில்லை. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கத்தை வாங்குகிறார்கள்; விற்கிறார்கள்.

தங்கத்தை எம்சிஎக்ஸ் நிறுவனத்தின் புரோக்கர்கள் மூலமாகவே வாங்கவோ, விற்கவோ முடியும். தங்கத்தை வாங்கும்போது மொத்த மதிப்பில் .03 சதவீதம் புரோக்கர், சப்புரோக்கர் கமிஷனாகத் தர வேண்டும். எங்களுடைய ஃபின் மார்ட் நிறுவனம் சப் புரோக்கராகச் செயல்படுகிறது.
****

நன்றி : ந. ஜீவா, தினமணி கதிர் (21/06/2009)

பின்குறிப்பு : கட்டுரையின் நீளத்தை கருதி, சில அவசியமில்லாத பத்திகளை நீக்கியுள்ளேன். முழுதாக படிக்க... லிங்கை கிளிக்கவும்.

November 4, 2009

அழகிரியின் அதிரடி பத்திரிக்கை!


எந்தக் கழகம் ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சியின் தலைமை மற்றும் அமைச்சர்களைப் புகழ்ந்து சிலர் பத்திரிகை நடத்துவதும், அதன் மூலம் விளம்பரங்கள் பெறுவதும், அமைச்சர்களிடம் காரியம் சாதித்துக் கொள்வதும் வழக்கமானதுதான். ஜெயலலிதா ஆட்சியில் சில பத்திரிகைகள் அப்படி முளைத்ததுண்டு. தற்போதும் கருணாநிதி மற்றும் ஸ்டாலினை புகழ்வதற்கென்றே சில பத்திரிகைகள் வருகின்றன.


இதில், மு.க. அழகிரியைத் துதி பாடுவதற்காக வரும் ‘கலைஞரின் மு.க. அழகிரி’ என்ற மாதமிருமுறை இதழ் வித்தியாசமாக இருக்கிறது. சமீபத்தில் அதன் இரு இதழ்களை வாசிக்க நேர்ந்தபோது, வேடிக்கையாகவும், அதிரடியாகவும் இருப்பதை உணர முடிந்தது. அந்த அழகிரி இதழிலிருந்து சில பக்கங்களைப் பார்ப்போம்:

இதழின் முதல் பக்கத்திலேயே,

“இந்த இதழில் எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். தி.மு.க. தலைமையே கூட கொஞ்சம் எரிச்சல் அடையலாம். அதற்காக நாங்கள் வருத்தப்படப் போவதில்லை. எங்களுக்கு கலைஞர் மற்றும் அழகிரிதான் முக்கியம். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும், அவர்களை நேர்சீர்களை தூக்கிப் பார்த்துத்தான் எழுதுவோம்”

– என்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்தப் பக்கத்தில் அமைச்சர் கே.என். நேருவைப் பாராட்டி விட்டு,

அரசியலில் தன்னைத் தக்க வைத்து கொள்வதற்காக அவர் சில விதிகளை மீறலாம், கலைஞரைப் போல! அதனால் அதை நாங்கள் கண்டுகொள்வதில்லை. அதுதான் நியாயமும் கூட; தர்மமும் கூட”

– என்று குறிப்பிடுகிறது அழகிரி பத்திரிகை.

மு.க. அழகிரியின் தியரி’ என்ற கட்டுரையில்,

“ஓட்டர்களையே விலைக்கு வாங்கும் பணம் தியரி யாருக்கு வரும்? தாதா, ரௌடியிஸம் எதுவும் இல்லாமல், அவரால் எப்படி ஒரு புது தியரியை உருவாக்க முடிந்தது என்று எதிரிகளே அசந்து போய்விட்டார்கள். பெயருக்குக் கூட காசு அவிழ்க்காத கலைஞரின் வாரிசில் இப்படியொரு பிள்ளையா? பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழி எல்லோருக்கும் தெரியும். ஆனால், பணம் மக்களின் மனம் வரை பாயும் என்பதை, அழகிரி ஒருவரால்தான் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால்தான் சொல்கிறோம், கலைஞரின் மைந்தா வா! தலைமை ஏற்க வா!”

– என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி போலீஸ் கமிஷனர், திருச்சியில் பல கெடுபிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆளும் கட்சி என்ற பாகுபாட்டைப் பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை. அவரைக் கண்டித்து ஒரு கட்டுரை அழகிரி பத்திரிகையில் உள்ளது. ‘போலீஸைக் கட்டவிழ்த்து விட்டது கலைஞரா, துணை முதல்வரா?’ என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில்,

தலைமை மட்டும் சூட்கேஸ் மாற்றிக் கொண்டால் போதாது. தொண்டன் ஒரு சுருக்குப் பையையாவது மாற்றிக் கொள்ள வேண்டாமா? ஒரு தொண்டனைப் போஸ்டர் ஒட்டுவதற்கும், நோட்டீஸ் ஒட்டுவதற்கும் பயன்படுத்திக் கொண்டு, அவனைப் பசை தின்னவா சொல்ல முடியும்? தலைவன் பிரியாணி தின்றால், தொண்டன் பழைய சோறாவது தின்ன வேண்டாமா?”

– என்று கேட்கும் கட்டுரை மேலும் விரிகிறது.


“துணை முதல்வர் பதவி வந்ததற்குப் பின்தான், இப்படி தி.மு.க.வின் பலத்தைக் குறைக்கிறார்கள். வட இந்தியப் போலீஸ் அதிகாரி வரும்போது ஆளும் கட்சிக்கே சவால் விடுகிறான். கேட்டால், நேரடியாக துணை முதல்வர் கண்காணிப்பில் வந்தவன் என்கிறார்கள். வடஇந்தியர்களின் கையில் தமிழகம் போய்விட்டதா? தயாநிதி மாறன் வீட்டில் தி.மு.க. கரைவேட்டிக் கட்சியினரை விட, வடநாட்டு மார்வாடிப் பயல்கள் கூட்டம்தான் அதிகமாக இருக்கிறது. இது எப்படி?

“ஜெயலலிதா ஆட்சிதான் போலீஸ் ஆட்சியாக இருந்தது. ஜெயலலிதா போல துணை முதல்வர் செயல்படுவதாக அறிகிறோம். மக்களுக்கு நலத் திட்டங்கள் அறிவித்தால் மட்டும் போதாது. தி.மு.க.வினரின் நலன்களையும் பார்க்க வேண்டும். மேல்மட்டத் தலைவர்கள் தேனை நக்கும்போது, தொண்டன் விரல் சூப்பிக் கொண்டா இருக்க முடியும்? ஸ்ரீரங்கம் 4-ஆவது வட்டச் செயலாளர் ராம்குமார், அமைச்சர் நேருவுக்காகப் பாடுபடும் தொண்டன். இவரை ஆன்லைன் லாட்டரி நடத்தினார் என்று போலீஸ் வழக்குப் போட்டுள்ளது. ‘காவல்துறை தன் கடமையைச் செய்யட்டும்’ என்று துணை முதல்வர் விட்டுவிட்டாராம். இது எதைக் காட்டுகிறது? துணை முதல்வரின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. நேருவின் கையை யார் கட்டிப் போட்டது? அஞ்சா நெஞ்சனிடம் இது நடக்குமா?”

– என்று போகிறது அந்தக் கட்டுரை.

அழகிரி பத்திரிகை, பக்கத்துக்கு பக்கம் அழகிரியின் படத்தோடு, அழகிரி பற்றிய செய்திகளையும் வெளியிட்டுள்ளது. இந்த அழகிரி பத்திரிகையின் பதிவு அலுவலகம் திருச்சியில் இருந்தாலும், மதுரையில் அழகிரியின் கல்யாண மண்டபம் அருகே ஒரு அலுவலகமும், டெல்லியில் ஒரு அலுவலகமும் இருப்பதாக இம்ப்ரின்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அஞ்சா நெஞ்சன்தான் கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும்’ என்று பல இடங்களில் குறிப்பிடும் இப்பத்திரிகையில், அழகிரியின் பேட்டி ஒன்றும் வெளியாகி இருப்பதால், அழகிரியின் ஆசியுடன் இந்தப் பத்திரிகை வெளிவருவதாகவே கருத வேண்டியுள்ளது.
(நன்றி: துக்ளக்)

நன்றி : இட்லிவடை

November 2, 2009

"மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்!" தில்லி அரசு!



'ராஜ்தாக்கரேயின் வழியில் பிச்சைகாரர்களை வெளியேற சொல்வது விசித்திரமாக உள்ளது'

- தில்லி உயர்நீதி மன்றம் கண்டிப்பு.

தலைநகர் தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் ஜனவரி 2010-ல் துவங்க இருக்கின்றன. இதில் பங்கெடுக்க, பார்க்க-என வெளிநாட்டினர் லட்சகணக்கில் வருகை தருவார்கள். இவ்வேளையில், ஏற்கனவே தலைநகரில் கூட்டம் கூட்டமாய் வாழும் 65000 இந்திய பிச்சைகாரர்கள்

வெளிநாட்டினரை தொல்லை படுத்தி, 'வல்லரசு' இந்தியாவின் 'கெத்'-ஐ நாசப்படுத்திவிடுவார்கள் என முடிவெடுத்து, எல்லா பிச்சைகாரர்களையும் சிறையில் தள்ள முயன்றது. (பார்க்க முந்தைய பதிவு : காமென்வெல்த் போட்டியும் இந்திய பிச்சைகாரர்களும்!)

அரசு அத்தனை பிச்சைகாரர்களுக்கும் சிறை பற்றாது என நினைத்ததா! அல்லது இவர்களுக்கு எதற்கு சில மாதங்கள் சோறு போடவேண்டும் என நினைத்ததா தெரியவில்லை. இறுதியில், "தில்லியை விட்டு வெளியேறுங்கள்! அவரவர் மாநிலத்திற்கு போய்விடுங்கள்" என உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

நேற்று இந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.


"பிச்சை எடுப்பது ஒன்றும் கிரிமினல் குற்றம் அல்ல! அரசு அவர்களுக்கு ஏதாவது வாழ்வாதாரத்துக்கு வழி செய்து இருக்கலாம். அதை விட்டு, அவரவர் மாநிலத்துக்கு போகும்படி உத்தரவிடுவது நியாயமில்லை.

மகாராஷ்டிராவில் ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் கட்சி அங்கு குடியேறியுள்ள உ.பி., பீகார் மாநிலத்தவரை வெளியேற சொல்வதை போல தில்லி அரசின் இந்த உத்திரவு அமைந்துள்ளது. உள்ளுக்குள் கிரிமினல்களை வைத்துக்கொண்டு பரிதாப நிலையில் பிச்சை எடுப்பவர்களை வெளியேற சொல்வது விசித்திரமாக உள்ளது.

இந்த உத்தரவிற்காக அரசை கண்டனம் செய்கிறோம்."