> குருத்து: Get out (2017) திரைக்கதைக்காக ஆஸ்கார் வென்ற படம்.

May 24, 2021

Get out (2017) திரைக்கதைக்காக ஆஸ்கார் வென்ற படம்.


கதை. நாயகன் ஒரு புகைப்படக்காரன். கருப்பினத்தைச் சேர்ந்தவர். அவர் காதலியோ வெள்ளையினத்தை சேர்ந்தவர். நாயகி தன் பெற்றோரை சந்திக்க நாயகனை அழைக்கிறார். தான் கருப்பினத்தைச் சேர்ந்தவன் என்பதால், அவளின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்களா என மனதில் பெரிய தயக்கம் இருக்கிறது. ”எங்க பெற்றோர் ஒபாமாவிற்கு வாக்களித்தவர்கள். நிறவெறி இல்லாதவர்கள். உன்னை ஏற்றுக்கொள்வார்கள்” என தைரியமூட்டுகிறார்.

இருவரும் அங்கு செல்கிறார்கள். பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். அப்பா நரம்பியல் துறை நிபுணர். அம்மா மனோ தத்துவ மருத்துவர். இருவரையும் அவர்கள் நல்லவிதமாக வரவேற்கிறார்கள். நாயகியின் சகோதரன் வருகிறான். அவனிடம் பேசும் பொழுது கொஞ்சம் சிக்கலாகிறது.

அங்கு வீட்டு, தோட்ட வேலைகள் செய்து வரும் இருவரும் கருப்பினத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்களிடம் ஒரு இயல்புதன்மை இல்லாததும் அவனிடம் ஒரு மனதில் பதட்டத்தை தருகிறது. அன்றிரவு தூங்க செல்கிறார்கள். இரவு தூக்கமில்லாமல் வெளியே வருகிறான். அங்கு விசித்திரமாக சில விசயங்கள் நடக்கிறது.

அடுத்து அங்கு நடக்கும் ஒரு விருந்திற்கு பல உறவினர்களும், நண்பர்களும் வருகிறார்கள். அப்பொழுதும் சில நிகழ்வுகள் விசித்திரமாக நடக்கிறது. அதையெல்லாம் சொன்னால் ஸ்பாய்லர் ஆகிவிடும். ஆகையால், படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

****
படத்தை Horror வகைப் படமாக சொல்கிறார்கள். பேய், பிசாசு எல்லாம் கிடையாது. அந்த வீட்டிற்கு போன பிறகு நடக்கிற சம்பவங்களையும், அதன் பின்னணியில் சில விசயங்களையும் சொல்கிற படம். திரில்லர் வகையாக சேர்க்கலாம்.
படத்தில் சொற்ப கதாப்பாத்திரங்கள் தான். எல்லோருமே சிறப்பு. இதில் நாயகன் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்.
மற்றப்படி கதையின் அம்சத்தை விவாதித்தால் ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால், தவிர்க்கிறேன். எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும்.

0 பின்னூட்டங்கள்: