> குருத்து: Awe (2018) Telugu Pshychological thriller

October 25, 2020

Awe (2018) Telugu Pshychological thriller


ரகசியம் (தமிழில்)

கதை. ஒரு மாநகர மாடர்ன் உணவகம். தன் அம்மா, அப்பாவிற்கு தன் காதலனை அறிமுகப்படுத்த காத்திருக்கிறாள். காதலன் வந்ததும், அதிர்கிறார்கள். தான் தான் மேஜிக்கில் பெரிய ஆள் என தலைக்கனத்தோடு வருபவரை மாயமாய் இருக்கும் ஒரு மேஜிக் மேன் அவரை அலைக்கழிக்கிறார். நன்றாக சமைக்கிறானா என சோதிக்கும் பொழுதே, யூடியூப் பார்த்து சமைக்கிறான் அவன். அங்கிருக்கும் ஒரு தங்கமீனும், போன்சாய் மரமும் அவனுக்கு உதவுகின்றன.

போதை மருந்து ஏற்றிக்கொண்டு உணவகத்தில் வேலைசெய்யும் ஒருத்தியை துணைக்கு வைத்துக்கொண்டு, ஒருவன் அங்கு வரும் இன்னொருவனிடம் கொள்ளையடிக்க‌ திட்டமிடுகிறான். தன்னுடைய பிறந்தநாளிலேயே தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறாள் ஒருத்தி.

தன் வீட்டைத்தான் உணவகமாக மாற்றியிருக்கிறார்கள் என, பழைய நினைவுக்களுக்காக தினமும் வந்து இறந்து போன (!) தன் துணைவியாருடன் காபி குடிக்கிறார். அறிவியலில் ஆர்வம் கொண்ட ஒருவன் காலயந்திரத்தை கண்டுப்பிடிக்க முயற்சி செய்கிறான். அந்த உணவகத்தில் இப்படி பல்வேறு கதாப்பாத்திரங்கள் ஒன்று கூடுகிறார்கள்.

இவர்கள் அனைவரையும் பாதிக்ககூடிய சம்பவம் ஒன்று இறுதிக்காட்சியை நோக்கி நகருகிறது. பிறகு என்ன ஆனது என்பது மீதிக்கதை!

****
தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழில் ’ரகசியம்’ என மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். காஜல், நித்யா, ரெஜினா, தேவதர்ஷினி என நமக்கு பரிச்சயமான முகங்கள் நிறைய இருக்கிறார்கள். ஆகையால் நம்மால் ஒட்டமுடிகிறது.

எதார்த்தவாத படமில்லை. பேண்டசி (Fantasy) வகை என படம் துவங்கி சில காட்சிகளிலேயே நமக்கு புரிந்துவிடுகிறது. படத்தை எடுத்தவிதத்திலும், வசனங்களிலும் நம்மை ஈர்க்கிறார்கள். அந்த ஈர்ப்பினால், இறுதியில் சொல்லும் சில பல சமூக செய்திகளும் மனதில் பதிக்க முயல்கிறார்கள். இயக்குநரை நம்பி நடிகர் நானி தயாரித்திருக்கிறார். நம்பிக்கை வீண்போகவில்லை.

பார்க்கலாம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: