கதை. ஒரு மன்னன் தனது இரண்டாவது மனைவி கைக்குழந்தையுடன் தன்னைத் தேடி வரும் பொழுது, யாரென தெரியாது என மறுக்கிறான். அம்மா தனது மகனை பெரிய ஆளாக கொண்டு வருவேன் சபதம் செய்கிறார். அடுத்த சில நிமிடங்களில், மகனை தொலைத்துவிடுகிறார். மகன் ஒரு பழங்குடியினர் மத்தியில், குதிரைப்பயிற்சி, வாள்பயிற்சி, இசை என சகல திறமைகளுடன் நாயகன் வளருகிறான்.
இன்னொரு ராஜ்ஜியத்தில் இளவரசியை எதைச்சையாக பார்த்து, கண்டதும் காதலிக்கிறான். மன்னர் எதிர்க்கிறார். இடையில் ஒரு சக்திவாய்ந்த மந்திரவாதி இளவரசியை காளிக்கு பலிகொடுத்து, மிகப்பெரிய சக்தியை அடைந்து உலகை ஆள நினைக்கிறான்.
நாயகன் மந்திரவாதியிடமிருந்து இளவரசியை காப்பாற்றினானா? என்பதை பாட்டு, பைட்டு, மந்திரம், தந்திரங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
****
சிங்கிதம் சீனிவாசராவ் எனக்கு பிடித்தமான இயக்குநர். தெலுங்கு தாய்மொழியாக இருந்தாலும், தமிழில், கமலுடன் இணைந்து அபூர்வ சகோதர்கள், பேசும்படம், மைக்கேல் மதனகாமராசன், மகளிர் மட்டும் என நல்ல நகைச்சுவைப் படங்களை கொடுத்தவர். இந்தியிலும் படம் எடுத்திருக்கிறார்.
படத்தில் நாயகன் பாலகிருஷ்ணா. துறுதுறுவென இருக்கிறார். நாயகிகள் ரோஜா, ரம்பா இருவரோடு டூயட் பாடுகிறார். பறந்து பறந்து சண்டைபோடுகிறார். அருமையாக பாடுகிறார். நிகழ்கால படங்களிலேயே ஏகப்பட்ட வித்தைகள் செய்வார். இந்த மாயாஜாலப் படத்திலோ பாலகிருஷ்ணன் அருமையாக பொருந்தியிருக்கிறார். குழந்தைகளுக்கு பிடிப்பது போல, பறக்கும் குதிரை, குள்ள மனிதர்கள் என ஏகப்பட்ட வகைகள் படத்தில் இருக்கின்றன. பொதுவாக டப்பிங் படங்களில் பாடல்கள் சொதப்பும். இதில் நன்றாக இருக்கின்றன.
படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடியிருக்கிறது. தெலுங்கில் Bairava Dweepam என்ற பெயரில் யூடியூப்பில் தெளிவான பிரிண்டில் இலவசமாகவே கிடைக்கிறது. 25 நிமிடம் வெட்டுக்களோடு, தமிழில் Vijayaprathapan என்ற பெயரில் கொஞ்சம் டல்லான பிரிண்டில் கிடைக்கிறது.
ஊரடங்கு காலத்தில் என் பொண்ணுடன் பார்த்தப் படம். என் பொண்ணுக்கு பிடித்திருந்தது. குழந்தைகள் இருந்தால் பார்க்க சொல்லுங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment