எனது இணையரின் அக்கா மாமியார் அவர். உறவுமுறையில் தான் மாமியார், அத்தை எல்லாம். அவரை அந்த குடும்பத்து மனிதர்கள் எல்லோரும் ஆத்தா என்று தான் அழைப்பார்கள்.
அவருக்கு நிறைய ஆண்பிள்ளைகள். சில பெண்பிள்ளைகள். அவர்களில் சில ஆசிரியர்கள், வங்கி மேலாளர், கன்சல்டன்ட் என தொழில்ரீதியில் இருந்தாலும், பழகும் மனிதர்களை மிகவும் மரியாதையுடனும், அன்புடனும் பழககூடியவர்கள்.
குடும்பத்தில் ஒருவிழா என்றால், அந்த குடும்பத்து மனிதர்கள் எல்லாம் ஒன்று கூடினாலே மண்டபம் நிறைந்துவிடும். அவ்வளவு சொந்தங்கள். உறவுகள்.
மகாவோட கணவர் என அண்ணி என்னை அவரிடம் அறிமுகப்படுத்திய பொழுது, என்னிடம் மிகவும் அக்கறையுடனும், அன்புடனும் பேசி "தூரத்து" சொந்தமாய் இருந்த என்னை மிகவும் நெருங்கிய சொந்தமாய் என்னை மாற்றிவிட்டார்.
அம்மாவுக்கு நல்ல நினைவாற்றல். சில மாதங்கள், ஒரு சில வருடங்கள் கழித்து, ஏதேனும் குடும்ப விழாவில் மீண்டும் பார்த்தால், அடையாளம் கண்டுகொண்டு, நாம் முதலில் பேசவேண்டும் என்றெல்லாம் நினைக்கவேமாட்டார். நம்மை அடையாளம் கண்டு, அவரே அழைத்து பேசுவார். அன்புடன் பேசி, இடைப்பட்ட அந்த காலத்தை காணாமல் போகசெய்துவிடுவார். அவருடைய வாரிசுகள், வாரிசுகளின் வாரிசுகள் எப்படி
அருமையாக
உறவு பேணுகிறார்கள் என்பது அம்மாவிடம் பேசிய பொழுது புரிந்தது.சமீப காலங்களில் அம்மாவை குடும்ப விழாக்களில் காணமுடியவில்லை. விசாரித்தால், முதுமை காரணமாக நடக்க இயலவில்லை என்றார்கள். வருத்தமாகவும், கவலையாகவும் இருந்தது.
இன்று மாலை இராஜலெட்சுமி அம்மா காலமாகிவிட்டார் என செய்தி சொன்ன பொழுது, கலங்கித்தான் போனேன்.
நாங்கள் ஐந்து பிள்ளைகள். எங்கள் அம்மாவை எங்க சின்ன அக்கா மட்டும் ஆத்தா! என அழைப்பார். அம்மாவை விட, ஆத்தா இன்னும் நெருக்கமாக உணரமுடிகிறது.
அந்த பெரிய குடும்பம் இன்று ஆத்தா இல்லாமல் கலங்கி, அவரை இறுதியாய் காண எல்லா திசைகளில் இருந்தும் கும்பகோணம் விரைகிறார்கள். நானும் அவர்களோடு பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.
ஆத்தா தனது வாழ்நாளில் நிறைய வயர்பின்னல்கள் செய்து தனது சொந்தங்களுக்கும், உறவுகளுக்கும் செய்து தருவார்.
அப்படி எங்களுக்கும் ஒன்று செய்து தந்தார். ஆண்டுகள் பல கடந்தும் கடிதங்களையும், ரசீதுகளையும் சேகரித்து, எங்கள் வீட்டில் ஒன்றாய் இருந்துவருகிறது. இனி அது ஆத்தாவின் நினைவுகளை தந்துகொண்டே இருக்கும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment