> குருத்து: Rec (2007)

October 1, 2020

Rec (2007)


கதை. ஒரு உள்ளூர் தொலைக்காட்சி சானலைச் சார்ந்த ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர், ஒரு காமிராமேன் இருவரும், மக்கள் தூங்கும் நேரத்தில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என ஒரு நிகழ்ச்சிக்காக பதிவு செய்ய செல்கிறார்கள். ஒரு அபார்ட்மெண்டிலிருந்து, அவசர அழைப்பு வருகிறது. தீயணைப்புத் துறையினர் அங்கு செல்ல, தொலைக்காட்சிக் குழுவும் அங்கு செல்கிறார்கள்.

அங்கு போனால், அபார்மெண்ட்டில் குடியிருந்த சில குடும்பங்கள் கீழே உள்ள ஹாலில் ஒன்று கூடி இருக்கிறார்கள். அபார்மெண்டில் குடியிருந்த ஒரு வயதான பெண்மணி வெறிபிடித்து ஆட்களை கடித்துவைக்கிறார். அதில் பாதிக்கப்பட்ட ஆட்கள் அடுத்த ஆட்களை கடிக்கிறார்கள். இதற்கிடையில், உள்ளிருந்து யாரும் வெளியேறாதபடி, சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த அபார்மெண்டை சீல் செய்துவிடுகிறார்கள். பதட்டம் அதிகரிக்கிறது.


அடுத்தடுத்து ஆட்கள் பாதிக்கப்பட, பிறகு என்ன ஆனது? ஏன் பாதிக்கப்பட்டார்கள்? என்பதை பர பரவென சொல்லியிருக்கிறார்கள்.


****


இந்தப்படம் ஜாம்பி வகைப் படம் தான். கதைப் படிக்காமலே தான், பார்க்க துவங்கினேன். மெல்ல துவங்கும் படம், அபார்ட்மெண்ட்டிற்குள் நுழைந்ததும், அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மையும் ஒரு ஆளாக உள்ளே இழுத்து, பதட்டப்பட வைக்கிறது.


மொத்த படமும், அந்த சானலின் ஒளிப்பதிவாளர் வைத்திருக்கிற கேமரா வழியாக தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அது படத்தின் நம்பகத்தன்மைக்கும், வேகத்திற்கும் உதவி செய்கிறது. ஆனால், கொஞ்ச நேரம் என்றால் பரவாயில்லை. முழுப்படமும் ஹேண்டி கேமிரா மூலம் எடுத்தது நமக்கு பார்ப்பதற்கு சிரமமாக இருக்கிறது. இயக்குநருக்கு நம்ம கஷ்டம் புரிஞ்சிருக்கும் போல! 78 நிமிடங்களில் படத்தை முடித்துவிடுவது பெரிய ஆறுதல்!


இந்த படத்தின் வெற்றியில், அதற்கு பிறகு, இன்னும் மூன்று பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. வாய்ப்பிருந்தால், பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: