> குருத்து: What happened to Monday (2017)

October 25, 2020

What happened to Monday (2017)


கதை. எதிர்காலமான 2043ல் நடக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் அதனால் உணவுப் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் கேடு என பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது. ஆகையால் குடும்பத்திற்கு ஒரு குழந்தை தான். ஒன்றை மீறினால் அரசின் ஆட்கள் அந்த குழந்தையை கொண்டுபோய், ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்துவதாகவும், இந்த நெருக்கடி நிலைமை சரியான பிறகு, அவர்களை எழுப்புவதாகவும் மக்களுக்கு சொல்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு தாய்க்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறக்கிறார்கள். தாய், தந்தை இல்லை. ஆகையால், குழந்தைகளின் தாய்வழி தாத்தா ஏழு பிள்ளைகளையும் அரசுக்கு தெரியாமல் வளர்க்க முடிவு செய்து, ஒரு வீட்டில் ஏழு பிள்ளைகளையும் வளர்க்கிறார். ஏழு பேருக்கும் ‘Sunday, Monday” என ஏழு கிழமைகளின் பெயர் வைக்கிறார். எழுவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதால், பள்ளி வயதில் ஒருவரின் பெயரை பதிவு செய்து, தினம் ஒருவராக பள்ளிக்கு அனுப்புகிறார். அந்த நாளில் என்னென்ன நடந்தன என்பதை வீட்டிற்கு வந்த பிறகு எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிடவேண்டும். கையில் உள்ள பதிவு செய்யும் கருவியும் அதற்கு உதவும்.

ஒருமுறை வியாழன் யாருக்கும் தெரியாமல் வெளியே ஸ்கேட்டிங் விளையாடி, ஆட்காட்டி விரலில் நகப்பகுதி வரைக்கும் வெட்டிக்கொண்டு வந்துவிடுகிறாள். ஒரே மாதிரி இருப்பது மிக அவசியம் என்பதால், மற்ற சகோதரிகளின் விரல்களையும் அதே அளவுக்கு வெட்டுகிறார்.

வருடங்கள் உருண்டோடுகின்றன. தாத்தா இறந்துவிடுகிறார். முப்பது வயதில் இருக்கிறார்கள். தினம் ஒருவராக வேலைக்கு சென்றுவருகிறார்கள். தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும், ஏழு பேரும் குணத்தில், கெட்டிக்காரத்தனத்தில் வேறு வேறு நபராக இருக்கிறார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தாலும், ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுடைய ’ஒற்றுமையில்’ தான் எல்லோருடைய வாழ்விலும் இருக்கிறது.

ஒருநாள் வேலைக்கு சென்ற “Monday” திரும்பிவரவில்லை. குழப்பமும் பதட்டமும் வருகிறது. அவளைத்தேடி “Tuesday” அலுவலகம் செல்கிறாள். அவளும் திரும்பவில்லை. அதற்கு பிறகு பல்வேறு திருப்பங்கள். இழப்புகள்.

எல்லோரும் தப்பித்தார்களா? என்பதை பரபர ஆக்சன் கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

****
கதை சுவாரசியமான கதை. அவர்களுடைய ஒற்றுமையில் தான் வாழ்வு. அதில் ஒருவர் விலகி சென்றாலும், மற்றவர்களுடைய வாழ்வு மிகவும் சிக்கலாகிவிடும் என்பதை நன்றாக கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒருவரே எழுவராகவும் வித்தியாசம் காட்டி மொத்தப் படத்தையும் தாங்கியிருக்கிறார். இந்த கதையை உணர்வுபூர்வமாகவும் கொண்டு சென்றிருக்கலாம். இயக்குநர் ஆக்சன் வகையாக தேர்ந்தெடுத்துவிட்டார். இருப்பினும் உணர்வுபூர்வமாகவும் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்.

மற்றபடி ஒரு குடும்பம். ஒரு குழந்தை என்பது மற்ற சொத்து, சிவில் விசயங்களை போல கையாள்வது மிகவும் சிக்கலாக்கிவிடும். சீனாவில் ஒரு குழந்தைத் திட்டத்தை சில ஆண்டுகள் அமுலாகி இருந்திருக்கிறது. அதில் என்னவித அனுபவங்கள் கிடைத்தன என்பதை தேடிப்பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை இந்தப் படம் தந்தது.

நகர்ப்புற படித்த மக்கள் ஒரு குழந்தை, இரண்டு குழந்தையோடு நிறுத்திக்கொள்கிறார்கள். அதில் கல்வி, விழிப்புணர்வு, கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கிற சூழ்நிலை, பொருளாதாரம் என பல அம்சங்கள் அதில் இருக்கின்றன. தமிழ்நாடு நகர்ப்புறத்தோடு பல கிராமங்களோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், நிறைய குழந்தைகள் பெற்றெடுப்பது குறைந்திருக்கிறது. ஆனால், வட மாநிலங்களில் அந்த நிலை இல்லை. சமீபத்தில் ஒரு தொழிற்சாலை விபத்தில் ஒரு இளைஞர் இறந்துபோனார். அவருடைய ரேசன் அட்டையை வாங்கிப் பார்த்த பொழுது, அண்ணன்கள், தம்பி, அவர்களுடைய குழந்தைகள் என ஒரே அட்டையில் 20 பேர்வரை இருந்தார்கள்.

ஆக கல்வி, விழிப்புணர்வு, பொருளாதாரத்தில் உயர்த்துவது தான் இதற்கு தீர்வாக இருக்கமுடியும். ஆனால் நிலவுகிற மத்திய, மாநில அரசுகள் கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து மெல்ல மெல்ல கழன்று கொண்டு வருகிறார்கள். அதை ஒரு தேசத்தின் முதலீடாக கருதாமல், செலவாக பார்க்கும் கண்ணோட்டம் தான் இருக்கிறது. பிறகெப்படி மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்? பெரும்பாலான மக்களின் நலனை அக்கறை கொண்டு அதிகாரத்திற்கு வரும் ஒரு அரசு தான் இதை சாத்தியப்படுத்த முடியும் என கருதுகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

மற்றபடி, படம் பார்க்ககூடிய படம். பாருங்கள். ஒரே ஒரு காட்சி 18+யாக இருக்கிறது. ஆகையால், குடும்பத்தோடு பார்க்க இயலாது.

0 பின்னூட்டங்கள்: