சிறந்த படம் உள்ளிட்ட மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற படம்.
கதை. 1962ல் நடைபெறும் உண்மைக்கதை. ஒரு கறுப்பின அமெரிக்கர் ஒரு சிறந்த பியானோ கலைஞர். நியூயார்க்கில் வாழ்கிறார். அவர் எட்டு வாரங்கள் ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதிகளின் உட்பகுதிகளில் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுகிறார். (கிட்டத்தட்ட சென்னை துவங்கி, கன்னியாகுமரி வரைக்குமான தூரம்) அவர் திட்டமிட்ட பகுதிகள் கருப்பின மக்கள் மீது ஏகப்பட்ட ஒடுக்குமுறை உள்ள பகுதிகள். ஆகையால், தனக்கு பாதுகாப்புக்கு ஓட்டுநர் + பாதுகாவலர் வேலைக்கு ஆள் தேடுகிறார்.
ஒரு இத்தாலிய அமெரிக்கன். நடுத்தர வயது. திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பெருந்தீனிக்காரர். ஒரு இரவு கிளப்பில் பவுன்சராக வேலை செய்கிறார். முன்னாள் இராணுவ வீரராகவும் பணியாற்றியவர். கருப்பின வெறுப்பு உள்ள ஆள். புதுப்பிப்பதற்காக கிளப் தற்காலிகமாக மூடப்படுகிறது. கோரோனா ஊரடங்கு காலத்தில் நாம் அடைந்த பொருளாதார நெருக்கடி போல சிரமப்படுகிறார். கையில் உள்ள வாட்ச்சை அடகு வைக்கிறார். இடைக்காலத்தில் ஏதாவது வேலை செய்தே ஆகவேண்டிய கட்டாயம். கருப்பின பியானோ கலைஞருக்கு கிடைத்த டாக்டர் பட்டம் என தெரியாமலேயே, யாரோ ஒரு டாக்டர் என புரிந்துகொண்டு நேர்முகத்தேர்வுக்கு போகிறார்.
இரண்டு மாத காலம் வேலை, சம்பளம், கருப்பினத்தினரிடம் வேலை செய்வதால் ஏதும் பிரச்சனை இல்லையே! என எல்லாம் பேசிய பிறகு, பியானோ கலைஞர், அவரது குழுவைச் சேர்ந்த இரு வெள்ளையர்கள், ஓட்டுநர் என நால்வரும் கிளம்புகிறார்கள்.
பியானோ கலைஞரின் இயல்பிற்கும், ஓட்டுநரின் இயல்புக்கும் ஒத்துவரவில்லை; ஒரு கறுப்பர் என்பதாலேயே எதிர்பார்த்தது போல சில இடங்களில் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார். வெற்றிகரமாக அந்த பயணத்தை முடித்தார்களா என்பது முழு நீளக்கதை.
*****
2018ல் வெளிவந்த படங்களில் சிறந்த படம், சிறந்த மூலத் திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என மூன்று ஆஸ்கார் விருதுகளையும், வேறு பல விருதுகளையும் வென்றிருக்கிறது. நடித்த எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.
அந்த பயணத்தில் பியானோ கலைஞருக்கும், பவுன்சருக்கும் ஏற்படும் முரண்கள், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது, பவுன்சர் தன் துணைவியாருக்கு எழுதும் கடிதங்களுக்கு உதவுவது என அவர்களிருவருக்கும் நல்ல புரிதல் ஏற்படுவது அருமை. வெள்ளையின மக்களுக்கு இடையே நிகழ்ச்சிகள் வாசிப்பதும், அவர்களுடன் ஒட்டமுடியாமல் இருப்பதும், கருப்பின மக்களோடும் ஒட்ட முடியாமல் அவருடைய நிலையும் சிக்கலானது தான்.
கருப்பின மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டதால், சமூகத்தின் பல இடங்களில் அனுமதி மறுக்கிறார்கள். அதனால், ஒரு கருப்பின அமெரிக்கர், கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் எங்கு தங்கலாம்? எங்கு உணவகத்தில் சாப்பிடலாம்? என வருடம் தோறும் (1936 -1964 வரை) கையேடு தயாரித்து வெளியிட்டு இருக்கிறார். அதற்கு பெயர் Green Book. வெள்ளையின ஆதிக்க வெறிக்கு அந்த புத்தகம் சாட்சியம்.
வெள்ளையின மக்களுக்கு கருப்பினத்தவரின் சிறந்த இசை வேண்டும். ஆனால், அவர் அவர்கள் சாப்பிடும் உணவகத்தில் அவர் சாப்பிட முடியாது. அவர்கள் பயன்படுத்தும் டாய்லெட்டை பயன்படுத்த முடியாது. படத்தில் சில இடங்களில் கண் கலங்க வைத்துவிடும். பதற வைத்துவிடும். இது 1962 கதை என நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் இன்னமும் தொடர்வதை தான், ஜார்ஜ் பிளாய்ட் கொலை நமக்கு பளிச்சென புரியவைக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்பு, தென்னாப்பிரிக்காவில் ஒரு விளையாட்டு குழுவில் இதே ஒடுக்குமுறை பற்றிய குரல் வந்தது. நம் நாட்டிலும் சாதி, மத வெறி என்பது வரலாறு நெடுகிலும் ஏகப்பட்ட கொடூரமான விளைவுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
வர்க்க, சாதி, மத, இன, நிற, பாலின வெறி என எல்லாவித ஒடுக்குமுறைகளுமே மனித இனத்தின் வளர்ச்சிக்கு எதிரானவை. அது எந்த வடிவத்தில் வெளிவந்தாலும் சமூகத்தை பாதிக்க கூடியவை. சமூக அக்கறை கொண்ட அனைவரும் இதற்கு எதிராக போராடுவது தான் இதற்கு தீர்வாக அமையும்.
படம் பாருங்கள். கருப்பின மக்களின் வாழ்க்கை வரலாறை வரலாற்றின் பக்கங்களில் தேடுவதற்கு ஒரு தூண்டுதலாக அமையும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment