> குருத்து: Fracture (2007)

October 1, 2020

Fracture (2007)


கதை. ஒரு ஏரோநாட்டிகல் பொறியாளர். பெரும் பணக்காரர். தனது துணைவியார் வேறோரு நபருடன் உறவில் இருப்பதை ஆள் வைத்து கண்டுபிடிக்கிறார். தனது துணைவியாரிடம் இது குறித்து கேட்கும் பொழுது, மன்னிப்பு கேட்கிறார். இருப்பினும் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தலையில் சுடுகிறார். மேலும் மூன்று இடத்தில் சுடுகிறார்.


போலீசு வருகிறது. வந்த போலீசு அதிகாரி தான், துணைவியாருடன் உறவில் இருந்தவர். ”நான் தான் சுட்டேன்” துப்பாக்கியை கொடுத்து, என சரணடைகிறார். போலீஸ் ஸ்டேசனிலும் தான் சுட்டதை ஒத்துக்கொள்கிறார். அவர் துணைவியாரை சோதனை செய்கையில், உயிரோடு இருக்கிறார். தலையில் சுட்டதால், கோமாவில் விழுந்துவிடுகிறார்.


ஒரு இளம் வழக்கறிஞர். அரசு தரப்பு வழக்கறிஞராக வாதாடிவருகிறார். ஜெயிக்கக்கூடிய வழக்குகளை மட்டும் பாதுகாப்பாக எடுத்து, 97% வெற்றி டிராக் வைத்திருக்கிறார். இதை வைத்துக்கொண்டு ஒரு பெரிய தனியார் குழுமத்தில் வேலையும் பெற்றுவிட்டார். விடைபெறும் நாளில், வேறு யாரும் இல்லாததால், மேலே உள்ள வழக்கு இவரிடம் வருகிறது. ”பொண்டாட்டியை ஒருத்தன் சுட்டுட்டான். தான் சுட்டதாக ஒத்துக்கொண்டும் விட்டான்” என சொன்னதும், ஏற்றுக்கொள்கிறான்.


வழக்கு விசாரணைக்கு வருகிறது. பொறியாளர் ஒப்படைத்த துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு கூட வெளியேறவில்லை. ”கைது செய்த போலீசு தான் தன் துணைவியாருடன் (Illegal affair) உறவில் இருந்த நபர். ஆகையால், ஒத்துக்கொண்டேன்” என பொறியாளர் அப்பாவியாய் சொல்ல, வழக்கு அரசு தரப்பில் மிக பலவீனமாகிவிடுகிறது. வழக்கறிஞருடைய நிலை மிகவும் சிக்கலாகிவிடுகிறது.


கொலை செய்த துப்பாக்கியை கண்டுபிடித்தார்களா? பொறியாளருக்கு தண்டனை வாங்கித்தந்தார்களா? கோமாவிலிருந்து அவருடைய துணைவியார் மீண்டாரா? என்பதை முக்கால்வாசி படத்தில் விரிவாக சொல்கிறார்கள்.


****

ஒரு புத்திசாலி கொலைகார பொறியாளர். ஒரு அலட்சியமான மனநிலையுடன் வழக்கறிஞர். குற்ற உணர்வில் அலையும் போலீசு என எல்லா பாத்திரங்களுமே நன்றாக செய்திருக்கிறார்கள்.


படத்தில் இறுதியில் சொல்லப்படும் முக்கியமான ட்விஸ்ட் செய்தி கொஞ்சம் பலவீனமானதாக எனக்குப்பட்டது. மற்றப்படி படம் பிடித்திருந்தது.


மேலைநாடுகளில் கணவன் மனைவி உறவில் விரிசல் விழுந்தால், விவாகரத்து செய்துவிட்டு போய்விடுவார்கள். நம்மூர் போல கட்டிப் புரண்டு சண்டை போடமாட்டார்கள். கொலை வரைக்கும் போகமாட்டார்கள் என்பார்கள். கணவன் மனைவி உறவு என்பது எந்த ஊராக இருந்தாலும், அவ்வளவு சென்சிடிவான உறவாக இருக்கிறது. இருப்பினும் நிதானமாக நடப்பது தான் சரியானது.


பார்க்கக்கூடிய திரில்லர். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: