The Shining (1980)
Psychological horror film
கதை. வட அமெரிக்காவின் ஒரு உயரமான பகுதியில் பிரபலங்கள் வந்து தங்கும் ஒரு ஹோட்டல் இருக்கிறது. குளிர் காலத்தில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால், போக்குவரத்து சிக்கலாவதால் சில மாதங்களுக்கு மொத்தமாய் மூடிவைக்கிறார்கள்.
அப்படியே விட்டுவிட்டு போக முடியாது அல்லவா! ஹோட்டலைப் பார்த்துக்கொள்ள நாயகன் அந்த வேலைக்கு வருகிறார். இதற்கு முன்னால் ஆசிரியர் வேலைப் பார்த்து வந்ததாகவும், இப்பொழுது கதை எழுத போவதாகவும், இந்த வேலை வசதியாக இருக்கும் என்கிறார்.
இதற்கு முன்னால் இந்த வேலைப் பார்த்தவர், மனம் பிசகி, தன் குடும்பத்தை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட செய்தியைச் சொல்கிறார்கள். அதை நாயகன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அந்த பெரிய ஹோட்டலில் இருந்த மொத்த ஆட்களும் கிளம்புகிறார்கள். நாயகன் தனது துணைவியார், குட்டி பையனுடன் வந்து சேர்கிறார்.
நாட்கள் மெல்ல மெல்ல நகருகின்றன. கதை எழுதும் வேலை நகர மறுக்கிறது. தூக்கம் கெடுகிறது. துணைவியாரிடம் எரிந்துவிழுகிறார்.
அந்த குட்டிப் பையனுக்கு அங்கு இருக்கும் சில அமானுஷ்யங்கள் கண்ணில்படுகின்றன.
அங்கு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய் சிக்கலாகிறது. அடுத்தடுத்த கட்டங்களுக்கும் போகிறது.
பிறகு என்ன ஆனது என்பதை நெஞ்சு பதைபதைக்க சொல்லியிருக்கிறார்கள்.
***
படம் பார்க்க துவங்கும் பொழுது, துணைவியார், பொண்ணுடன் தான் பார்க்க துவங்கினேன். படத்தில் ஹோட்டலை விட்டு எல்லோரும் கிளம்பிச் சென்ற பிறகு, அந்த ஹோட்டலின் தனிமையும், இயற்கைச் சூழலும், இசையும், அங்கு நடக்கும் சம்பவங்களும் மிரட்ட ஆரம்பித்துவிட்டன. இருவரையும் எச்சரித்து (!) தூங்க அனுப்பிவிட்டு, தனியாக பார்க்க துவங்கினேன்.
1977ல் எழுதப்பட்ட நாவலைத் தழுவி, ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய படமிது. அவரின் படமான புல்மெட்டல் ஜாக்கட் பார்த்து, பல வருடங்கள் ஆன பின்னும் இன்னும் நினைவில் இருக்கிறது.
ஜாக் நிக்கல்சன் மூன்றுமுறை ஆஸ்கார் வென்றிருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு தகுந்த நபர் தான்.
படம் வெளிவந்து நாற்பது வருடங்கள் கடந்தாலும், உளவியல் சார்ந்த திகில் படங்களை பேசுபவர்கள் Shining ஐ பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
நீங்களும் பாருங்கள். உங்கள் மனதிலும் நீங்காத இடம் பெறும் என உறுதியாக சொல்லலாம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment