> குருத்து: Fabricated City (2017) South Korea

October 25, 2020

Fabricated City (2017) South Korea


கதை. நாயகன் இளைஞன். தன்னுடைய பொழுதையெல்லாம், கண்ணுக்கு தெரியாத நண்பர்களுடன் வீடியோ விளையாட்டு விளையாடி பொழுதை போக்குகிறான். ”உருப்படுற வேலையை பாருடா” என அவனுடைய அம்மா திட்டிக்கொண்டே இருக்கிறார்.

ஒரு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்யப்ப்பட்ட வழக்கில் சம்பந்தமில்லாத இவன் வலுவாக சிக்கவைக்கப்படுகிறான். நாடே கொந்தளிக்கிறது. பரோல் இல்லாத ஆயுள் தண்டனை. சிறையிலும் மாபியா கும்பல் அவனை சித்திரவதை செய்கிறது. தன் மகன் அப்பாவி என தொடர்ந்து போராடிக்கொண்டிருந்த அவனின் அம்மாவும் ‘தற்கொலை’ செய்துகொண்டதாக தகவல் சொல்கிறார்கள்.

சிறையிலிருந்து தப்பிக்கிறான். தன்னுடைய வீடியோ கேம் நண்பர்கள் உதவுகிறார்கள். யார் தன்னை சிக்க வைத்தார்கள் என தேடும் பொழுது தான் அவர்களின் வலைப்பின்னல் மிகவும் சிக்கலாக இருப்பதை உணர்கிறான். வழக்கிலிருந்து தப்பித்தானா என்பதை பரபர சண்டை காட்சிகளுடனும், கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் சொல்லியிருக்கிறார்கள்.

****


தமிழ் ரசிகர்களுக்கு இந்த கதை ஏற்கனவே பழகியது தான். படம் வணிக ரீதியிலாக எடுக்கப்பட்டப் படம் தான். ஆனால் எடுத்தவிதத்தில் பார்க்க வைக்கிறார்கள்.

சக வீடியோ விளையாடுகிறவர்கள் தான் இந்தப் படத்தில் நண்பர்கள் என்பது புதுசாக இருந்தது. நாயகனுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுவதிலும், நகைச்சுவைப் பகுதியையும் இவர்கள் தான் கவனித்துக்கொள்கிறார்கள். கூடுதலாக மாபியா கும்பலின் தலைவனும் அவ்வப்பொழுது சிரிக்க வைக்கிறார்.

இரும்பு திரையில் வரும் அர்ஜுன் தனக்கென நெட்வொர்க்கை உருவாக்கி மிகுந்த வலுவுள்ளவனாக காட்டியிருப்பார்கள். இந்தப் படத்திலும் அப்படி ஒரு வில்லனை காட்டியிருப்பார்கள். உட்கார்ந்த இடத்தில் எல்லோரையும் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கொஞ்சம் மலைக்கத்தான் வைக்கிறது.

தமிழில் மொழிமாற்றம் செய்தும் கிடைக்கிறது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: