> குருத்து: Badhaai Ho (2018) இந்தி

October 25, 2020

Badhaai Ho (2018) இந்தி


கதை. ஒரு நடுத்தர குடும்பம். அப்பா ரயில்வேயில் அதிகாரி. வீட்டில் துணைவியார், அம்மா இருக்கிறார்கள். வேலைக்கு செல்கிற 25வயது மூத்த பையன். மேல்நிலைப் பள்ளியில் படிக்கிற இரண்டாவது பையன். குடும்ப தலைவிக்கு முடியாமல் போக, சோதிக்கும் பொழுது கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. தம்பதிகளால், குடும்பத்தில் உள்ளவர்களையே எதிர்கொள்ளமுடியாமல் தவிக்கிறார்கள். சமூகமோ இன்னும் சிக்கலாய் எதிர்கொள்கிறது.

மூத்தப் பையனின் காதலியின் அம்மா “அந்த குழந்தையை வளர்த்து எடுக்கும் பொறுப்பு உன் தலைமீது விழும்” என பேசுகிறார். பிறகு என்ன ஆனது என்பதை உணர்ச்சிப்பூர்வமாகவும், நகைச்சுவை கலந்தும் சொல்லியிருக்கிறார்கள்.

***

நம் நாட்டில் பிள்ளைகள் பிறந்துவிட்டால், அம்மாவும், அப்பாவும் மொத்த சந்தோசத்தையும் பிள்ளைகளுக்காக சமர்ப்பித்துவிடவேண்டும் என்பது ‘விதி’யாக இருக்கிறது. அதை மீறி நடந்தால் குற்றவாளிகளாக பார்ப்பார்கள். நான் அறிந்த உண்மை கதை. ஒரு தாய். தன் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகள் வாழ்வையே தனது வாழ்க்கையாக வாழ்ந்தார். மகனுக்கு திருமணம் ஆனது. தன்னை பிரிந்து போய்விடுவானோ என்ற பயத்தி்ல் தன் மகன் பொண்டாட்டியோடு சிரித்து பேசுவதையே சிக்கலாக்கினார். இப்படி சமூகத்தில் நிறைய கோளாறுகள் இருக்கின்றன.

இப்படி ஒரு சமூகப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு, வெற்றி பெற வைத்த இயக்குனரை பாராட்டத்தான் வேண்டும் படம் இன்னும் கூடுதலாக பேசியிருக்கலாம். படம் வெற்றி பெறுமா என்ற குழப்பம் இயக்குனரை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

இதே சூழ்நிலையில், எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு சிறுகதை அருமையாக எழுதியிருப்பார். தலைப்பு தெரிந்தால், பகிருங்கள்.

படத்தில் நடித்த அனைவருமே சிறந்த தேர்வு. படம் தேசிய விருதை வென்றிருக்கிறது. துவக்கத்தில் மருமகளைத் திட்டித்தீர்த்த பாட்டி, பிறகு தனது சொந்த மகள்களிடையே தனது மருமகளை விட்டுக்கொடுக்காமல் வெடுக் வெடுக்கென பேசும் அந்தப் பாட்டிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. நிறைய பிலிம்பேர் விருதுகளையும் வென்றிருக்கிறது.

நம்மூராக இருந்தால் ஆயுஷ்மான் குரானா போன்ற பெரிய நடிகர்கள் இந்த கதாப்பாத்திரத்தை தவிர்த்து இருப்பார்கள். Andhadhun, Article 15க்கு பிறகு நான் பார்த்த இன்னுமொரு நல்லப்படம்.

பார்க்கவேண்டிய படம்.பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: