மேற்கு வங்கத்தில் இருக்கும் சாந்திபூரில் 26 ஆண்டுகளாக மருத்துவராகப் பணியாற்றி நற்பெயர் எடுத்த அசோக் குப்தா தன்னிடம் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கவனித்து அதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முற்படுகிறார். அவர்களுள் பெரும்பாலோர் நகரத்தின் மக்கள் தொகை நெருக்கம் அதிகமான பகுதியிலிருந்து வருவதால் அந்தப் பகுதியில் இருக்கும் திரிபுரேஷ்வர் கோவிலில் புனித தீர்த்தமாகத் தரப் படும் நீரை அறிவியல் பரிசோதனைக்கு அனுப்புகிறார்.
தண்ணீர் கொண்டுவரும் நிலத்தடிக் குழாய் உடைந்திருப்பதால் அந்த நீர் மாசு பட்டிருப்பதை ஆய்வு உறுதி செய்கிறது. அந்தக் குழாயை சரி செய்யும் வரை கோவிலை மூட வேண்டும் என்று ஒரு பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதுகிறார்.
அவருடைய கோரிக்கைக்கு முதல் எதிர்ப்பு அவருடைய சகோதரரும், நகரசபைத் தலைவருமான நிசித்திடமிருந்து வருகிறது. நிசித் அந்தக் கோவிலின் உரிமையாளர் நடத்தும் பார்கவா டிரஸ்டின் முக்கிய உறுப்பினரும் ஆவார். கோவில் உரிமையாளர் அசோக் குப்தாவின் வீட்டிற்கு ஒரு புட்டியில் புனித தீர்த்தத்தைக் கொண்டு வருகிறார். அதில் துளசி போன்ற மூலிகைகள் இருப்பதால் அது மாசுபடவே வாய்ப்பில்லை என்றும், இந்துக்கள் ஆயிரம் ஆண்டுகளாக அதை நம்புவதாகவும் கூறி அசோக் குப்தாவின் கோரிக்கையை பின் வாங்குமாறு மிரட்டுகிறார்.
மத
நம்பிக்கை இல்லாததால் 10 ஆண்டுகளாக கோவிலுக்குப் போகாத அசோக் குப்தா இந்தப்
பிரச்சினையில் தலையிட உரிமையில்லை என்று நிசித்தும் கூறுகிறார். அந்தக்
கோவில் ஒரு சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால் அந்த வருமானத்தைக்
கொள்ளையடித்து வரும் இந்தக் கூட்டம் கோவிலை மூட மறுக்கிறது.
அசோக்
குப்தா இது குறித்து எழுதிய கட்டுரையை வெளியிட ஒப்புக் கொண்ட ஜன வார்த்தா
என்கிற பத்திரிக்கையும் மிரட்டலுக்கும், பக்தர்களின் எதிர்வினைக்கும்
பயந்து பின்வாங்குகிறது.
இந்த ஊழல் கூட்டணியால் தூண்டிவிடப் பட்ட கூட்டம் அவருடைய வீட்டைத் தாக்குகிறது. வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யச் சொல்கிறார்.குப்தாவும், பள்ளி ஆசிரியரான அவருடைய மகளும் வேலையை விட்டு நீக்கப் படுகிறார்கள்.
குப்தாவின் குடும்பம் அவருக்கு ஆதரவாக இருந்தாலும் அவர் விரக்தியின் விளிம்பிற்கே சென்று ஊரை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறார்.
படத்தின் கடைசி நிமிடங்களில் ஒரு திடீர் நம்பிக்கை பிறக்கிறது அவருக்கு. மக்கள் பிரச்சினைகளில் முன் நின்று போராடும் அனைவரையும் சிலிர்க்க வைக்கும் முடிவு.
இப்செனின் எனிமி ஆஃப் தி பீப்பிள் என்கிற நாடகத்தைத் தழுவி இதை ஒரு காவியமாக 1989இல் உருவாக்கியவர் சத்யஜித் ரே எனும் ஜீனியஸ்.
ஆங்கில சப்டைட்டிலுடன் யூட்யூபில் கிடைக்கும் இந்தப் படத்தை இன்றைய அரசியல் சூழலில் அனைவரும் பார்ப்பது அவசியம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment